Saturday, November 15, 2008

La Haine(Hate)

தற்செயலாகப் பார்க்கக் கிடைத்து மிகுந்த ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்த ஃபிரெஞ்சு திரைப்படம் La Haine. பாரிஸ் புறநகர் பகுதியில் நடக்கும் கலவரத்தில் அப்தெல் என்னும் இளைஞன் போலீஸால் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். அக்கலவரத்தில் காவல் அதிகாரி ஒருவர் தன் கைத்துப்பாக்கியைத் தொலைத்துவிடுகிறார். அத்துப்பாக்கி அப்தெல்லின் நண்பனான வின்ஸி்ன் கையில் கிடைக்கிறது. வின்ஸ், அவனது நண்பர்கள் சயீத், உபெர்ட் ஆகியோரின் கலவரத்திற்கு பின்னான 24 மணிநேர வாழ்க்கை திரையில் விரிகிறது.

வின்செண்ட், சயீத், உபெர்ட் மூவரும் வேலையற்ற இளைஞர்கள். தங்கள் குடியிருப்பில் புகைத்தபடியும் வெட்டிக்கதை பேசியபடியும் சிறு சிறு சண்டைகளிட்டபடியும் பொழுதைக் கழிப்பவர்கள். வின்செண்ட் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவன். எப்போதும் சண்டைக்குத் தயாராகயிருப்பவன். சயீத் எதைப் பற்றியும் கவலைகொள்ளாத மற்ற இருவர் அளவுக்கு முதிர்ச்சியடையாத சராசரி இளைஞன். உபெர்ட் உடல்வலிமையுடையவன் என்றாலும் எந்த பிரச்சனையிலும் சிக்காது அமைதியான வாழ்க்கை வாழ விரும்புபவன். கலவரத்தில் தன் உடற்பயிற்சிக் கூடம் கொளுத்தப்பட்டதையும் அமைதியாக ஏற்றுக்கொள்பவன். போலீஸின் துப்பாக்கி தன்னிடம் இருப்பதாக வின்செண்ட் சொல்லும்போது அதனால் பிரச்சனை ஏற்படுமென்றும் அதை தூக்கியெறியுமாறும் உபெர்ட் கூறுகிறான். அதை மறுக்கும் வின்செண்ட் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அப்தெல் இறந்தால் ஒரு போலீஸையாவது சுட்டுக் கொல்வதாய் சபதமெடுக்கிறான். துப்பாக்கியுடன் மூன்று நபர்களும் பாரீஸுக்குச் செல்கின்றனர். அங்கு அவர்கள் பல வகையான மனிதர்களை சந்திக்கிறார்கள். இனவெறி கொண்ட காவல் அதிகாரி, அவருக்கு எதிர்மறையாக நல்ல காவல் அதிகாரி, குடிகாரர்கள், கொலைகாரர்கள், போதை மருந்து கடத்துபவன், செல்வந்தர்கள், இனவெறியாளர்கள், முன்னாள் போர்வீரரான வயோதிகர் என பல்வகை மனிதர்களை சந்திக்கிறார்கள்.ஒவ்வொரு நேரத்திலும் அத்துப்பாக்கி பயன்படுத்தத் தூண்டும் சம்பவங்கள் நடக்கின்றன. பதட்டம் அதிகரிக்கின்றது. படத்தின் இறுதி வரை இப்பதட்டம் நம்மை உட்கொள்கிறது. இப்பதட்டம் கிளைமாக்ஸில் உச்சத்தை அடைகிறது. சற்றும் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத விதத்தில் வந்த கிளைமாக்ஸ் காட்சி அதிர்வை ஏற்படுத்தியது.

ஆரம்பத்தில் வேலையின்றி அரட்டைகளில் பொழுதைக் கழிக்கும்போது மெதுவாக நகரும் காட்சிகள் நண்பர்களின் கையில் துப்பாக்கி கிடைத்து பாரிஸுக்கு சென்றபின் அசுர வேகத்தில் செல்கின்றன. இப்படம் முழுக்க கருப்பு வெள்ளையில் படமாக்கியிருக்கிறார்கள். வித்தியாசமான காமிரா கோணங்களும் காட்சியமைப்புகளும் ரசிக்கும்படி உள்ளன. பின்னணி இசையாக பிரெஞ்சு ராப் பாடல்கள் கலக்கல்.

மூன்று மைய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் Vincent Cassel,Hubert Kounde, Said Taghmaoui மூவரும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். அந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடல்மொழியும் வசன உச்சரிப்புகளும் சிறப்பாக அமைந்துள்ளது. அதிலும் வின்செண்ட் தன் கையில் துப்பாக்கி இருப்பதால் கண்களில் தெனாவெட்டுடன் அலைவதும் பின்னர் துப்பாக்கியைப் பயன்படுத்த நேரும்போது பயம்கொள்வதுமென அட்டகாசமாக நடித்திருக்கிறார்.

யாரையும் நியாயப்படுத்தாமல் உள்ளது உள்ளபடி படமாக்கியிருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது. வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் வலியவர்கள் மீதான பயம் வெறுப்பாக உருமாறும் நிலை சிறப்பாக பதிவாக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று கதாபாத்திரங்களும் படத்தின் இறுதிக்காட்சியும் இன்னும் சிலநாட்களுக்கு அடிக்கடி நினைவில் வந்தபடியிருக்கும்.

Tuesday, November 11, 2008

Changeling

1928. லாஸ் ஏஞ்சலீஸ். தொலைபேசி இணைப்பகத்தில் பணிபுரியும் கிறிஸ்டின் காலின்ஸின்(ஏஞ்சலினா ஜுலி) மகன் வால்டர் காலின்ஸ் காணாமல் போகிறான். சில மாதங்கள் கழித்து லாஸ் ஏஞ்சலீஸ் காவல்துறை ஒரு சிறுவனை வால்டர் எனக் கூறி கிறிஸ்டினிடம் சேர்ப்பிக்கின்றனர். அச்சிறுவன் தன் மகனில்லை என்று மறுக்கும் கிறிஸ்டினை விசாரணை அதிகாரியான ஜேம்ஸ் மனநலம் பாதிக்கப்பட்டவராக சித்தரிக்கின்றார். பொதுமக்களிடையே இழந்துவரும் தங்கள் செல்வாக்கைக் காப்பாற்ற அச்சிறுவனையே தன் மகனாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென கிறிஸ்டினை அறிவுறுத்துகின்றார். கிறிஸ்டினின் காவல்துறை நிர்வாகத்திற்கு எதிரான போராட்டத்திற்கு மதபோதகரான குஸ்தவ்(ஜான் மால்கோவிச்) உதவுகிறார். பொதுமக்களின் ஆதரவும் கிடைக்கிறது. இறுதியின் கிறிஸ்டினின் மகன் கிடைத்தானா, காவல்துறைக்கு எதிரான போராட்டத்தில் வென்றார்களா, லாஸ் ஏஞ்சலீஸ் காவல்துறையின் சரிந்த செல்வாக்கு திரும்பியதா என்ற கதையே கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் லேட்டஸ்ட் திரைப்படம் Changeling. 1928ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம்.

கிறிஸ்டினின் காவல்துறைக்கு எதிரான இந்த போராட்டத்திற்கிடையே கார்டன் நார்த்காட் என்பவன் பல சிறுவர்களைக் கடத்தி கொன்றது தெரியவருகிறது. கிறிஸ்டினின் மகனான வால்டரும் நார்த்காட்டால் கடத்தப்பட்டதாக அவனுக்கு உதவிகள் செய்த சிறுவன் அடையாளம் காட்டுகிறான். இருப்பினும் காவல்துறை அதை மறுக்கிறது. நேர்மையான காவல் அதிகாரியான லெஸ்டர் அந்த சிறுவனின் உதவியுடன் இறந்த சிறுவர்களின் உடல்களை மீட்கிறார். தப்பிச் சென்ற கார்டன் நார்த்காட் கைதுசெய்யப்படுகிறான்.

தன் மகனைக் கண்டுபிடிப்பதில் மெத்தனம் காட்டி தன்னையும் மனநல மருத்துவமனைக்கு அனுப்பி சித்ரவதை செய்த காவல்துறைக்கு எதிராக வழக்கு தொடுக்கிறார் கிறிஸ்டின். அவ்வழக்கில் விசாரணை அதிகாரியான ஜேம்ஸும் காவல்துறை தலைமை அதிகாரியும் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.அதே நேரம் நார்த்காட்டின் கொலை வழக்கில் அவனுக்கு தூக்குதண்டனை விதிக்கப்படுகிறது. நார்த்காட்டினால் கொல்லப்பட்ட சிறுவர்களில் வால்டரும் ஒருவன் என கிறிஸ்டின் நம்ப மறுக்கிறார். தன் மகன் என்றாவது ஒரு நாள் திரும்புவான் என்ற நம்பிக்கையில் தன் தேடலைத் தொடர்கிறார்.

1928ல் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார் கிளிண்ட் ஈஸ்ட்வுட்.1928-ன் லாஸ் ஏஞ்சலீஸ் நகரைக் கண் முன் கொண்டுவந்துள்ளனர். டிராம் வண்டிகளும் அந்த கால கார்களும் உடை வடிவமைப்பும் கதை நடக்கும் காலத்திற்கேற்ப அமைந்துள்ளன.

மகனை இழந்து காவல்துறைக்கு எதிராகப் போராடும் கிறிஸ்டின் கதாபாத்திரத்தில் ஏஞ்சலீனா ஜூலி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் காவல்துறை தன் புகார்களைக் கண்டுகொள்ளாமல் விடும்போது செய்வதறியாமல் தவிப்பதும், தன் மகனாக வந்திருக்கும் சிறுவனை வெறுக்கவும் முடியாமல் அவன்மேல் பாசமும் காட்ட முடியாமல், தன் மகனின் நிலையறியாமல் தவிப்பதும், தன் மகனைக் கண்டுபிடித்து தருமாறு அதிகாரிகளிடம் மன்றாடுவதும் மனநல மருத்துவமனையில் கொடுமைகளுக்கு ஆளாவதும் அங்கு சந்திக்கும் மற்ற நோயாளிகளாலும் குஸ்தவ்வின் உதவியாலும் மனவுறுதி கொண்டு காவல்துறையை தனியாளாக எதிர்த்துப் போராடுவதுமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஏஞ்சலினா ஜூலிக்கு உதடுகள் அழகுதான் என்றாலும் சில இடங்களில் அதிகப்படியான லிப்ஸ்டிக் ஏற்கனவே பெரிதான அவர் உதட்டை இன்னும் மிகைப்படுத்திக் காட்டுகிறது.மதபோதகர் குஸ்தவ்வாக ஜான் மால்கோவிச்(John Malkovich). வானொலி மூலமாக காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகத்தை அம்பலப்படுத்துவதுடன் கிறிஸ்டினுக்கு அவள் மகனைக் கண்டுபிடிக்க உதவுகிறார். கிறிஸ்டின் காவல்துறையால் மனநல மருத்துவமனையில் அடைக்கப்படும்போது போராடி அவரை வெளியே கொண்டுவருகிறார். கிறிஸ்டினுக்கு தகுந்த நீதி கிடைக்க வழக்கறிஞரை ஏற்பாடு செய்வதுடன் பொதுமக்களின் ஆதரவைத் திரட்டுவதிலும் முனைப்புடன் செயல்படும் கதாபாத்திரத்தில் ஜான் மால்கோவிச் அண்டர்ப்ளே செய்திருப்பது படத்திற்கும் கதாபாத்திரத்திற்கும் நிறைவானதாக இருக்கிறது.


பொதுமக்களிடையே வளர்ந்துவரும் கசப்புணர்வைப் போக்கவும் ஊடகங்களினால் சரிந்துவரும் தன் செல்வாக்கை மீட்கவும் கிறிஸ்டினிடம் வேறொரு சிறுவனை தன் மகனாக ஏற்கும்படி வற்புறுத்துவதும் அவரை வன்முறைக்குள்ளாக்குவதும் அதை எதிர்த்துப் போராடும் கிறிஸ்டினை மனநலம் குன்றியவராக சித்தரிப்பதும் அதிகார மையங்கள் தங்களைக் காத்துக்கொள்ள மக்களின் மீது கட்டவிழ்த்து விடும் வன்முறைகளுக்கு சான்று. கிறிஸ்டினின் மகனை விட இச்சிறுவன் உயரம் குறைவாக இருப்பதற்கு அதிர்ச்சியில் முதுகுத்தண்டின் அளவு குறைந்து உயரம் குறையலாம் என்றும், நண்பர்களின் ஆசிரியரின் பெயர் அதிர்ச்சியில் மறந்திருக்கலாம் என்றும் பொய்க்கதைகளை அவிழ்த்துவிடுவது நகைச்சுவையாக இருந்தாலும் இவையெல்லாம் உண்மையில் நடந்த சம்பவங்கள் எனும்போது அதிர்ச்சியளிக்கின்றது.

கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் ஏனைய திரைப்படங்களைப் போலவே பண்பட்ட காட்சியமைப்புகளும் பின்னணி இசையும் நடிகர்களின் அட்டகாசமான நடிப்பும் இப்படத்திற்கு பெரும்பலம். படத்தில் குறிப்பிட்ட ஒரு இடைவெளியின் பின்னணி இசையின்றி வெகுநேரத்திற்கு அமைதியாக காட்சிகள் நகர்ந்தன. சிறிது நேரத்திற்கு பின் இசை ஆரம்பிக்கும்போதுதான் அத்தனை நேரம் திரையைக் கவ்விய மெளனத்தை உணரமுடிந்தது. ஆயினும், கிறிஸ்டின் தன் மகனைத் தேடும் மையக்கதையுடன் மதபோதகர் குஸ்தவ்வின் காவல்துறைக்கு எதிரான பிரச்சாரம், நார்த்காட் செய்த கொலைகள், மனநல மருத்துவமனையில் கிறிஸ்டின் சந்திக்கும் மற்ற நோயாளிகள் என பல கிளைக்கதைகள் படத்தின் வேகத்திற்கு சிறிது தடை போடுகின்றன. கிறிஸ்டினின் மகன் நார்த்காட்டினால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பப்படும்பொழுதே மையக்கதை முடிந்துவிடுவதால் பின்தொடரும் காட்சிகள் இரண்டரை மணி நேரப் படத்தை இன்னும் நீளமாக்குகின்றன. ஆனால் இறுதியில் வால்டர் தப்பித்துச் சென்றிருக்கக் கூடுமென நம்பிக்கை ஏற்படுத்துமாறு அவனுடனிருந்த சிறுவன் திரும்புவதைக் காட்டியதில் இடையில் தேவையில்லாததாகப் பட்ட காட்சிகள் அர்த்தமளிக்கின்றன. இரண்டாம் பாதியில் சில காட்சிகளைக் குறைத்து படத்தின் நீளத்தைக் குறைத்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.


7.5/10

Saturday, September 13, 2008

Mumbai Meri Jaan

11, ஜூலை 2006 - மின்சார ரயில்களில் தொடர் குண்டுவெடிப்புகளால் மும்பை மாநகரம் ஸ்தம்பித்த நாள். அந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம், தனிமனித வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்கிறது, இத்தகைய கொடூரங்களிலிருந்து ஒரு நகரமும் அதில் வாழ் மக்களும் எப்படி தங்களை மீட்டெடுக்கிறார்கள் என்பதை ஆறு வெவ்வேறு கதாபாத்திரங்கள் மூலமாக திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குனர் நிஷிகாந்த் காமத்(எவனோ ஒருவன்).

நிகில்(மாதவன்) மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிபவன். வெளிநாட்டு வாய்ப்புகளை உதறிவிட்டு மும்பையில் வேலை செய்யும் நடுத்தர வயது இளைஞன். சுற்றுப்புற தூய்மை பற்றி கவலை கொள்கிறான். தினமும் அலுவலகத்துக்கு மின்சார ரயிலில் சென்று வருகிறான். ப்ளாஸ்டிக் உபயோகிப்பதைத் தவிர்க்கச் சொல்லி மற்றவர்களை அறிவுறுத்துகிறான்.

சுரேஷ்(கே.கே.மேனன்) சேல்ஸ்மேன். கடனாளி. இந்து அடிப்படைவாதி. முஸ்லீம்களின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவன். வேலையற்ற நண்பர்களுடன் டீக்கடையில் பொழுதைக் கழிப்பவன். குண்டு வெடிப்பு நடந்த தினத்தன்று டீக்கடையில் ரகசியமாகப் பேசிக்கொண்ட மூன்று முஸ்லீம் இளைஞர்கள் மீது சந்தேகம் கொள்கிறான். இயல்பாகவே முஸ்லீம்கள் மீது வெறுப்பு கொண்ட சுரேஷ் அவர்கள் ஏதோ சதித்திட்டம் தீட்டுவதாக எண்ணுகிறான்.ரூபாலி(சோஹா அலி கான்) தொலைக்காட்சி நிருபர். எந்த செய்தியையும் மிகைப்படுத்தி உணர்ச்சிகளை தூண்டி வியாபாரமாக்கும் சராசரி செய்தி நிருபர். அவளின் காதலன் அவள் இவ்வாறு செய்வதைக் குறை சொல்லும்போது அதை நியாயப்படுத்தும் தன் பணியும் அதில் வெற்றியும் மட்டுமே குறிக்கோளாய்க் கொண்ட இளம் நிருபர்.

இர்பான் கான் அந்தேரியில் சேரியில் வாழும் தமிழன். இரவு நேரங்களில் சைக்கிளில் டீ விற்று பிழைப்பு நடத்துபவன். தன் ஏழ்மையின் காரணமாக பல தருணங்களில் பலரின் கேலிக்கும் இளக்காரத்துக்கும் ஆளானவன். பகட்டானதொரு அங்காடியில் தன் குடும்பத்தினர் முன் அவமானப் படுத்தப்படுகிறான்.

துக்காராம் பாட்டீல்(பரேஷ் ராவல்) ஓய்வு பெறப் போகும் போலீஸ் கான்ஸ்டபிள். தன் பணிக்காலத்தில் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என ஒத்துக்கொள்ளும் ஒரு சராசரி காவலர். தன் நகைச்சுவையுணர்வின் மூலமும் கனிவான பேச்சின் மூலமும் சக காவலரிடமும் மக்களிடமும் அபிமானம் பெற்றவர். நிதர்சனத்தை உணர்ந்து அதற்கேற்றாற்போல் தன் மனதை தயார்படுத்திக் கொண்ட சாதாரண மனிதர்.சுனில் கதம்(விஜய் மெளரியா) புதிதாக காவல்துறையில் சேர்ந்து துக்காராமுடன் பணிபுரியும் இளம் காவலர். சாதிக்கும் வெறியும் காவல்துறைக்கு தன்னாலான பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்ற உத்வேகமும் கொண்ட இளைஞர். ஆனால் மேலதிகாரிகளின் ஆணையால் பல சமயங்களில் கைகள் கட்டப்பட்டு அதனால் துறையின் மீது வெறுப்புடனும் சுயபச்சாதபத்துடனும் தவிப்பவர்.

ஜூலை 11, 2006 அன்று நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் இந்த ஆறு பேரின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்கிறது, அதன் தாக்கம், அதிலிருந்து இவர்கள் எவ்வாறு மீள்கிறார்கள் என்பதை சிறப்பான திரைக்கதையின் மூலம் படமாக்கியிருக்கிறார்கள்.

தினமும் மின்சார ரயிலில் பயணம் செய்த நிகில் ரயில்களைக் கண்டு அச்சம் கொள்கிறான். பாதுகாப்பின்மையுணர்வால் தூக்கமின்றி தவிக்கிறான். பொது இடங்களில் பார்ப்பவரையெல்லாம் சந்தேகிக்கின்றான்.ஏற்கனவே முஸ்லீம்களின் மீது வெறுப்பு கொண்ட சுரேஷ் டீக்கடையில் தான் பார்த்த நபர்களே குண்டு வெடிப்புக்கு காரணமென முடிவு செய்து அவர்களைத் தேடி அலைகிறான். சாலையில் கடக்கும் வயதான முஸ்லீமையும் சந்தேகத்துடன் விசாரிக்கிறான். தன் வேலையையும் கடனையும் மறந்துவிட்டு வெறிகொண்டு அலைகிறான்.

இர்பான் குண்டுவெடிப்பினால் நேரடியாக பாதிக்கப்படாவிட்டாலும் தன்னை அவமானப்படுத்தியவர்களை பழிவாங்க எல்லோர் மனதிலும் உள்ள பயத்தைப் பயன்படுத்திக் கொள்கிறான். அங்காடிகளில் வெடிகுண்டு இருப்பதாக பொய்யாக போலிசுக்கு தகவல் சொல்லி அதில் மகிழ்ச்சியடைகிறான்.

ரூபாலியின் காதலன் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழக்கிறான். இதுநாள் வரை அடுத்தவரின் துயரை அறியாமல் அதை உணர்ச்சி நாடகமாக்கி தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய ரூபாலிக்கு தான் செய்துவந்த செயல் உறைக்கின்றது. ஆனாலும் ரூபாலியின் தொலைக்காட்சி நிர்வாகிகள் அவளை வைத்தே நிகழ்ச்சி நடத்தி டி.ஆர்.பியைக் கூட்ட நினைக்கின்றனர்.வெடிகுண்டு தாக்குதலினால் துக்காராமும் சுனிலும் இரவு ரோந்துப்பணியில் ஈடுபடுகின்றனர். சந்தேகத்திடமானவர்களை விசாரிக்கும்போது தாக்கப்படுகிறார்கள். போதை மருந்து உட்கொண்டவனைக் கைது செய்யும் போது உயரதிகாரிகளின் தலையீட்டால் பின்வாங்க நேருகிறது. சுனில் இதனால் ஆத்திரமும் தன்னால் எதுவும் செய்யமுடியவில்லை என்று கழிவிரக்கம் கொள்கிறான். துக்காராம் பணியினூடே சுனிலுக்கு தன் அனுபவங்களைப் பகிர்கிறார். நிதர்சனத்தை உணர்த்துகிறார். இத்தனை வருட காவல்துறை சேவையில் தான் இதுவரை ஒருவரையும் சுட்டதில்லையென்றும் சொல்லிக்கொள்ளும்படி சாதனை எதுவும் செய்துவிடவில்லையென்றும் அதனால் தனக்கு வருத்தமும் இல்லையென்றும் தன் அனுபவத்தைப் பகிர்ந்து அறிவுரைகள் மூலம் சுனிலின் ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் மட்டுப்படுத்துகிறார்.

இந்த ஆறு கதாபாத்திரங்களின் கதைகளும் தனித்தனியாக சொல்லப்படுகிறது. அவர்களை இணைக்கும் களமாக வெடிகுண்டு தாக்குதல். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அத்தனை பேரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். அதில் குறிப்பாக கவர்ந்தவர்கள் கே.கே. மேனன், இர்பான் கான் மற்றும் பரேஷ் ராவல்.

கே.கே.மேனன் தன் கண்களாலேயே வெறுப்பைக் காட்டுகிறார். டீக்கடையில் பார்த்த முஸ்லீம் நபரைத் தேடி வெறியோடு அலையும்போதும் பின்னர் பரேஷ் ராவலுடனான காட்சியிலும் சிறப்பாக நடித்துள்ளார். ஏழைத்தமிழனாக நடித்துள்ள இர்பான் கானுக்கு வசனங்கள் மிகக் குறைவு. தன் நடையாலும் முகபாவங்களாலுமே அசத்தியிருக்கிறார். ஒவ்வொரு முறை வெடிகுண்டு புரளியைக் கிளப்பிவிட்டு மக்கள் அலறி ஓடுவதைக் கண்டு துள்ளல் நடையில் எள்ளல் தெறிக்கிறது.பரேஷ் ராவல் ஓய்வு பெறும் காவலர் வேடத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார். மனிதர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் மனதை ஈர்க்கிறார். ரோந்து பணியின் போது சுனிலிடம் அறிவுரைகள் கூறும் காட்சிகளிலும் , வெறிபிடித்தலையும் சுரேஷிடம் பேசும் காட்சியிலும் இறுதியில் தன் பிரிவுபசாரக் காட்சியிலும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கூர்மையான வசனங்கள் படத்தின் பெரும்பலம். குறிப்பாக சற்று நகைச்சுவையுடன் கூடிய காவலரான துக்காராமின் வசனங்கள். பெரும்பாலான காட்சிகள் துக்காரமை மையமாகக் கொண்டே நகர்கின்றன. தேவையற்ற பாடல் காட்சிகளோ நகைச்சுவைக் காட்சிகளோ திணிக்கப்படாமல் இயல்பாகப் படமாக்கப்பட்டுள்ளது. ஆறு கதாபாத்திரங்களின் கதையை மாற்றி மாற்றிச் சொன்னாலும் திரைக்கதை தொய்வில்லாமல் அமைந்திருக்கின்றது. கதாபாத்திரங்கள் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

சமீபகாலமாக இந்தி திரையுலகில் இருந்து வித்தியாசமான கதைக்களங்களில் விறுவிறுப்பான திரைப்படங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. Aamir, Jaane Tu Ya Jaane Na, A Wednesday, Black Friday போன்ற குறிப்பிடத்தகுந்த படங்களின் பட்டியலில் Mumbai Meri Jaan திரைபபடமும் இடம்பிடிக்கிறது.

Mumbai Meri Jaan - கதைக்களத்துக்காகவும் நேர்த்தியான திரைக்கதைக்காகவும் பரேஷ் ராவலுக்காகவும் கண்டிப்பாக பார்க்கலாம்.

Friday, September 12, 2008

Donnie Brasco

1970களில் எஃப்.பி.ஐ-யின் ரகசிய ஏஜெண்டான ஜோ பிஸ்டோன் நியூயார்க் நகரின் சக்தி வாய்ந்த மாபியா குழு ஒன்றில் 'டானி ப்ராஸ்கோ' என்ற பெயரில் ஊடுருவி ஆறு வருடங்கள் அக்குழுவில் ஒருவராக இருந்து அக்குழுவினருக்கு எதிரான தடயங்களைச் சேகரித்து அக்குழுவில் பலரின் கைதுக்கு காரணமானார். இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் Donnie Brasco.

ஜோ பிஸ்டோன் 'டானி ப்ராஸ்கொ' என்ற நகை வியாபாரியாக மாபியா குழுவினருக்கு அறிமுகமாகிறான்.அக்குழுவில் முப்பது வருடங்களாக இருக்கும் லெஃப்டி டானியின் இளமைத் துடிப்பாலும் பேச்சாலும் ஈர்க்கப்படுகிறான். டானியைக் குழிவில் சேர்த்துக்கொள்ள லெஃப்டி பரிந்துரைக்க டானியும் அக்குழுவில் ஒருவனாகிறான். முப்பது வருடங்களாக அக்குழுவில் இருந்தும் அடிமட்ட நிலையிலேயே இருக்கும் லெஃப்டி டானி தன்னைப் போலில்லாமல் குழுவில் சக்தியுள்ளவனாக வரவேண்டுமென விரும்புகிறான். குழு செயல்படும் விதத்தையும், வேலை நுணுக்கங்களையும், குழுவில் பிறரை எதிர்கொள்வது குறித்தும் தன்னுடைய அனுபவங்களையும் டானியுடன் பகிர்ந்துகொள்கிறான். டானிக்கும் லெஃப்டிக்கும் இடையேயான நட்பு இறுகுகிறது.

ஆரம்பத்தில் எஃப்.பி.ஐ ஏஜெண்டாக தன் வேலையில் மட்டும் குறியாக இருக்கும் டானி காலப்போக்கில் லெஃப்டியின் அன்பால் ஈர்க்கப்படுகிறான். முப்பது வருடங்களாக மாபியா குழுவில் இருந்தும் அடிமட்டத்திலேயே இருக்கும் வயதான லெஃப்டியின் மேல் அவனுக்கு ஏற்படும் பரிதாபம் நாளடைவில் நட்பாக வலுப்படுகிறது. லெஃப்டியும் டானியை தன் மகனைப் போல் கருதி அக்கறை காட்டுகிறான்.
டானி மாபியா குழுவினருடன் சேர்ந்து கடத்தல் வேலைகள் செய்கிறான். இடையே எஃப்.பி.ஐக்கு அக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து தகவல்களும் தடயங்களும் தருகிறான். லெஃப்டியின் செல்வாக்கு காரணமாக குழுவில் மற்றவர்களும் டானியின்பால் நட்பு கொள்கின்றனர். டானி அவன் மேல் எவ்வித சந்தேகமும் எழ இடம்கொடுக்காமல் அவர்களில் ஒருவனாகிறான்.

டானியின் இந்த தலைமறைவு வேலையின் காரணமாக அவனுக்கும் அவன் மனைவிக்குமிடையே சண்டை ஏற்படுகிறது. குழந்தைகள் டானியை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள்.

டானி மாபியா குழுவிலிருந்து வெளியேறினால் அவனைக் குழுவில் சேர்த்த லெஃப்டியின் உயிருக்கு ஆபத்து. அதே நேரம் மற்றொரு பக்கம் அக்குழுவிலிருந்து வெளியேறுமாறு அவன் உயரதிகாரிகளும் மனைவியும் தரும் நெருக்கடி. டானியின் உண்மை முகத்துக்கும் முகமூடிக்குமான இந்த உணர்ச்சிப் போராட்டமே டானி ப்ராஸ்கோ திரைப்படம்.

டானி ப்ராஸ்கோவாக ஜானி டெப்(Johnny Depp) நடித்துள்ளார். ஆரம்பத்தில் மாபியா குழுவினரின் நம்பிக்கையைப் பெற உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் நடிப்பதிலும், பின்னர் குடும்பத்தினருடனான பிரச்சனையின் காரணமாக தவிப்பதிலும் லெஃப்டியின்பால் கொண்ட நட்பினால் தன் நிஜ/போலி முகங்களுக்கிடையே ஊசலாடுவதுமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எஃப்.பி.ஐ ஏஜெண்டான டெப் மாபியா குழுவில் சேர்ந்ததும் அவர்களின் உச்சரிப்பையும் அவர்கள் உபயோகிக்கும் சொற்றொடர்களையும் கற்றுக்கொள்ளும் காட்சிகள் சுவாரஸ்யம். அதேபோல் அவர்களுடன் கடத்தலிலும் கொலைகளிலும் ஈடுபடும்போதும் டானியின் குழப்பமான மனநிலையை நன்கு வெளிப்படுத்தியுள்ளார்.

லெஃப்டியாக அல் பசினோ(Al Pacino). மற்ற திரைப்படங்களில் சக்தி மிக்க மாஃபியா தலையாக நாம் பார்த்த அல் பசினோ இதில் ஒரு அடிமட்ட நிலையில் முப்பது வருடங்களாக வேலை செய்யும் ஒரு சாதாரண ஆளாக நடித்துள்ளார். போதை மருந்துக்கு அடிமையான மகனைப் பற்றி வாஞ்சையாக டானியிடம் சொல்லும் காட்சியிலும், தன்னைத் தாண்டி தன் குழுவினர் சக்தி வாய்ந்த பதவிகளுக்கு உயர்வது குறித்து பொருமும் போதும், தான் செய்யத் தவறியதை டானி செய்து குழுவில் மேலெழ வேண்டுமென உந்துதல் காட்டும்போதும் மிளிர்கிறார்.

நேர்கோட்டில் செல்லும் திரைக்கதையில் அங்கங்கே சுவாரசியமான வசனங்கள் நிமிர்ந்து அமர வைக்கின்றன. நிஜ ஜோ பிஸ்டோன் எழுதிய புத்தகத்தை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்ட திரைக்கதை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. மற்ற மாபியா திரைப்படங்களைப் போல அதிரடி சண்டைக் காட்சிகளோ சஸ்பென்ஸோ இருக்காது.

"If I come out alive, this guy, Lefty, ends up dead. That's the same thing as me putting the bullet in his head myself" என்று சொல்லும் டானி இறுதியில் கடமையின் காரணமாகவும் குடும்பத்தின் காரணமாகவும் அதையே செய்ய வேண்டியிருக்கின்றது.

டானி குழுவில் சேர்ந்த புதிதில் "When they send for you, you go in alive, you come out dead, and it's your best friend that does it" என்று லெஃப்டி சொல்வது அவனுக்கே உண்மையாகிப் போகிறது.

Thursday, August 28, 2008

2001: A Space Odyssey

"You're free to speculate as you wish about the philosophical and allegorical meaning of the film — and such speculation is one indication that it has succeeded in gripping the audience at a deep level — but I don't want to spell out a verbal road map for 2001 that every viewer will feel obligated to pursue or else fear he's missed the point"

- Stanley Kubrick on "2001-A Space Odyssey"


பரிணாம வளர்ச்சிக்கான உந்துதல் என்ன? குரங்கை மனிதனாக மாற்றிய சக்தி எது? கருவிகளும் ஆயுதங்களும் உருவாக்க மனிதனுக்கு ஊக்கமாய் இருந்தது எது? இந்த ஏணியில் மனிதனுக்கு அடுத்த நிலை என்ன? மனிதனின் பரிணாம வளர்ச்சியில் அறிவியலின் பங்கு என்ன? தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த பால்வெளியில் மனிதனால் எவ்வளவு தூரம் கடக்க முடியும்? தொழில்நுட்பத்திற்கும் மனிதனுக்குமான நட்புறவு நீடிக்குமா? செயற்கை நுண்ணறிவு பெற்ற இயந்திரங்கள் அவை உருவாக்கப்பட்ட குறிக்கோள்களுக்கு இயைந்து செயல்படுமா? அந்த இயந்திரங்களின் இருப்புக்கு ஆபத்து நேரும்போது அதை அவ்வியந்திரங்கள் எவ்வாறு எதிர்கொள்ளும்? வேற்றுலக உயிரினங்கள் இருப்பது உண்மையா? அவர்கள் மனிதனை விட அறிவிலும் ஆற்றலிலும் மேம்பட்டவர்களா? உயிர் என்பது என்ன? உடலுடனான அதன் உறவென்ன? மனிதனால் உணரக்கூடிய பரிமாணங்களைத் தாண்டி வேறெதும் உள்ளனவா? அவற்றை மனிதனால் ஆட்கொள்ள இயலுமா? இது போன்ற பற்பல கேள்விகள் பல்வேறு கட்டங்களில் எழுப்பப்பட்டுள்ளன. இவற்றில் சில்வற்றிற்கு ஆதாரப்பூர்வ பதில்கள் கிடைத்துள்ளன். சில பதில் தெரியாத மர்மமாகவே நீடிக்கின்றன. இந்த கேள்விகளினூடாக நம்மை ஒரு கால இயந்திரத்தில் அழைத்துச் செல்கிறது 2001: A Space Odyssey.


மனித இனத்தின் விடியல் : The Dawn of Man

இத்திரைப்படம் நான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னான ஒரு காலைப் பொழுதில் ஆரம்பிக்கிறது. மனித இனத்தின் முந்தையர்களான குரங்குகள் குழுக்களாக ஆப்ரிக்க காட்டில் வாழ்கின்றன. தங்களைத் தாக்கவரும் சிறுத்தை முதலான விலங்குகளிலிடமிருந்தும் மற்ற குரங்கு குழுக்களிடமிருந்தும் காப்பாற்ற வழியில்லாமல் அச்சத்தில் வாழ்கின்றன. இரவு நேரத்தில் மிருகங்களுக்கு அஞ்சி குழிகளில் உறங்குகின்றன. அடுத்த நாள் விடியலில் அந்த குரங்குக் கூட்டங்கள் பதுங்கியிருக்கும் குழிக்கு அருகினில் ஒரு மோனோலித் கல் இரவோடிரவாக நிறுத்தப்பட்டிருக்கிறது. அந்த கல் அங்கு எப்படி வந்ததென்பதற்கான குறிப்புகள் இல்லை. முதலில் அதைக் கண்டு அச்சுறும் குரங்குகள் மெல்ல அக்கல்லை நெருங்குகின்றன. அக்கூட்டத்தின் தலைவன் போலிருக்கும் குரங்கு அக்கல்லை நெருங்கித் தொடுகிறது.
அந்த குரங்கு இறந்துகிடந்த ஒரு விலங்கின் எலும்பைக் கையிலெடுக்கிறது. அதை ஆயுதமாக உபயோகிக்கக் கூடிய சாத்தியம் அக்குரங்கின் மூளையை எட்டுகிறது. அதுவரையில் புல்பூண்டுகளைத் தின்று வாழ்ந்துகொண்டிருந்த குரங்குகள் அந்த எலும்பென்னும் ஆதி ஆயுதத்தைக் கொண்டு மற்ற விலங்குகளைக் கொன்று புசிக்கின்றன. மற்ற குழுக்களிடமிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்கின்றன. மனிதனுக்கும் கருவிகளுக்குமான உறவு அந்த விடியற்பொழுதில் ஆரம்பமாகின்றது.


The Lunar Journey in the Year 2000

ஆண்டு - கி.பி 2000. மனிதன் பூமியை மட்டுமல்லாது பால்வெளியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் துடித்துக்கொண்டிருக்கும் காலம். நான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் குரங்கினம் கண்டு அஞ்சிய கல்லைப் போன்றே நிலவில் ஒரு கல் கண்டுபிடிக்கப்படுகின்றது. ஆனால் அந்த செய்தி மற்றவர்களிடமிருந்து மறைக்கப்படுகின்றது. அக்கல்லை ஆராய்ச்சி செய்வதற்காக பூமியில் இருந்து ஹேவுட் ஃப்ளாயிட் செல்கிறார். அவரின் விண்வெளிப் பயணம் விரிவாகக் காட்டப்படுகிறது. ஈர்ப்புவிசையற்ற அந்த விண்கலத்தில் மனிதன் தன் வாழ்வுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் காட்சிகளாக விரிகின்றது.நிலவுக்குச் செல்லும் ஃப்ளாயிட் அங்குள்ள குழுவினருடன் கலந்தாலோசித்த பின்னர் அக்கல்லை பார்க்கச் செல்கிறார். சிறிது தயக்கத்திற்குப் பிறகு அக்கல்லை நெருங்கித் தொடும்போது அக்கல் மின்காந்த அலைகளை வெளியிடுகிறது. அவ்வலைகள் வியாழன் கிரகத்தை நோக்கி செலுத்தப்படுவதாக ஆராய்ந்து கண்டுபிடிக்கிறார்கள்


வியாழனை நோக்கி: Jupiter Mission

ஒரு வருடம் கழித்து 2001-ல் டிஸ்கவரி விண்கலத்தில் விஞ்ஞானிகள் வியாழன் கிரகத்தை நோக்கி பயணிக்கிறார்கள். டிஸ்கவரி விண்கலம் மனித முளையையொத்து வடிவமைக்கப்பட்ட HAL-9000 என்னும் கணிணியினால் இயக்கப்படுகிறது. ஐந்து பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழுவில் மூவர் ஆழ்நித்திரைக்கு(hibernate) உட்படுத்தப்படுகின்றனர். மற்ற இரு விஞ்ஞானிகள், ப்ராங்க்கும் டேவ் போமேனும் கூட தொலைக்காட்சி பார்த்தும் உடற்பயிற்சி செய்தும் HALலுடன் சதுரங்கம் விளையாடியும் பொழுதைக் கழிக்கின்றனர். விண்கலத்தின் முழுக்கட்டுப்பாடும் HALலிடம் இருக்கின்றது. சந்திரனில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லின் மூலத்தைக் கண்டுபிடிக்கச் செல்கிறோம் என்பது அந்த விஞ்ஞானிகளிடமிருந்து மறைக்கப்படுகிறது. HAL மட்டுமே இந்த பயணத்திற்கான நோக்கத்தை அறிந்துள்ளது. தன்னைச் சுற்றி நடப்பவைகளைப் பார்த்து அறிந்து கொள்ளவும் மனிதர்களுடன் பேசவும் அவர்களின் எண்ணவோட்டங்களை படிக்கவும் HAL திறன்படைத்துள்ளது.பயணத்தினூடே பூமியுடன் தொடர்பு கொள்ளும் ஆண்டெனா பழுதடைந்துள்ளதாக HAL தெரிவிக்கின்றது. அதை மாற்றுவதற்காக ஃப்ராங்க் ஒரு விண் ஓடத்தில் அந்த ஆண்டெனாவை நோக்கி பயணிக்கிறார். மிக மிக நுணுக்கமாக ஒவ்வொரு அசைவும் நிதானமாகக் காட்டப்படுகிறது. அந்த ஆண்டெனாவை மாற்றிவிட்டு வந்ததும் பூமியிலுள்ள கட்டுப்பாட்டு நிலையத்தைத் தொடர்புகொள்ளும் ஃப்ராங்க்கும் டேவ்வும் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். பூமியிலிருந்து அது உண்மையான பழுதாக இருக்காதென்று தெரிவிக்கிறார்கள். எவ்வித தவறும் செய்யாது என்று நம்பப்படும் HAL கணிணி முதன்முதலாக ஒரு தவறான தகவலைத் தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் தங்கள் பயணத்திற்கும் பயணத்தின் குறிக்கோளுக்கும் ஏதேனும் ஆபத்து நேருமென அஞ்சும் ஃப்ராங்க்கும் டேவ்வும் HAL கணிணியை செயலிழக்க முடிவெடுக்கின்றனர். இதை HAL அறிந்துகொள்கிறது.செயற்கை நுண்ணறிவு கொண்ட HAL கணிணிக்கும் மனிதர்களுக்குமான(ப்ராங்க், டேவ்) போராட்டம் இப்பகுதியில் விரிவாகக் காட்டப்படுகிறது. பரிணாமத்தின் இந்த கட்டத்தில் மனிதன் தன் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளிடமிருந்தே தன்னை தற்காத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.


வியாழன் மற்றும் முடிவிலிக்கப்பால் - Jupiter and Beyond the Infinite:


HAL தன்னைக் காத்துக்கொள்ள விண்கலத்திலுள்ள மற்ற விஞ்ஞானிகளை அழிக்கிறது. ஆனால் டேவ் HAL-ஐ செயலிழக்க வைக்கிறார். இப்போது விண்கலம் முற்றிலும் டேவ்வின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. டேவ் தன் பயணத்தை தொடர நினைத்து ஒரு விண்வெளி ஓடம் மூலம் வியாழனை நோக்கிப் பயணிக்கிறார். அங்கு விண்வெளியின் விந்தைகள் அவர் கண்முன் விரிகின்றன. வியாழன் கிரகத்தின் நிலப்பரப்பைக் கண்டு அதிசயிக்கிறார். அங்கு ஏற்கனவே நிலவில் கண்டதைப் போன்ற கல்லைக் காண்கிறார்.

அடுத்த காட்சியில் டேவ் விண்வெளி ஓடத்திலிருந்து ஒரு வெளிச்சமான அறையில் இருப்பதாகக் காட்டப்படுகிறது. இது மனிதனின் அடுத்த பரிணாம வளர்ச்சியாகக் கொள்ளலாம். விண்வெளியில் பறந்த மனிதன் அடுத்தகட்டமாக நான்காவது பரிமானத்தில் பயணிக்கும் சக்தி பெருகிறான். டேவ் தான் வயது முதிர்ந்திருப்பதை தானே காண்கிறான். வயது முதிர்ந்த டேவ் தனியாக உணவருந்துகிறான். எவ்வித அசைவுமின்றி படுக்கையில் கிடக்கிறான்.

படுக்கையில் கிடக்கும் டேவ் முன் மீண்டும் அந்த கல் தோன்றுகிறது. மனிதன் அடுத்த பரிணாம வளர்ச்சிக்குத் தயாராகிறான். பரிணாமத்தின் அடுத்த கட்டத்தில் உயிருக்கு உடலோ நிலமோ தேவைப்படவில்லை. ஒரு நட்சத்திரக் குழந்தையாக விண்வெளியில் மிதந்துகொண்டிருக்கிறது.

ஸ்டான்லி குப்ரிக்கும் ஆர்தர் சி.கிளார்க்கும் இணைந்து குரங்கிலிருந்து ஆரம்பித்த பரிணாம வளர்ச்சி உடலை விடுத்த நட்சத்திரக் குழந்தையாக முன்னேறுவதை இரண்டரை மணி நேரத்தில் ஒரு காலப் பயணத்தை திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள் . ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றும் அந்த மோனோலித் கல் வேற்றுகிரக வாசிகளால் பரிணாம வளர்ச்சியின் அளவுகோலை அறிய ஒவ்வொரு நிலையிலும் வைக்கப்பட்டதா அல்லது பரிணாம வளர்ச்சியின் குறியீடா என்பனவற்றை படத்தில் விவரிக்காமல் படம் பார்ப்பவரின் கற்பனைக்கே விட்டுவிடுகிறார்.


நுண்ணிய விவரங்களுடன் ஒவ்வொரு அசைவாக மிக மெதுவாக காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நிலவுக்கு ஃப்ளாயிட்டின் பயணமும், ஆண்டெனா மாற்றும் காட்சியில் விண்கலத்திலிருந்து ஆண்டெனாவை நோக்கி ஓடத்தில் பயணப்படும் காட்சியும், ஓடத்திலிருந்து ஆண்டெனாவிற்கு ஆக்சிஜன் குழாய் உதவியுடன் சுவாசித்தபடி விண்வெளியில் மிதந்து செல்லும் காட்சியும் மிகமிக நேர்த்தியுடன் நுணுக்கமாக காட்டப்பட்டுள்ளன.

இரண்டரை மணி நேரப் படத்தில் வரும் வசனங்களை அரைப் பக்கத்தில் எழுதிவிடலாம். படத்தில் அதிகமாக பேசும் கதாபாத்திரம் HAL கணிணிதான். மற்றனைத்தும் சினிமா என்பது காட்சி ஊடகம் என்ற கூற்றினை மெய்யாக்குவது போல் காட்சிகளாக நம் முன் விரிகின்றன. சிம்பொனி/செவ்வியல் இசை பின்னணி இசையாக படம் நெடுகிலும் உபயோகிக்கப்பட்டுள்ளது சிறப்பு. செவ்வியல் இசை நம்மைக் காட்சியுடன் ஒன்றவைக்கின்றது. பல இடங்களில் எல்லையில்லா மெளனம். விண்வெளியில் காட்டப்படும் காட்சிகள் அங்கு உண்மையாக இருப்பதைப் போன்ற அடர்ந்த மெளனத்துடன் படமாக்கப்பட்டுள்ளன.

1968-ல் எடுக்கப்பட்ட இப்படம் அதன் காலத்தைக் கடந்து 2001ல் விண்வெளி ஓடங்களின் வடிவமைப்பு, தொலைத்தொடர்பு சாதனங்கள், விண்கலத்தில் 360 டிகிரியில் நடக்கும் மனிதர்கள், செயற்கை நுண்ணறிவு கொண்ட கணிணிகள், வியாழன் கிரகத்தின் நிலப்பரப்பு என அனைத்துமே மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. சிறந்த விஷுவல் எஃபெக்டுக்கான ஆஸ்கர் விருது ஸ்டான்லி குப்ரிக்குக்கு வழங்கப்பட்டது.

மிக மிகப் பொறுமையாக நகரும் இத்திரைப்படம் சமயத்தில் அயர்ச்சியை ஏற்படுத்தக்கூடும். ஆனால் ஒரு அரிய பயணத்திற்கான எல்லா ஆயத்தங்களையும் செய்துகொண்டு எவ்வித எதிர்பார்ப்பும் முன்முடிவுகளுமின்றி இத்திரைப்படத்தைப் பாருங்கள். காலங்களைக் கடந்து செல்லும் இப்பயணம் ஒரு சுகானுபவமாக அமையும்.

Saturday, June 28, 2008

Wanted

ஒரு ஆக்ஷன் திரைப்படம் எடுக்க தேவையானவை:

1. இருபதில் இருந்து முப்பது வயதுக்குள் ஒரு நாயகன்
- வாழ்க்கையில் விரக்தியடைந்து வேலையில் பிரச்சனைகளுடன், காதலியுடன் சண்டையிட்டுக் கொண்டு, நம்பிக்கை துரோகம் செய்யும் நண்பனுடன்

2. ஒரு அதிசய சக்தி. அத்துடன் பல நூற்றாண்டுகளாக அந்த சக்தியை ரகசியமாகப் பாதுகாத்து வரும் ஒரு குழு.

3. அக்குழுவில் அழகான நாயகி. குழுத் தலைவராக வயதான ஒரு புகழ்பெற்ற நடிகர்

4. குழுவிலிருந்து பிரிந்து செல்லும் வில்லன்

5. நாயகனைக் குழுவில் சேர்த்தல்/பயிற்சி அளித்தல்

6. அந்த காட்சிகளில் நகைச்சுவை சேர்க்க குழுவில் இரண்டு கதாபாத்திரங்கள்.

7. நாயகன் வில்லனுடனும் அவன் அடியாட்களுடனும் சண்டை/கார்,ரயில்,விமான சேஸிங்

8. இடையிடையே ஸ்லோ மோஷனில் செண்டிமெண்ட் காட்சிகள்

9. கடுமையான சண்டைக்கிடையில் நாயகனுக்கு முத்தமிடும் நாயகி. அங்கே ஒரு ஃப்ரீஸ்(Freeze).

10. இறுதியில் வில்லனைக் கொல்லும் நாயகன். கதம் கதம்!

Wanted திரைப்படமும் கிட்டத்தட்ட இதே ஃபார்முலாவுடன் வெளிவந்துள்ள அக்மார்க் ஆக்ஷன் திரைப்படம். நாயகன் வெஸ்லி(John McAvoy) வேலையிடத்திலும் காதலியுடனுமான பிரச்சனைகளில் விரக்தியில் இருக்கிறான். தான் யார், தன்னுடைய குறிக்கோள் என்ன என்பதில் குழப்பத்தில் இருக்கிறான். திடீரென அவனைக் கொல்ல வரும் ஆசாமியிடமிருந்து
ஃபாக்ஸ்(Angelina Jolie) என்ற பெண்ணால் காப்பாற்றப்பட்டு ஒரு ரகசிய குழுவினரிடம் கொண்டு செல்லப்படுகிறான்.

அது பல நூற்றாண்டுகளாக எதிர்காலத்தில் கொலை செய்யப்ப்போகும் ஒருவரைக் கண்டுபிடித்து கொன்று வரும் நல்ல கொலையாளிகளைக் கொண்ட குழு. அதன் தலைவராக மார்கன் ஃப்ரீமேன்( Morgan Freeman). அவர்கள் எதிர்காலக் கொலையாளிகளைக் கண்டுபிடிப்பது துணி நெய்யும் இயந்திரம் மூலமாக. முன் எப்போதோ வடிவமைக்கப்பட்ட அந்த இயந்திரம் கொலையாளிகளின் பெயர்களை முன்கூட்டியே (விதியாம்) கண்டுபிடித்து துணியில் பைனரி கோட் மூலம் நெய்கிறது. அதைப் படித்து எதிர்கால கொலையாளிகளை இக்குழுவினர் கொலை செய்கின்றனர்.

வெஸ்லியின் தந்தையையும் அந்த குழுவில் இருந்தவர். அவரைக் கொன்ற வில்லனைக் கொல்வதற்காக வெஸ்லியைத் தேர்ந்தெடுக்கின்றனர். அவனுக்குக் கடுமையான பயிற்சியளித்து தயார் செய்கின்றனர். வெஸ்லி அந்த வில்லனைக் கொலை செய்யும் போது ஒரு ட்விஸ்ட். அந்த கொலையாளி யார், அந்த மெஷின் ஒழுங்காகத் தான் வேலை செய்கிறதா என்று மேற்கொண்டு திருப்புமுனைகள். இறுதியில் வழக்கம் போல் நாயகனுக்கு வெற்றி.

சேஸிங் காட்சிகளும் ஆக்ஷன் காட்சிகளும் நன்றாகப் படமாக்கப்பட்டுள்ளன. ஆனால் கதையில் புதிதாக ஒன்றுமில்லை. ஆஞ்சலினா ஜூலியும் மார்கன் ஃப்ரீமேனும் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். கதாநாயகனாக நடித்துள்ள ஜான் மெக்அவாய் The Last King of Scotland திரைப்படத்தில் அருமையாக நடித்திருந்தவர். இத்திரைப்படத்தில் நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு குறைவு தானென்றாலும் சில காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார்.


இப்போதெல்லாம் படத்தை விட டிரெயிலர்கள் நன்றாக இருக்கிறது.இத்திரைப்படத்திற்கும் டிரெயிலரைப் பார்த்து சிறிது எதிர்பார்ப்புடன் சென்றதால் ஏமாற்றமே. சில நகைச்சுவைக் காட்சிகளும் சண்டை/சேஸிங் காட்சிகளும் ரசிக்கும்படி இருந்தாலும் மொக்கையான கதையாலும் சில காட்சிகளாலும் சொதப்பிவிட்டது. கதையில் பல்வேறு திருப்பங்கள் தருவதாக ஏகப்பட்ட குளறுபடிகள்.

Wanted - ஆக்ஷன் திரைப்பட ரசிகர்களுக்கு.

Friday, June 13, 2008

உலகநாயகனின் "தசாவதாரம்"

ஹாலிவுட் தரத்துக்கு எடுக்கப்பட்ட தமிழ் படம். தமிழ் நாட்டில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம். இந்த இரண்டும் சரிதான் என தசாவதாரம் பார்த்ததும் முதலில் தோன்றியது. இன்னொரு விசயத்தை குறிப்பிட வேண்டுமென்றால் படத்தின் ஆரம்பத்தில் கமலஹாசனை காட்டும் பொழுது உலக மேப்பை சென்னையிலிருந்து மையப்படுத்தி கமலின் கண்களில் தெரியும்படி செய்துருப்பர்.அது என்னோவோ உண்மை என்பது போல் தான் படத்தின் இறுதியில் தெரிந்தது. ஒட்டு மொத்த படத்துக்கும் கமல் என்ற மையத்தின் பிரமாண்டமான உழைப்பும்,அயராத உழைப்பும்,சுயநலமான!! உழைப்பும்தான் தெரிகிறது.படத்தின் துவக்க காட்சியில் கமலின் பிண்ணனி குரலில் நம்மை பனிரெண்டாம் நூற்றாண்டுக்கு கூட்டி செல்கிறது. சோழனின் வழித்தோன்றல்களில் ஒரு மன்னனின் வைஷ்ணவ எதிர்ப்பின் விளைவாக வைஷ்ணவ கோவில்கள் சிதைக்கப்பட்டும் விஷ்ணு சிலைகள் கடலில் இடப்படுகிறது.இந்த செயலை எதிர்க்கும் ரங்கராஜன் நம்பியாக முதலாவது அவதாரம் எடுக்கிறார் கமல்.கதையின் ஆரம்பமும் அங்கேதான் ஆரம்பிக்கிறது. மன்னரின் வைஷ்ணவ துவேஷத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாட்சரத்தை உச்சரிக்க மறுத்து விஷ்ணு சிலையோடு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுகடலில் வீசப்படுகிறார். இந்நிகழ்ச்சி தன் கண்களுக்கெதிரே நடப்பது கண்டு தன் தாலியை மன்னரை நோக்கி எறிந்து விட்டு மன்னர் பீடத்தின் இரு மருங்கிலும் இருக்கும் சிங்கதலை கல்தூண்'லில் முட்டி உயிரை மாய்த்துக்கொள்கிறார் அசின்.

நடுகடலின் ஆழத்திலிருந்து கேமரா அமெரிக்காவிலிருக்கும் பயோ-லேப்'லில் வந்து சேர்ந்து கோவிந்தராஜன் என்ற கமலின் இரண்டாவது அவதாரத்தை அறிமுகப்படுத்துகிறது.நுண்ணுயிர் கிருமி ஆயுதங்களுக்கு உண்டான ஆராய்ச்சியில் ஈடுப்பட்டிருக்கும் கமலின் சக ஊழியை ஒருவரின் கவனகுறைவால் அந்த ஆராய்ச்சி குப்பியை தின்று கொடுர மரணமடைகிறது கமலின் வளர்ப்புகுரங்கு. அந்த காட்சியின் தீவிரம் படத்தின் இறுதியிலும் தெரிய வைப்பதற்கான முன்னோட்டமாகவும் கொள்ளலாம். தன்னுடைய மேலதிகாரி இந்த கொடிய கிருமி ஆயுதத்தை எதிரிகளிடம் விற்பதற்கான முயற்சியில் ஈடுப்படுவதை அறிந்த கமல் அதை முறியடித்து இன்னொரு ஆராய்ச்சி குப்பி(வயல்)யை தன்னுடன் எடுத்து வருகிறார். ஆராய்ச்சியாளர் கமலிடமிருந்து அந்த குப்பியை கைப்பற்ற எதிரிகளால் அனுப்பி வைக்கப்படும் அமெரிக்க கதாபாத்திரமாய் முன்றாம் அவதாரமெடுக்கிறார்.

குப்பி தவறுதலாக இந்தியாவிற்கு அனுப்பப்படும் வான்வெளி கொரியரில் கமலும் பாஸ்போர்ட் - விசா இல்லமால் இந்தியாவுக்கு பயணிக்கிறார். அவரை துரத்தி வரும் கடமையில் தமிழ் மொழிப்பெயர்ப்பு உதவிகளுக்கு அவசர மனைவி மல்லிகாவுடன் இந்தியாவுக்கு பயணிக்கிறார் வில்லன் கமல். விமானத்திலே ஆராய்ச்சியாளர் கமலை தீவிரவாதியாக அடையாளப்படுத்தி அவரை கைது செய்து விசாரணை அதிகாரி கொல்டியாக நான்காம் அவதாரமெடுக்கிறார். கொல்டியின் அறிமுக காட்சியிலே கலகலப்பு மூட்டுகிறார். கோவிந்தை விமான நிலையத்தில் வைத்து விசாரணை செய்து கொண்டிருக்கும் பொழுது பஞ்சாபி பாடகர் அவதார் சிங் தமிழகத்துக்கு வருவதாக ஐந்தாம் அவதாரமெடுக்கிறார். அவருக்கு ஜோடியாக ஜெயப்பிரதா. பாடகர் கமலை வைத்து தமிழ் சினிமாவின் தலையெழுத்துக்களில் ஒன்றான கேன்சர் வியாதியும் இந்த படத்திலொரு அவதாரமாய் இருக்கிறது. இதற்கிடையில் அமெரிக்காவில் விஞ்ஞானி கமலின் சக ஊழியர் மற்றும் அவனது மனைவிய கொலை செய்தது விஞ்ஞானி கமல்தான் என நினைத்து அவரை பழிவாங்கும் எண்ணத்தில் இந்தியாவுக்கு பயணிக்கும் ஜப்பானிய சண்டை பயிற்சி தலைவனாக ஆறாவது அவதாரம். ஏழடி உய்ரத்தில் அப்பாவி இளைஞனாக நாகேஷ் - கே.ஆர்.விஜயா தம்பதிகளுக்கு பேபியாக ஏழாவது அவதாரம். இடையிலே அந்த கிருமி-ஆயுதம் இந்தியாவுக்கு போனது குறித்து இந்திய பிரதமர் மான்மொக்யான் சீஆங்(No Spelling mistake)வுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போகும் அமெரிக்க ஜனாதிபதி புஷ்'ஆக எட்டாவது அவதாரமெடுக்கிறார் கமல்.

இவ்வளவு குழப்பமான கதைப்போக்கில் கதாநாயகியாக சிதம்பரத்து மாமி பெண்ணாக அசின், கிருஷ்ணா, முகந்தா என பாடியப்படி அறிமுகமாகிறார்.அவருடன் இருக்கும் பாட்டியாக நான்கு அடிக்கு உடல் குறுகி போன பாட்டியாக ஒன்பதாவது அவதாரமெடுகிறார் கமல், இந்த பாட்டி கதாபாத்திரத்தின் மகன் சிறுவயதில் அமெரிக்கா சென்று அங்கேயே மரணமடைந்து விட்டதால் அந்த அதிர்ச்சியில் அவர் சற்று மனம்பிறழ்ந்தாய் சித்திரிக்கப்பட்டுள்ளது. கடைசியாக பத்தாவது அவதாரமாக முத்தாய்ப்பாக அமைவது பூவராகவன் கதாபாத்திரம்தான். கதைகளத்துக்கு இந்த கேரக்டர் தேவையில்லாத போதும் அந்த கதாபாத்திரம் கதையோடு பொருத்த கமலின் திரைக்கதை உத்தி வெகுவாக உழைத்து இருக்கிறது.

அந்த நுண்ணுயிர் கிருமி வயல் சிதம்பரம் அசின் வீட்டிற்கு சென்றடைக்கிறது. அந்த வயலை பாட்டி கமல் வீதியுலா வரும் பெருமாள் சிலைக்குள் போட்டு விடுகிறார். வில்லன் கமல் + மல்லிகா மிகச்சரியாக அசின் வீட்டிற்கு அருகில் வந்ததும் இவ்வளவும் நடக்கிறது. அதே நேரத்தில் கொல்டி கமலின் (சிரிப்பு போலிஸ்)'ம் அங்கே வர சாமி வீதியுலா கலவரமாகி யானைக்கு மதம் பிடித்து மல்லிகா ஹாங்கரில் தொங்கவிடப்பட்டு உயிரை இழக்கிறார். அதன் பின்னர் வயல்'ஐ கைப்பற்ற அனைவரும் ஓட ஆரம்பிக்கிறார்கள். கமலோடு சேர்ந்து அசினும் ஓடிக்கொண்டே இருக்கிறார். தள்ளுவண்டியிலிருந்து இரயில் லாரி என கிடைக்கும் எல்லா வாகனங்களிலும் பயணிக்கிறார்கள். இடையிடையே கிரேசி.மோகன் ஸ்டைலில் Witty - வசனங்கள் வேறு. சில வசனங்கள் சிரிக்கவைக்க முயல்கின்றன, சில வசனங்கள் எரிச்சலை வர வைக்கின்றன. எங்கோ அலைந்து திரிந்து ரங்கராஜன் நம்பியை கடலில் விட்ட இடத்துக்கே இருவரும் வந்து சேர்கின்றனர். முற்பிறவி அசின் தலைமுட்டி இறந்த அதே சிலையில் இக்காலத்து அசின் இடித்துக்கொண்டு அந்த ஆன்மாவின் கர்மா'வை ஏற்று கொள்கிறார்.??!! இந்த காட்சிகளுக்காக தான் பன்னிரெண்டாம் நூற்றாண்டு காலங்களிலிருந்து கதை துவங்குவதாக அமைக்கப்பட்டதா என்பது கமலுக்குதான் வெளிச்சம்.

திரைக்கதை முடிவை நோக்கி பயணிக்கும் பொழுது அனைவரும் ஒரே புள்ளியில் இணைய ஆரம்பிக்கின்றனர். சிரிப்பு போலிஸ் பல்ராம் நாயுடு(கொல்டி கமல்) விசாரணைக்காக நெட்டை கமல் குடியிருயிருக்கும் காலனி மக்கள் அனைவரையும் மசூதியில் அடைக்கிறார். இன்னொரு மூலையில் பூவராகவன் முன் பகையை தீர்த்துக்கொள்ள லோக்கல் வில்லன் வாசு வீட்டுக்கு சென்றடைய , ஆராய்ச்சி கமலும் வில்லன் கமலும் இறுதி சண்டை காட்சிக்காக கடற்கரைக்கு வர இவர்களை தேடி ஜப்பான் குங்பூ மாஸ்டரும் வந்து சேர்கிறார். வழக்கமான இந்திய சினிமா பார்மூலா படி ஹீரோ நல்லவன் என குங்பூ மாஸ்டருக்கு தெரியவர குங்பூ மாஸ்டரும் அமெரிக்கவில்லன் கமலும் மோதுகிறார்கள். படத்தில் ஹைலைட்டான விஷயமே இங்கேதான் இருக்கிறது. அந்த சண்டை காட்சியை இயக்கியதும் சரி, ஒளியிலிருந்து ஒலி வரை மிக துல்லிதமாக கையாண்டு இருக்கிறார்கள். சீட் நுனியில் உட்கார்ந்து ரசிக்கும் நமக்கே இரண்டு அடி விழுந்து விடுமோ என பயப்படும் அளவிற்கு கச்சிதம் மற்றும் பிரமாதமான காட்சியமைப்பு. சண்டையின் இறுதியில் வில்லன் கமல் வழக்கமான பாணியில் சாக துணிய அப்பொழுது தான் அந்த நுண்ணுயிர் கிருமி தன்னிடம் இருப்பதை உணர்ந்து வாயில் பபுள்-கம்'ஆக கடிந்து மென்று குரங்கு செத்தமாதிரி தானும் சாக ஆரம்பிக்கிறார். நுண்ணுயிர் பெருக்கத்தை வான்வெளியிலிருந்து தொலைநோக்கியில் பார்க்கும் சிரிப்பு போலிஸ் பல்ராம் நாயுடு மற்றும் ஆராய்ச்சி கமல் பின்ன நாமும் என்ன நடக்க போகுதென ஆர்வமாக பார்க்க,டிசம்பர் 26-2004 அன்று ஏற்பட்ட சுனாமியை இங்கு அதற்கு மாற்றாய் உருவெடுக்கிறது. சுனாமி பேரலையில் விஷநுண்ணுயிர் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட பூவராகவன் மற்றும் வில்லன் கமல் மட்டும் உயிர் இழக்கிறார்கள். கடலுக்குள் புதையுண்ட விஷ்ணு சிலை சுனாமி பேரலையால் வெளியே அடித்து வரப்படுக்கிறது, அந்த சிலையை கைக்கு ஆதாரமாய் வைத்துக்கொண்டு அசின் ஆன்மிகம் பேசுகிறார், கமல் வழக்கம் போல் குழப்பமாகவே பகுத்தறிவு வசனம் பேசுகிறார். கடவுள் இருந்தா நல்லாயிருக்குமின்னு வழக்கம் போல் உரித்த வாழைமட்டையில் வெளக்கெண்ணெய் உற்றிய கணக்காய் வசனம் பேசி முடிக்கிறார். முன் ஜென்மத்தில் இணையால் போன கமல் - அசின் ஜோடி இந்த ஜென்மத்தில் இணைவதாக விஷ்ணு சிலையிலிருந்து கேமராகண் வெளியே வருகிறது.

படத்திலுள்ள குறைகள்:-

1) முன் ஜென்ம தொடர்புகளுக்காகவே எடுக்கப்பட்ட நம்பிராஜன் சம்பந்தப்பட்ட முதல் பத்து நிமிட காட்சிகள்
2) சோழமன்னராக வரும் நெப்போலியன் கொழ கொழ தமிழ்
3) இந்த கதை 2004ம் வருடத்தில் நடைபெறுவதாக காண்பித்து விட்டு நவீனரக கார்களை பயன்படுத்தியது.
4) நொய் நொய்'ன்னு காது கிழியுமளவிற்கு அசின் பேசும் வசனங்கள்
5) ஒவ்வொரு கமலாவதாரமும் வெவ்வேறு மொழிகளில் பேசி கொல்வது.(சப்-டைட்டில் போடுவதாக இருந்தால் நிறைய இடத்தில் தேவைப்பட்டிருக்கும்)
6) கதைக்கு சுத்தமாக சம்பந்தமில்லாத ஏழரை அடி கமல்.
7) நாகேஷ், கே.ஆர்.விஜயா,ஜெயப்பிரதா என பழம்பெரும் நடிகர்களை கறிவேப்பிலை கதாபாத்திரங்களாக்கியது.
8) சுனாமி வந்ததை கதையோடு ஒட்ட முயற்சித்தது.
9) சுனாமி வந்த பின்னர் மக்களோ அழுது கொண்டிருக்க கமலும்-அசினும் பேசி கொல்லும் வசனங்கள்
10) 2004 வருடம் நடந்ததுக்கு 2008'ல் எதற்கு பாரட்டு விழா நடத்துக்கிறார்கள்? அதில் புஷ்வாதார கமல் ஆடும் நடனம்..

படத்திலுள்ள நிறைகள்:-

1) வரலாற்று சம்பவங்களுக்கான காட்சியமைப்பில் இருந்த அதீத உழைப்பு.
2) கமல்
3) கமல்
4) கமல்
4) கமல்
5) கமல்
6) கமல்
7) கமல்
8) கமல்
9) கமல்
10) கமல்
11) இன்னும் பல.........


கமலின் ரசிகராக படம் பார்க்க ஆரம்பித்தால் இதொரு உலகத்தின் பிரமாண்டமான சாதனை முயற்சி திரைப்படம். சாதாரண திரைப்பட ரசிகராக ரசிக்க ஆரம்பித்தால் இதொரு நல்ல பொழுது போக்கு அம்சமுள்ள திரைப்படம். நல்ல சினிமா ரசிகராக அனைவரும் ரசித்து மகிழ கீத்துகொட்டாய்'யின் வாழ்த்துக்கள்.

கீத்துகொட்டாய் மதிப்பீடு:- 49/100

Thursday, May 22, 2008

Outsourcedஇந்திய மென்பொருள் வல்லுநர்களை குறிப்பாக BPO ஆட்களை குறி வைத்து நக்கலாக எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம் இது. அமெரிக்க நகரத்தில் அமைந்திருக்கும் பலசரக்கு??!! ஆன்லைன் கடையின் கால் சென்டர் மேனஜர் இந்தியாவில் அமைந்திருக்கும் அவுட்சோர்ஸ் கால் சென்டருக்கு அனுப்பப்படுகிறான். அவனுடைய Cultural-difference பிரச்சினைகளை சிறிதாகவும் இந்திய கணினி வல்லுநர்களை கிண்டல் அடிப்பதில் பெரிதாகவும் விளக்கி சொல்லுவதில் வென்று இருக்கிறார் இயக்குநர்.

மும்பை ஏர்போர்ட் வந்து இறங்கி தன்னை அழைக்க வந்த டாக்ஸி டிரைவரை தவறவிடும் ஹீரோ(டோட் ஆண்டர்சன் todd andersan) தன்னை சுற்றும் வாடகை டாக்ஸி டிரைவர்களால் ஆட்டோவில் பயணிக்க ஆரம்பித்தலில் இந்தியவாழ்க்கை அவனுக்கு வரவேற்கிறது.வழியெங்கும் அழுக்கும்,ஏழ்மை இந்திய வாழ்க்கையும் அவனுக்கு ஏதோவொரு கிரகத்தில் வசிக்க போவதாக பயம் தொற்றிக்கொள்கிறது. மும்பையிலிருந்து காராபூரிக்கு இரயிலில் பயணம் செய்வதில் நமது கலாச்சாரத்தின் அடையாளங்களில் ஒன்றான ஓடும் வண்டியில் ஏறுவதில் பயப்படுகிறான். அதன் பின்னர் காராபூரி வந்து சேரும் டோட் ரயில்வே ஸ்டேசனில் அமைந்திருக்கும் கோலா ஐஸ் வாங்கி சாப்பிடும் நேரத்தில் இந்திய கால்சென்டர் மேனேஜர் புரவத் நரசிம்மார் விரவாதாச்சரிய்யா aka ப்ரு அறிமுகம் ஆகிறார். இந்த இடத்தில் ஆரம்பிக்கிறது நமது இந்திய ஆங்கில உச்சரிப்பும் அமெரிக்கர்களின் ஆங்கில உச்சரிப்பின் வித்தியாசம். Todd தன்னை டாட் என அழைக்க சொல்லுவதும் ப்ரு மறுபடியும் டொட் என அழைப்பதும், Cost cutting'க்காக ஹோட்டல் தங்க வைப்பத்திலிருந்து தெரிந்த வீட்டில் Paying Guest'ஆக அழைத்து செல்வதுமாய் கலகலக்க வைக்கிறார்கள். டாட் இடது கையில் சாப்பிடுவதினால் அதை நம்மவர்கள் விளக்க வைப்பதும், திருட்டு சிறுவனின் மொபைல் போன் களவாடப்படும் காட்சிகளும் சற்று வெறுப்பேத்துவதாய் நகர்கிறது(இந்திய பாசம்??)

முதன்முறையாக இந்திய அலுவலகத்துக்கு வரும் டாட் அங்கு நடத்திருக்கும் முழுமையடயாத கட்டிடத்தில் நடக்கும் வேலைகளில் வெறுப்பாகும் அவன் அலுவலுகத்தின் அடுத்த வாசலருகே மாடு நிற்பதும், தன்னுடய அறையில் கண்ணாடி பொருத்தப்படாது கண்டு வெறுப்பாகிறான்.தன்னுடைய முதல் பயற்சியில் அனைத்து இந்திய பணியாளர்களுக்கும் அமெரிக்க ஆங்கிலத்தை பயிற்வித்தலில் அவனுடைய மூக்குறுத்தலில் அறிமுககிறார் முண்டகண்ணி கதாநாயகி ஆயிஸா டாக்கர்(சந்தோஷ் சிவனின் மல்லியில் நடித்தவர் starwar II'லில் ராணியாக வருபவர்).

அமெரிக்கா நேரப்படி தன்னுடய வாழ்க்கையை தொடரும்ம் டாட் இந்திய இரவில் வேலை முடிந்ததும் தன்னுடைய அலுவலகவேலைகளில் ஒன்றாக இந்திய பணியாளர்களுக்கு பயற்றுவித்தலில் மறுபடியும் தோற்கடிக்கப்படுகிறான். மறுநாள் பயற்சியில் உச்சரிப்பு, மொழியாளுமையில் இருக்கும் பிரச்சினையை விளக்கவரும்போது Eraser & condom'க்கும் இருக்கும் வித்தியாசத்தில் மறுபடியும் கலகலக்க வைக்கிறார்கள். வீடியோ'வே பாருங்கள்!!

காமெடி சீன் :-


MPI குறைத்தலில் ஆஷவின் பங்கு அதிகமாகப்பட ப்ருவின் பொறாமை பத்த வைக்கப்படுகிறது. ஹோலி கொண்டாட்டம், இந்திய உணவு பகிர்ந்துண்ணும் கலாச்சாரத்தில் உந்தப்படும் டாட் படிப்படியாக இந்தியனாக தன்னை தயார்படுத்தி கொள்ளும் முயற்சியில் இறங்க ஆரம்பிக்கிறான். இந்திய பணியாளர்களுக்கு இணக்கமான முறையில் நடக்க ஆரம்பிக்க அமெரிக்க முதலாளியிடம் கெட்ட பெயர் சம்பாதிக்கிறான். இந்த சந்தடிசாக்கில் முண்டகண்ணி கதாநாயகியிடம் இவன் தன்னுடய மனதையும்,கதாநாயகி இவனிடம் அவள் எல்லாத்தையும் இழக்கிறார்கள். திரைக்கதையின் ஆரம்பித்தலிருந்து கடவுள் காளியும்,லிங்கமும் பெரும் பங்கு வகிக்கிறார்கள். லிங்கத்தை பற்றி கதாநாயகியின் விவரிப்பில் டாட்'க்கு பற்றிக்கொள்ளும் பதற்றம் நமக்கும் பற்றிக்கொள்கிறது.

இறுதியாக டாட்'னின் முதலாளி இந்தியாவுக்கு வருகை தருவதும், இவன் தன்னை முழுமையாக இந்தியகலாச்சாரத்துக்கு தக்கவாறு மாற்றிக்கொள்வதுமாய் திரைக்கதை முடிவை நோக்கி பயணிக்கிறது. முதலாளி இந்திய வருகையின் நோக்கம் இந்திய அவுட்சோர்ஸை சீனாவுக்கு மாற்றுவதாக வந்திருப்பதை அறிந்து வெறுப்பாகி தன்னுடைய பணியாளார்களுக்கு அறிவிக்க சோகத்துடன் சொல்ல நம்மவர்கள் அதை மகிழுவுடன் எதிர்கொள்கிறார்கள். தன்னுடைய இந்திய வாழ்க்கை முடிவுறும் வெறுப்பில் இந்திய மேனஜர்க்கு சீன வாழ்க்கையை அமைந்து தருவதிலும் அவனுடைய இந்தியகாதலி முண்டக்கண்ணியும் போன் கால் பேசுவதிலும் படம் முடிகிறது.

இன்னமும் விளக்கி சொல்வதில் இந்த படத்தில் காட்சிகள் குறைவாக இருந்தாலும், உள்குத்து அதிகமாக இருப்பதினாலும் ஒன்னும் சொல்வதற்கு இல்லை. Comedy drama என்ற வகைப்படுத்தில் இந்த திரைப்படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

Thursday, April 17, 2008

குருவி- பாடல்கள்

ஒன்னு விஜய் சொல்லி இருக்கனும் இல்லாட்டி, தரணி சொல்லி இருக்கனும். என்னான்னு? ATMல குத்து பத்தலைன்னு ரசிகர்கள் புலம்பறாங்கன்னு, அதான் இந்தப் படத்துல எங்கே பார்த்தாலும் குத்து.

1. Happy New Year -சுனிதி செளகான், Dr Burn மற்றும் யோகி.பி
நல்ல குத்துபாட்ட எப்படி கெடுக்கனும்னு யோகி குழுகிட்டே கேட்டு தெரிஞ்சிக்கனும். அருமையா பாடி இருக்காங்க சுனிதி. கரகாட்டகாரன் பாட்டுக்கு ஈடா வர வேண்டியது, அவசரத்துல பாடி இதையும் கெடுத்து வெச்சுட்டாரு. மாத்துய்யா, கடுப்படிக்குது. Puuru puurru..., Superb ..இது ஒரு ஐட்டம் பாட்டா இருக்கும் போல, ஆனாலும் இனிமே புது வருசத்துல தெருவுல ஆட்டம் போட இந்தப் பாட்டு இருக்கும். என்னமோ, புதுசா கேட்குற மாதிரியே இல்லீங்க.

தாநா தாநான்னன்னே.. சுனிதி மனசுல இருக்காங்கப்பா...

2. டண்டாண்ணா டர்ன்னா-சங்கீத் ஹல்திப்பூர்(மராத்திய பாடகர்/இசையமைப்பாளர்)

டாக்டர் விஜய்யின் அறிமுகப்பாடல், வழக்கம் போல குத்து, குத்து, குத்து, குத்து, குத்து, குத்து, குத்து, குத்து, குத்து, குத்து, குத்து.  • என் சாப்பாட்டுக்கு உப்புக்கல் நீயடா..
  • அத்தனைக்குமேல நாம அண்ணன், தம்பிடா.
  • என் வீட்டுக்கு செங்கல்லும் நீயடா

இப்படி வரிகள் வெச்சு அடுத்த சூப்பர் ஸ்டார்ன்னு நிலை நாட்டி இருக்காருங்க. திருப்பாச்சில இருந்து அறிமுகப்பாட்டு இப்படித்தான் ஒரே மாதிரியே இருக்கு. என்னமோ, புதுசா கேட்குற மாதிரியே இல்லீங்க.

3. மொழ மொழன்னு - பாடினது கேகே மற்றும் அனுராதா ஸ்ரீராம்.

ஐய், இப்பவே தெரிஞ்சிருக்குமே, அப்படிப்போடு-கில்லி ஹிட் ஆனதுக்கப்புறம் அனுராதா வந்து விஜய்க்குன்னு ஒரு குத்துப்பாட்டு பாடுவாங்க. இதுவும் அதே மாதிரிதான். புஷ்பவனம் குப்புசாமி பாடி இருந்தா இன்னும் கலக்கலா இருந்து இருக்கலாம். நாட்டுபுற பாடல் வரிகளோட கேட்க ஒரு மாதிரி நல்லாத்தான் இருக்கு. என்னமோ, புதுசா கேட்குற மாதிரியே இல்லீங்க.


4. பலானது பலானது -வித்யாசாகர், ராஜலட்சுமி.

வித்யாசாகர் அண்ணா, ஹிமேஸ் தமிழுக்கு வந்துட்டாரு தெரியுமா? ஹிமேஷ் ரேஸ்மயா குரல் மாதிரியே இருக்கு விதயாசாகர் குரல், நல்லா இருக்கு.

ஏக் பார் ஆஜா பாட்டு இசைய உருவினாப்ல இருக்குங்களே. அதுவும் ஹிந்தி வார்த்தை அதிகம் வெச்சு, இசை ஆர்ப்பாட்டம்.. DJ பாட்டுக்கு ஏத்தப்பாட்டு. கலக்கல் ஆனாலும் என்னமோ, புதுசா கேட்குற மாதிரியே இல்லீங்க.

5. Theme Music - Praveen Mani,Dr Burn,Renina,Suvi.

பாபா படத்துல ஆரம்பிச்சது இந்த மாதிரி ஒரு ட்ரெண்டு. அதாவது ஆங்கில வரிகளை வெச்சு ஒரு பாட்டும். அதுல blaze கலக்கலா இருந்துச்சு. இதுல யோகி. மத்தபடி வித்தியாசம் இல்லீங்கண்ணா, எங்காவது சண்டையில ஒத்த ஆளா விஜய் 100 பேர அடிக்கும்போது இந்த பாட்டு(?!) வரலாம். குருவி அடிச்சா.. டேய் சப்பை.. அடிச்சா நொங்கு இப்படி எல்லாம் வரி வருதே.. சிவாஜி வந்து ரொம்ப நாள் ஆச்சுன்னு முடிவு பண்ணிட்டாங்க போல. மலேசியா பாஷை வருதுங்களே, யோகி மறந்தாப்ல பாடிட்டீங்களா? electric Guitarல விளையாடி இருக்காரு, hatsoff வித்யாசாகர். உருமிய உபயோகிய விதமும் அருமை.

6. தேன் தேன் - உதித் நாராயண், ஷ்ரேயா கோஷல்.

படத்துக்கும், மனசுக்கும் இதமான பாடல்னா இது ஒன்னுதான். நல்லா இருக்கு, நல்லா இருக்கு. உதித் நாராயணனின் மழலை உச்சரிப்பு(?!) நல்லா இருக்கு. ஷ்ரேயாவைப் பத்தி சொல்லவே வேணாம், செம செம செம... ரசித்தேன் ரசித்தேன்ன்னு முடியுது வரிகள் எல்லாம். நல்லாவே நானும் ரசித்தேன் :)

ஆக மொத்தத்துல பாடல்களை வெச்சுப் பார்த்தா இது பொது மக்கள் பார்க்குற படம் மாதிரியே இல்லை. விஜய்யின் ரசிகர்கள் திருப்தி படுத்துற படம் மாதிரியே இருக்கு. ஒரு வேளை விஜய்க்கு தமிழ் மக்கள் எல்லாம் ரசிகர்களா இருப்பாங்கன்னு தரணி நினைச்சு இருப்பாரோ.

கீத்துக்கொட்டாயின் மதிப்பீடு- 2.5/5(அதாவது சுமார், ரொம்ப சுமார்)

Sunday, April 13, 2008

Jalsa Movie Review

மகேஷ் பாபு நடித்த மாபெரும் வெற்றி படமான "அத்தடு"வை (தமிழில் நந்து) இயக்கிய திருவிக்ரம் இயக்கியிருக்கும் படம் "ஜல்சா". தொடர் தோல்விகளால் பின்னுக்கு தள்ளப்பட்டிருந்த "பவர் ஸ்டார்" பவன் கல்யாண் மீண்டும் வெற்றி நாயகனாக அதிகம் எதிர்பார்ப்புக்குள்ளான படம். பவன் கல்யாணை திருவிக்ரம் ஏமாற்றவில்லை. படம் சூப்பர் டூப்பர் ஹிட். முதல் நாளில் 10 கோடி ரூபாய் கலெக்ஷன். ஒரு வாரத்தில் 21 கோடி கலெக்ஷன்.படம் பார்த்தா அனுபவிக்கனும், ஆராயக்கூடாதுனு முடிவோட போனீங்கனா ரெண்டரை மணி நேரம் போறதே தெரியாது. அவ்வளவு எண்டர்டெயின்மெண்ட். பவன் சும்மா புகுந்து விளையாடிருக்காரு. டயலாக் டெலிவெரி எல்லாம் சூப்பர். அடுத்து படத்துக்கு முக்கியமானவங்க இலியானா. அவருக்கு குடுத்த காசுக்கு ஒரு ரூபாய் கூட மிச்சம் வைக்காம வேலை வாங்கிய டைரக்டரை பாராட்டியே ஆகனும். படத்துக்கு ரெண்டாவது தடவை போறவங்க எல்லாம் இலியானாவாக்காக தான் போறாங்கனு மக்கள் பேசிக்கறாங்க. (நான் முதல் தடவையே அதுக்காகத்தான் போனேனு எல்லாம் இங்க சொல்ல மாட்டேன்). பார்வதி மில்டனும் சூப்பரா இருக்காங்க. அவுங்களையும் சரியா பயன்படத்திருக்கலாம்.


படம் முழுக்க காமெடி. முதல் சீன்ல இருந்து க்ளைமாக்ஸ் வரைக்கும் எல்லா டயலாக்மே காமெடி தான். ஆனா அதுக்காக கொஞ்சம் சீரியசா சொல்ல வேண்டிய நக்சல்பாரிகளின் வாழ்க்கையை ரொம்ப சாதாரணமா சொல்லிட்டார். அதுவுமில்லாம பவன் கல்யாண் வீட்ல, பாட்டுல எல்லா இடத்துலயும் சேகுவாரா படம் வேற. அதை பார்த்து நம்ம ஆளுங்க ஏதாவது பாப் சிங்கர்னு நினைச்சிக்காம இருந்தா சரி தான்.

படத்துல அங்க அங்க மகேஷ் பாபு பேசியிருக்காரு. சூப்பர். அதே மாதிரி விஜய் படத்துல அஜித்தோ இல்லை அஜித் படத்துல விஜயோ பேசற நாள் எப்ப வருமோ?

இந்நேரம் இந்த படத்தை விஜய் புக் பண்ணியிருக்கலாம். அவருக்கு இந்த ரோல் அப்படியே பொருந்தும். Ctrl-C, Ctrl-V பண்ணிடலாம்.

சரி இனிமே கதை... படம் பார்க்கனும்னு ஆசைப்படறவங்க இதுக்கு மேல படிக்காதீங்க.படத்துல கதை எல்லாம் இருக்குனு நினைச்சிட்டு இதை படிச்சிங்கனா நீங்க ரொம்ப பாவம் ;)... நான் படத்துல ரசிச்ச காட்சிகளை மட்டும் சொல்லிடறேன்.

* கமலினி முக்கர்ஜியை பொண்ணு கேட்டு பவன் பிரகாஷ் ராஜை பார்க்க போற காட்சி அசத்தல். அதுக்கு அப்பறம் அவர் கல்யாணத்துக்கு போய் "சாப்பாடு சூப்பரா இருக்குனு வெளிய பேசிக்கிட்டாங்க. அதான் வந்தோம்னு சொல்லிட்டு, போட்டோக்கு அவர் பக்கத்துல நின்னு போஸ் கொடுக்கறது இன்னும் சூப்பர்.


*இலியானாக்கு அந்த லூஸ் மாதிரி கேரக்டர் சூப்பர். பவனை சுத்தி சுத்தி காதலிக்கறாங்க.

*இலியானா கமலினி தங்கச்சினு தெரிஞ்சதுக்கப்பறம் அவுங்க நினைச்சி பாக்கற அந்த சீக்குவன்ஸ் சூப்பர். இந்த அக்காவோட பழைய புக், அக்காவோட பழைய சைக்கிள்னு சொல்லிட்டு கடைசியா இந்த அக்காவோட பாய் ஃபிரெண்ட்னு சொல்ற சீன்ல தியேட்டரே அதிருது.*பிரகாஷ் ராஜ் பிளாஷ் பேக் அட்டகாசம். பிரகாஷ் ராஜ் போலிஸ் அதிகாரி. பவன் பிளாஷ் பேக்ல நக்சல்பாரி. போலிஸுக்கும் நக்சர்பாரிக்கும் நடக்கற சண்டைல இவுங்க ரெண்டு பேர் தவிர எல்லாரும் செத்துடறாங்க. முதல்ல பிரகாஷ்ராஜ் கைல மட்டும் துப்பாக்கி இருக்கு, அவர் பவனை மிரட்டறாரு. கொஞ்ச நேரத்துல துப்பாக்கி கை மாறிடுது. அப்பறம் அந்த பக்கம் வர மந்திரியை பவன் காப்பத்தறாரு. (குண்டு வெச்சதே அவுங்க தான்). பிரகாஷ்ராஜ் மந்திரிக்கிட்ட கெட்ட பேர் வாங்கிடறாரு. பவன் திருந்திடறார். அதனால பவனுக்கு சன்மானம். பிரகாஷ்ராஜுக்கு வனவாசம் (காட்டு இலாகா). பவனோட ஹைத்ரபாத் வாழ்க்கையையும் இவரோட காட்டு வாழ்க்கையையும் கம்பேர் பண்ற சீன் அருமை.*க்ளைமாக்ஸ் சண்டை முடியும் போது கத்தியை தரைல அழுத்திட்டு இதுக்கு என்ன காரணம்? ரோடு போடற காண்ட்ராக்டர் சரியா போடலைனு சொல்றது சூப்பர். அதுக்கு பிறகு பேராலிஸில் அட்டாக்கான வில்லன் தினமும் வந்து அந்த கத்தியை பார்க்கறதும், அதையும் ஒரு நாள் பவன் அழுத்தறதும் சூப்பர். அதுக்கு பிறகு அடுத்து ரோட் போடற காண்ட்ராக்டர் சரியா போடறாருனு மகேஷ் பாபு சொல்ற சீனும் சூப்பர்.

*பிரமானந்த், சுனில் ரெண்டு பேர் சீக்வன்சும் சூப்பர்...

மொத்தத்தில் படம் ஹைதரபாத் பிரியாணி. மசாலா பிடிக்கறவங்களுக்கு தாராளமா பிடிக்கும். Don't Miss it..

Great Come back Pawan...

Monday, January 28, 2008

House of Sand and Fog

வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை

- மகுடேஸ்வரன்

பாலுமகேந்திராவின் 'வீடு' பார்த்திருக்கிறீர்கள் தானே? 'சொந்த வீடு' என்பதே கனவாகிப்போன குடும்பங்களின் கதையை மிகச் சிறப்பாக படமாக்கியிருப்பார். 'House Of Sand and Fog' படத்தைப் பற்றிய எண்ணம் வரும்போதெல்லாம் மகுடேஸ்வரனின் இந்த கவிதையும் பாலுமகேந்திராவின் 'வீடு' திரைப்படமும் நினைவுக்கு வருகின்றன. இப்படம் பார்த்து இரண்டாண்டுகளுக்கு மேலான பின்னர் நேற்று பார்த்த 'வேட்டையாடு விளையாடு' திரைப்பட காட்சி இந்த படத்தை ஞாபகப்படுத்திவிட்டது. ஜோதிகா பாலீத்தீன் கவரால் முகத்தை மூடி தற்கொலை செய்ய முயலும் காட்சியில் சொல்வாரே "பென் கிங்க்ஸ்லி ஒரு படத்துல இப்படி தான் செய்வார்" என்று, அது இந்த படம் தான்.

கேத்தி மணம் முறிந்த, குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வரும் பெண். வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் விரக்தியின் உச்சத்தில் இருப்பவள். அவளுக்காக தந்தை விட்டுச் சென்ற வீடு, வரி செலுத்தாத காரணத்திற்காக ஏலம் விடப்படுகிறது. ஓய்வு பெற்ற ஈரானிய இரானுவ அதிகாரியான பெஹ்ரானி அந்த வீட்டை வாங்குகிறார். ஏலத்தில் குறைந்த விலைக்கு வாங்கிய வீட்டை மேம்படுத்தி நல்ல விலைக்கு விற்று தன் உயர்கல்விக்கு பயன்படுத்த நினைக்கிறார். கடற்கரையோரம் இருக்கும் அந்த வீடு அவருக்கு ஈரானில் சிறு வயதில் வாழ்ந்த வீட்டை நினைவுபடுத்துகிறது. நோய்வாய்ப்பட்ட மனைவியுடனும் மகன் இஸ்மாயிலுடனும் அந்த வீட்டுக்கு வருகிறார்.வீட்டை இழந்ததை வெகு தாமதமாக உணரும் கேத்தி வீட்டை விட்டுச் செல்ல மறுக்கிறாள். அது தன் தந்தையின் வீடென்றும் அதை விட்டால் தனக்கு வேறெதுவும் இல்லையென்றும் அரசாங்கத்தின் குளறுபடியால் ஏலம் விடப்பட்டதாகவும் கூறி காலி செய்ய மறுக்கிறாள். தன் சேமிப்பு முழுவதையும் வீடு வாங்க செலவிட்ட பெஹ்ரானி அவளுடன் சண்டையிடுகிறார். தான் வீட்டை வாங்கியதற்கு ஆதாரங்களைக் காட்டி அவளை வெளியேறச் சொல்கிறார்.

லெஸ்டர் உள்ளூர் போலீஸ்காரர். மணமுறிந்தவர். கேத்தியின் மேல் ஈர்க்கப்பட்டு அவளுக்கு உதவுகிறார். பெஹ்ரானியை வீட்டை காலி செய்யுமாறு மிரட்டுகிறார். அவருடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார். பெஹ்ரானி குடும்பத்தினரை ஒரு அறையில் அடைத்து வைத்து மிரட்டுகிறார். இறுதியில் பெஹ்ரானி அரசாங்கத்திடம் வீட்டை திருப்பிக்கொடுத்து தான் கட்டிய பணத்தை வாங்கி கேத்தியிடம் கொடுத்துவிடுவதாயும் தன் பெயரில் வீட்டை எழுதிக் கொடுக்குமாறும் ஒரு தீர்வைச் சொல்கிறார். அரசு அலுவலகத்துக்கு செல்கையில் லெஸ்டர் எதிர்பாராத சமயத்தில் இஸ்மாயில் அவனது துப்பாக்கியைப் பறித்து தங்களை விட்டுவிடுமாறு மிரட்டுகிறான். அந்த நேரத்தில் அங்குவரும் காவலாளிகள் இஸ்மாயிலை சுட்டுவிடுகின்றனர். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறக்கிறான். லெஸ்டர் போலீஸிடம் தன் குற்றத்தை ஒத்துக்கொள்கிறான். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான்.

மகனை இழந்த அதிர்ச்சியில் வீடு திரும்பவரும் பெஹ்ரானி தன் மனைவிக்கு தேநீரில் விஷம் கலந்துகொடுத்துவிட்டு, இரானுவ உடை அணிந்து முகத்தை பாலித்தீன் பையால் மூடி மூச்சு முட்டி தற்கொலை செய்துகொள்கிறார். வீட்டுக்கு வரும் கேத்தி அவர்கள் இறந்துகிடப்பதைப் பார்த்து உடைந்து அழுகிறாள். இறுதியில் வரும் போலீஸ் அது அவளுடைய வீடா எனக் கேட்க அவள் "இது என்னுடைய வீடு இல்லை" எனக் கூறி சென்றுவிடுகிறாள். யாருக்குமற்றதாய் அந்த வீடு அனைத்தையும் பார்த்தபடி இருக்கிறது.இழந்த தன் வாழ்வை மீட்கப் போராடும் கேத்தி, புதிய நாட்டில் புதிய வாழ்க்கையை எதிர்நோக்கும் பெஹ்ரானி என இரு கதாபாத்திரங்களுக்கிடையேயான போராட்டம் மிகச் சிறப்பாக படமாக்கப்பட்டு அந்த கதாபாத்திரங்களின் மேல் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. படம் நெடுகிலும் இறுக்கமான காட்சிகள் நம்மை கதையுடன் ஒன்ற வைக்கின்றன. காட்சிகளுடன் ஒத்துப்போகும் மென்சோக பின்னணி இசை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

கேத்தியாக ஜெனிபர் கானெலி(Jennifer Connelly) நடித்திருக்கிறார். விரக்தியையும் இழப்பையும் கண்களில் காட்டுகிறார். எதைப் பற்றியும் கவலைகொள்ளாமல் சோகத்தின் உச்சத்தில் இருக்கும் ஆரம்ப காட்சிகளாகட்டும், வீட்டைக் காப்பதற்காக பெஹ்ரானியுடன் சண்டையிடும் போதாகட்டும், தான் செய்வது தவறென உணர்ந்தாலும் குற்றவுணர்ச்சி தடுத்தாலும் 'சர்வைவலுக்காக' வீட்டை விட்டு போகாமல் தவிக்கும் கணங்களாகட்டும் ஜெனிபர் கானெலி அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பெஹ்ரானியாக பென் கிங்க்ஸ்லி(Ben Kingsley). இந்த கதாபாத்திரத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். உடைந்த ஆங்கிலத்தில் வசன உச்சரிப்பிலும் நடை, பாவனைகளிலும் பெஹ்ரானி கதாபாத்திரத்தைக் கண்முன் நிறுத்துகிறார். வீடு வாங்கிய போது பெருமிதமும், பின்னர் அதை இழக்க நேருமோ என்ற தவிப்பும், மகனை இழந்து துடிப்பும் கோபமும் அழுகையும், இறுதிக் காட்சியில் மரணத்தை எதிர்கொள்ளும் சோகமும் என வெகுசிறப்பாக நடித்திருக்கிறார்.

கண்டிப்பாக இந்த படம் மகிழ்வான தருணங்களில் பார்ப்பதற்கு அல்ல. கதாபாத்திரங்களின் மேலான பச்சாதாபம் படம் முடிகையில் எந்த உருவமும் கொள்ளலாம். அதுவே இந்த படத்தின் சிறப்பும் கூட.

இதே பெயரைக் கொண்ட ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் . மனித வாழ்க்கையும கூட ஒரு விசித்திர நாவல் என்றே தோன்றுகிறது. House of Sand and Fog அதன் மற்றுமொரு அத்தியாயம்.

Friday, January 25, 2008

Juno

இந்த வருடத்திற்கான சிறந்த திரைப்படம், இயக்குனர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள திரைப்படம் Juno. ஆஸ்கர் விருதுகள் பரிந்துரை பட்டியலைப் பார்த்த பின்தான் இப்படியொரு படம் வந்திருக்கிறதென்றே தெரிந்தது. எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் பார்க்க ஆரம்பித்து படம் முடியும்போது நல்ல படம் ஒன்றை பார்த்த திருப்தியை அளித்தது.

ஜூனோ(Juno) பதினாறு வயது பள்ளி மாணவி. தன் நண்பன் பால்(Paulie)-உடன் எதிர்பாராத உடலுறவின் காரணமாக கருத்தரிக்கிறாள். கருக்கலைப்பு செய்துகொள்ளும் எண்ணத்தை மாற்றிவிட்டு குழந்தையை தத்தெடுக்க விருப்பமுள்ள தம்பதிக்கு கொடுப்பதென்று முடிவு செய்கிறாள். தன் தோழியின் உதவியுடன் உள்ளூர் செய்தித்தாளில் விளம்பரம் அளித்திருந்த வனெஸ்ஸா(Vanessa) மார்க்(Mark) தம்பதியரை சந்தித்து குழந்தையை அவர்களுக்கு தத்துக்கொடுக்க சம்மதிக்கிறாள். கர்ப்ப காலத்தில் அவளுள் ஏற்படும் மாற்றங்களும், மார்க்-வெனெஸ்ஸா தம்பதியரிடையேயான உறவும் ஜூனோ-பாலிடையே நிகழும் மனப்போராட்டங்களும் அழகானதொரு திரைப்படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஜூனோ தெளிவான கதாபாத்திரமாக படம் நெடுக உலாவருகிறாள்.
சுதந்திரமான, எவரைப் பற்றியும் கவலைப்படாத பள்ளி மாணவியாக இருக்கும் ஜூனோ நாட்களாக ஆக வாழ்வின் போக்கைப் புரிந்துகொள்வதும் பாலியின் மீதான காதலை உணர்வதும் மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளது. ஜூனோ கருத்தரித்து இருப்பது தெரிந்ததும் பாலி அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் ஒருசேரக் கொள்வதும் ஜூனோவின் மேலான அக்கறையை காட்டத் தெரியாமல் காட்ட முடியாமல் தவிக்கின்ற தவிப்பும் பாலி கதாபாத்திரத்திற்கு மெருகு சேர்க்கின்றன. குழந்தைக்காக வெனெஸ்ஸாவின் ஏக்கமும் தன் மனைவியின் விருப்பங்களுக்காக தன் ஆசைகளைத் துறந்து வாழும் மார்க்-கின் மனநிலையும் ஜூனோவின் வருகையால் எவ்வாறு மாறுகிறது என்பதை அழுத்தமாக சொல்கிறது திரைக்கதை. ஜூனோ கருத்தரித்திருப்பது அதிர்ச்சியைத் தந்தாலும் அவள் முடிவுக்கு மதிப்பளித்து அவளுக்கு முழு ஆதரவு தருகிறார்கள் அவளது பெற்றோர்கள். இறுதியில் என்ன ஆனது, ஜூனோ மார்க்-வெனெஸ்ஸாவிற்கு தத்து கொடுத்தாளா என்பதை வெள்ளித் திரையில் காண்க.

எந்தவித தடங்கலுமின்றி நேர்கோட்டில் நகரும் திரைக்கதை படத்தின் பெரும்பலம். பிற்பாதியில் மார்க்-ஜூனோ இடையிலான காட்சிகள் மட்டும் கதையோடு ஒட்டாமல் திணித்தாற்போல் தோன்றுகின்றன. பின்னணி இசையாக படம் நெடுக வரும் பாடல் ரம்மியம். படத்தில் நக்கலும் நையாண்டியும் தூக்கலாகவே இருக்கிறது. சீரியஸான காட்சிகளில் கூட சிரிக்க வைக்கிறார்கள்.

ஜூனோவாக நடித்திருக்கும் எல்லன் பேஜ்(Ellan Page) அசத்தியிருக்கிறார். ஆஸ்கர் வாங்கிவிடுவார் என்றே தோன்றுகிறது. மற்ற நடிகர்களும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.

பதின்ம வயதினரிடையே இவ்வாறான கதை எப்படிப்பட்ட தாக்கத்தை விட்டுச்செல்லும் என்பது விவாதத்திற்குரியதே. 'All is well that ends well' என்பது எல்லா நேரத்திலும் உண்மையல்லவே!

எனக்கு இத்திரைப்படம் பிடித்திருந்தது என்றாலும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது இன்னும் கூட ஆச்சரியமாகவே இருக்கிறது.ம்ம்.

Juno - "Feel-good" movie

Thursday, January 24, 2008

பிரிவோம் சந்திப்போம்

பெரிய குடும்பத்தில் பிறந்து வளரும் சேரன், பார்ப்பவர்களையும் ஏங்க வைக்கும் விதமான கூட்டுக்குடும்பம். ஒரு டஜனுக்கு மேலுள்ள குடும்பத்தின் அறிமுகத்தை எளிதாக சொல்லும் முதல் காட்சியிலேயே பளிச்சிடுகிறார் இயக்குனர்.

சிறிய குடும்பத்தில் பிறந்து வளரும் சினேகா, கூட்டுக் குடித்தனத்தில் அதாவது நிறைய மக்களுடன் வாழ நினைக்கும் சினேகாவும், கூட்டுக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து திருமணத்திற்குப் பின் தனிக்குடித்தனம் போக நினைக்கும் சேரனுக்கும் இடையில் நடக்கிற மனப் போராட்டமே பிரிவோம் சந்திப்போம். தலைப்புக்கேத்தவாறு கடைசிவரை சினேகாவும், சேரனும் பிரியாமல் இருக்கிறார்கள்.


பாசத்திற்கு ஏங்கும் சினேகா, பெரிய குடும்பத்தில் இருக்கும் சேரனை கைப்பிடித்து அவரது வீட்டு மருமகளாகுகிறார். எதிர்பார்த்த ஜனம் கிடைத்துவிட்டதே என்ற மகிழ்ச்சியிலும், சேரனைக் கைப்பிடித்த பூரிப்பிலும் கூட்டுக் குடும்ப அன்பின் அரவணைப்பில், அந்த வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் அனுபவிக்கிறார். ஆனால் அந்த சந்தோஷம் நீண்ட நாள் நீடிக்காமல், சேரனுக்கு கிடைக்கும் பதவி உயர்வும், அட்டகட்டிக்கு இடம் மாற்றமும் கிடைக்கிறது. தனிக்குடித்தனம் போகும் மருமகளுக்கு சேரனின் குடும்பம் சொல்லும் காரணம் அருமை. இந்த மாதிரிஒரு குடும்பம் கிடைக்காதா என ஏங்க வைக்கிறது. விக்ரமன் சாயல் லேசாக தென்படும் காட்சிகள் இது(லாலாலா இதில் இல்லை).

கூட்டுக் குடும்பத்தை விட்டு, மனைவியுடன் எந்த வித தொந்தரவும் இல்லாமல் தேனிலவு கொண்டாடலாம் என்று நினைக்கும் சேரனுக்கு அதிர்ச்சி. கூட்டுக் குடும்ப மகிழ்ச்சியை இழந்த அதிர்ச்சியில் மன நோய்க்கு கிட்டதட்ட ஆளாகிறார் சினேகா. இத்தனை வருஷம் தனிமையாத்தானே இருந்தாங்க இப்போ மட்டும் என்ன புதுசான்னு கேள்வி கேட்டா இயக்குனர் பதில் சொல்லமாட்டர். தனிமையை கழிக்க தன்னைச்சுற்றி வரும் சத்தங்களை ஒலிநாடாவில் பதித்து வைப்பதிலே ஆரம்பிக்கிறது தனிமையின் கொடுமை. வீட்டில் ஒவ்வொன்றாக பழுதாக்கி அதனை சரி செய்ய வருபவர்களிடம் பேசுவது அதீதம்.

அத்தையாக ஒரு முறை மட்டுமே வரும் அந்த அம்மணியின் நக்கல், திருமண ஏற்பாடுகள் எல்லாம் அருமை. சேரன், வருகிறார், பாடுகிறார் போகிறார். பெரிதாக சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லாதவாறு நடிப்புத்திறமை. கொஞ்சம் மாற்றிப்பாருங்களேன் சேரன்.

சினேகா இந்த படத்தின் முதுகெலும்பு. கூட்டுக் குடும்ப பந்தியில், உதடு கடித்து அவர் சாப்பாடு பரிமாறுகிற அழகு அருமை. அதே யாருமில்லாமல் இருக்கும் போது காபி பரிமாறுவது திகீர். இளவரசு, கஞ்சா கருப்பு கூட்டணிக் காட்சிகள் யதார்த்தமான கலகலப்பு. கருப்புக்கு பெண் பார்க்கும் சிறிது நேரம் சிரிப்பு மழை. டாக்டராக வரும் ஜெயராம் தெனாலி மாதிரியே ஒரு பாத்திரப்படைப்பு, சினேகாவுக்கு பிரச்சினை என்னவென்று சொல்கிறார். கூட்டுக் குடித்தின் வலிமையும், பெருமையும் சொல்லும் போது நமக்கு ஏதோ செய்கிறது.

எம்.எஸ். பிரபுவின் கேமரா அட்டகட்டியை அழகாக காட்டியுள்ளார், அதுவும் அந்த அருவி.. அப்பப்பா.. பாலச்சந்தர்'ன் ரயில் சிநேகத்திற்கு பிறகு அட்டகட்டியை சினிமாவில் பார்ப்பது மகிழ்ச்சி. மெதுவாக, எந்த வித திருப்பமும் இல்லாத திரைக்கதை படத்திற்கு பலவீனம்.

கரு பழனியப்பன் என்றாலே மாங்கு மாங்கென்று பாடல் தரும் வித்யாசாகர், இந்தப்படத்திலும் அதையே செய்துள்ளார். ஏமாற்றாத பாடல்களும், பாடல் வரிகளும். மெதுவா மெதுவா,நெஞ்சத்திலே பாடல்கள் இவ்வருடத்தின் நல்ல மெல்லிசைப் பாடலகள் வரிசையில் சேரும்.

கேனத்தனமான் வில்லன், அருவா வெட்டு, சண்டை, தொப்புள் கலாச்சாரம், பஞ்ச் டயலாக் என எந்தவிதமான மசாலத்தனமும் இல்லாத அழகான படம். இரண்டாவது பாதியில் சில இடங்களில் கொட்டாவி வருகிறது.

குடும்பத்தோட சென்று ஒரு முறை பார்க்கலாம்.

கீத்துக்கொட்டாயின் மதிப்பீடு. (42/100)

Thursday, January 17, 2008

பீமா - பொங்கல் பார்வை

இந்தப் பொங்கலுக்குப் பார்த்த படம் பீமா.


நடிகர்கள்: சீயான் விக்ரம், த்ரிஷா,பிரகாஷ் ராஜ்,ரகுவரன்,தலை வாசல் விஜய், ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் பலர்

இயக்கம்: லிங்குசாமி இசை: ஹாரீஸ் ஜெயராஜ். வசனம்: எஸ்.ராமகிருஷ்ணன். கேமரா: ராஜசேகர். சண்டை: கனல் கண்ணன்

கதை தமிழ் சினிமாவுக்கு பழக்கமான தாதாக்கள் சம்பந்தப் பட்ட விஷய்ம் தான். தளபதி,உல்லாசம் எனப் பழைய படங்களில் பார்த்த கதையின் தாக்கம் இருந்தாலும் அதைப் படமாக்கியிருக்கும் விதம் பீமாவை வேறுபடுத்தி காட்டுகிறது. சென்னை நகரத்து தாதா வாழ்க்கையை சினிமாவாக சொல்ல முயன்று இருக்கும் இன்னொரு படம் பீமா என்பதாகவே படம் நகர்கிறது. பீமா முழுக்க முழுக்க யதார்த்தமான சினிமா எனவும் சொல்ல முடியாது..முழுக்க முழுக்க மசாலா படம் எனவும் சொல்ல முடியாது. இரண்டும் சேர்ந்த ஒரு கோர்வை எனச் சொல்லலாம்.

கதையின் முக்கிய பாத்திரம் சின்னாவாக பிரகாஷ் ராஜ்... சின்னாவைச் சுற்றிய கதைப் பின்னப்பட்டுள்ளது. சின்னாவின் தொழில் எதிரி பெரியவராக ரகுவரன் ( கிட்டத்தட்ட தளபதியில் ஓம் பூரி ஏற்ற கலிவரதன் வேடத்தை நினைவுப் படுத்தும் வேடம்) சின்னாவின் நம்பிக்கைக்குரிய கையாளாக தலைவாசல் விஜய் ( தளபதியில் நாகேஷ் வருவாரே)..

இதில் விக்ரமுக்கு என்ன வேடம் என்ற கேள்வி கேட்பது புரிகிறது..சிறுவயதில் இருந்து சின்னாவின் ரசிகனாக வளர்ந்து பின்னாளில் சின்னாவீன் தளபதியாக உயரும் சேகர் என்னும் இளைஞனின் வேடத்தில் வருகிறார்.(தளபதியில் ரஜினி ஏற்ற சூர்யா வேடம் மாதிரி)

சேகரின் வரவுக்குப் பின் சின்னாவின் கை தொழில் ஓங்குகிறது..பெரியவரோடானப் பகை முற்றுகிறது. சின்னாக் கூட்டத்தில் சேகருக்கு கிடைக்கும் முக்கியத்துவம் சின்னாக் கூட்டத்தில் வெகுகாலமாக இருக்கும் இன்னொருத்தனை மனக்கலக்கத்தில் ஆழ்த்துகிறது.. அந்த குரோதம் தனிக்கிளையாக வளர்கிறது.

வெட்டுக் குத்து,அருவா, துப்பாக்கி என நகரும் கதையில் கொஞ்சம் சில்லென ஒரு காதலுக்கு த்ரிஷா. கோடம்பாக்கம் வகையானக் கண்டதும் காதல். விக்ரமைத் துரத்தி துரத்திக் காதலிக்கிறார் த்ரிஷா. எதற்கும் மயங்காத விக்ரம் ஒரு கட்டத்தில் திரையரங்கின் அரை வெளிச்சத்தில் த்ரிஷா மீது காதலாகி கசிந்துருகுகிறார்.

காதல் போதையில் தொழிலில் கவனம் சிதறி நிற்கும் விக்ரம்... இனி தன்னால் இப்படி இருக்க முடியாது என்றும் தான் தொழிலில் இருந்து விலகிக் கொள்வதாகவும் பிரகாஷ் ராஜிடம் சொல்லிவிட்டு த்ரிஷாவைக் கைப்பிடிக்க கிளம்புகிறார்.

விக்ரம் விலகலை நல்ல தருணம் எனக் கருதி பெரியவர் சின்னாவை வட்டம் போடவும்.. காவல் துறை கமிஷனர் ஆஷிஷ் வித்யார்த்தி சமயம் சரி என இரு கூட்டத்தையும் களை எடுக்க களத்தில் என்கவுண்டர் படையை இறக்கி விடுகிறார்.. அதைத் தொடரும் ரத்தக் களறியான க்ளைமேக்ஸ் கொஞ்சம் எதிர்பாராதது... இயக்குனருக்கு அட போட வைக்கிறது. பொதுவான ரசனை உள்ள மக்கள் ஏற்பார்களா என்பது கேள்விக்குரியது.

நடிப்பில் விகரமும் பிரகாஷ்ராஜ்க்கு பலத்தப் போட்டி... செல்லம் சின்னா வேடத்தை அதிக மெனக்கெடல் இன்றி பக்காவாகச் செய்திருக்கிறார்... வழக்கம் போல் பிரகாஷ்ராஜ் அசத்தியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்...

விக்ரம் நாயகனாக கட்டுமஸ்தாக வருகிறார், வித்தியாசம் காட்ட வேண்டும் என ஓட்ட வெட்டிய முடியும், தாடியும் என சத்யா கமலை நினைவுபடுத்தும் தோற்றத்தில் வருகிறார். ஆடுகிறார், பாடுகிறார், ஓடுகிறார், குதிக்கிறார், தாவுகிறார், நல்லா சண்டை போடுகிறார்.... சினிமாத்தனமும் யதார்த்தமும் கலந்த ஒரு ஹிரோ வேடத்தில் பொருந்தி போகிறார். ஆக்ஷன் ஹிரோவாக அதிக ஆர்பாட்டமின்றி ஜெயித்திருக்கிறார்.

த்ரிஷாவுக்கு அக்மார்க் கமர்ஷியல் நாயகி வேடம். கண்டதும் காதல்... பின் காதலைத் துரத்தல்... கனவு காணுதல்... ஆடல்..பாடல்... காதலில் தவித்தல்... என பார்மூலா ரோல்...க்ளைமேக்ஸில் அச்சோ சொல்லும் படியாக அவரது வேடம் சிறப்பு பெறுகிறது.மொத்தத்தில் த்ரிஷா அழகாய் வந்து போகிறார்.

ரகுவரனுக்குப் பல படங்களில் பார்த்த அதே வில்லன் வேடம். வழக்கம் போல் நன்றாகவே செய்து இருக்கிறார்.

ஆஷிஷ் வித்யார்த்திக்கும் வழக்கமான போலீஸ் அதிகாரி வேடம். சட்டத்து நல்லவரான ஒரு போலீஸ். கொஞ்சமே வருகிறார் கடமையாற்றுகிறார்.

தலைவாசல் விஜய்க்கு நாயகனில் டெல்லி கணேஷும், தளபதியில் நாகேஷும், நம்ம லிங்குசாமியின் முந்தைய ரன் படத்தில் விஜயனும் ஏற்றது போல ஒரு வேடம்.. நன்றாகச் செய்துள்ளார்.

ஹாரிஸின் இசையில் பாடல்கள் பிரபலமாகி வெகு நாட்கள் ஆகிவிட்டன.. பாடல்களை படமாக்கிய விதத்தில் பெரிதாய் புதுமைகள் எதுவும் இல்லை...

படம் நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்தது படத்தில் ஆங்காங்குத் தெரிகிறது. ரங்கு ரங்கம்மா பாடலில் விக்ரமின் ஹேர் ஸடைல் மாற்றத்தையும், கடைசி பாடலில் விக்ரமின் மெலிந்த தேகமும் படத்து கன்டினியூட்டி சொதப்பலுக்கு சாட்சிகள்.

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரீன் ஒரு பாடலுக்கு வந்து ஆட்டம் போடுகிறார். பிரகாஷ் ராஜ் ஜோடியாக வரும் மலையாள நாயகி அமைதியான தோற்றத்தில் வசிகரீக்கிறார்.

ராஜசேகரின் கேமராவும் கனல் கண்ணனின் சண்டைக் காட்சிகளும் பீமாவுக்கு பெரும் பலம்.

லிங்குசாமி பார்த்து பழக்கப்பட்ட காட்சிகளை மீண்டும் ஒரு முறை கோர்த்திருக்கிறார்..அதையே ஒரு எதிரபாராத முடிவோடு சொல்லியிருக்கிறார்.


பீமா - பழைய மொந்தையில் புதிய கள்.... ஆக்ஷன் படப் பிரியர்கள் ரசிக்க விஷ்யமுள்ள படம்.

Tuesday, January 8, 2008

The Bucket List

மரணம் குறித்தான பயம் எப்போதும் அடிமனதில் குடிகொண்டிருக்கிறது. அதிலும் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நாட்களில் இதுநாள் வரை கடந்து வந்த பாதைகளும் மரணத்திற்கு பிறகான புதிரும் மனதை அலைக்கழித்தபடியே இருக்கின்றன. பழைய நினைவுகளும் தவறவிட்ட வாய்ப்புகளும் நிராசைகளும் செய்ய நினைத்திருக்கும் காரியங்களும் வயோதிகத்தை கொடிய நோயாக்கிவிடுகின்றன. இறப்பதற்கு முன் அடைந்துவிடக்கூடியவற்றை மனம் பட்டியலிட்டபடி இருக்கிறது. மனித வாழ்க்கை குறித்த தத்துவார்த்தமான சிந்தனைகளும் அதே நேரத்தில் எஞ்சியிருக்கும் நாட்களில் மனநிறைவோடு வாழ்ந்து மரணத்தை திருப்தியுடன் எதிர்கொள்வது குறித்தான எண்ணங்களும் முட்டி மோதுகின்றன. மரணம் நெருங்கியதை உணர்ந்ததும் தன் சுற்றத்தாருக்கும் உறவினருக்காகவுமே காலமெல்லாம் உழைத்தவர்கள் தங்களுக்காகவும், சுயநலமாக தனக்காக மட்டுமே வாழ்ந்தவர்கள் அடுத்தவர்க்காகவும் வாழ ஆரம்பிக்கிறார்கள். மரணம் இது குறித்தான பிரக்ஞை எதுவுமின்றி அவர்களை அரவணைத்து சென்றுவிடுகிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரண தேதி குறிக்கப்பட்ட எட்வர்ட் கோல்(Edward Cole), கார்ட்டர் சேம்பர்ஸ்(Carter Chambers) என்ற இரண்டு முதியவர்களின் வாழ்வில் கடைசி சில மாதங்களை பதிவாக்கியிருக்கும் திரைப்படம் The Bucket List.கார்ட்டர் சேம்பர்ஸ் கார் மெக்கானிக். அன்பான மனைவி. மூன்று பிள்ளைகள். புகை பிடிக்கும் பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். எட்வர்ட் கோல் மருத்துவமனைகள் நடத்திவரும் கோடீஸ்வரர். நான்கு முறை மணமுறிந்து தன்னந்தனியாக வாழ்பவர். தன்னுடைய மருத்துவமனைகளில் ஒவ்வொரு அறையிலும் இரண்டு படுக்கைகள் அமைத்து பணம் பார்ப்பவர். இவரையும் புற்றுநோய் தாக்க கார்ட்டரும் எட்வர்ட்டும் மருத்துவமனையில் ஒரே அறையில் தங்க வைக்கப்படுகிறார்கள். உயிர்கொல்லி புற்றுநோயால் இருவருக்குமே சில மாதங்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறது.

கார்ட்டர் தன் மரணத்திற்கு முன் நிறைவேற்ற வேண்டிய ஆசைகளை பட்டியலிடுகிறார்.(Bucket List;'Kick the bucket'). நிறைவேற்ற இயலாதவற்றையும் தன் மன திருப்திக்காகப் பட்டியலிடுகிறார். அதைப் பார்த்துவிடும் எட்வர்ட் இருவருமாக சேர்ந்து அந்த பட்டியலில் உள்ளவற்றை செய்துவிட வேண்டுமென்கிறார். தன் பங்கிற்கு தன்னுடைய ஆசைகளையும் பட்டியலிடுகிறார். முதலில் மறுக்கும் கார்ட்டர் எட்வர்ட்டின் வற்புறுத்தலால் ஒத்துக்கொள்ள, கார்ட்டர் மனைவியின் எதிர்ப்பையும் மீறி இருவரும் மருத்துவமனையில் இருந்து கிளம்புகிறார்கள். விமானத்திலிருந்து குதிப்பது, அதிவேகமாக கார் ஓட்டுவது, பல்வேறு நாடுகளைச் சுற்றித் திரிவது, இமாலயத்தைப் பார்ப்பது, முன்பின் தெரியாத அந்நியருக்கு உதவுவது, கண்ணில் நீர் வரும்வரை சிரிப்பதென விருப்ப பட்டியலை தயாரித்து ஒவ்வொன்றாக நிறைவேற்றுகிறார்கள். விருப்பப் பட்டியல் முடியும் நிலையில் குறுகிய நாட்களில் தங்களிடையே உருவாகியிருக்கும் நட்பை உணர்கிறார்கள். இறக்கும் முன் மனதுக்கு நிறைவாக வாழ்ந்த நாட்களை எண்ணி மகிழ்கிறார்கள். மரணிக்கிறார்கள்.எண்ணங்களிலும் வாழ்க்கை முறையிலும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு மனிதர்கள் மரணத்தால் ஒன்றுபடுகிறார்கள். 'வண்டிச் சக்கரம் போல் காலம் சுழன்றுகொண்டேயிருக்கிறது அவரவர் வாழ்ந்து இறந்துகொண்டிருக்கிறோம்' என்ற எண்ணமுடைய எட்வர்ட்டும் 'நம் வாழ்வின் அளவீடு அடுத்தவர் வாழ்வில் நாம் ஏற்படுத்தும் பங்களிப்பை வைத்தே' எனும் கார்ட்டரும் பயணத்தினூடே தங்களது கடந்த கால வாழ்க்கை குறித்த உரையாடல்களும் வாழ்க்கையைக் குறித்தும் மரணம் குறிததுமான எண்ணப் பகிர்வுகளாகவும் திரைப்படம் நகர்கிறது.

மரணத்திற்காகக் காத்திருக்கும் இரண்டு வயோதிகர்களின் கதை என்றாலும் மரணத்தின் வாசனையில்லாமல் திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு. தத்துவார்த்தமான உரையாடல்களிலும் மெல்லிய நகைச்சுவை நிறைந்திருக்கிறது. குறிப்பாக எட்வர்ட்டுக்கும் அவரது உதவியாளர் தாமஸுக்குமான நக்கல் நையாண்டி உரையாடல்கள் அட்டகாசம்.

எட்வர்ட் கோல்'லாக ஜாக் நிக்கல்சன்(Jack Nicholson). கார்ட்டர் சேம்பர்ஸாக மார்கன் ஃப்ரீமேன்(Morgan Freeman). இரண்டு மிகச் சிறந்த நடிகர்கள் திரைப்படத்தை தாங்கிப் பிடிக்கிறார்கள். சொல்லப்போனால் படத்தைப் பார்க்க ஆரம்பித்ததே இவ்விருவருக்காகத்தான். இரண்டாம் பாதியில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் இவ்விருவரின் முக பாவங்களும் வசன உச்சரிப்பும் அதை மறக்கச் செய்கின்றன.


The Bucket List - வாழ்க்கை குறித்தும் வயோதிகம் குறித்தும் மரணம் குறித்துமான எண்ணங்களுக்காகவும் சில புரிதல்களுக்காகவும்.