Saturday, September 13, 2008

Mumbai Meri Jaan

11, ஜூலை 2006 - மின்சார ரயில்களில் தொடர் குண்டுவெடிப்புகளால் மும்பை மாநகரம் ஸ்தம்பித்த நாள். அந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம், தனிமனித வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்கிறது, இத்தகைய கொடூரங்களிலிருந்து ஒரு நகரமும் அதில் வாழ் மக்களும் எப்படி தங்களை மீட்டெடுக்கிறார்கள் என்பதை ஆறு வெவ்வேறு கதாபாத்திரங்கள் மூலமாக திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குனர் நிஷிகாந்த் காமத்(எவனோ ஒருவன்).

நிகில்(மாதவன்) மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிபவன். வெளிநாட்டு வாய்ப்புகளை உதறிவிட்டு மும்பையில் வேலை செய்யும் நடுத்தர வயது இளைஞன். சுற்றுப்புற தூய்மை பற்றி கவலை கொள்கிறான். தினமும் அலுவலகத்துக்கு மின்சார ரயிலில் சென்று வருகிறான். ப்ளாஸ்டிக் உபயோகிப்பதைத் தவிர்க்கச் சொல்லி மற்றவர்களை அறிவுறுத்துகிறான்.

சுரேஷ்(கே.கே.மேனன்) சேல்ஸ்மேன். கடனாளி. இந்து அடிப்படைவாதி. முஸ்லீம்களின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவன். வேலையற்ற நண்பர்களுடன் டீக்கடையில் பொழுதைக் கழிப்பவன். குண்டு வெடிப்பு நடந்த தினத்தன்று டீக்கடையில் ரகசியமாகப் பேசிக்கொண்ட மூன்று முஸ்லீம் இளைஞர்கள் மீது சந்தேகம் கொள்கிறான். இயல்பாகவே முஸ்லீம்கள் மீது வெறுப்பு கொண்ட சுரேஷ் அவர்கள் ஏதோ சதித்திட்டம் தீட்டுவதாக எண்ணுகிறான்.ரூபாலி(சோஹா அலி கான்) தொலைக்காட்சி நிருபர். எந்த செய்தியையும் மிகைப்படுத்தி உணர்ச்சிகளை தூண்டி வியாபாரமாக்கும் சராசரி செய்தி நிருபர். அவளின் காதலன் அவள் இவ்வாறு செய்வதைக் குறை சொல்லும்போது அதை நியாயப்படுத்தும் தன் பணியும் அதில் வெற்றியும் மட்டுமே குறிக்கோளாய்க் கொண்ட இளம் நிருபர்.

இர்பான் கான் அந்தேரியில் சேரியில் வாழும் தமிழன். இரவு நேரங்களில் சைக்கிளில் டீ விற்று பிழைப்பு நடத்துபவன். தன் ஏழ்மையின் காரணமாக பல தருணங்களில் பலரின் கேலிக்கும் இளக்காரத்துக்கும் ஆளானவன். பகட்டானதொரு அங்காடியில் தன் குடும்பத்தினர் முன் அவமானப் படுத்தப்படுகிறான்.

துக்காராம் பாட்டீல்(பரேஷ் ராவல்) ஓய்வு பெறப் போகும் போலீஸ் கான்ஸ்டபிள். தன் பணிக்காலத்தில் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என ஒத்துக்கொள்ளும் ஒரு சராசரி காவலர். தன் நகைச்சுவையுணர்வின் மூலமும் கனிவான பேச்சின் மூலமும் சக காவலரிடமும் மக்களிடமும் அபிமானம் பெற்றவர். நிதர்சனத்தை உணர்ந்து அதற்கேற்றாற்போல் தன் மனதை தயார்படுத்திக் கொண்ட சாதாரண மனிதர்.சுனில் கதம்(விஜய் மெளரியா) புதிதாக காவல்துறையில் சேர்ந்து துக்காராமுடன் பணிபுரியும் இளம் காவலர். சாதிக்கும் வெறியும் காவல்துறைக்கு தன்னாலான பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்ற உத்வேகமும் கொண்ட இளைஞர். ஆனால் மேலதிகாரிகளின் ஆணையால் பல சமயங்களில் கைகள் கட்டப்பட்டு அதனால் துறையின் மீது வெறுப்புடனும் சுயபச்சாதபத்துடனும் தவிப்பவர்.

ஜூலை 11, 2006 அன்று நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் இந்த ஆறு பேரின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்கிறது, அதன் தாக்கம், அதிலிருந்து இவர்கள் எவ்வாறு மீள்கிறார்கள் என்பதை சிறப்பான திரைக்கதையின் மூலம் படமாக்கியிருக்கிறார்கள்.

தினமும் மின்சார ரயிலில் பயணம் செய்த நிகில் ரயில்களைக் கண்டு அச்சம் கொள்கிறான். பாதுகாப்பின்மையுணர்வால் தூக்கமின்றி தவிக்கிறான். பொது இடங்களில் பார்ப்பவரையெல்லாம் சந்தேகிக்கின்றான்.ஏற்கனவே முஸ்லீம்களின் மீது வெறுப்பு கொண்ட சுரேஷ் டீக்கடையில் தான் பார்த்த நபர்களே குண்டு வெடிப்புக்கு காரணமென முடிவு செய்து அவர்களைத் தேடி அலைகிறான். சாலையில் கடக்கும் வயதான முஸ்லீமையும் சந்தேகத்துடன் விசாரிக்கிறான். தன் வேலையையும் கடனையும் மறந்துவிட்டு வெறிகொண்டு அலைகிறான்.

இர்பான் குண்டுவெடிப்பினால் நேரடியாக பாதிக்கப்படாவிட்டாலும் தன்னை அவமானப்படுத்தியவர்களை பழிவாங்க எல்லோர் மனதிலும் உள்ள பயத்தைப் பயன்படுத்திக் கொள்கிறான். அங்காடிகளில் வெடிகுண்டு இருப்பதாக பொய்யாக போலிசுக்கு தகவல் சொல்லி அதில் மகிழ்ச்சியடைகிறான்.

ரூபாலியின் காதலன் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழக்கிறான். இதுநாள் வரை அடுத்தவரின் துயரை அறியாமல் அதை உணர்ச்சி நாடகமாக்கி தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய ரூபாலிக்கு தான் செய்துவந்த செயல் உறைக்கின்றது. ஆனாலும் ரூபாலியின் தொலைக்காட்சி நிர்வாகிகள் அவளை வைத்தே நிகழ்ச்சி நடத்தி டி.ஆர்.பியைக் கூட்ட நினைக்கின்றனர்.வெடிகுண்டு தாக்குதலினால் துக்காராமும் சுனிலும் இரவு ரோந்துப்பணியில் ஈடுபடுகின்றனர். சந்தேகத்திடமானவர்களை விசாரிக்கும்போது தாக்கப்படுகிறார்கள். போதை மருந்து உட்கொண்டவனைக் கைது செய்யும் போது உயரதிகாரிகளின் தலையீட்டால் பின்வாங்க நேருகிறது. சுனில் இதனால் ஆத்திரமும் தன்னால் எதுவும் செய்யமுடியவில்லை என்று கழிவிரக்கம் கொள்கிறான். துக்காராம் பணியினூடே சுனிலுக்கு தன் அனுபவங்களைப் பகிர்கிறார். நிதர்சனத்தை உணர்த்துகிறார். இத்தனை வருட காவல்துறை சேவையில் தான் இதுவரை ஒருவரையும் சுட்டதில்லையென்றும் சொல்லிக்கொள்ளும்படி சாதனை எதுவும் செய்துவிடவில்லையென்றும் அதனால் தனக்கு வருத்தமும் இல்லையென்றும் தன் அனுபவத்தைப் பகிர்ந்து அறிவுரைகள் மூலம் சுனிலின் ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் மட்டுப்படுத்துகிறார்.

இந்த ஆறு கதாபாத்திரங்களின் கதைகளும் தனித்தனியாக சொல்லப்படுகிறது. அவர்களை இணைக்கும் களமாக வெடிகுண்டு தாக்குதல். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அத்தனை பேரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். அதில் குறிப்பாக கவர்ந்தவர்கள் கே.கே. மேனன், இர்பான் கான் மற்றும் பரேஷ் ராவல்.

கே.கே.மேனன் தன் கண்களாலேயே வெறுப்பைக் காட்டுகிறார். டீக்கடையில் பார்த்த முஸ்லீம் நபரைத் தேடி வெறியோடு அலையும்போதும் பின்னர் பரேஷ் ராவலுடனான காட்சியிலும் சிறப்பாக நடித்துள்ளார். ஏழைத்தமிழனாக நடித்துள்ள இர்பான் கானுக்கு வசனங்கள் மிகக் குறைவு. தன் நடையாலும் முகபாவங்களாலுமே அசத்தியிருக்கிறார். ஒவ்வொரு முறை வெடிகுண்டு புரளியைக் கிளப்பிவிட்டு மக்கள் அலறி ஓடுவதைக் கண்டு துள்ளல் நடையில் எள்ளல் தெறிக்கிறது.பரேஷ் ராவல் ஓய்வு பெறும் காவலர் வேடத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார். மனிதர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் மனதை ஈர்க்கிறார். ரோந்து பணியின் போது சுனிலிடம் அறிவுரைகள் கூறும் காட்சிகளிலும் , வெறிபிடித்தலையும் சுரேஷிடம் பேசும் காட்சியிலும் இறுதியில் தன் பிரிவுபசாரக் காட்சியிலும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கூர்மையான வசனங்கள் படத்தின் பெரும்பலம். குறிப்பாக சற்று நகைச்சுவையுடன் கூடிய காவலரான துக்காராமின் வசனங்கள். பெரும்பாலான காட்சிகள் துக்காரமை மையமாகக் கொண்டே நகர்கின்றன. தேவையற்ற பாடல் காட்சிகளோ நகைச்சுவைக் காட்சிகளோ திணிக்கப்படாமல் இயல்பாகப் படமாக்கப்பட்டுள்ளது. ஆறு கதாபாத்திரங்களின் கதையை மாற்றி மாற்றிச் சொன்னாலும் திரைக்கதை தொய்வில்லாமல் அமைந்திருக்கின்றது. கதாபாத்திரங்கள் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

சமீபகாலமாக இந்தி திரையுலகில் இருந்து வித்தியாசமான கதைக்களங்களில் விறுவிறுப்பான திரைப்படங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. Aamir, Jaane Tu Ya Jaane Na, A Wednesday, Black Friday போன்ற குறிப்பிடத்தகுந்த படங்களின் பட்டியலில் Mumbai Meri Jaan திரைபபடமும் இடம்பிடிக்கிறது.

Mumbai Meri Jaan - கதைக்களத்துக்காகவும் நேர்த்தியான திரைக்கதைக்காகவும் பரேஷ் ராவலுக்காகவும் கண்டிப்பாக பார்க்கலாம்.

Friday, September 12, 2008

Donnie Brasco

1970களில் எஃப்.பி.ஐ-யின் ரகசிய ஏஜெண்டான ஜோ பிஸ்டோன் நியூயார்க் நகரின் சக்தி வாய்ந்த மாபியா குழு ஒன்றில் 'டானி ப்ராஸ்கோ' என்ற பெயரில் ஊடுருவி ஆறு வருடங்கள் அக்குழுவில் ஒருவராக இருந்து அக்குழுவினருக்கு எதிரான தடயங்களைச் சேகரித்து அக்குழுவில் பலரின் கைதுக்கு காரணமானார். இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் Donnie Brasco.

ஜோ பிஸ்டோன் 'டானி ப்ராஸ்கொ' என்ற நகை வியாபாரியாக மாபியா குழுவினருக்கு அறிமுகமாகிறான்.அக்குழுவில் முப்பது வருடங்களாக இருக்கும் லெஃப்டி டானியின் இளமைத் துடிப்பாலும் பேச்சாலும் ஈர்க்கப்படுகிறான். டானியைக் குழிவில் சேர்த்துக்கொள்ள லெஃப்டி பரிந்துரைக்க டானியும் அக்குழுவில் ஒருவனாகிறான். முப்பது வருடங்களாக அக்குழுவில் இருந்தும் அடிமட்ட நிலையிலேயே இருக்கும் லெஃப்டி டானி தன்னைப் போலில்லாமல் குழுவில் சக்தியுள்ளவனாக வரவேண்டுமென விரும்புகிறான். குழு செயல்படும் விதத்தையும், வேலை நுணுக்கங்களையும், குழுவில் பிறரை எதிர்கொள்வது குறித்தும் தன்னுடைய அனுபவங்களையும் டானியுடன் பகிர்ந்துகொள்கிறான். டானிக்கும் லெஃப்டிக்கும் இடையேயான நட்பு இறுகுகிறது.

ஆரம்பத்தில் எஃப்.பி.ஐ ஏஜெண்டாக தன் வேலையில் மட்டும் குறியாக இருக்கும் டானி காலப்போக்கில் லெஃப்டியின் அன்பால் ஈர்க்கப்படுகிறான். முப்பது வருடங்களாக மாபியா குழுவில் இருந்தும் அடிமட்டத்திலேயே இருக்கும் வயதான லெஃப்டியின் மேல் அவனுக்கு ஏற்படும் பரிதாபம் நாளடைவில் நட்பாக வலுப்படுகிறது. லெஃப்டியும் டானியை தன் மகனைப் போல் கருதி அக்கறை காட்டுகிறான்.
டானி மாபியா குழுவினருடன் சேர்ந்து கடத்தல் வேலைகள் செய்கிறான். இடையே எஃப்.பி.ஐக்கு அக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து தகவல்களும் தடயங்களும் தருகிறான். லெஃப்டியின் செல்வாக்கு காரணமாக குழுவில் மற்றவர்களும் டானியின்பால் நட்பு கொள்கின்றனர். டானி அவன் மேல் எவ்வித சந்தேகமும் எழ இடம்கொடுக்காமல் அவர்களில் ஒருவனாகிறான்.

டானியின் இந்த தலைமறைவு வேலையின் காரணமாக அவனுக்கும் அவன் மனைவிக்குமிடையே சண்டை ஏற்படுகிறது. குழந்தைகள் டானியை வெறுக்க ஆரம்பிக்கிறார்கள்.

டானி மாபியா குழுவிலிருந்து வெளியேறினால் அவனைக் குழுவில் சேர்த்த லெஃப்டியின் உயிருக்கு ஆபத்து. அதே நேரம் மற்றொரு பக்கம் அக்குழுவிலிருந்து வெளியேறுமாறு அவன் உயரதிகாரிகளும் மனைவியும் தரும் நெருக்கடி. டானியின் உண்மை முகத்துக்கும் முகமூடிக்குமான இந்த உணர்ச்சிப் போராட்டமே டானி ப்ராஸ்கோ திரைப்படம்.

டானி ப்ராஸ்கோவாக ஜானி டெப்(Johnny Depp) நடித்துள்ளார். ஆரம்பத்தில் மாபியா குழுவினரின் நம்பிக்கையைப் பெற உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் நடிப்பதிலும், பின்னர் குடும்பத்தினருடனான பிரச்சனையின் காரணமாக தவிப்பதிலும் லெஃப்டியின்பால் கொண்ட நட்பினால் தன் நிஜ/போலி முகங்களுக்கிடையே ஊசலாடுவதுமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். எஃப்.பி.ஐ ஏஜெண்டான டெப் மாபியா குழுவில் சேர்ந்ததும் அவர்களின் உச்சரிப்பையும் அவர்கள் உபயோகிக்கும் சொற்றொடர்களையும் கற்றுக்கொள்ளும் காட்சிகள் சுவாரஸ்யம். அதேபோல் அவர்களுடன் கடத்தலிலும் கொலைகளிலும் ஈடுபடும்போதும் டானியின் குழப்பமான மனநிலையை நன்கு வெளிப்படுத்தியுள்ளார்.

லெஃப்டியாக அல் பசினோ(Al Pacino). மற்ற திரைப்படங்களில் சக்தி மிக்க மாஃபியா தலையாக நாம் பார்த்த அல் பசினோ இதில் ஒரு அடிமட்ட நிலையில் முப்பது வருடங்களாக வேலை செய்யும் ஒரு சாதாரண ஆளாக நடித்துள்ளார். போதை மருந்துக்கு அடிமையான மகனைப் பற்றி வாஞ்சையாக டானியிடம் சொல்லும் காட்சியிலும், தன்னைத் தாண்டி தன் குழுவினர் சக்தி வாய்ந்த பதவிகளுக்கு உயர்வது குறித்து பொருமும் போதும், தான் செய்யத் தவறியதை டானி செய்து குழுவில் மேலெழ வேண்டுமென உந்துதல் காட்டும்போதும் மிளிர்கிறார்.

நேர்கோட்டில் செல்லும் திரைக்கதையில் அங்கங்கே சுவாரசியமான வசனங்கள் நிமிர்ந்து அமர வைக்கின்றன. நிஜ ஜோ பிஸ்டோன் எழுதிய புத்தகத்தை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்ட திரைக்கதை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. மற்ற மாபியா திரைப்படங்களைப் போல அதிரடி சண்டைக் காட்சிகளோ சஸ்பென்ஸோ இருக்காது.

"If I come out alive, this guy, Lefty, ends up dead. That's the same thing as me putting the bullet in his head myself" என்று சொல்லும் டானி இறுதியில் கடமையின் காரணமாகவும் குடும்பத்தின் காரணமாகவும் அதையே செய்ய வேண்டியிருக்கின்றது.

டானி குழுவில் சேர்ந்த புதிதில் "When they send for you, you go in alive, you come out dead, and it's your best friend that does it" என்று லெஃப்டி சொல்வது அவனுக்கே உண்மையாகிப் போகிறது.