Wednesday, December 12, 2007

Little Miss Sunshine

தோல்வியடைந்தவர்கள் பற்றிய கதைகள் எப்போதுமே நம்மை பாதிக்கின்றன. கதாபாத்திரம் தோற்றுப்போவதாகக் காட்டும் திரைப்படங்கள் பார்வையாளர்களைக் கலங்கச் செய்கின்றன. அந்த தோல்வியிலிருந்து மீண்டு போராடி வெல்லும் கதாபாத்திரங்கள் மனநிறைவைத் தருகின்றன. அத்தகைய கதாபாத்திரங்கள் தோல்விகளையும் தடைகளையும் தாண்டி வெல்லும் தருணங்களை நாம் நம் அன்றாட வாழ்க்கையோடு ஒட்டிப் பார்க்கிறோம். சில சமயங்களில் அந்த தருணங்கள் நம் அனுபவங்களையும் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கின்றன. இங்கு தோல்வி என்பது அவரவர்க்கான அளவீட்டைக் குறித்தே அமைகிறது.

தொடர்ந்து தோல்விகளை சந்திக்கும் கதாபாத்திரங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் பெரும்பாலும் உணர்ச்சிப்பூர்வமாகவும் நம் மனதைக் கனமாக்கும் விதமாகவுமே இருக்கின்றன. திரைக்கதையும் காட்சியமைப்புகளும் திரைப்படத்தின் முடிவும் நம் மனதை பாரமாக்கிவிடுமாறே அமைக்கப்பட்டிருக்கும். அத்தகைய திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு தோல்வியடைந்தவர்கள் குறித்தும் அவர்கள் தோல்விகளைத் தாண்டி வாழ்வை எதிர்கொள்வது குறித்தும் படம் நெடுக மெல்லிய நகைச்சுவையுடன் சொல்லும் திரைப்படம் Little Miss Sunshine(2006).




"There's two kinds of people in this world, there's winners and there's losers. Okay, you know what the difference is? Winners don't give up."


ரிச்சர்ட் ஹூவர் மேலாண்மை பேச்சாளராக முயன்று கொண்டிருப்பவர். எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையாளர். ஆனால் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்படுபவர். அவரது மனைவி ஷெரில். வயதான தந்தை எட்வின். போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர். முதுமையில் வாழ்வின் மீதே விரக்தியில் இருப்பவர். மூத்த மகன் ட்வெயின். குடும்பத்தின் மீது வெறுப்பும் கோபமும் கொண்ட இளைஞன். விமானப் படையில் சேரும்வரை யாரிடமும் பேசுவதில்லையென முடிவெடுத்து ஊமையாயிருப்பவன். ஃப்ராங்க் ஷெரிலின் அண்ணன். ஓரினச் சேர்க்கையாளன். பேராசிரியராக இருந்து காதல்(?) தோல்வியால் தற்கொலைக்கு முயன்று இப்போது தங்கையின் பாதுகாப்பில் இருப்பவன். இவர்கள் அனைவரையும் இணைத்திருக்கும் பாலமாக சுட்டிப் பெண் ஆலிவ், ரிச்சர்ட்-ஷெரிலின் மகள்.

ஆலிவிற்கு Little Miss Sunshine என்ற சிறுமியருக்கான அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. தொடர்ந்து தோல்விகளையே எதிர்கொள்ளும் ஹூவர் குடும்பத்தினர் ஒரே நம்பிக்கையாய் இருப்பது அழகிப்போட்டி. ஆலிவ்வின் ஆசையை நிறைவேற்றுவதற்காக இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்ற மனநிலையுடனே போட்டியில் கலந்துகொள்ளக் கிளம்புகிறார்கள்.அந்த பயணத்தினூடே நடைபெறும் உரையாடல்கள், அவர்களின் வாழ்க்கையையேப் புரட்டிப் போடும் சம்பவங்கள், எதிர்பாராத ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள், ஏமாற்றங்கள், இழப்புகள், மனக்கசப்புகள், பிணைப்புகள் இவைதான் Little Miss Sunshine திரைப்படம்.

சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படம். எதிர்பாராத திருப்பங்களோ ஆச்சரியங்களோ வலிந்து திணிக்கப்படாமல் வெகு இயல்பாய் அமைக்கப்பட்ட திரைக்கதை. படத்தின் முதல் சில காட்சிகளிலேயே குடும்பத்தினர் ஒவ்வொருவரின் குணாதிசியங்களையும் உணர்த்திவிடுகிறார்கள். இதனால் அவர்களின் பயணத்தினூடே அவர்களுடன் சேர்ந்து நாமும் சகபயணியாய் பயணிக்க முடிகிறது. அவர்கள் வாழ்வை அருகிலிருந்து பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.




எந்தவிதமான நாடகத் தன்மையுமில்லாமல் இயல்பான காட்சியமைப்புகளும் நகைச்சுவை மிளிரும் வசனங்களும் படத்தின் பெரும்பலம். ஒவ்வொரு காட்சியிலும் யாராவது ஒருவர் மற்றவர்களை கிண்டலடிக்கிறார். அது கதாபாத்திரங்களின் விரக்தி நிலையை எடுத்துச் சொல்கிறது. குறிப்பாக எட்வின், ஃப்ராங்க் பேசும் வசனங்கள் அட்டகாசம். அவர்களுக்குள் நடக்கும் சின்னச் சின்ன சண்டைகள் புன்னகையை வரவைக்கின்றன.

படத்தில் ஸ்டார்கள் யாருமில்லை. நடிகர்கள் கதாபாத்திரங்களில் கச்சிதமாய்ப் பொருந்துகிறார்கள். தங்கள் பங்கைச் செம்மையாகச் செய்திருக்கிறார்கள். தாத்தா எட்வினாக நடித்த Alan Arkin இந்த கதாபாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறார். ஆலிவாக நடித்திருக்கும் Abigail Breslin ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். குடும்பத்தினரின் சோகம், கோபம், ஏமாற்றம் எல்லாவற்றுக்கும் வடிகாலாக இருக்கும் ஆலிவாக நம் மனதைக் கொள்ளை கொள்கிறார். ரிச்சர்டாக Steve Carell அசத்தியிருக்கிறார். விரக்தியின் விளிம்பிலிருக்கும் கதாபாத்திரத்தை முழுதாக உள்வாங்கி நடித்திருக்கிறார்.

பிடித்த காட்சிகளைப் (நிறையவே இருக்கின்றது) பகிர வேண்டுமென்ற எண்ணமிருந்தாலும் படத்தைப் பார்க்கும்போது சுவாரசியம் குறைந்துவிடக்கூடாதென்று தவிர்க்கிறேன். ஹூவர் குடும்பத்தினர் பயணிக்கும் வேனைப் போலவே சில காட்சிகள் மிக மெதுவாக நகர்ந்தாலும் மொத்தத்தில் சுவாரசியமானத் திரைப்படம்.

"Losers are people who are so afraid of not winning, they don't even try."

'Little Miss Sunshine' போட்டியில் ஜெயிக்க முடியுமா என்று பயப்படும் ஆலிவிடம் தாத்தா எட்வின் சொல்லும் இந்த வசனமே படத்தின் அடிநாதம். தோல்விகளைக் கடந்து வாழ்வை எதிர்கொள்ளும் விதத்திலேயே வெற்றிகள் நிச்சயிக்கப்படுகின்றன. தோல்விகளைக் கடந்து ஹூவர் குடும்பத்தினரின் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Tuesday, December 11, 2007

எவனோ ஒருவன்



நடிகர் மாதவன் நடித்து தயாரித்திருக்கும் படம். படத்திற்கு வசனமும் அவரே எழுதியிருக்கிறார்.மராத்தியில் வெளிவந்து விருதுகள் வாங்கிக் குவித்த டோம்பிவில் பாஸ்ட் என்ற படத்தின் தமிழாக்கம் தான் எவனோ ஒருவன்.

அந்நியன் பார்த்தீருக்கீங்களா...? அதில் வரும் அம்பி கதாபாத்திரம் தான் இந்தப் படத்தில் நம்ம மாதவன் ஏற்று இருக்கும் ஸ்ரீதர் வாசுதேவன் பாத்திரம். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நடுத்தர வயது குடும்பத் தலைவனாய் மாதவன். இரண்டு குழந்தைகளுக்கு அப்பா. அவர் மனைவியாக இரு குழந்தைகளுக்குத் தாயாக சங்கீதா.

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் கடைபிடிக்க வேண்டும் என பள்ளிபாடங்களும், அரசாங்கமு சுட்டிக் காட்டும் விதிகளைப் பின்பற்றி வாழும் கொள்கையாளன் நம் நாயகன். அதன் மூலம் அவனுக்கு கிடைப்பது சமூகத்தின் கேலிப்பேச்சுக்களும், ஏளன பார்வைகளும் ,பைத்தியக்காரன் என்ற பட்டமுமே.. இருப்பினும் தன் கொள்கையில் நிலையாய் நிற்கிறான் நாயகன். தன் கொள்கையால் தன் குடும்பம், அலுவலகம் என எல்லா இடங்களிலும் பாதிப்பிற்கு உள்ளாகிறான்.

இயலாமை ஆற்றாமை என அனைத்தும் ஒரு கட்டத்தில் பொறுமையின் எல்லை தொடும் போது நாயகனின் கோபம் வன்முறையாய் வெடிக்கிறது.. அதன் பின் தொடரும் நாயகனின் நடவடிக்கைகள், நிகழ்வுகள் என முடிந்த அளவில் யதார்த்தம் கலையாமல் சொல்ல முயன்று இருக்கிறார்கள்..

நாயகனின் இயந்திரத்தனமான வாழ்க்கையை படத்தின் துவக்கத்தில் ஒரு சில வினாடிகளில்லே பார்வையாளர்களின் மனத்தில் பதியுமாறு செய்து இருக்கும் அந்தப் படத்தொகுப்பு கச்சேரி அருமையிலும் அருமை.. நகர வாழ்க்கையில் நடுத்தர வர்க்கம் பற்றி ஒரு காட்சி கவிதையே வடித்திருக்கிறார் இயக்குனர். அடுக்குமாடி குடியிருப்பு, தண்ணீர் லாரி, தண்ணீர் பிடிக்க நிற்கும் வரிசை, அவசரக் கதி சமையல், காலை நேர நாளிதழ், பழவந்தாங்கல் ரயில் நிலையம், மின்சார ரயில் நெரிசல்,சென்னை வங்கி, டிபன் பாக்ஸ் உணவு, மாலை நேர டீக்கடை...என குறைந்த அவகாசத்தில் சொல்லிவிடுகிறார்.

ஆங்காங்கு நடக்கும் சின்ன சின்ன சட்ட மீறல்கள் பொருட்டு நாயகன் குமைந்தாலும் அதை எதிர்க்க அவன் களம் இறங்குவதில்லை.. ஆனால் தான் அது போன்ற நிகழ்வுகளுக்குக் காரணமாகக் கட்டாயப்படுத்தும் போது அவன் அதற்கு இணங்காமல் ஒரு போராளியாக பொங்கியெழுகிறான்.

நம்மில் பலருக்கும் இருக்கும் கேள்விகள் தான்.... எதுக்கு லஞ்சம் கொடுக்கணும்...எதுக்கு அதிக காசு கொடுத்து சில சலுகைகளைப் பெறணும்... இந்தக் கேள்விகள் நமக்குள்ளே புதைத்துக்கொண்டு வாழ பழகிவிட்டோம்.. ஆனால் நம் கதை நாயகனால் அப்படி இருக்க முடியவில்லை...

தலை குனிந்தே பழக்கப்பட்ட மக்களில் எவனோ ஒருத்தன் தலை நிமிர்ந்தால் அவன் தன்னைச் சார்ந்த சமுதாயத்தாலும் குடும்பத்தாலும் எப்படி எல்லாம் பார்க்கப்படுகிறான், நடத்தப்படுகிறான் என்பதே படத்தின் பின்பாதி..

இப்படி ஒரு யதார்த்தமானக் கதையைத் தேர்ந்தெடுத்து திரைப்படமாக்கியதற்கு தயாரிப்பாளர் மாதவனுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். வசனகர்த்தா மாதவனும் படத்தின் பல இடங்களில் ஜெயித்திருக்கிறார்.

நடிகர் மாதவனுக்கு வருவோம்....அற்புதமான வாய்ப்பு... தன்னால் இயன்ற வரை அதில் தன்னை வெளிபடுத்தியிருக்கிறார்...குறிப்பாக பிற்பாதியில் வானம் பார்த்து தன் நிலையை கடவுளிடம் அவர் பேசுவதாய் அமைக்கப்பட்டிருக்கும் காட்சியில் நடிகர் மாதவனும் வசனகர்த்தா மாதவனுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

சங்கீதா... இல்லத்தரசியாக இயல்பான நடிப்பில் வெற்றி கொடி கட்டியிருக்கிறார்.தன்னுடைய சின்ன சின்னக் கனவுகளுக்கு குறுக்கே கணவனின் கொள்கை குறுக்கே வரும் போது மறுகுவதும்... மன்றாடுவதும்... சண்டைப் போடுவதும் என முற்பாதியில் கலக்கும் அவர்... பிற்பாதியில் காணாமல் போன கணவனின் பாதுகாப்பிற்காக உருகுவது என நடிப்பில் நெகிழ செய்கிறார்.

சீமான்... அவருக்கு மிகவும் கனமான வேடம்.. நாயகனைத் தேடி அலையும் காவலதிகாரி வேடம்.. இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாமே சீமான் என சொல்ல வைக்கிறது. வேட பொருத்தம் கச்சிதம் ஆனால் வாய்ஸ் மாடுலேஷனில் கவனம் செலுத்தியிருக்கணும்... நடிப்பில் சீமான் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம்.

காவலர்களின் மனரீதியான பிரச்சனைகள் சீமான் கதாபாத்திரம் மூலம் அலசப்படுகிறது... சீமான் தன் மனைவியிடம் " நான் வாங்குற சம்பளத்துல்ல நீ குடும்பம் நடத்த முடியுமா ?" எனக் கேட்க அதற்கு அவர் மனைவி "முடியும்ன்னு தோணல்ல" என பதில் சொல்வது லஞ்சம் என்பது எத்தனை தூரம் அன்றாட வாழ்கையின் ஒரு அங்கமாகிவிட்டது என சுருக்கென தைக்கிறது..

ஓவியம் வரையும் ஒரு சிறுவனின் கதாபாத்திரம் படம் நெடுக வரும் இன்னொறு குறிப்பிடத்தகுந்த வேடம்... அந்தச் சிறுவனின் அமைதியான நடிப்பு நெஞ்சைத் தொடுகிறது..

சீமானின் மனைவியாக தேவதர்ஷினி, மாதவனின் நண்பனாக ரேடியோ மிர்ச்சி செந்தில் என ஆங்காங்கு தெரிந்த முகங்கள் சின்னஞ்சிறு வேடங்களில் வருகிறார்கள்.

பாடல்கள் இல்லை... படம் முடியும் போது ஒலிக்கும் ஒரு பாடலைத் தவிர..இசை ஜி.வி.பிரகாஷாம்.. பெரிய வேலை இல்லை அவருக்கு. பின்னணி இசை இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாமே சார்.

அன்றாட வாழ்க்கை துவங்கி காவல் துறையின் அலட்சியம்,கல்விக் கொள்ளை, மருத்துவத் துறை சீர்கேடு, அரசியல் அராஜகம் என எல்லாவற்றையும் கூடுமானவரை யதார்த்தம் கெடாமல் சாட முயற்சித்திருக்கிறார் இயக்குனர். மராத்திய இயக்குனர் நிஷிகாந்த்கு இது தமிழில் முதல் படம். பாராட்டும் படியான முயற்சி. வாழ்த்துக்கள்

காலம் காலமாக தலை குனிந்த பழக்கப்பட்ட சமுதாயத்தில் எவனோ ஒருவன் தலை நிமிர்த்தினாலும் அவன் தலை அழுத்தப்படுகிறது... மீறி அவன் தலை நிமிர்ந்தால் அவன் தலை எடுக்கப்படுகிறது.. அப்படி இருந்தும் காலம் காலமாக எங்கோ எவனோ ஒருவன் தலை நிமிர்த்திக் கொண்டுதானிருக்கிறான்..அவனாலே தான் நம் சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறது என்ற ரீதியில் படம் முடியும் தருவாயில் ஒலிக்கும் வசனம் நம்மை சிந்திக்க வைக்கிறது..

கமர்ஷியல் சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தாலும் யதார்த்த சினிமா ரசிகர்களுக்கு நல்லதொரு அனுபவமாய் எவனோ ஒருவன் அமைவான் என்பதில் எந்த ஐயமும் இல்லை...

நிச்சயம் பாருங்கள்... எவனோ ஒருவன் நம்மில் ஒருவன்...

Sunday, December 2, 2007

ராமேஸ்வரம் -யாழ்பணத்திலிருந்து 36 மைல்



போஸ்டரில் பாவனா..தலைப்பில் புலம் பெயர்ந்த தமிழர்களின் பிரச்சனையைக் குறிக்கும் வாசகம். பெரும்பான்மையான மக்கள் திரையரங்குக்கு வரக் காரணம் இது தான்.

இலங்கை விட்டு தமிழகம் அகதியாய் வரும் ஒரு இளைஞன் இங்கிருக்கும் ஒரு பெரும் பணக்காரரின் மகளின் காதலில் சிக்குகிறான்(!!!???) காதல் வெல்கிறதா என்பது தான் கதை...

இயக்குனர் செல்வா புதுசு... இசையமைப்பாளர் நிருவும் புதுசு..பாடல்கள் நல்லாயிருக்கு...கேக்கலாம்.. எல்லாரையும் ஏற்றி போக கப்பல் வருமா... எதோ சொன்ன புள்ள..பாடல்கள்..ரசிக்கலாம்.

ஜீவா நாயகன். பாவனா நாயகி. மலையாள லால் ஜோஸ் பணக்கார அப்பா. இது தவிர நாயகனின் தாத்தாவாக மணிவண்ணன், நாயகியின் பாட்டியாக வெண்ணிற ஆடை நிர்மலா, நாயகியின் முறை மாமனாக போலீஸ் வேடத்தில் மெட்டி ஒலி போஸ்...இது தவிர நாயகனின் நண்பர்களாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வேடத்தில் வரும் நடிகர்கள்..அதில் குறிப்பிட்டு சொல்லும் படியாக ஸ்னேக் சாந்தி மற்றும் கால் இழந்தவராக வரும் நடிகர் ஒருவர்.

அகதி வாழ்க்கையில் சிக்கி காதலுக்கும் இன உணர்வுக்கும் தாத்தா மீது கொண்ட பாச உணர்வுக்கும் இடையில் உழலும் கதாபாத்திரத்தில் ஜீவா... இயக்குனரின் குழப்பமானத் திரைக்கதை அமைப்பில் இந்த நடிகர் காணாமல் போகிறார்.

பாவனா தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான அபத்தமான கதாநாயகி வேடம்.. என்ன பாவடைத் தாவணி, சுடிதார், சேலை என பராம்பரிய உடைகளில் வந்து போகிறார். அழகாய் இருக்கிறார். ஜீவாவைத் துரத்தி துரத்திக் காதலிக்கிறார்.

லால் ஜோஸ் மலையாள மனிதரை படம் நெடுக வேட்டித் தூக்கி வசனம் பேசும் பெரிய மனிதராக நடமாட விட்டிருக்கிறார்கள். தமிழ் படங்களில் வரும் நாயகியின் தந்தை கம் வில்லன் வேட. இன்னொரு நல்ல நடிகர் அதிகம் வேலை இல்லாத வேடத்தில்

மணிவண்ணன் பாசமானத் தாத்தாவாக சென்டி மெண்ட் பொழிந்து செத்துப் போகிறார். வெண்ணிற ஆடை நிர்மலா கிட்டத் தட்ட சந்திரமுகியில் வரும் பிரபுவின் என்னக் கொடுமை இது சரவணன் நடிப்பை ஞாபகப்படுத்துகிறார்.

காதலுக்கு துணையாகவும் குறுக்காகவும் மாறி மாறி அணிவகுக்கும் நண்பர்கள்.. புரியல்லயா...சத்யமாப் படம் பார்த்தப்போ எனக்கும் புரியல்ல...கிட்டத்தட்ட நம்மைப் போலக் குழப்பத்தில் நாயகனும் ஒரு கட்டத்தில் நான் காதலிக்கலாமா என வாய் விட்டு அவர் நண்பர்களிடம் கருத்துக் கேட்கிறார்...அப்படி ஒரு குழப்பம்.

என்ன சாமி கதை... ஒரு பணக்கார பொண்ணு வலியப் போய் தன்னை விட வசதி குறைந்த ஒரு பையனைக் காதலிக்குது.. இது நாங்கப் பாக்காதக் கதையான்னு கேக்குறீங்களா?

அதுக்குத் தான் படத்துல்ல விக்குற மேட்டர் ஒண்ணு வச்சிருக்கோம்ல்லன்னு இயக்குனர் சொல்லுறார்....என்னக் கேக்குறீங்களா?

புலம் பெயர்ந்த தமிழர்கள் பிரச்சனை....

ஒரு கற்கால தமிழ் சினிமா பார்முலாக் காதல் கதைக்கு ஒரு இனத்தின் பல்லாண்டு கால அழுத்தமான வாழ்க்கைப் பிரச்சனை ஊறுகாயாக பயன்படுத்துள்ளது மிகவும் வருத்தமான விசயம்.

நாயகி நாயகன் மீது காதல் கொள்ள எந்த விதமான அழுத்தமானக் காரணமும் காட்டப் பட வில்லை...என்பதில் துவங்கி...திரைக்கதையில் ஏகப்பட்ட குளறுபடிகள்...

RAMESWARSAM - YET ANOTHER ATTEMPT BY TAMIL CINEMA TO AIMLESSLY EXPLOIT THE SRILANKAN TAMIL ISSUE