Monday, January 28, 2008

House of Sand and Fog

வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை

- மகுடேஸ்வரன்

பாலுமகேந்திராவின் 'வீடு' பார்த்திருக்கிறீர்கள் தானே? 'சொந்த வீடு' என்பதே கனவாகிப்போன குடும்பங்களின் கதையை மிகச் சிறப்பாக படமாக்கியிருப்பார். 'House Of Sand and Fog' படத்தைப் பற்றிய எண்ணம் வரும்போதெல்லாம் மகுடேஸ்வரனின் இந்த கவிதையும் பாலுமகேந்திராவின் 'வீடு' திரைப்படமும் நினைவுக்கு வருகின்றன. இப்படம் பார்த்து இரண்டாண்டுகளுக்கு மேலான பின்னர் நேற்று பார்த்த 'வேட்டையாடு விளையாடு' திரைப்பட காட்சி இந்த படத்தை ஞாபகப்படுத்திவிட்டது. ஜோதிகா பாலீத்தீன் கவரால் முகத்தை மூடி தற்கொலை செய்ய முயலும் காட்சியில் சொல்வாரே "பென் கிங்க்ஸ்லி ஒரு படத்துல இப்படி தான் செய்வார்" என்று, அது இந்த படம் தான்.

கேத்தி மணம் முறிந்த, குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டு வரும் பெண். வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் விரக்தியின் உச்சத்தில் இருப்பவள். அவளுக்காக தந்தை விட்டுச் சென்ற வீடு, வரி செலுத்தாத காரணத்திற்காக ஏலம் விடப்படுகிறது. ஓய்வு பெற்ற ஈரானிய இரானுவ அதிகாரியான பெஹ்ரானி அந்த வீட்டை வாங்குகிறார். ஏலத்தில் குறைந்த விலைக்கு வாங்கிய வீட்டை மேம்படுத்தி நல்ல விலைக்கு விற்று தன் உயர்கல்விக்கு பயன்படுத்த நினைக்கிறார். கடற்கரையோரம் இருக்கும் அந்த வீடு அவருக்கு ஈரானில் சிறு வயதில் வாழ்ந்த வீட்டை நினைவுபடுத்துகிறது. நோய்வாய்ப்பட்ட மனைவியுடனும் மகன் இஸ்மாயிலுடனும் அந்த வீட்டுக்கு வருகிறார்.



வீட்டை இழந்ததை வெகு தாமதமாக உணரும் கேத்தி வீட்டை விட்டுச் செல்ல மறுக்கிறாள். அது தன் தந்தையின் வீடென்றும் அதை விட்டால் தனக்கு வேறெதுவும் இல்லையென்றும் அரசாங்கத்தின் குளறுபடியால் ஏலம் விடப்பட்டதாகவும் கூறி காலி செய்ய மறுக்கிறாள். தன் சேமிப்பு முழுவதையும் வீடு வாங்க செலவிட்ட பெஹ்ரானி அவளுடன் சண்டையிடுகிறார். தான் வீட்டை வாங்கியதற்கு ஆதாரங்களைக் காட்டி அவளை வெளியேறச் சொல்கிறார்.

லெஸ்டர் உள்ளூர் போலீஸ்காரர். மணமுறிந்தவர். கேத்தியின் மேல் ஈர்க்கப்பட்டு அவளுக்கு உதவுகிறார். பெஹ்ரானியை வீட்டை காலி செய்யுமாறு மிரட்டுகிறார். அவருடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார். பெஹ்ரானி குடும்பத்தினரை ஒரு அறையில் அடைத்து வைத்து மிரட்டுகிறார். இறுதியில் பெஹ்ரானி அரசாங்கத்திடம் வீட்டை திருப்பிக்கொடுத்து தான் கட்டிய பணத்தை வாங்கி கேத்தியிடம் கொடுத்துவிடுவதாயும் தன் பெயரில் வீட்டை எழுதிக் கொடுக்குமாறும் ஒரு தீர்வைச் சொல்கிறார். அரசு அலுவலகத்துக்கு செல்கையில் லெஸ்டர் எதிர்பாராத சமயத்தில் இஸ்மாயில் அவனது துப்பாக்கியைப் பறித்து தங்களை விட்டுவிடுமாறு மிரட்டுகிறான். அந்த நேரத்தில் அங்குவரும் காவலாளிகள் இஸ்மாயிலை சுட்டுவிடுகின்றனர். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறக்கிறான். லெஸ்டர் போலீஸிடம் தன் குற்றத்தை ஒத்துக்கொள்கிறான். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான்.

மகனை இழந்த அதிர்ச்சியில் வீடு திரும்பவரும் பெஹ்ரானி தன் மனைவிக்கு தேநீரில் விஷம் கலந்துகொடுத்துவிட்டு, இரானுவ உடை அணிந்து முகத்தை பாலித்தீன் பையால் மூடி மூச்சு முட்டி தற்கொலை செய்துகொள்கிறார். வீட்டுக்கு வரும் கேத்தி அவர்கள் இறந்துகிடப்பதைப் பார்த்து உடைந்து அழுகிறாள். இறுதியில் வரும் போலீஸ் அது அவளுடைய வீடா எனக் கேட்க அவள் "இது என்னுடைய வீடு இல்லை" எனக் கூறி சென்றுவிடுகிறாள். யாருக்குமற்றதாய் அந்த வீடு அனைத்தையும் பார்த்தபடி இருக்கிறது.



இழந்த தன் வாழ்வை மீட்கப் போராடும் கேத்தி, புதிய நாட்டில் புதிய வாழ்க்கையை எதிர்நோக்கும் பெஹ்ரானி என இரு கதாபாத்திரங்களுக்கிடையேயான போராட்டம் மிகச் சிறப்பாக படமாக்கப்பட்டு அந்த கதாபாத்திரங்களின் மேல் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. படம் நெடுகிலும் இறுக்கமான காட்சிகள் நம்மை கதையுடன் ஒன்ற வைக்கின்றன. காட்சிகளுடன் ஒத்துப்போகும் மென்சோக பின்னணி இசை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

கேத்தியாக ஜெனிபர் கானெலி(Jennifer Connelly) நடித்திருக்கிறார். விரக்தியையும் இழப்பையும் கண்களில் காட்டுகிறார். எதைப் பற்றியும் கவலைகொள்ளாமல் சோகத்தின் உச்சத்தில் இருக்கும் ஆரம்ப காட்சிகளாகட்டும், வீட்டைக் காப்பதற்காக பெஹ்ரானியுடன் சண்டையிடும் போதாகட்டும், தான் செய்வது தவறென உணர்ந்தாலும் குற்றவுணர்ச்சி தடுத்தாலும் 'சர்வைவலுக்காக' வீட்டை விட்டு போகாமல் தவிக்கும் கணங்களாகட்டும் ஜெனிபர் கானெலி அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பெஹ்ரானியாக பென் கிங்க்ஸ்லி(Ben Kingsley). இந்த கதாபாத்திரத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். உடைந்த ஆங்கிலத்தில் வசன உச்சரிப்பிலும் நடை, பாவனைகளிலும் பெஹ்ரானி கதாபாத்திரத்தைக் கண்முன் நிறுத்துகிறார். வீடு வாங்கிய போது பெருமிதமும், பின்னர் அதை இழக்க நேருமோ என்ற தவிப்பும், மகனை இழந்து துடிப்பும் கோபமும் அழுகையும், இறுதிக் காட்சியில் மரணத்தை எதிர்கொள்ளும் சோகமும் என வெகுசிறப்பாக நடித்திருக்கிறார்.

கண்டிப்பாக இந்த படம் மகிழ்வான தருணங்களில் பார்ப்பதற்கு அல்ல. கதாபாத்திரங்களின் மேலான பச்சாதாபம் படம் முடிகையில் எந்த உருவமும் கொள்ளலாம். அதுவே இந்த படத்தின் சிறப்பும் கூட.

இதே பெயரைக் கொண்ட ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் . மனித வாழ்க்கையும கூட ஒரு விசித்திர நாவல் என்றே தோன்றுகிறது. House of Sand and Fog அதன் மற்றுமொரு அத்தியாயம்.

Friday, January 25, 2008

Juno

இந்த வருடத்திற்கான சிறந்த திரைப்படம், இயக்குனர், சிறந்த நடிகை மற்றும் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள திரைப்படம் Juno. ஆஸ்கர் விருதுகள் பரிந்துரை பட்டியலைப் பார்த்த பின்தான் இப்படியொரு படம் வந்திருக்கிறதென்றே தெரிந்தது. எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் பார்க்க ஆரம்பித்து படம் முடியும்போது நல்ல படம் ஒன்றை பார்த்த திருப்தியை அளித்தது.

ஜூனோ(Juno) பதினாறு வயது பள்ளி மாணவி. தன் நண்பன் பால்(Paulie)-உடன் எதிர்பாராத உடலுறவின் காரணமாக கருத்தரிக்கிறாள். கருக்கலைப்பு செய்துகொள்ளும் எண்ணத்தை மாற்றிவிட்டு குழந்தையை தத்தெடுக்க விருப்பமுள்ள தம்பதிக்கு கொடுப்பதென்று முடிவு செய்கிறாள். தன் தோழியின் உதவியுடன் உள்ளூர் செய்தித்தாளில் விளம்பரம் அளித்திருந்த வனெஸ்ஸா(Vanessa) மார்க்(Mark) தம்பதியரை சந்தித்து குழந்தையை அவர்களுக்கு தத்துக்கொடுக்க சம்மதிக்கிறாள். கர்ப்ப காலத்தில் அவளுள் ஏற்படும் மாற்றங்களும், மார்க்-வெனெஸ்ஸா தம்பதியரிடையேயான உறவும் ஜூனோ-பாலிடையே நிகழும் மனப்போராட்டங்களும் அழகானதொரு திரைப்படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.




ஜூனோ தெளிவான கதாபாத்திரமாக படம் நெடுக உலாவருகிறாள்.
சுதந்திரமான, எவரைப் பற்றியும் கவலைப்படாத பள்ளி மாணவியாக இருக்கும் ஜூனோ நாட்களாக ஆக வாழ்வின் போக்கைப் புரிந்துகொள்வதும் பாலியின் மீதான காதலை உணர்வதும் மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளது. ஜூனோ கருத்தரித்து இருப்பது தெரிந்ததும் பாலி அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் ஒருசேரக் கொள்வதும் ஜூனோவின் மேலான அக்கறையை காட்டத் தெரியாமல் காட்ட முடியாமல் தவிக்கின்ற தவிப்பும் பாலி கதாபாத்திரத்திற்கு மெருகு சேர்க்கின்றன. குழந்தைக்காக வெனெஸ்ஸாவின் ஏக்கமும் தன் மனைவியின் விருப்பங்களுக்காக தன் ஆசைகளைத் துறந்து வாழும் மார்க்-கின் மனநிலையும் ஜூனோவின் வருகையால் எவ்வாறு மாறுகிறது என்பதை அழுத்தமாக சொல்கிறது திரைக்கதை. ஜூனோ கருத்தரித்திருப்பது அதிர்ச்சியைத் தந்தாலும் அவள் முடிவுக்கு மதிப்பளித்து அவளுக்கு முழு ஆதரவு தருகிறார்கள் அவளது பெற்றோர்கள். இறுதியில் என்ன ஆனது, ஜூனோ மார்க்-வெனெஸ்ஸாவிற்கு தத்து கொடுத்தாளா என்பதை வெள்ளித் திரையில் காண்க.

எந்தவித தடங்கலுமின்றி நேர்கோட்டில் நகரும் திரைக்கதை படத்தின் பெரும்பலம். பிற்பாதியில் மார்க்-ஜூனோ இடையிலான காட்சிகள் மட்டும் கதையோடு ஒட்டாமல் திணித்தாற்போல் தோன்றுகின்றன. பின்னணி இசையாக படம் நெடுக வரும் பாடல் ரம்மியம். படத்தில் நக்கலும் நையாண்டியும் தூக்கலாகவே இருக்கிறது. சீரியஸான காட்சிகளில் கூட சிரிக்க வைக்கிறார்கள்.

ஜூனோவாக நடித்திருக்கும் எல்லன் பேஜ்(Ellan Page) அசத்தியிருக்கிறார். ஆஸ்கர் வாங்கிவிடுவார் என்றே தோன்றுகிறது. மற்ற நடிகர்களும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.

பதின்ம வயதினரிடையே இவ்வாறான கதை எப்படிப்பட்ட தாக்கத்தை விட்டுச்செல்லும் என்பது விவாதத்திற்குரியதே. 'All is well that ends well' என்பது எல்லா நேரத்திலும் உண்மையல்லவே!

எனக்கு இத்திரைப்படம் பிடித்திருந்தது என்றாலும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது இன்னும் கூட ஆச்சரியமாகவே இருக்கிறது.ம்ம்.

Juno - "Feel-good" movie

Thursday, January 24, 2008

பிரிவோம் சந்திப்போம்

பெரிய குடும்பத்தில் பிறந்து வளரும் சேரன், பார்ப்பவர்களையும் ஏங்க வைக்கும் விதமான கூட்டுக்குடும்பம். ஒரு டஜனுக்கு மேலுள்ள குடும்பத்தின் அறிமுகத்தை எளிதாக சொல்லும் முதல் காட்சியிலேயே பளிச்சிடுகிறார் இயக்குனர்.

சிறிய குடும்பத்தில் பிறந்து வளரும் சினேகா, கூட்டுக் குடித்தனத்தில் அதாவது நிறைய மக்களுடன் வாழ நினைக்கும் சினேகாவும், கூட்டுக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து திருமணத்திற்குப் பின் தனிக்குடித்தனம் போக நினைக்கும் சேரனுக்கும் இடையில் நடக்கிற மனப் போராட்டமே பிரிவோம் சந்திப்போம். தலைப்புக்கேத்தவாறு கடைசிவரை சினேகாவும், சேரனும் பிரியாமல் இருக்கிறார்கள்.


பாசத்திற்கு ஏங்கும் சினேகா, பெரிய குடும்பத்தில் இருக்கும் சேரனை கைப்பிடித்து அவரது வீட்டு மருமகளாகுகிறார். எதிர்பார்த்த ஜனம் கிடைத்துவிட்டதே என்ற மகிழ்ச்சியிலும், சேரனைக் கைப்பிடித்த பூரிப்பிலும் கூட்டுக் குடும்ப அன்பின் அரவணைப்பில், அந்த வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் அனுபவிக்கிறார். ஆனால் அந்த சந்தோஷம் நீண்ட நாள் நீடிக்காமல், சேரனுக்கு கிடைக்கும் பதவி உயர்வும், அட்டகட்டிக்கு இடம் மாற்றமும் கிடைக்கிறது. தனிக்குடித்தனம் போகும் மருமகளுக்கு சேரனின் குடும்பம் சொல்லும் காரணம் அருமை. இந்த மாதிரிஒரு குடும்பம் கிடைக்காதா என ஏங்க வைக்கிறது. விக்ரமன் சாயல் லேசாக தென்படும் காட்சிகள் இது(லாலாலா இதில் இல்லை).

கூட்டுக் குடும்பத்தை விட்டு, மனைவியுடன் எந்த வித தொந்தரவும் இல்லாமல் தேனிலவு கொண்டாடலாம் என்று நினைக்கும் சேரனுக்கு அதிர்ச்சி. கூட்டுக் குடும்ப மகிழ்ச்சியை இழந்த அதிர்ச்சியில் மன நோய்க்கு கிட்டதட்ட ஆளாகிறார் சினேகா. இத்தனை வருஷம் தனிமையாத்தானே இருந்தாங்க இப்போ மட்டும் என்ன புதுசான்னு கேள்வி கேட்டா இயக்குனர் பதில் சொல்லமாட்டர். தனிமையை கழிக்க தன்னைச்சுற்றி வரும் சத்தங்களை ஒலிநாடாவில் பதித்து வைப்பதிலே ஆரம்பிக்கிறது தனிமையின் கொடுமை. வீட்டில் ஒவ்வொன்றாக பழுதாக்கி அதனை சரி செய்ய வருபவர்களிடம் பேசுவது அதீதம்.

அத்தையாக ஒரு முறை மட்டுமே வரும் அந்த அம்மணியின் நக்கல், திருமண ஏற்பாடுகள் எல்லாம் அருமை. சேரன், வருகிறார், பாடுகிறார் போகிறார். பெரிதாக சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லாதவாறு நடிப்புத்திறமை. கொஞ்சம் மாற்றிப்பாருங்களேன் சேரன்.

சினேகா இந்த படத்தின் முதுகெலும்பு. கூட்டுக் குடும்ப பந்தியில், உதடு கடித்து அவர் சாப்பாடு பரிமாறுகிற அழகு அருமை. அதே யாருமில்லாமல் இருக்கும் போது காபி பரிமாறுவது திகீர். இளவரசு, கஞ்சா கருப்பு கூட்டணிக் காட்சிகள் யதார்த்தமான கலகலப்பு. கருப்புக்கு பெண் பார்க்கும் சிறிது நேரம் சிரிப்பு மழை. டாக்டராக வரும் ஜெயராம் தெனாலி மாதிரியே ஒரு பாத்திரப்படைப்பு, சினேகாவுக்கு பிரச்சினை என்னவென்று சொல்கிறார். கூட்டுக் குடித்தின் வலிமையும், பெருமையும் சொல்லும் போது நமக்கு ஏதோ செய்கிறது.

எம்.எஸ். பிரபுவின் கேமரா அட்டகட்டியை அழகாக காட்டியுள்ளார், அதுவும் அந்த அருவி.. அப்பப்பா.. பாலச்சந்தர்'ன் ரயில் சிநேகத்திற்கு பிறகு அட்டகட்டியை சினிமாவில் பார்ப்பது மகிழ்ச்சி. மெதுவாக, எந்த வித திருப்பமும் இல்லாத திரைக்கதை படத்திற்கு பலவீனம்.

கரு பழனியப்பன் என்றாலே மாங்கு மாங்கென்று பாடல் தரும் வித்யாசாகர், இந்தப்படத்திலும் அதையே செய்துள்ளார். ஏமாற்றாத பாடல்களும், பாடல் வரிகளும். மெதுவா மெதுவா,நெஞ்சத்திலே பாடல்கள் இவ்வருடத்தின் நல்ல மெல்லிசைப் பாடலகள் வரிசையில் சேரும்.

கேனத்தனமான் வில்லன், அருவா வெட்டு, சண்டை, தொப்புள் கலாச்சாரம், பஞ்ச் டயலாக் என எந்தவிதமான மசாலத்தனமும் இல்லாத அழகான படம். இரண்டாவது பாதியில் சில இடங்களில் கொட்டாவி வருகிறது.

குடும்பத்தோட சென்று ஒரு முறை பார்க்கலாம்.

கீத்துக்கொட்டாயின் மதிப்பீடு. (42/100)

Thursday, January 17, 2008

பீமா - பொங்கல் பார்வை

இந்தப் பொங்கலுக்குப் பார்த்த படம் பீமா.


நடிகர்கள்: சீயான் விக்ரம், த்ரிஷா,பிரகாஷ் ராஜ்,ரகுவரன்,தலை வாசல் விஜய், ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் பலர்

இயக்கம்: லிங்குசாமி இசை: ஹாரீஸ் ஜெயராஜ். வசனம்: எஸ்.ராமகிருஷ்ணன். கேமரா: ராஜசேகர். சண்டை: கனல் கண்ணன்

கதை தமிழ் சினிமாவுக்கு பழக்கமான தாதாக்கள் சம்பந்தப் பட்ட விஷய்ம் தான். தளபதி,உல்லாசம் எனப் பழைய படங்களில் பார்த்த கதையின் தாக்கம் இருந்தாலும் அதைப் படமாக்கியிருக்கும் விதம் பீமாவை வேறுபடுத்தி காட்டுகிறது. சென்னை நகரத்து தாதா வாழ்க்கையை சினிமாவாக சொல்ல முயன்று இருக்கும் இன்னொரு படம் பீமா என்பதாகவே படம் நகர்கிறது. பீமா முழுக்க முழுக்க யதார்த்தமான சினிமா எனவும் சொல்ல முடியாது..முழுக்க முழுக்க மசாலா படம் எனவும் சொல்ல முடியாது. இரண்டும் சேர்ந்த ஒரு கோர்வை எனச் சொல்லலாம்.

கதையின் முக்கிய பாத்திரம் சின்னாவாக பிரகாஷ் ராஜ்... சின்னாவைச் சுற்றிய கதைப் பின்னப்பட்டுள்ளது. சின்னாவின் தொழில் எதிரி பெரியவராக ரகுவரன் ( கிட்டத்தட்ட தளபதியில் ஓம் பூரி ஏற்ற கலிவரதன் வேடத்தை நினைவுப் படுத்தும் வேடம்) சின்னாவின் நம்பிக்கைக்குரிய கையாளாக தலைவாசல் விஜய் ( தளபதியில் நாகேஷ் வருவாரே)..

இதில் விக்ரமுக்கு என்ன வேடம் என்ற கேள்வி கேட்பது புரிகிறது..சிறுவயதில் இருந்து சின்னாவின் ரசிகனாக வளர்ந்து பின்னாளில் சின்னாவீன் தளபதியாக உயரும் சேகர் என்னும் இளைஞனின் வேடத்தில் வருகிறார்.(தளபதியில் ரஜினி ஏற்ற சூர்யா வேடம் மாதிரி)

சேகரின் வரவுக்குப் பின் சின்னாவின் கை தொழில் ஓங்குகிறது..பெரியவரோடானப் பகை முற்றுகிறது. சின்னாக் கூட்டத்தில் சேகருக்கு கிடைக்கும் முக்கியத்துவம் சின்னாக் கூட்டத்தில் வெகுகாலமாக இருக்கும் இன்னொருத்தனை மனக்கலக்கத்தில் ஆழ்த்துகிறது.. அந்த குரோதம் தனிக்கிளையாக வளர்கிறது.

வெட்டுக் குத்து,அருவா, துப்பாக்கி என நகரும் கதையில் கொஞ்சம் சில்லென ஒரு காதலுக்கு த்ரிஷா. கோடம்பாக்கம் வகையானக் கண்டதும் காதல். விக்ரமைத் துரத்தி துரத்திக் காதலிக்கிறார் த்ரிஷா. எதற்கும் மயங்காத விக்ரம் ஒரு கட்டத்தில் திரையரங்கின் அரை வெளிச்சத்தில் த்ரிஷா மீது காதலாகி கசிந்துருகுகிறார்.

காதல் போதையில் தொழிலில் கவனம் சிதறி நிற்கும் விக்ரம்... இனி தன்னால் இப்படி இருக்க முடியாது என்றும் தான் தொழிலில் இருந்து விலகிக் கொள்வதாகவும் பிரகாஷ் ராஜிடம் சொல்லிவிட்டு த்ரிஷாவைக் கைப்பிடிக்க கிளம்புகிறார்.

விக்ரம் விலகலை நல்ல தருணம் எனக் கருதி பெரியவர் சின்னாவை வட்டம் போடவும்.. காவல் துறை கமிஷனர் ஆஷிஷ் வித்யார்த்தி சமயம் சரி என இரு கூட்டத்தையும் களை எடுக்க களத்தில் என்கவுண்டர் படையை இறக்கி விடுகிறார்.. அதைத் தொடரும் ரத்தக் களறியான க்ளைமேக்ஸ் கொஞ்சம் எதிர்பாராதது... இயக்குனருக்கு அட போட வைக்கிறது. பொதுவான ரசனை உள்ள மக்கள் ஏற்பார்களா என்பது கேள்விக்குரியது.

நடிப்பில் விகரமும் பிரகாஷ்ராஜ்க்கு பலத்தப் போட்டி... செல்லம் சின்னா வேடத்தை அதிக மெனக்கெடல் இன்றி பக்காவாகச் செய்திருக்கிறார்... வழக்கம் போல் பிரகாஷ்ராஜ் அசத்தியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்...

விக்ரம் நாயகனாக கட்டுமஸ்தாக வருகிறார், வித்தியாசம் காட்ட வேண்டும் என ஓட்ட வெட்டிய முடியும், தாடியும் என சத்யா கமலை நினைவுபடுத்தும் தோற்றத்தில் வருகிறார். ஆடுகிறார், பாடுகிறார், ஓடுகிறார், குதிக்கிறார், தாவுகிறார், நல்லா சண்டை போடுகிறார்.... சினிமாத்தனமும் யதார்த்தமும் கலந்த ஒரு ஹிரோ வேடத்தில் பொருந்தி போகிறார். ஆக்ஷன் ஹிரோவாக அதிக ஆர்பாட்டமின்றி ஜெயித்திருக்கிறார்.

த்ரிஷாவுக்கு அக்மார்க் கமர்ஷியல் நாயகி வேடம். கண்டதும் காதல்... பின் காதலைத் துரத்தல்... கனவு காணுதல்... ஆடல்..பாடல்... காதலில் தவித்தல்... என பார்மூலா ரோல்...க்ளைமேக்ஸில் அச்சோ சொல்லும் படியாக அவரது வேடம் சிறப்பு பெறுகிறது.மொத்தத்தில் த்ரிஷா அழகாய் வந்து போகிறார்.

ரகுவரனுக்குப் பல படங்களில் பார்த்த அதே வில்லன் வேடம். வழக்கம் போல் நன்றாகவே செய்து இருக்கிறார்.

ஆஷிஷ் வித்யார்த்திக்கும் வழக்கமான போலீஸ் அதிகாரி வேடம். சட்டத்து நல்லவரான ஒரு போலீஸ். கொஞ்சமே வருகிறார் கடமையாற்றுகிறார்.

தலைவாசல் விஜய்க்கு நாயகனில் டெல்லி கணேஷும், தளபதியில் நாகேஷும், நம்ம லிங்குசாமியின் முந்தைய ரன் படத்தில் விஜயனும் ஏற்றது போல ஒரு வேடம்.. நன்றாகச் செய்துள்ளார்.

ஹாரிஸின் இசையில் பாடல்கள் பிரபலமாகி வெகு நாட்கள் ஆகிவிட்டன.. பாடல்களை படமாக்கிய விதத்தில் பெரிதாய் புதுமைகள் எதுவும் இல்லை...

படம் நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்தது படத்தில் ஆங்காங்குத் தெரிகிறது. ரங்கு ரங்கம்மா பாடலில் விக்ரமின் ஹேர் ஸடைல் மாற்றத்தையும், கடைசி பாடலில் விக்ரமின் மெலிந்த தேகமும் படத்து கன்டினியூட்டி சொதப்பலுக்கு சாட்சிகள்.

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரீன் ஒரு பாடலுக்கு வந்து ஆட்டம் போடுகிறார். பிரகாஷ் ராஜ் ஜோடியாக வரும் மலையாள நாயகி அமைதியான தோற்றத்தில் வசிகரீக்கிறார்.

ராஜசேகரின் கேமராவும் கனல் கண்ணனின் சண்டைக் காட்சிகளும் பீமாவுக்கு பெரும் பலம்.

லிங்குசாமி பார்த்து பழக்கப்பட்ட காட்சிகளை மீண்டும் ஒரு முறை கோர்த்திருக்கிறார்..அதையே ஒரு எதிரபாராத முடிவோடு சொல்லியிருக்கிறார்.


பீமா - பழைய மொந்தையில் புதிய கள்.... ஆக்ஷன் படப் பிரியர்கள் ரசிக்க விஷ்யமுள்ள படம்.

Tuesday, January 8, 2008

The Bucket List

மரணம் குறித்தான பயம் எப்போதும் அடிமனதில் குடிகொண்டிருக்கிறது. அதிலும் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நாட்களில் இதுநாள் வரை கடந்து வந்த பாதைகளும் மரணத்திற்கு பிறகான புதிரும் மனதை அலைக்கழித்தபடியே இருக்கின்றன. பழைய நினைவுகளும் தவறவிட்ட வாய்ப்புகளும் நிராசைகளும் செய்ய நினைத்திருக்கும் காரியங்களும் வயோதிகத்தை கொடிய நோயாக்கிவிடுகின்றன. இறப்பதற்கு முன் அடைந்துவிடக்கூடியவற்றை மனம் பட்டியலிட்டபடி இருக்கிறது. மனித வாழ்க்கை குறித்த தத்துவார்த்தமான சிந்தனைகளும் அதே நேரத்தில் எஞ்சியிருக்கும் நாட்களில் மனநிறைவோடு வாழ்ந்து மரணத்தை திருப்தியுடன் எதிர்கொள்வது குறித்தான எண்ணங்களும் முட்டி மோதுகின்றன. மரணம் நெருங்கியதை உணர்ந்ததும் தன் சுற்றத்தாருக்கும் உறவினருக்காகவுமே காலமெல்லாம் உழைத்தவர்கள் தங்களுக்காகவும், சுயநலமாக தனக்காக மட்டுமே வாழ்ந்தவர்கள் அடுத்தவர்க்காகவும் வாழ ஆரம்பிக்கிறார்கள். மரணம் இது குறித்தான பிரக்ஞை எதுவுமின்றி அவர்களை அரவணைத்து சென்றுவிடுகிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரண தேதி குறிக்கப்பட்ட எட்வர்ட் கோல்(Edward Cole), கார்ட்டர் சேம்பர்ஸ்(Carter Chambers) என்ற இரண்டு முதியவர்களின் வாழ்வில் கடைசி சில மாதங்களை பதிவாக்கியிருக்கும் திரைப்படம் The Bucket List.



கார்ட்டர் சேம்பர்ஸ் கார் மெக்கானிக். அன்பான மனைவி. மூன்று பிள்ளைகள். புகை பிடிக்கும் பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். எட்வர்ட் கோல் மருத்துவமனைகள் நடத்திவரும் கோடீஸ்வரர். நான்கு முறை மணமுறிந்து தன்னந்தனியாக வாழ்பவர். தன்னுடைய மருத்துவமனைகளில் ஒவ்வொரு அறையிலும் இரண்டு படுக்கைகள் அமைத்து பணம் பார்ப்பவர். இவரையும் புற்றுநோய் தாக்க கார்ட்டரும் எட்வர்ட்டும் மருத்துவமனையில் ஒரே அறையில் தங்க வைக்கப்படுகிறார்கள். உயிர்கொல்லி புற்றுநோயால் இருவருக்குமே சில மாதங்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறது.

கார்ட்டர் தன் மரணத்திற்கு முன் நிறைவேற்ற வேண்டிய ஆசைகளை பட்டியலிடுகிறார்.(Bucket List;'Kick the bucket'). நிறைவேற்ற இயலாதவற்றையும் தன் மன திருப்திக்காகப் பட்டியலிடுகிறார். அதைப் பார்த்துவிடும் எட்வர்ட் இருவருமாக சேர்ந்து அந்த பட்டியலில் உள்ளவற்றை செய்துவிட வேண்டுமென்கிறார். தன் பங்கிற்கு தன்னுடைய ஆசைகளையும் பட்டியலிடுகிறார். முதலில் மறுக்கும் கார்ட்டர் எட்வர்ட்டின் வற்புறுத்தலால் ஒத்துக்கொள்ள, கார்ட்டர் மனைவியின் எதிர்ப்பையும் மீறி இருவரும் மருத்துவமனையில் இருந்து கிளம்புகிறார்கள். விமானத்திலிருந்து குதிப்பது, அதிவேகமாக கார் ஓட்டுவது, பல்வேறு நாடுகளைச் சுற்றித் திரிவது, இமாலயத்தைப் பார்ப்பது, முன்பின் தெரியாத அந்நியருக்கு உதவுவது, கண்ணில் நீர் வரும்வரை சிரிப்பதென விருப்ப பட்டியலை தயாரித்து ஒவ்வொன்றாக நிறைவேற்றுகிறார்கள். விருப்பப் பட்டியல் முடியும் நிலையில் குறுகிய நாட்களில் தங்களிடையே உருவாகியிருக்கும் நட்பை உணர்கிறார்கள். இறக்கும் முன் மனதுக்கு நிறைவாக வாழ்ந்த நாட்களை எண்ணி மகிழ்கிறார்கள். மரணிக்கிறார்கள்.



எண்ணங்களிலும் வாழ்க்கை முறையிலும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு மனிதர்கள் மரணத்தால் ஒன்றுபடுகிறார்கள். 'வண்டிச் சக்கரம் போல் காலம் சுழன்றுகொண்டேயிருக்கிறது அவரவர் வாழ்ந்து இறந்துகொண்டிருக்கிறோம்' என்ற எண்ணமுடைய எட்வர்ட்டும் 'நம் வாழ்வின் அளவீடு அடுத்தவர் வாழ்வில் நாம் ஏற்படுத்தும் பங்களிப்பை வைத்தே' எனும் கார்ட்டரும் பயணத்தினூடே தங்களது கடந்த கால வாழ்க்கை குறித்த உரையாடல்களும் வாழ்க்கையைக் குறித்தும் மரணம் குறிததுமான எண்ணப் பகிர்வுகளாகவும் திரைப்படம் நகர்கிறது.

மரணத்திற்காகக் காத்திருக்கும் இரண்டு வயோதிகர்களின் கதை என்றாலும் மரணத்தின் வாசனையில்லாமல் திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு. தத்துவார்த்தமான உரையாடல்களிலும் மெல்லிய நகைச்சுவை நிறைந்திருக்கிறது. குறிப்பாக எட்வர்ட்டுக்கும் அவரது உதவியாளர் தாமஸுக்குமான நக்கல் நையாண்டி உரையாடல்கள் அட்டகாசம்.

எட்வர்ட் கோல்'லாக ஜாக் நிக்கல்சன்(Jack Nicholson). கார்ட்டர் சேம்பர்ஸாக மார்கன் ஃப்ரீமேன்(Morgan Freeman). இரண்டு மிகச் சிறந்த நடிகர்கள் திரைப்படத்தை தாங்கிப் பிடிக்கிறார்கள். சொல்லப்போனால் படத்தைப் பார்க்க ஆரம்பித்ததே இவ்விருவருக்காகத்தான். இரண்டாம் பாதியில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் இவ்விருவரின் முக பாவங்களும் வசன உச்சரிப்பும் அதை மறக்கச் செய்கின்றன.


The Bucket List - வாழ்க்கை குறித்தும் வயோதிகம் குறித்தும் மரணம் குறித்துமான எண்ணங்களுக்காகவும் சில புரிதல்களுக்காகவும்.