Friday, October 26, 2007

Eternal Sunshine of the Spotless Mind

நீரைப் போல்
நினைவுகளைப் போல்
சில நிமிடங்களையும்
தேக்கிக் கொள்ள முடிந்தால்......

பருவங்களைப் போன்றே
சில தருணங்களும்
மீண்டும் வரக்கூடுமென்றால்...

வாழ்வதற்கான வாய்ப்பு
மற்றுமொரு முறை
வழங்கப்படுமானால்....

அப்போதேனும்
மிகச் சரியாய் வாழ
முயன்று பார்க்கலாம்தான்..

என்ன செய்ய?
அடித்துத் திருத்தி
மீண்டும் எழுத
கவிதையில்லை வாழ்க்கை!

-காயத்ரி

வாழ்க்கையையும் அடித்து எழுத முடியுமென்றால்? நினைவுகளை நம்மால் அழிக்க முடியுமானால்? மீண்டும் வாழ்வதற்கான வாய்ப்பு கிடைத்தால்?

ஜோயலும் க்ளெமென்டைனும் இருவேறு துருவங்கள். இருவரும் தற்செயலாக சந்தித்து காதல் வயப்படுகின்றனர். சீராகச் செல்லும் அவர்களது உறவில் சிறு சிறு ஊடல்கள். சண்டைகள். எதற்குமே எளிதில் உணர்ச்சி வசப்படும் க்ளெமென்டைன் ஜோயலுடனான உறவைத் துறக்க நினைக்கிறாள். லகுனா(Lacuna Inc.) என்ற நிறுவனம் மூளையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நினைவுகளை மட்டும் அழிப்பதை அறிந்து அவ்ர்கள் மூலமாக ஜோயல் குறித்த நினைவுகளை அழித்துவிடுகிறாள்.

இதை நண்பர்கள் மூலம் அறியும் ஜோயல் தானும் அதே நிறுவனத்தின் மூலமாக க்ளெம்ன்டைனின் நினைவுகளை அழிக்கச் செல்கிறான். தற்காலத்தில் இருந்து ஆரம்பித்து கடந்த கால நினைவுகள் அழிக்கப்படுகின்றன. அவன் க்ளெம்ன்டைனுடன் கழித்த இனிமையான பொழுதுகள் அவன் ஆழ்மனதிற்கு தெரிகின்றது. அவன் க்ளெம்ன்டைனை முழுமையாக இழக்கப் போவதை உணர்கிறான். அவளின் நினைவுகளை அழியாமல் காப்பதற்கு முயல்கிறான். அவன் அதில் வென்றானா, கடந்த கால நினைவுகள் அழிந்த க்ளெம்ன்டைனும் ஜோயலும் மீண்டும் இணைவார்களா என்பதை வெள்ளித்திரையில் காண்க. இந்த படத்தின் முழுக்கதையும் கூறிவிட்டால் படம் பார்க்கும்போது அடுத்தடுத்த காட்சிகள் தரும் ஆச்சரியங்களைத் தவறவிடக்கூடும்.

படத்தில் ஜோயல்-க்ளெமென்டைன் காதலைத் தவிர லகுனா நிறுவனத்தின் தலைமை மருத்துவருக்கும் அதில் பணிபுரியும் மேரிக்கும் இடையேயான உறவு ஒரு சிறுகதை. இது சற்றும் எதிர்பாராத நேரத்தில் திரைக்கதையில் ஒரு திருப்பத்தைக் கொண்டு வரும் கிளைக்கதை. அதேபோல் க்ளெம்ன்டைனின் நினைவுகளை அழித்த பேட்ரிக் அவள்பால் ஈர்க்கப்பட்டு க்ளெமென்டைன் லகுனா நிறுவனத்திடம் ஒப்படைத்த ஜோயலின் அன்பளிப்புகளைக் கொண்டே அவளது அன்பைப் பெற முயற்சிப்பது சுவாரசியம்.

கதாநாயகன் ஜோயல் ஆக ஜிம் கேரி(Jim Carrey) நடித்திருக்கிறார். ஜிம் கேரியின் வழக்கமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் இருந்து வெகுவாக மாறுபட்ட ஜோயல் கதாபாத்திரத்தில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். ஆரம்பக் காட்சிகளில் வாழ்க்கையில் விரக்தியடைந்த இளைஞனாகவும் நினைவுகள் அழிக்கப்படும்போது அதை தடுத்து நிறுத்த துடிக்கும்போதும் ஆழ்மனதின் மூலமாக க்ளெமென்டைனின் நினைவுகளை அசைபோடும்போதும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

கேட் வின்ஸ்லெட்(Kate Winslet) க்ளெம்ன்டைனாக நடித்திருக்கிறார். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு வேகமாக பேசுவதிலும் முகபாவங்களை சட்டென மாற்றுவதிலும் சிறப்பாக செய்திருக்கிறார். இந்த படத்திற்காக சிறந்த நடிக்கைக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். Kirsten Dunst, Elijah Wood, Mark Ruffalo ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றது. காலத்தில் முன்பின்னாக செல்லும் காட்சியமைப்புகள் பார்வையாளர்களுக்கு குழப்பம் ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளன. க்ளெம்ன்டைன் கதாபாத்திரத்தின் மனநிலைக்கு ஏற்றவாறு அவர் தலைமுடி நிறத்தையும் மாற்றிக்கொள்வது போல் அமைத்திருப்பது காட்சி நட்க்கும் காலத்தை எளிதாக அறிய உதவுகிறது. கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் திரைக்கதையில் அடுத்தடுத்து ஏற்படும் திருப்பங்களும் நம்மைப் படத்துடன் ஒன்றவைக்கின்றன.

ஒவ்வொரு முறையும் இந்த திரைப்படம் குறித்து எழுத அமரும்பொழுது இந்த படம் குறித்த நினைவுகள் கட்டிப்போட்டுவிடுகின்றன. நினைவுகளை அழிப்பது குறித்தும், இந்த படத்தின் கதாபாத்திரங்கள் குறித்தும் காதல் ஏற்படுத்தும் ஆச்சரியங்கள் குறித்துமான சிந்தனைகள் மனதை ஆட்கொள்கின்றன. உலகில் யாராலும் எளிதில் தீர்க்க முடியாத புதிர் மனித மனம். அதை விடக் கடினமான புதிர் காதல் தான் இல்லையா...

Tuesday, October 9, 2007

கற்றது தமிழ் - தமிழ் எம்.ஏ.

இரண்டாயிரம் வருடம் பழமையான தமிழ் மொழி படித்த எனக்கு இரண்டாயிரம் சம்பளம்.. இருபத்து அஞ்சு வருடத்துக்கு முன்னாடி வந்த கம்ப்யூட்டர் படித்த உனக்கு இரண்டு லட்சம் சம்பளமா?

கற்றது தமிழ் இயக்குனர் ராமின் கேள்வி இது? கேள்வியில் ஒளிந்திருப்பது ஆற்றாமையா..இயலாமையா...பொறாமையா என்பதை ரசிகர்களின் பார்வைக்கெ விட்டு விடுகிறேன்..

ஜீவா..தமிழ் திரையுலகின் புதிய தலைமுறை நடிகர்களில் கொஞ்சம் பரீச்சதார்த்தமான முயற்சிகளை மேற்கொள்ளும் நடிகர்..அவரது நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் கற்றது தமிழ்..

பிரபாகர் என்ற தமிழ் படித்த முதுகலைப் பட்டதாரியின் துயரம் நிறைந்த வாழ்க்கையை திரையில் இயக்குனர் யதார்த்தமாய் சொல்ல முயன்றுள்ளார்.

அகால மரணங்களின் ஒரு மொத்தத் தொகுப்பாய் பிரபாகரின் சிறுவயது கழிகிறது...அதனால் மனம் பாதிக்கப்படும் பிரபாகரின் பாலைவன வாழ்க்கையில் பூக்கும் ஒரே வசந்தம் அவன் சிறு வயது தோழி ஆனந்தி.. ஆனந்தியின் வாழ்க்கையிலும் ஆனந்தமில்லை.. அவ்வப்போது வந்துப் போகும் சந்தோசச் சாரல் பிரபாகர் மட்டுமே..

பிரபாகர் தமிழ் படிக்கிறான்... தமிழின் மீதான பாசமா..பற்றா... அழுத்தமானக் காரணம் இல்லை.. அவனை ஆளாக்கும் தமிழய்யாவின் மீது கொண்ட பற்று எனக் கொள்ளலாம்..

தமிழ் படித்தும் பிரபாகரின் துயரங்கள் தீராது நீள்கிறது..இதனால் பிரபாகரின் மனபிறழ்வு அதிகரிக்கிறது..

அவ்வபோது பிரபாகரின் வாழ்க்கையில் வந்துப் போகும் ஆனந்தியைத் தன் வசப்படுத்த பிரபாகர் தனக்குள்ளே போராடுகிறான்.. எல்லாப் போராட்டங்களும் தோல்வி என்னும் ஒரே புள்ளியில் கொண்டு போய் குவிக்க...ஒரு கட்டத்தில் போலீஸிடம் சிக்கி தெருவில் அடிபடுகிறான்.. சிறைக்குச் செல்கிறான்...தற்கொலைக்கு முயல்கிறான்.. தன் குழப்பங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் விடைத் தேடி தனக்குள் குமுறுகிறான்..சந்தர்ப்ப வசத்தால் கொலை செய்யும் பிரபாகர்.. தொடர்ந்து கொலைகள் செய்வதில் ஆனந்தம் கொள்கிறான்....

ஜீவா.. புதிய தலைமுறை தமிழ் நடிகர்களில் பரிச்சார்த்தமான முயற்சிகளில் உற்சாகமாய் ஈடுபடும் ஒரு நடிகர்.. படத்தில் மெனக்கெட்டிருக்கிறார். அதன் பலன் நன்றாகவே திரையில் தெரிகிறது..அவரது முந்தைய படங்களில் ஒன்றான ராமில் அவர் ஏற்று நடித்த பாத்திரத்தின் சாயல் கொண்ட பாத்திரமே இந்தப் படத்திலும்.. ஆனால் நன்றாகவே மாறுபடுத்திக் காட்டுகிறார்..

இப்படி மனக்குழப்பங்களின் உச்சத்தில் வாழ்க்கையை நகர்த்தும் இளைஞன் பிரபாகரின் மொத்தக் கோபமும் ஐடி பிபிஓ மக்கள் மீது திரும்புகிறது.. இப்போது பதிவின் முதல் வரியைத் திரும்பப் படிங்க...

ஆனந்தியாக புதுமுகம் அஞ்சலி.. குழந்தைத் தனமான அழகு...அவ்வபோது வந்து போகிறார்..நல்லதொரு தேர்வு.. அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு ஜீவாவிடம் அவர் நிஜமாலும் தான் சொல்லுறீயா.. எனக் கேடபது... ம்ம்ம்ம் என ஜீவா தலையாட்டுவது ரசனைக்குரிய காட்சிகள்.

தமிழ் வாத்தியாராக வரும் அழகம்பெருமாள் நெல்லைச் சீமைத் தமிழை வெளுத்து வாங்குகிறார். நல்ல தேர்வு.

காமெடிக்கு கருணாஸ்...ஜீவாவின் சொந்தக் கதையைக் கேட்டு வீடியோவில் பதிய ஜீவாவால் கடத்திவரப் பட்ட வீடியோகிராபராய் வருகிறார்..கருணாஸின் டைமிங் கமெண்ட்கள் புன்னகைக்க வைக்கின்றன.. அதிலும் ஜீவா அவரிடம் எதாவது புரியுதான்னு அடிக்கடி கேட்க அதற்கு கருணாஸ் கொடுக்கும் பதில்கள் கிட்டத்தட்ட தியேட்டரில் இருக்கும் ஆடியன்சின் ரெஸ்பான்சை ஒத்துப் போகிறது..

யுவனின் பாடல்களில் குறிப்பாக இளையராஜா பாடும் பாடல் ரசிக்க வைக்கிறது.. பின்னணி இசை ஓ.கே..

கேமரா பாராட்ட வேண்டிய விசயம்.. படம் பல இடங்களுக்கு பயணிக்க கண்களுக்கு இதமாக அந்த பயணம் அமையும் படி கேமராப் பார்த்துக் கொண்டிருக்கிறது... அசத்தல்.

இயக்குனர் ராம் அவர்களுக்கு... கற்றது தமிழ் மூலம் நீங்கள் சொல்ல வந்தது என்ன? பிரபாகரின் சொந்தச் சோகங்களையா? பிரபாகர் - ஆனந்தியின் காதலையா? இல்லை ஐடி...பிபிஓ மக்கள் மீது உங்களுக்கு எழுந்துள்ள அடிப்படையற்ற கோபத்தையா? புரியவில்லை...

ஐடி, பிபிஓ மக்களைக் குறிவைத்து வைக்கப்பட்டிருக்கும் நையாண்டி காட்சிகளுக்கு மற்ற துறை மக்களின் கைத்தட்டல்கள் ஒரு வேளை கிடைக்கலாம்...

மொத்தத்தில் கற்றது தமிழ் - சிலபஸில் குழப்பம்

படம் முடிஞ்சு வெளியே வரும் போது காதில் விழுந்தது... ராப்பகலா ஒரு வாரம் பொட்டியத் தட்டிகிட்டு உக்காந்து இருந்துட்டு வீக் என்ட்ல்ல ரிலாக்ஸா படம் போலாம்ன்னு வந்தா... மாப்பி இவன் போதைக்கு நம்மளை ஊறுகாய் ஆக்கிட்டான்டா...

Tuesday, October 2, 2007

12 Angry Men

ஒரு கொலை வழக்கு. குற்றம் சாட்டப்பட்டுள்ள 20 வயது இளைஞன். 12 ஜூரிகள். பத்துக்கு பத்து அளவில் ஒரு அறை. இதை வைத்து மிகச் சிறப்பாக சுவாரசியமாக எடுக்கப்பட்ட படம் 12 Angry Men.

ஒரு ஸ்பானிய இளைஞன் தன் தந்தையைக் கொன்றதாக கைது செய்யப்படுகிறான். சாட்சிகளும் ஆதாரங்களும் அவனுக்கெதிராக இருக்கின்றன. அவன் தொலைத்ததாக சொல்லும் கத்தி கொலை நடந்த இடத்தில் கிடைக்கிறது. ஆனால் அவனோ குற்றத்தை மறுக்கிறான். வழக்கு முடிந்ததும் நீதிபதி 12 நடுவர்களை வழக்கு குறித்து முடிவெடுக்கச் சொல்கிறார். குற்றவாளியென நடுவர்கள் முடிவு செய்தால் அந்த இளைஞனுக்கு மரண தண்டனை உறுதி. நடுவர்கள் அனைவரும் கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்காக தனிமைப்படுத்தப்பட்ட ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

சாட்சிகள் அந்த இளைஞனுக்கு எதிராக இருப்பதால் பதினோரு நடுவர்களுமே அவன் குற்றவாளி என ஏகமனதாக முடிவெடுக்கின்றனர். ஆனால் ஒருவர் மட்டும் சந்தேகத்திற்கு இடமிருப்பதாகவும் அவன் நிரபராதியாகக் கூட இருக்கலாம் என்றும் கூறுகிறார். வழக்கு விசாரனையில் தனக்கு திருப்தியில்லை எனவும் அந்த இளைஞன் தவறுதலாக தண்டிக்கப்படக் கூடாதென்றும் கூறுகிறார். எந்த முன்முடிவும் இல்லாமல் நடுவர்கள் வழக்கு குறித்து் தீர ஆராய வேண்டுமென்கிறார்.மற்ற நடுவர்கள் விவாதிப்பது நேர விரயம் எனக் கூறி மறுக்கின்றனர். அந்த இளைஞன் கொலை செய்தது குறித்து தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்கின்றனர். அவரோ அந்த இளைஞன் சார்பான வாதங்களையும் கருத்தில் கொள்ள வேண்டுமெனக் கூறி அவற்றை முன் வைக்கிறார். விவாதத்தினிடையே நடுவர்களிடையே வாக்குவாதங்களும் சிறு மோதல்களும் நிகழ்கின்றன. வழக்கு குறித்து பேசப் பேச ஒவ்வொரு நடுவர்களாக மனதை மாற்றிக் கொள்கின்றனர். இறுதியில் அவன் குற்றவாளியென நிருபிக்க போதிய ஆதாரங்கள் இல்லையென அந்த இளைஞனை விடுதலை செய்ய முடிவெடுக்கின்றனர்.

இந்த எளிமையான கதையின் பலமே நடுவர்களாக வரும் 12 கதாபாத்திரங்கள்தான். சமூகத்தின் வெவ்வேறு நிலைகளிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த 12 கதாபாத்திரங்களும் வெகு சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. நடுவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களும் அவர்களின் பின்புலமும் இந்த வழக்கு குறித்த அவர்களது பார்வையை எப்படி மாற்றுகிறது என்பதை மிகச் சிறப்பாக படம்பிடித்திருப்பார்கள். வெற்றிகரமான தொழிலதிபர் முதல் வாழ்வில் விரக்தியின் உச்சத்திலிருக்கும் ஏழை வரை, இனவெறியாளன் முதல் மிகவும் கனிவான கதாபாத்திரம் வரை என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு தனி அடையாளம் கொடுக்கப்பட்டிருக்கும். வழக்கு குறித்த விவாதத்தினிடையே நடுவர்களுக்குள் தனிப்பட்ட மோதல்களும் அவர்களின் குணாதிசயங்களுக்கு ஏற்ப நடுவர்கள் குழுக்களாக சார்புநிலை எடுப்பதும் மிக இயல்பாக படம் பிடிக்கப்பட்டிருக்கும்.

அதே போல் கூர்மையான வசனங்கள் படத்தின் பெரும்பலம். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்ப அவர்களுடைய பேச்சு வழக்கிலேயே வசனங்கள் அமைந்திருக்கும். அந்த இளைஞனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் நடக்கும் விவாதங்களில் நம்மையே ஒரு சார்பை எடுக்க வைக்கும் அளவுக்கு வசனங்களும் காட்சியமைப்புகளும் கூர்மையாக இருக்கும். நடுவர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் மிகச் சிறப்பாக தங்கள் கதாபாத்திரங்களை உள்வாங்கி நடித்திருப்பார்கள்.

1957-இல் வந்த இந்த திரைப்படம் பல மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் திரையிடப்படுகின்றது. இரண்டு மணி நேரம் ஒரே அறையில் 12 பேர் பேசிக்கொண்டிருப்பதை உங்களால் பார்க்க முடியுமென்றால் இந்த படம் கண்டிப்பாக தவற விடக்கூடாத ஒன்று.