Saturday, June 28, 2008

Wanted

ஒரு ஆக்ஷன் திரைப்படம் எடுக்க தேவையானவை:

1. இருபதில் இருந்து முப்பது வயதுக்குள் ஒரு நாயகன்
- வாழ்க்கையில் விரக்தியடைந்து வேலையில் பிரச்சனைகளுடன், காதலியுடன் சண்டையிட்டுக் கொண்டு, நம்பிக்கை துரோகம் செய்யும் நண்பனுடன்

2. ஒரு அதிசய சக்தி. அத்துடன் பல நூற்றாண்டுகளாக அந்த சக்தியை ரகசியமாகப் பாதுகாத்து வரும் ஒரு குழு.

3. அக்குழுவில் அழகான நாயகி. குழுத் தலைவராக வயதான ஒரு புகழ்பெற்ற நடிகர்

4. குழுவிலிருந்து பிரிந்து செல்லும் வில்லன்

5. நாயகனைக் குழுவில் சேர்த்தல்/பயிற்சி அளித்தல்

6. அந்த காட்சிகளில் நகைச்சுவை சேர்க்க குழுவில் இரண்டு கதாபாத்திரங்கள்.

7. நாயகன் வில்லனுடனும் அவன் அடியாட்களுடனும் சண்டை/கார்,ரயில்,விமான சேஸிங்

8. இடையிடையே ஸ்லோ மோஷனில் செண்டிமெண்ட் காட்சிகள்

9. கடுமையான சண்டைக்கிடையில் நாயகனுக்கு முத்தமிடும் நாயகி. அங்கே ஒரு ஃப்ரீஸ்(Freeze).

10. இறுதியில் வில்லனைக் கொல்லும் நாயகன். கதம் கதம்!

Wanted திரைப்படமும் கிட்டத்தட்ட இதே ஃபார்முலாவுடன் வெளிவந்துள்ள அக்மார்க் ஆக்ஷன் திரைப்படம். நாயகன் வெஸ்லி(John McAvoy) வேலையிடத்திலும் காதலியுடனுமான பிரச்சனைகளில் விரக்தியில் இருக்கிறான். தான் யார், தன்னுடைய குறிக்கோள் என்ன என்பதில் குழப்பத்தில் இருக்கிறான். திடீரென அவனைக் கொல்ல வரும் ஆசாமியிடமிருந்து
ஃபாக்ஸ்(Angelina Jolie) என்ற பெண்ணால் காப்பாற்றப்பட்டு ஒரு ரகசிய குழுவினரிடம் கொண்டு செல்லப்படுகிறான்.

அது பல நூற்றாண்டுகளாக எதிர்காலத்தில் கொலை செய்யப்ப்போகும் ஒருவரைக் கண்டுபிடித்து கொன்று வரும் நல்ல கொலையாளிகளைக் கொண்ட குழு. அதன் தலைவராக மார்கன் ஃப்ரீமேன்( Morgan Freeman). அவர்கள் எதிர்காலக் கொலையாளிகளைக் கண்டுபிடிப்பது துணி நெய்யும் இயந்திரம் மூலமாக. முன் எப்போதோ வடிவமைக்கப்பட்ட அந்த இயந்திரம் கொலையாளிகளின் பெயர்களை முன்கூட்டியே (விதியாம்) கண்டுபிடித்து துணியில் பைனரி கோட் மூலம் நெய்கிறது. அதைப் படித்து எதிர்கால கொலையாளிகளை இக்குழுவினர் கொலை செய்கின்றனர்.

வெஸ்லியின் தந்தையையும் அந்த குழுவில் இருந்தவர். அவரைக் கொன்ற வில்லனைக் கொல்வதற்காக வெஸ்லியைத் தேர்ந்தெடுக்கின்றனர். அவனுக்குக் கடுமையான பயிற்சியளித்து தயார் செய்கின்றனர். வெஸ்லி அந்த வில்லனைக் கொலை செய்யும் போது ஒரு ட்விஸ்ட். அந்த கொலையாளி யார், அந்த மெஷின் ஒழுங்காகத் தான் வேலை செய்கிறதா என்று மேற்கொண்டு திருப்புமுனைகள். இறுதியில் வழக்கம் போல் நாயகனுக்கு வெற்றி.

சேஸிங் காட்சிகளும் ஆக்ஷன் காட்சிகளும் நன்றாகப் படமாக்கப்பட்டுள்ளன. ஆனால் கதையில் புதிதாக ஒன்றுமில்லை. ஆஞ்சலினா ஜூலியும் மார்கன் ஃப்ரீமேனும் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். கதாநாயகனாக நடித்துள்ள ஜான் மெக்அவாய் The Last King of Scotland திரைப்படத்தில் அருமையாக நடித்திருந்தவர். இத்திரைப்படத்தில் நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு குறைவு தானென்றாலும் சில காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார்.


இப்போதெல்லாம் படத்தை விட டிரெயிலர்கள் நன்றாக இருக்கிறது.இத்திரைப்படத்திற்கும் டிரெயிலரைப் பார்த்து சிறிது எதிர்பார்ப்புடன் சென்றதால் ஏமாற்றமே. சில நகைச்சுவைக் காட்சிகளும் சண்டை/சேஸிங் காட்சிகளும் ரசிக்கும்படி இருந்தாலும் மொக்கையான கதையாலும் சில காட்சிகளாலும் சொதப்பிவிட்டது. கதையில் பல்வேறு திருப்பங்கள் தருவதாக ஏகப்பட்ட குளறுபடிகள்.

Wanted - ஆக்ஷன் திரைப்பட ரசிகர்களுக்கு.

Friday, June 13, 2008

உலகநாயகனின் "தசாவதாரம்"

ஹாலிவுட் தரத்துக்கு எடுக்கப்பட்ட தமிழ் படம். தமிழ் நாட்டில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம். இந்த இரண்டும் சரிதான் என தசாவதாரம் பார்த்ததும் முதலில் தோன்றியது. இன்னொரு விசயத்தை குறிப்பிட வேண்டுமென்றால் படத்தின் ஆரம்பத்தில் கமலஹாசனை காட்டும் பொழுது உலக மேப்பை சென்னையிலிருந்து மையப்படுத்தி கமலின் கண்களில் தெரியும்படி செய்துருப்பர்.அது என்னோவோ உண்மை என்பது போல் தான் படத்தின் இறுதியில் தெரிந்தது. ஒட்டு மொத்த படத்துக்கும் கமல் என்ற மையத்தின் பிரமாண்டமான உழைப்பும்,அயராத உழைப்பும்,சுயநலமான!! உழைப்பும்தான் தெரிகிறது.படத்தின் துவக்க காட்சியில் கமலின் பிண்ணனி குரலில் நம்மை பனிரெண்டாம் நூற்றாண்டுக்கு கூட்டி செல்கிறது. சோழனின் வழித்தோன்றல்களில் ஒரு மன்னனின் வைஷ்ணவ எதிர்ப்பின் விளைவாக வைஷ்ணவ கோவில்கள் சிதைக்கப்பட்டும் விஷ்ணு சிலைகள் கடலில் இடப்படுகிறது.இந்த செயலை எதிர்க்கும் ரங்கராஜன் நம்பியாக முதலாவது அவதாரம் எடுக்கிறார் கமல்.கதையின் ஆரம்பமும் அங்கேதான் ஆரம்பிக்கிறது. மன்னரின் வைஷ்ணவ துவேஷத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாட்சரத்தை உச்சரிக்க மறுத்து விஷ்ணு சிலையோடு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுகடலில் வீசப்படுகிறார். இந்நிகழ்ச்சி தன் கண்களுக்கெதிரே நடப்பது கண்டு தன் தாலியை மன்னரை நோக்கி எறிந்து விட்டு மன்னர் பீடத்தின் இரு மருங்கிலும் இருக்கும் சிங்கதலை கல்தூண்'லில் முட்டி உயிரை மாய்த்துக்கொள்கிறார் அசின்.

நடுகடலின் ஆழத்திலிருந்து கேமரா அமெரிக்காவிலிருக்கும் பயோ-லேப்'லில் வந்து சேர்ந்து கோவிந்தராஜன் என்ற கமலின் இரண்டாவது அவதாரத்தை அறிமுகப்படுத்துகிறது.நுண்ணுயிர் கிருமி ஆயுதங்களுக்கு உண்டான ஆராய்ச்சியில் ஈடுப்பட்டிருக்கும் கமலின் சக ஊழியை ஒருவரின் கவனகுறைவால் அந்த ஆராய்ச்சி குப்பியை தின்று கொடுர மரணமடைகிறது கமலின் வளர்ப்புகுரங்கு. அந்த காட்சியின் தீவிரம் படத்தின் இறுதியிலும் தெரிய வைப்பதற்கான முன்னோட்டமாகவும் கொள்ளலாம். தன்னுடைய மேலதிகாரி இந்த கொடிய கிருமி ஆயுதத்தை எதிரிகளிடம் விற்பதற்கான முயற்சியில் ஈடுப்படுவதை அறிந்த கமல் அதை முறியடித்து இன்னொரு ஆராய்ச்சி குப்பி(வயல்)யை தன்னுடன் எடுத்து வருகிறார். ஆராய்ச்சியாளர் கமலிடமிருந்து அந்த குப்பியை கைப்பற்ற எதிரிகளால் அனுப்பி வைக்கப்படும் அமெரிக்க கதாபாத்திரமாய் முன்றாம் அவதாரமெடுக்கிறார்.

குப்பி தவறுதலாக இந்தியாவிற்கு அனுப்பப்படும் வான்வெளி கொரியரில் கமலும் பாஸ்போர்ட் - விசா இல்லமால் இந்தியாவுக்கு பயணிக்கிறார். அவரை துரத்தி வரும் கடமையில் தமிழ் மொழிப்பெயர்ப்பு உதவிகளுக்கு அவசர மனைவி மல்லிகாவுடன் இந்தியாவுக்கு பயணிக்கிறார் வில்லன் கமல். விமானத்திலே ஆராய்ச்சியாளர் கமலை தீவிரவாதியாக அடையாளப்படுத்தி அவரை கைது செய்து விசாரணை அதிகாரி கொல்டியாக நான்காம் அவதாரமெடுக்கிறார். கொல்டியின் அறிமுக காட்சியிலே கலகலப்பு மூட்டுகிறார். கோவிந்தை விமான நிலையத்தில் வைத்து விசாரணை செய்து கொண்டிருக்கும் பொழுது பஞ்சாபி பாடகர் அவதார் சிங் தமிழகத்துக்கு வருவதாக ஐந்தாம் அவதாரமெடுக்கிறார். அவருக்கு ஜோடியாக ஜெயப்பிரதா. பாடகர் கமலை வைத்து தமிழ் சினிமாவின் தலையெழுத்துக்களில் ஒன்றான கேன்சர் வியாதியும் இந்த படத்திலொரு அவதாரமாய் இருக்கிறது. இதற்கிடையில் அமெரிக்காவில் விஞ்ஞானி கமலின் சக ஊழியர் மற்றும் அவனது மனைவிய கொலை செய்தது விஞ்ஞானி கமல்தான் என நினைத்து அவரை பழிவாங்கும் எண்ணத்தில் இந்தியாவுக்கு பயணிக்கும் ஜப்பானிய சண்டை பயிற்சி தலைவனாக ஆறாவது அவதாரம். ஏழடி உய்ரத்தில் அப்பாவி இளைஞனாக நாகேஷ் - கே.ஆர்.விஜயா தம்பதிகளுக்கு பேபியாக ஏழாவது அவதாரம். இடையிலே அந்த கிருமி-ஆயுதம் இந்தியாவுக்கு போனது குறித்து இந்திய பிரதமர் மான்மொக்யான் சீஆங்(No Spelling mistake)வுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போகும் அமெரிக்க ஜனாதிபதி புஷ்'ஆக எட்டாவது அவதாரமெடுக்கிறார் கமல்.

இவ்வளவு குழப்பமான கதைப்போக்கில் கதாநாயகியாக சிதம்பரத்து மாமி பெண்ணாக அசின், கிருஷ்ணா, முகந்தா என பாடியப்படி அறிமுகமாகிறார்.அவருடன் இருக்கும் பாட்டியாக நான்கு அடிக்கு உடல் குறுகி போன பாட்டியாக ஒன்பதாவது அவதாரமெடுகிறார் கமல், இந்த பாட்டி கதாபாத்திரத்தின் மகன் சிறுவயதில் அமெரிக்கா சென்று அங்கேயே மரணமடைந்து விட்டதால் அந்த அதிர்ச்சியில் அவர் சற்று மனம்பிறழ்ந்தாய் சித்திரிக்கப்பட்டுள்ளது. கடைசியாக பத்தாவது அவதாரமாக முத்தாய்ப்பாக அமைவது பூவராகவன் கதாபாத்திரம்தான். கதைகளத்துக்கு இந்த கேரக்டர் தேவையில்லாத போதும் அந்த கதாபாத்திரம் கதையோடு பொருத்த கமலின் திரைக்கதை உத்தி வெகுவாக உழைத்து இருக்கிறது.

அந்த நுண்ணுயிர் கிருமி வயல் சிதம்பரம் அசின் வீட்டிற்கு சென்றடைக்கிறது. அந்த வயலை பாட்டி கமல் வீதியுலா வரும் பெருமாள் சிலைக்குள் போட்டு விடுகிறார். வில்லன் கமல் + மல்லிகா மிகச்சரியாக அசின் வீட்டிற்கு அருகில் வந்ததும் இவ்வளவும் நடக்கிறது. அதே நேரத்தில் கொல்டி கமலின் (சிரிப்பு போலிஸ்)'ம் அங்கே வர சாமி வீதியுலா கலவரமாகி யானைக்கு மதம் பிடித்து மல்லிகா ஹாங்கரில் தொங்கவிடப்பட்டு உயிரை இழக்கிறார். அதன் பின்னர் வயல்'ஐ கைப்பற்ற அனைவரும் ஓட ஆரம்பிக்கிறார்கள். கமலோடு சேர்ந்து அசினும் ஓடிக்கொண்டே இருக்கிறார். தள்ளுவண்டியிலிருந்து இரயில் லாரி என கிடைக்கும் எல்லா வாகனங்களிலும் பயணிக்கிறார்கள். இடையிடையே கிரேசி.மோகன் ஸ்டைலில் Witty - வசனங்கள் வேறு. சில வசனங்கள் சிரிக்கவைக்க முயல்கின்றன, சில வசனங்கள் எரிச்சலை வர வைக்கின்றன. எங்கோ அலைந்து திரிந்து ரங்கராஜன் நம்பியை கடலில் விட்ட இடத்துக்கே இருவரும் வந்து சேர்கின்றனர். முற்பிறவி அசின் தலைமுட்டி இறந்த அதே சிலையில் இக்காலத்து அசின் இடித்துக்கொண்டு அந்த ஆன்மாவின் கர்மா'வை ஏற்று கொள்கிறார்.??!! இந்த காட்சிகளுக்காக தான் பன்னிரெண்டாம் நூற்றாண்டு காலங்களிலிருந்து கதை துவங்குவதாக அமைக்கப்பட்டதா என்பது கமலுக்குதான் வெளிச்சம்.

திரைக்கதை முடிவை நோக்கி பயணிக்கும் பொழுது அனைவரும் ஒரே புள்ளியில் இணைய ஆரம்பிக்கின்றனர். சிரிப்பு போலிஸ் பல்ராம் நாயுடு(கொல்டி கமல்) விசாரணைக்காக நெட்டை கமல் குடியிருயிருக்கும் காலனி மக்கள் அனைவரையும் மசூதியில் அடைக்கிறார். இன்னொரு மூலையில் பூவராகவன் முன் பகையை தீர்த்துக்கொள்ள லோக்கல் வில்லன் வாசு வீட்டுக்கு சென்றடைய , ஆராய்ச்சி கமலும் வில்லன் கமலும் இறுதி சண்டை காட்சிக்காக கடற்கரைக்கு வர இவர்களை தேடி ஜப்பான் குங்பூ மாஸ்டரும் வந்து சேர்கிறார். வழக்கமான இந்திய சினிமா பார்மூலா படி ஹீரோ நல்லவன் என குங்பூ மாஸ்டருக்கு தெரியவர குங்பூ மாஸ்டரும் அமெரிக்கவில்லன் கமலும் மோதுகிறார்கள். படத்தில் ஹைலைட்டான விஷயமே இங்கேதான் இருக்கிறது. அந்த சண்டை காட்சியை இயக்கியதும் சரி, ஒளியிலிருந்து ஒலி வரை மிக துல்லிதமாக கையாண்டு இருக்கிறார்கள். சீட் நுனியில் உட்கார்ந்து ரசிக்கும் நமக்கே இரண்டு அடி விழுந்து விடுமோ என பயப்படும் அளவிற்கு கச்சிதம் மற்றும் பிரமாதமான காட்சியமைப்பு. சண்டையின் இறுதியில் வில்லன் கமல் வழக்கமான பாணியில் சாக துணிய அப்பொழுது தான் அந்த நுண்ணுயிர் கிருமி தன்னிடம் இருப்பதை உணர்ந்து வாயில் பபுள்-கம்'ஆக கடிந்து மென்று குரங்கு செத்தமாதிரி தானும் சாக ஆரம்பிக்கிறார். நுண்ணுயிர் பெருக்கத்தை வான்வெளியிலிருந்து தொலைநோக்கியில் பார்க்கும் சிரிப்பு போலிஸ் பல்ராம் நாயுடு மற்றும் ஆராய்ச்சி கமல் பின்ன நாமும் என்ன நடக்க போகுதென ஆர்வமாக பார்க்க,டிசம்பர் 26-2004 அன்று ஏற்பட்ட சுனாமியை இங்கு அதற்கு மாற்றாய் உருவெடுக்கிறது. சுனாமி பேரலையில் விஷநுண்ணுயிர் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட பூவராகவன் மற்றும் வில்லன் கமல் மட்டும் உயிர் இழக்கிறார்கள். கடலுக்குள் புதையுண்ட விஷ்ணு சிலை சுனாமி பேரலையால் வெளியே அடித்து வரப்படுக்கிறது, அந்த சிலையை கைக்கு ஆதாரமாய் வைத்துக்கொண்டு அசின் ஆன்மிகம் பேசுகிறார், கமல் வழக்கம் போல் குழப்பமாகவே பகுத்தறிவு வசனம் பேசுகிறார். கடவுள் இருந்தா நல்லாயிருக்குமின்னு வழக்கம் போல் உரித்த வாழைமட்டையில் வெளக்கெண்ணெய் உற்றிய கணக்காய் வசனம் பேசி முடிக்கிறார். முன் ஜென்மத்தில் இணையால் போன கமல் - அசின் ஜோடி இந்த ஜென்மத்தில் இணைவதாக விஷ்ணு சிலையிலிருந்து கேமராகண் வெளியே வருகிறது.

படத்திலுள்ள குறைகள்:-

1) முன் ஜென்ம தொடர்புகளுக்காகவே எடுக்கப்பட்ட நம்பிராஜன் சம்பந்தப்பட்ட முதல் பத்து நிமிட காட்சிகள்
2) சோழமன்னராக வரும் நெப்போலியன் கொழ கொழ தமிழ்
3) இந்த கதை 2004ம் வருடத்தில் நடைபெறுவதாக காண்பித்து விட்டு நவீனரக கார்களை பயன்படுத்தியது.
4) நொய் நொய்'ன்னு காது கிழியுமளவிற்கு அசின் பேசும் வசனங்கள்
5) ஒவ்வொரு கமலாவதாரமும் வெவ்வேறு மொழிகளில் பேசி கொல்வது.(சப்-டைட்டில் போடுவதாக இருந்தால் நிறைய இடத்தில் தேவைப்பட்டிருக்கும்)
6) கதைக்கு சுத்தமாக சம்பந்தமில்லாத ஏழரை அடி கமல்.
7) நாகேஷ், கே.ஆர்.விஜயா,ஜெயப்பிரதா என பழம்பெரும் நடிகர்களை கறிவேப்பிலை கதாபாத்திரங்களாக்கியது.
8) சுனாமி வந்ததை கதையோடு ஒட்ட முயற்சித்தது.
9) சுனாமி வந்த பின்னர் மக்களோ அழுது கொண்டிருக்க கமலும்-அசினும் பேசி கொல்லும் வசனங்கள்
10) 2004 வருடம் நடந்ததுக்கு 2008'ல் எதற்கு பாரட்டு விழா நடத்துக்கிறார்கள்? அதில் புஷ்வாதார கமல் ஆடும் நடனம்..

படத்திலுள்ள நிறைகள்:-

1) வரலாற்று சம்பவங்களுக்கான காட்சியமைப்பில் இருந்த அதீத உழைப்பு.
2) கமல்
3) கமல்
4) கமல்
4) கமல்
5) கமல்
6) கமல்
7) கமல்
8) கமல்
9) கமல்
10) கமல்
11) இன்னும் பல.........


கமலின் ரசிகராக படம் பார்க்க ஆரம்பித்தால் இதொரு உலகத்தின் பிரமாண்டமான சாதனை முயற்சி திரைப்படம். சாதாரண திரைப்பட ரசிகராக ரசிக்க ஆரம்பித்தால் இதொரு நல்ல பொழுது போக்கு அம்சமுள்ள திரைப்படம். நல்ல சினிமா ரசிகராக அனைவரும் ரசித்து மகிழ கீத்துகொட்டாய்'யின் வாழ்த்துக்கள்.

கீத்துகொட்டாய் மதிப்பீடு:- 49/100