Saturday, June 28, 2008

Wanted

ஒரு ஆக்ஷன் திரைப்படம் எடுக்க தேவையானவை:

1. இருபதில் இருந்து முப்பது வயதுக்குள் ஒரு நாயகன்
- வாழ்க்கையில் விரக்தியடைந்து வேலையில் பிரச்சனைகளுடன், காதலியுடன் சண்டையிட்டுக் கொண்டு, நம்பிக்கை துரோகம் செய்யும் நண்பனுடன்

2. ஒரு அதிசய சக்தி. அத்துடன் பல நூற்றாண்டுகளாக அந்த சக்தியை ரகசியமாகப் பாதுகாத்து வரும் ஒரு குழு.

3. அக்குழுவில் அழகான நாயகி. குழுத் தலைவராக வயதான ஒரு புகழ்பெற்ற நடிகர்

4. குழுவிலிருந்து பிரிந்து செல்லும் வில்லன்

5. நாயகனைக் குழுவில் சேர்த்தல்/பயிற்சி அளித்தல்

6. அந்த காட்சிகளில் நகைச்சுவை சேர்க்க குழுவில் இரண்டு கதாபாத்திரங்கள்.

7. நாயகன் வில்லனுடனும் அவன் அடியாட்களுடனும் சண்டை/கார்,ரயில்,விமான சேஸிங்

8. இடையிடையே ஸ்லோ மோஷனில் செண்டிமெண்ட் காட்சிகள்

9. கடுமையான சண்டைக்கிடையில் நாயகனுக்கு முத்தமிடும் நாயகி. அங்கே ஒரு ஃப்ரீஸ்(Freeze).

10. இறுதியில் வில்லனைக் கொல்லும் நாயகன். கதம் கதம்!

Wanted திரைப்படமும் கிட்டத்தட்ட இதே ஃபார்முலாவுடன் வெளிவந்துள்ள அக்மார்க் ஆக்ஷன் திரைப்படம். நாயகன் வெஸ்லி(John McAvoy) வேலையிடத்திலும் காதலியுடனுமான பிரச்சனைகளில் விரக்தியில் இருக்கிறான். தான் யார், தன்னுடைய குறிக்கோள் என்ன என்பதில் குழப்பத்தில் இருக்கிறான். திடீரென அவனைக் கொல்ல வரும் ஆசாமியிடமிருந்து
ஃபாக்ஸ்(Angelina Jolie) என்ற பெண்ணால் காப்பாற்றப்பட்டு ஒரு ரகசிய குழுவினரிடம் கொண்டு செல்லப்படுகிறான்.

அது பல நூற்றாண்டுகளாக எதிர்காலத்தில் கொலை செய்யப்ப்போகும் ஒருவரைக் கண்டுபிடித்து கொன்று வரும் நல்ல கொலையாளிகளைக் கொண்ட குழு. அதன் தலைவராக மார்கன் ஃப்ரீமேன்( Morgan Freeman). அவர்கள் எதிர்காலக் கொலையாளிகளைக் கண்டுபிடிப்பது துணி நெய்யும் இயந்திரம் மூலமாக. முன் எப்போதோ வடிவமைக்கப்பட்ட அந்த இயந்திரம் கொலையாளிகளின் பெயர்களை முன்கூட்டியே (விதியாம்) கண்டுபிடித்து துணியில் பைனரி கோட் மூலம் நெய்கிறது. அதைப் படித்து எதிர்கால கொலையாளிகளை இக்குழுவினர் கொலை செய்கின்றனர்.





வெஸ்லியின் தந்தையையும் அந்த குழுவில் இருந்தவர். அவரைக் கொன்ற வில்லனைக் கொல்வதற்காக வெஸ்லியைத் தேர்ந்தெடுக்கின்றனர். அவனுக்குக் கடுமையான பயிற்சியளித்து தயார் செய்கின்றனர். வெஸ்லி அந்த வில்லனைக் கொலை செய்யும் போது ஒரு ட்விஸ்ட். அந்த கொலையாளி யார், அந்த மெஷின் ஒழுங்காகத் தான் வேலை செய்கிறதா என்று மேற்கொண்டு திருப்புமுனைகள். இறுதியில் வழக்கம் போல் நாயகனுக்கு வெற்றி.

சேஸிங் காட்சிகளும் ஆக்ஷன் காட்சிகளும் நன்றாகப் படமாக்கப்பட்டுள்ளன. ஆனால் கதையில் புதிதாக ஒன்றுமில்லை. ஆஞ்சலினா ஜூலியும் மார்கன் ஃப்ரீமேனும் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். கதாநாயகனாக நடித்துள்ள ஜான் மெக்அவாய் The Last King of Scotland திரைப்படத்தில் அருமையாக நடித்திருந்தவர். இத்திரைப்படத்தில் நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு குறைவு தானென்றாலும் சில காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார்.


இப்போதெல்லாம் படத்தை விட டிரெயிலர்கள் நன்றாக இருக்கிறது.இத்திரைப்படத்திற்கும் டிரெயிலரைப் பார்த்து சிறிது எதிர்பார்ப்புடன் சென்றதால் ஏமாற்றமே. சில நகைச்சுவைக் காட்சிகளும் சண்டை/சேஸிங் காட்சிகளும் ரசிக்கும்படி இருந்தாலும் மொக்கையான கதையாலும் சில காட்சிகளாலும் சொதப்பிவிட்டது. கதையில் பல்வேறு திருப்பங்கள் தருவதாக ஏகப்பட்ட குளறுபடிகள்.

Wanted - ஆக்ஷன் திரைப்பட ரசிகர்களுக்கு.

1 comment:

தமிழ் பொறுக்கி said...

பேருக்கு ஏத்த கீத்து கொட்டாய் தான் .... அருமையான தொகுப்பு...
நல்ல சிந்தனை....