Saturday, November 15, 2008

La Haine(Hate)

தற்செயலாகப் பார்க்கக் கிடைத்து மிகுந்த ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்த ஃபிரெஞ்சு திரைப்படம் La Haine. பாரிஸ் புறநகர் பகுதியில் நடக்கும் கலவரத்தில் அப்தெல் என்னும் இளைஞன் போலீஸால் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். அக்கலவரத்தில் காவல் அதிகாரி ஒருவர் தன் கைத்துப்பாக்கியைத் தொலைத்துவிடுகிறார். அத்துப்பாக்கி அப்தெல்லின் நண்பனான வின்ஸி்ன் கையில் கிடைக்கிறது. வின்ஸ், அவனது நண்பர்கள் சயீத், உபெர்ட் ஆகியோரின் கலவரத்திற்கு பின்னான 24 மணிநேர வாழ்க்கை திரையில் விரிகிறது.

வின்செண்ட், சயீத், உபெர்ட் மூவரும் வேலையற்ற இளைஞர்கள். தங்கள் குடியிருப்பில் புகைத்தபடியும் வெட்டிக்கதை பேசியபடியும் சிறு சிறு சண்டைகளிட்டபடியும் பொழுதைக் கழிப்பவர்கள். வின்செண்ட் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவன். எப்போதும் சண்டைக்குத் தயாராகயிருப்பவன். சயீத் எதைப் பற்றியும் கவலைகொள்ளாத மற்ற இருவர் அளவுக்கு முதிர்ச்சியடையாத சராசரி இளைஞன். உபெர்ட் உடல்வலிமையுடையவன் என்றாலும் எந்த பிரச்சனையிலும் சிக்காது அமைதியான வாழ்க்கை வாழ விரும்புபவன். கலவரத்தில் தன் உடற்பயிற்சிக் கூடம் கொளுத்தப்பட்டதையும் அமைதியாக ஏற்றுக்கொள்பவன். போலீஸின் துப்பாக்கி தன்னிடம் இருப்பதாக வின்செண்ட் சொல்லும்போது அதனால் பிரச்சனை ஏற்படுமென்றும் அதை தூக்கியெறியுமாறும் உபெர்ட் கூறுகிறான். அதை மறுக்கும் வின்செண்ட் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அப்தெல் இறந்தால் ஒரு போலீஸையாவது சுட்டுக் கொல்வதாய் சபதமெடுக்கிறான். துப்பாக்கியுடன் மூன்று நபர்களும் பாரீஸுக்குச் செல்கின்றனர். அங்கு அவர்கள் பல வகையான மனிதர்களை சந்திக்கிறார்கள். இனவெறி கொண்ட காவல் அதிகாரி, அவருக்கு எதிர்மறையாக நல்ல காவல் அதிகாரி, குடிகாரர்கள், கொலைகாரர்கள், போதை மருந்து கடத்துபவன், செல்வந்தர்கள், இனவெறியாளர்கள், முன்னாள் போர்வீரரான வயோதிகர் என பல்வகை மனிதர்களை சந்திக்கிறார்கள்.ஒவ்வொரு நேரத்திலும் அத்துப்பாக்கி பயன்படுத்தத் தூண்டும் சம்பவங்கள் நடக்கின்றன. பதட்டம் அதிகரிக்கின்றது. படத்தின் இறுதி வரை இப்பதட்டம் நம்மை உட்கொள்கிறது. இப்பதட்டம் கிளைமாக்ஸில் உச்சத்தை அடைகிறது. சற்றும் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத விதத்தில் வந்த கிளைமாக்ஸ் காட்சி அதிர்வை ஏற்படுத்தியது.

ஆரம்பத்தில் வேலையின்றி அரட்டைகளில் பொழுதைக் கழிக்கும்போது மெதுவாக நகரும் காட்சிகள் நண்பர்களின் கையில் துப்பாக்கி கிடைத்து பாரிஸுக்கு சென்றபின் அசுர வேகத்தில் செல்கின்றன. இப்படம் முழுக்க கருப்பு வெள்ளையில் படமாக்கியிருக்கிறார்கள். வித்தியாசமான காமிரா கோணங்களும் காட்சியமைப்புகளும் ரசிக்கும்படி உள்ளன. பின்னணி இசையாக பிரெஞ்சு ராப் பாடல்கள் கலக்கல்.

மூன்று மைய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் Vincent Cassel,Hubert Kounde, Said Taghmaoui மூவரும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். அந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடல்மொழியும் வசன உச்சரிப்புகளும் சிறப்பாக அமைந்துள்ளது. அதிலும் வின்செண்ட் தன் கையில் துப்பாக்கி இருப்பதால் கண்களில் தெனாவெட்டுடன் அலைவதும் பின்னர் துப்பாக்கியைப் பயன்படுத்த நேரும்போது பயம்கொள்வதுமென அட்டகாசமாக நடித்திருக்கிறார்.

யாரையும் நியாயப்படுத்தாமல் உள்ளது உள்ளபடி படமாக்கியிருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது. வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் வலியவர்கள் மீதான பயம் வெறுப்பாக உருமாறும் நிலை சிறப்பாக பதிவாக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று கதாபாத்திரங்களும் படத்தின் இறுதிக்காட்சியும் இன்னும் சிலநாட்களுக்கு அடிக்கடி நினைவில் வந்தபடியிருக்கும்.

Tuesday, November 11, 2008

Changeling

1928. லாஸ் ஏஞ்சலீஸ். தொலைபேசி இணைப்பகத்தில் பணிபுரியும் கிறிஸ்டின் காலின்ஸின்(ஏஞ்சலினா ஜுலி) மகன் வால்டர் காலின்ஸ் காணாமல் போகிறான். சில மாதங்கள் கழித்து லாஸ் ஏஞ்சலீஸ் காவல்துறை ஒரு சிறுவனை வால்டர் எனக் கூறி கிறிஸ்டினிடம் சேர்ப்பிக்கின்றனர். அச்சிறுவன் தன் மகனில்லை என்று மறுக்கும் கிறிஸ்டினை விசாரணை அதிகாரியான ஜேம்ஸ் மனநலம் பாதிக்கப்பட்டவராக சித்தரிக்கின்றார். பொதுமக்களிடையே இழந்துவரும் தங்கள் செல்வாக்கைக் காப்பாற்ற அச்சிறுவனையே தன் மகனாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென கிறிஸ்டினை அறிவுறுத்துகின்றார். கிறிஸ்டினின் காவல்துறை நிர்வாகத்திற்கு எதிரான போராட்டத்திற்கு மதபோதகரான குஸ்தவ்(ஜான் மால்கோவிச்) உதவுகிறார். பொதுமக்களின் ஆதரவும் கிடைக்கிறது. இறுதியின் கிறிஸ்டினின் மகன் கிடைத்தானா, காவல்துறைக்கு எதிரான போராட்டத்தில் வென்றார்களா, லாஸ் ஏஞ்சலீஸ் காவல்துறையின் சரிந்த செல்வாக்கு திரும்பியதா என்ற கதையே கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் லேட்டஸ்ட் திரைப்படம் Changeling. 1928ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம்.

கிறிஸ்டினின் காவல்துறைக்கு எதிரான இந்த போராட்டத்திற்கிடையே கார்டன் நார்த்காட் என்பவன் பல சிறுவர்களைக் கடத்தி கொன்றது தெரியவருகிறது. கிறிஸ்டினின் மகனான வால்டரும் நார்த்காட்டால் கடத்தப்பட்டதாக அவனுக்கு உதவிகள் செய்த சிறுவன் அடையாளம் காட்டுகிறான். இருப்பினும் காவல்துறை அதை மறுக்கிறது. நேர்மையான காவல் அதிகாரியான லெஸ்டர் அந்த சிறுவனின் உதவியுடன் இறந்த சிறுவர்களின் உடல்களை மீட்கிறார். தப்பிச் சென்ற கார்டன் நார்த்காட் கைதுசெய்யப்படுகிறான்.

தன் மகனைக் கண்டுபிடிப்பதில் மெத்தனம் காட்டி தன்னையும் மனநல மருத்துவமனைக்கு அனுப்பி சித்ரவதை செய்த காவல்துறைக்கு எதிராக வழக்கு தொடுக்கிறார் கிறிஸ்டின். அவ்வழக்கில் விசாரணை அதிகாரியான ஜேம்ஸும் காவல்துறை தலைமை அதிகாரியும் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.அதே நேரம் நார்த்காட்டின் கொலை வழக்கில் அவனுக்கு தூக்குதண்டனை விதிக்கப்படுகிறது. நார்த்காட்டினால் கொல்லப்பட்ட சிறுவர்களில் வால்டரும் ஒருவன் என கிறிஸ்டின் நம்ப மறுக்கிறார். தன் மகன் என்றாவது ஒரு நாள் திரும்புவான் என்ற நம்பிக்கையில் தன் தேடலைத் தொடர்கிறார்.

1928ல் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார் கிளிண்ட் ஈஸ்ட்வுட்.1928-ன் லாஸ் ஏஞ்சலீஸ் நகரைக் கண் முன் கொண்டுவந்துள்ளனர். டிராம் வண்டிகளும் அந்த கால கார்களும் உடை வடிவமைப்பும் கதை நடக்கும் காலத்திற்கேற்ப அமைந்துள்ளன.

மகனை இழந்து காவல்துறைக்கு எதிராகப் போராடும் கிறிஸ்டின் கதாபாத்திரத்தில் ஏஞ்சலீனா ஜூலி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் காவல்துறை தன் புகார்களைக் கண்டுகொள்ளாமல் விடும்போது செய்வதறியாமல் தவிப்பதும், தன் மகனாக வந்திருக்கும் சிறுவனை வெறுக்கவும் முடியாமல் அவன்மேல் பாசமும் காட்ட முடியாமல், தன் மகனின் நிலையறியாமல் தவிப்பதும், தன் மகனைக் கண்டுபிடித்து தருமாறு அதிகாரிகளிடம் மன்றாடுவதும் மனநல மருத்துவமனையில் கொடுமைகளுக்கு ஆளாவதும் அங்கு சந்திக்கும் மற்ற நோயாளிகளாலும் குஸ்தவ்வின் உதவியாலும் மனவுறுதி கொண்டு காவல்துறையை தனியாளாக எதிர்த்துப் போராடுவதுமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஏஞ்சலினா ஜூலிக்கு உதடுகள் அழகுதான் என்றாலும் சில இடங்களில் அதிகப்படியான லிப்ஸ்டிக் ஏற்கனவே பெரிதான அவர் உதட்டை இன்னும் மிகைப்படுத்திக் காட்டுகிறது.மதபோதகர் குஸ்தவ்வாக ஜான் மால்கோவிச்(John Malkovich). வானொலி மூலமாக காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகத்தை அம்பலப்படுத்துவதுடன் கிறிஸ்டினுக்கு அவள் மகனைக் கண்டுபிடிக்க உதவுகிறார். கிறிஸ்டின் காவல்துறையால் மனநல மருத்துவமனையில் அடைக்கப்படும்போது போராடி அவரை வெளியே கொண்டுவருகிறார். கிறிஸ்டினுக்கு தகுந்த நீதி கிடைக்க வழக்கறிஞரை ஏற்பாடு செய்வதுடன் பொதுமக்களின் ஆதரவைத் திரட்டுவதிலும் முனைப்புடன் செயல்படும் கதாபாத்திரத்தில் ஜான் மால்கோவிச் அண்டர்ப்ளே செய்திருப்பது படத்திற்கும் கதாபாத்திரத்திற்கும் நிறைவானதாக இருக்கிறது.


பொதுமக்களிடையே வளர்ந்துவரும் கசப்புணர்வைப் போக்கவும் ஊடகங்களினால் சரிந்துவரும் தன் செல்வாக்கை மீட்கவும் கிறிஸ்டினிடம் வேறொரு சிறுவனை தன் மகனாக ஏற்கும்படி வற்புறுத்துவதும் அவரை வன்முறைக்குள்ளாக்குவதும் அதை எதிர்த்துப் போராடும் கிறிஸ்டினை மனநலம் குன்றியவராக சித்தரிப்பதும் அதிகார மையங்கள் தங்களைக் காத்துக்கொள்ள மக்களின் மீது கட்டவிழ்த்து விடும் வன்முறைகளுக்கு சான்று. கிறிஸ்டினின் மகனை விட இச்சிறுவன் உயரம் குறைவாக இருப்பதற்கு அதிர்ச்சியில் முதுகுத்தண்டின் அளவு குறைந்து உயரம் குறையலாம் என்றும், நண்பர்களின் ஆசிரியரின் பெயர் அதிர்ச்சியில் மறந்திருக்கலாம் என்றும் பொய்க்கதைகளை அவிழ்த்துவிடுவது நகைச்சுவையாக இருந்தாலும் இவையெல்லாம் உண்மையில் நடந்த சம்பவங்கள் எனும்போது அதிர்ச்சியளிக்கின்றது.

கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் ஏனைய திரைப்படங்களைப் போலவே பண்பட்ட காட்சியமைப்புகளும் பின்னணி இசையும் நடிகர்களின் அட்டகாசமான நடிப்பும் இப்படத்திற்கு பெரும்பலம். படத்தில் குறிப்பிட்ட ஒரு இடைவெளியின் பின்னணி இசையின்றி வெகுநேரத்திற்கு அமைதியாக காட்சிகள் நகர்ந்தன. சிறிது நேரத்திற்கு பின் இசை ஆரம்பிக்கும்போதுதான் அத்தனை நேரம் திரையைக் கவ்விய மெளனத்தை உணரமுடிந்தது. ஆயினும், கிறிஸ்டின் தன் மகனைத் தேடும் மையக்கதையுடன் மதபோதகர் குஸ்தவ்வின் காவல்துறைக்கு எதிரான பிரச்சாரம், நார்த்காட் செய்த கொலைகள், மனநல மருத்துவமனையில் கிறிஸ்டின் சந்திக்கும் மற்ற நோயாளிகள் என பல கிளைக்கதைகள் படத்தின் வேகத்திற்கு சிறிது தடை போடுகின்றன. கிறிஸ்டினின் மகன் நார்த்காட்டினால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பப்படும்பொழுதே மையக்கதை முடிந்துவிடுவதால் பின்தொடரும் காட்சிகள் இரண்டரை மணி நேரப் படத்தை இன்னும் நீளமாக்குகின்றன. ஆனால் இறுதியில் வால்டர் தப்பித்துச் சென்றிருக்கக் கூடுமென நம்பிக்கை ஏற்படுத்துமாறு அவனுடனிருந்த சிறுவன் திரும்புவதைக் காட்டியதில் இடையில் தேவையில்லாததாகப் பட்ட காட்சிகள் அர்த்தமளிக்கின்றன. இரண்டாம் பாதியில் சில காட்சிகளைக் குறைத்து படத்தின் நீளத்தைக் குறைத்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.


7.5/10