Tuesday, November 11, 2008

Changeling

1928. லாஸ் ஏஞ்சலீஸ். தொலைபேசி இணைப்பகத்தில் பணிபுரியும் கிறிஸ்டின் காலின்ஸின்(ஏஞ்சலினா ஜுலி) மகன் வால்டர் காலின்ஸ் காணாமல் போகிறான். சில மாதங்கள் கழித்து லாஸ் ஏஞ்சலீஸ் காவல்துறை ஒரு சிறுவனை வால்டர் எனக் கூறி கிறிஸ்டினிடம் சேர்ப்பிக்கின்றனர். அச்சிறுவன் தன் மகனில்லை என்று மறுக்கும் கிறிஸ்டினை விசாரணை அதிகாரியான ஜேம்ஸ் மனநலம் பாதிக்கப்பட்டவராக சித்தரிக்கின்றார். பொதுமக்களிடையே இழந்துவரும் தங்கள் செல்வாக்கைக் காப்பாற்ற அச்சிறுவனையே தன் மகனாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென கிறிஸ்டினை அறிவுறுத்துகின்றார். கிறிஸ்டினின் காவல்துறை நிர்வாகத்திற்கு எதிரான போராட்டத்திற்கு மதபோதகரான குஸ்தவ்(ஜான் மால்கோவிச்) உதவுகிறார். பொதுமக்களின் ஆதரவும் கிடைக்கிறது. இறுதியின் கிறிஸ்டினின் மகன் கிடைத்தானா, காவல்துறைக்கு எதிரான போராட்டத்தில் வென்றார்களா, லாஸ் ஏஞ்சலீஸ் காவல்துறையின் சரிந்த செல்வாக்கு திரும்பியதா என்ற கதையே கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் லேட்டஸ்ட் திரைப்படம் Changeling. 1928ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படம்.

கிறிஸ்டினின் காவல்துறைக்கு எதிரான இந்த போராட்டத்திற்கிடையே கார்டன் நார்த்காட் என்பவன் பல சிறுவர்களைக் கடத்தி கொன்றது தெரியவருகிறது. கிறிஸ்டினின் மகனான வால்டரும் நார்த்காட்டால் கடத்தப்பட்டதாக அவனுக்கு உதவிகள் செய்த சிறுவன் அடையாளம் காட்டுகிறான். இருப்பினும் காவல்துறை அதை மறுக்கிறது. நேர்மையான காவல் அதிகாரியான லெஸ்டர் அந்த சிறுவனின் உதவியுடன் இறந்த சிறுவர்களின் உடல்களை மீட்கிறார். தப்பிச் சென்ற கார்டன் நார்த்காட் கைதுசெய்யப்படுகிறான்.





தன் மகனைக் கண்டுபிடிப்பதில் மெத்தனம் காட்டி தன்னையும் மனநல மருத்துவமனைக்கு அனுப்பி சித்ரவதை செய்த காவல்துறைக்கு எதிராக வழக்கு தொடுக்கிறார் கிறிஸ்டின். அவ்வழக்கில் விசாரணை அதிகாரியான ஜேம்ஸும் காவல்துறை தலைமை அதிகாரியும் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.அதே நேரம் நார்த்காட்டின் கொலை வழக்கில் அவனுக்கு தூக்குதண்டனை விதிக்கப்படுகிறது. நார்த்காட்டினால் கொல்லப்பட்ட சிறுவர்களில் வால்டரும் ஒருவன் என கிறிஸ்டின் நம்ப மறுக்கிறார். தன் மகன் என்றாவது ஒரு நாள் திரும்புவான் என்ற நம்பிக்கையில் தன் தேடலைத் தொடர்கிறார்.

1928ல் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார் கிளிண்ட் ஈஸ்ட்வுட்.1928-ன் லாஸ் ஏஞ்சலீஸ் நகரைக் கண் முன் கொண்டுவந்துள்ளனர். டிராம் வண்டிகளும் அந்த கால கார்களும் உடை வடிவமைப்பும் கதை நடக்கும் காலத்திற்கேற்ப அமைந்துள்ளன.

மகனை இழந்து காவல்துறைக்கு எதிராகப் போராடும் கிறிஸ்டின் கதாபாத்திரத்தில் ஏஞ்சலீனா ஜூலி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் காவல்துறை தன் புகார்களைக் கண்டுகொள்ளாமல் விடும்போது செய்வதறியாமல் தவிப்பதும், தன் மகனாக வந்திருக்கும் சிறுவனை வெறுக்கவும் முடியாமல் அவன்மேல் பாசமும் காட்ட முடியாமல், தன் மகனின் நிலையறியாமல் தவிப்பதும், தன் மகனைக் கண்டுபிடித்து தருமாறு அதிகாரிகளிடம் மன்றாடுவதும் மனநல மருத்துவமனையில் கொடுமைகளுக்கு ஆளாவதும் அங்கு சந்திக்கும் மற்ற நோயாளிகளாலும் குஸ்தவ்வின் உதவியாலும் மனவுறுதி கொண்டு காவல்துறையை தனியாளாக எதிர்த்துப் போராடுவதுமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஏஞ்சலினா ஜூலிக்கு உதடுகள் அழகுதான் என்றாலும் சில இடங்களில் அதிகப்படியான லிப்ஸ்டிக் ஏற்கனவே பெரிதான அவர் உதட்டை இன்னும் மிகைப்படுத்திக் காட்டுகிறது.



மதபோதகர் குஸ்தவ்வாக ஜான் மால்கோவிச்(John Malkovich). வானொலி மூலமாக காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகத்தை அம்பலப்படுத்துவதுடன் கிறிஸ்டினுக்கு அவள் மகனைக் கண்டுபிடிக்க உதவுகிறார். கிறிஸ்டின் காவல்துறையால் மனநல மருத்துவமனையில் அடைக்கப்படும்போது போராடி அவரை வெளியே கொண்டுவருகிறார். கிறிஸ்டினுக்கு தகுந்த நீதி கிடைக்க வழக்கறிஞரை ஏற்பாடு செய்வதுடன் பொதுமக்களின் ஆதரவைத் திரட்டுவதிலும் முனைப்புடன் செயல்படும் கதாபாத்திரத்தில் ஜான் மால்கோவிச் அண்டர்ப்ளே செய்திருப்பது படத்திற்கும் கதாபாத்திரத்திற்கும் நிறைவானதாக இருக்கிறது.


பொதுமக்களிடையே வளர்ந்துவரும் கசப்புணர்வைப் போக்கவும் ஊடகங்களினால் சரிந்துவரும் தன் செல்வாக்கை மீட்கவும் கிறிஸ்டினிடம் வேறொரு சிறுவனை தன் மகனாக ஏற்கும்படி வற்புறுத்துவதும் அவரை வன்முறைக்குள்ளாக்குவதும் அதை எதிர்த்துப் போராடும் கிறிஸ்டினை மனநலம் குன்றியவராக சித்தரிப்பதும் அதிகார மையங்கள் தங்களைக் காத்துக்கொள்ள மக்களின் மீது கட்டவிழ்த்து விடும் வன்முறைகளுக்கு சான்று. கிறிஸ்டினின் மகனை விட இச்சிறுவன் உயரம் குறைவாக இருப்பதற்கு அதிர்ச்சியில் முதுகுத்தண்டின் அளவு குறைந்து உயரம் குறையலாம் என்றும், நண்பர்களின் ஆசிரியரின் பெயர் அதிர்ச்சியில் மறந்திருக்கலாம் என்றும் பொய்க்கதைகளை அவிழ்த்துவிடுவது நகைச்சுவையாக இருந்தாலும் இவையெல்லாம் உண்மையில் நடந்த சம்பவங்கள் எனும்போது அதிர்ச்சியளிக்கின்றது.

கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் ஏனைய திரைப்படங்களைப் போலவே பண்பட்ட காட்சியமைப்புகளும் பின்னணி இசையும் நடிகர்களின் அட்டகாசமான நடிப்பும் இப்படத்திற்கு பெரும்பலம். படத்தில் குறிப்பிட்ட ஒரு இடைவெளியின் பின்னணி இசையின்றி வெகுநேரத்திற்கு அமைதியாக காட்சிகள் நகர்ந்தன. சிறிது நேரத்திற்கு பின் இசை ஆரம்பிக்கும்போதுதான் அத்தனை நேரம் திரையைக் கவ்விய மெளனத்தை உணரமுடிந்தது. ஆயினும், கிறிஸ்டின் தன் மகனைத் தேடும் மையக்கதையுடன் மதபோதகர் குஸ்தவ்வின் காவல்துறைக்கு எதிரான பிரச்சாரம், நார்த்காட் செய்த கொலைகள், மனநல மருத்துவமனையில் கிறிஸ்டின் சந்திக்கும் மற்ற நோயாளிகள் என பல கிளைக்கதைகள் படத்தின் வேகத்திற்கு சிறிது தடை போடுகின்றன. கிறிஸ்டினின் மகன் நார்த்காட்டினால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பப்படும்பொழுதே மையக்கதை முடிந்துவிடுவதால் பின்தொடரும் காட்சிகள் இரண்டரை மணி நேரப் படத்தை இன்னும் நீளமாக்குகின்றன. ஆனால் இறுதியில் வால்டர் தப்பித்துச் சென்றிருக்கக் கூடுமென நம்பிக்கை ஏற்படுத்துமாறு அவனுடனிருந்த சிறுவன் திரும்புவதைக் காட்டியதில் இடையில் தேவையில்லாததாகப் பட்ட காட்சிகள் அர்த்தமளிக்கின்றன. இரண்டாம் பாதியில் சில காட்சிகளைக் குறைத்து படத்தின் நீளத்தைக் குறைத்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.


7.5/10

No comments: