இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் ஆப்பிரிக்காவிலுள்ள கேசப்பிளாங்கா என்ற ஊரில் நடக்கும் கதை. புரட்சியாளர்களும் பொதுமக்களும் கேசப்பிளாங்கா வழியாக, போலி விசா மூலமாக ஜெர்மன் நாசி படைகளிடமிருந்து அமெரிக்காவிற்கு தப்பிக்கிறார்கள். விக்டர் ஜெர்மனிக்கு எதிராக கலகம் செய்யும் புரட்சியாளன். மனைவி இல்சாவுடன் (Ingrid Bergman) அமெரிக்கா தப்பிச் செல்ல கேசபிளாங்கா வருகிறான். ஆனால் ஜெர்மன் இராணுவ அதிகாரி உள்ளூர் காவல் அதிகாரி மூலமாக அவர்களுக்கு விசா கிடைக்காமல் தடுக்க முயல்கிறார்.
ஒரு தரகன் மூலமாக போலி விசா வாங்குவதற்கு ரிக்(Humphrey Bogart) நடத்தும் கஃபே-விற்கு வருகிறார்கள். அந்த தரகன் விசா பத்திரங்களை பாதுகாப்பிற்காக ரிக்கிடம் ஒப்படைத்துவிட்டு வரும்போது போலீசாரால் கொல்லப்படுகிறான்.

ரிக் இல்சாவின் முன்னாள் காதலன். புரட்சியாளனான ரிக், சில வருடங்களுக்கு முன் இல்சாவை பாரீஸில் சந்திக்கிறான். ஏற்கனவே விக்டரை மணந்த இல்சா, விக்டர் போராட்டத்தில் இறந்துவிட்டதாக தகவலறிந்து துக்கத்தில் இருக்கிறாள். ரிக்-கும் இல்சாவும் காதல் வயப்படுகிறார்கள். பாரீஸை ஜெர்மன் ரானுவம் கைப்பற்றிய நாளில் ரிக்-கும் இல்சாவும் அங்கிருந்து தப்பிக்க முடிவெடுக்கிறார்கள். அங்கிருந்து கிளம்பும் நேரத்தில் விக்டர் உயிருடன் இருப்பதாக இல்சாவிற்கு செய்தி வருகிறது. ரிக்கைப் பிரிந்து விக்டரைத் தேடிச் செல்கிறாள் இல்சா. அவளைக் காணாத ரிக் கேசபிளாங்காவிற்கு தனியாகக் கிளம்பி வந்து கஃபே நடத்துகிறான். அங்கிருந்தபடியே போராளிகளுக்கும் மறைமுகமாக ஆதரவளிக்கிறான்.
பல நாட்களுக்குப் பிறகு கஃபேயில் சற்றும் எதிர்பாராத இந்த சந்திப்பில் ரிக்-கும் இல்சாவும் அதிர்ச்சியடைகிறார்கள். விக்டரும் இல்சாவும் தப்பிச் செல்லத் தேவையான விசா பத்திரங்கள் ரிக் வசம் உள்ளன. விக்டரும் இல்சாவும் பத்திரமாகத் தப்பிச் செல்வார்களா, ரிக்-இல்சா மீண்டும் இணைவார்களா, ஜெர்மன் இராணுவ அதிகாரியால் விக்டருக்கும் ரிச்சர்டிற்கும் இருக்கும் ஆபத்து நீங்குமா என்பதை வெள்ளித் திரையில் காண்க.
முக்கோனக் காதல் கதைகளுக்கெல்லாம் முன்னோடி என்று கூறத்தக்க அளவு மிகச் சிறப்பாக எடுக்கப்பட்ட திரைப்படம் Casablanca. அதே நேரத்தில் இதை காதல் படம் என்று வகைப்படுத்தவும் முடியாது. இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் ஜெர்மன் நாஜிப்படைகள் செய்த கொடுமைகளையும், பொதுமக்கள் பட்ட அவதிகளையும், புரட்சியாளர்கள் சந்தித்த போராட்டங்களையும் வசனங்கள் மூலமாகவும் சிறுசிறு கதாபாத்திரங்கள், ரிக் நடத்தும் கஃபேயில் நடக்கும் காட்சிகள் மூலமாகவே உணர்த்தியிருப்பார்கள். அமெரிக்கா தப்பிச் செல்ல விசா வாங்குவதற்காக உயிரையும் பணயம் வைக்கத் தயாராய் இருப்பதும், ஜெர்மன் இராணுவ வீரர்களிடமிருந்து தப்பிக்க தங்களை ஆங்கிலேயர்களாகக் காட்டிக்கொள்ள அரைகுறை ஆங்கிலம் பேசும் தம்பதிகளும், தனக்கு விசா கிடைக்காவிட்டாலும் தன் குடும்பத்தார் தப்பித்தால் போதுமெனத் துடிக்கும் கதாபாத்திரங்கள் மூலமாகவும் மிகச் சிறப்பாக அன்றைய சூழலை படம்பிடித்திருக்கிறார்கள்.

இருதலைக் கொள்ளியாகத் துடிக்கும் இல்சா, அவள் மீது கொண்ட காதல் சற்றும் குறையாத ரிக், அதைப் பற்றி ஏதுமறியாமல் தன் மனைவி மேல் அளவுகடந்த அன்பை வைத்திருக்கும் விக்டர் என மூன்று கதாபாத்திரங்களும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். ரிக்-கிற்கும் இல்சாவிற்குமிடையேயான காதல் காட்சிகளும் வசனங்களுமே இந்த படத்தைத் திரும்பத் திரும்ப பார்க்க வைக்கிறது.
ரிக்-காக ஹம்ஃப்ரி போகார்ட்(Humphrey Bogart). வசன உச்சரிப்பும் பாடி லேங்குவேஜும் முகபாவங்களும்...அவரின் ரசிகனாகிவிட்டேன். அதே போல் இங்க்ரிட் பெர்க்மெனின் அழகு, நடிப்பு. ஒரே காட்சியில் வசனங்களுக்கேற்றவாறு சட்டென மாறும் முகபாவங்கள் ரசிக்கவைக்கும்.
படத்தில் பாடல்களும் உண்டு. குறிப்பாக ரிக்-கின் கஃபேயில் பாடகராக இருக்கும் சாம் இல்சாவின் விருப்பத்திற்காக பாடும் ஒரு பாடல். அந்த பாடலின்போது இங்க்ரிட் பெர்க்மெனின் நடிப்பும் பாடலின் முடிவில் போகார்ட்டின் எண்ட்ரியும் அட்டகாசம்.
ஓரிரு காட்சிகள் சிறிது நாடகத் தன்மையோடு இருப்பதாகத் தோன்றினாலும் அடுத்தடுத்து வரும் காட்சிகளும் வசனங்களும் அதை மறக்கச் செய்துவிடும். இதுவரை நான்கைந்து முறை பார்த்த பின்னும் அலுப்படையவில்லை.
உலகின் மிகச் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்களில் தவறாமல் இடம்பிடிக்கும் திரைப்படம் Casablanca. மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்றது.
படம் முடிகையில் முகத்திலே ஏற்படும் புன்னகை சில மணி நேரங்களுக்காவது நம்மோடு இருக்கும்.