Tuesday, November 27, 2007

Casablanca

பட்டையைக் கிளப்பும் வசனங்கள், ஹம்ஃப்ரீ போகார்ட்டின்(Humphrey Bogart) நடிப்பு-வசன உச்சரிப்பு, இங்ரிட் பெர்க்மெனின் (Ingrid Bergman) அழகு, இனிமையான பின்னணி இசை, பாடல்கள், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்கள், காட்சியமைப்புகள் - Casablanca திரைப்படத்தைப் பரிந்துரைக்க இதற்கு மேல் வேறென்ன காரணம் வேண்டும்.

இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் ஆப்பிரிக்காவிலுள்ள கேசப்பிளாங்கா என்ற ஊரில் நடக்கும் கதை. புரட்சியாளர்களும் பொதுமக்களும் கேசப்பிளாங்கா வழியாக, போலி விசா மூலமாக ஜெர்மன் நாசி படைகளிடமிருந்து அமெரிக்காவிற்கு தப்பிக்கிறார்கள். விக்டர் ஜெர்மனிக்கு எதிராக கலகம் செய்யும் புரட்சியாளன். மனைவி இல்சாவுடன் (Ingrid Bergman) அமெரிக்கா தப்பிச் செல்ல கேசபிளாங்கா வருகிறான். ஆனால் ஜெர்மன் இராணுவ அதிகாரி உள்ளூர் காவல் அதிகாரி மூலமாக அவர்களுக்கு விசா கிடைக்காமல் தடுக்க முயல்கிறார்.

ஒரு தரகன் மூலமாக போலி விசா வாங்குவதற்கு ரிக்(Humphrey Bogart) நடத்தும் கஃபே-விற்கு வருகிறார்கள். அந்த தரகன் விசா பத்திரங்களை பாதுகாப்பிற்காக ரிக்கிடம் ஒப்படைத்துவிட்டு வரும்போது போலீசாரால் கொல்லப்படுகிறான்.




ரிக் இல்சாவின் முன்னாள் காதலன். புரட்சியாளனான ரிக், சில வருடங்களுக்கு முன் இல்சாவை பாரீஸில் சந்திக்கிறான். ஏற்கனவே விக்டரை மணந்த இல்சா, விக்டர் போராட்டத்தில் இறந்துவிட்டதாக தகவலறிந்து துக்கத்தில் இருக்கிறாள். ரிக்-கும் இல்சாவும் காதல் வயப்படுகிறார்கள். பாரீஸை ஜெர்மன் ரானுவம் கைப்பற்றிய நாளில் ரிக்-கும் இல்சாவும் அங்கிருந்து தப்பிக்க முடிவெடுக்கிறார்கள். அங்கிருந்து கிளம்பும் நேரத்தில் விக்டர் உயிருடன் இருப்பதாக இல்சாவிற்கு செய்தி வருகிறது. ரிக்கைப் பிரிந்து விக்டரைத் தேடிச் செல்கிறாள் இல்சா. அவளைக் காணாத ரிக் கேசபிளாங்காவிற்கு தனியாகக் கிளம்பி வந்து கஃபே நடத்துகிறான். அங்கிருந்தபடியே போராளிகளுக்கும் மறைமுகமாக ஆதரவளிக்கிறான்.

பல நாட்களுக்குப் பிறகு கஃபேயில் சற்றும் எதிர்பாராத இந்த சந்திப்பில் ரிக்-கும் இல்சாவும் அதிர்ச்சியடைகிறார்கள். விக்டரும் இல்சாவும் தப்பிச் செல்லத் தேவையான விசா பத்திரங்கள் ரிக் வசம் உள்ளன. விக்டரும் இல்சாவும் பத்திரமாகத் தப்பிச் செல்வார்களா, ரிக்-இல்சா மீண்டும் இணைவார்களா, ஜெர்மன் இராணுவ அதிகாரியால் விக்டருக்கும் ரிச்சர்டிற்கும் இருக்கும் ஆபத்து நீங்குமா என்பதை வெள்ளித் திரையில் காண்க.

முக்கோனக் காதல் கதைகளுக்கெல்லாம் முன்னோடி என்று கூறத்தக்க அளவு மிகச் சிறப்பாக எடுக்கப்பட்ட திரைப்படம் Casablanca. அதே நேரத்தில் இதை காதல் படம் என்று வகைப்படுத்தவும் முடியாது. இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் ஜெர்மன் நாஜிப்படைகள் செய்த கொடுமைகளையும், பொதுமக்கள் பட்ட அவதிகளையும், புரட்சியாளர்கள் சந்தித்த போராட்டங்களையும் வசனங்கள் மூலமாகவும் சிறுசிறு கதாபாத்திரங்கள், ரிக் நடத்தும் கஃபேயில் நடக்கும் காட்சிகள் மூலமாகவே உணர்த்தியிருப்பார்கள். அமெரிக்கா தப்பிச் செல்ல விசா வாங்குவதற்காக உயிரையும் பணயம் வைக்கத் தயாராய் இருப்பதும், ஜெர்மன் இராணுவ வீரர்களிடமிருந்து தப்பிக்க தங்களை ஆங்கிலேயர்களாகக் காட்டிக்கொள்ள அரைகுறை ஆங்கிலம் பேசும் தம்பதிகளும், தனக்கு விசா கிடைக்காவிட்டாலும் தன் குடும்பத்தார் தப்பித்தால் போதுமெனத் துடிக்கும் கதாபாத்திரங்கள் மூலமாகவும் மிகச் சிறப்பாக அன்றைய சூழலை படம்பிடித்திருக்கிறார்கள்.





இருதலைக் கொள்ளியாகத் துடிக்கும் இல்சா, அவள் மீது கொண்ட காதல் சற்றும் குறையாத ரிக், அதைப் பற்றி ஏதுமறியாமல் தன் மனைவி மேல் அளவுகடந்த அன்பை வைத்திருக்கும் விக்டர் என மூன்று கதாபாத்திரங்களும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். ரிக்-கிற்கும் இல்சாவிற்குமிடையேயான காதல் காட்சிகளும் வசனங்களுமே இந்த படத்தைத் திரும்பத் திரும்ப பார்க்க வைக்கிறது.

ரிக்-காக ஹம்ஃப்ரி போகார்ட்(Humphrey Bogart). வசன உச்சரிப்பும் பாடி லேங்குவேஜும் முகபாவங்களும்...அவரின் ரசிகனாகிவிட்டேன். அதே போல் இங்க்ரிட் பெர்க்மெனின் அழகு, நடிப்பு. ஒரே காட்சியில் வசனங்களுக்கேற்றவாறு சட்டென மாறும் முகபாவங்கள் ரசிக்கவைக்கும்.

படத்தில் பாடல்களும் உண்டு. குறிப்பாக ரிக்-கின் கஃபேயில் பாடகராக இருக்கும் சாம் இல்சாவின் விருப்பத்திற்காக பாடும் ஒரு பாடல். அந்த பாடலின்போது இங்க்ரிட் பெர்க்மெனின் நடிப்பும் பாடலின் முடிவில் போகார்ட்டின் எண்ட்ரியும் அட்டகாசம்.

ஓரிரு காட்சிகள் சிறிது நாடகத் தன்மையோடு இருப்பதாகத் தோன்றினாலும் அடுத்தடுத்து வரும் காட்சிகளும் வசனங்களும் அதை மறக்கச் செய்துவிடும். இதுவரை நான்கைந்து முறை பார்த்த பின்னும் அலுப்படையவில்லை.

உலகின் மிகச் சிறந்த திரைப்படங்களின் பட்டியல்களில் தவறாமல் இடம்பிடிக்கும் திரைப்படம் Casablanca. மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்றது.

படம் முடிகையில் முகத்திலே ஏற்படும் புன்னகை சில மணி நேரங்களுக்காவது நம்மோடு இருக்கும்.

பில்லா-2007(??) பாடல்கள்


தல'யின் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் பில்லா 2007. ஏற்கனவே SRK நடித்தும் வெற்றி பெற்றது Don என்பது எல்லாருக்கு தெரிஞ்ச விஷயம்தானே. அதுக்கு முன்னாடி வளர்த்தி நடிகர் நடிச்சதாமே. இங்கே அதையே ரஜினி பண்ண, SRK செஞ்சத அஜித் பண்ண வந்திருக்காரு.

இசை: யுவன் சங்கர் ராஜா.
(அதிகமா ரீமிக்ஸ் பாடலகள் செய்திருப்பதாலோ என்னவோ இந்த ரீ மிக்ஸ் படத்திற்கும் இவரையே இசையமைப்பாளர் ஆக்கி இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாது விஷ்ணுவர்த்தனின் படத்துக்கு இதுவரை இசை அமைத்தவரும் இவரே.(குறும்பு, அறிந்தும் அறியாமலும், பட்டியல் ) மூன்றிலுமே ரீமிக்ஸ் பாடல்கள் கலக்கியது நினைவு இருக்கும்.

இந்தப் படத்தில் மொத்தம் 6 பாடல்கள் ஒரு தீம் இசை உட்பட.


My Name is Billa - பாடியது நவீன் மற்றும் கே. கே.
இது ஒரு ரீமிக்ஸ் பாட்டு என்பதால் அதிகம் மெனக்கெடாமல் பழைய பாட்டுக்கு புது இசை சேர்த்துள்ளார் யுவன். ஆனால் கிணத்துக்குள்ளே இருந்து பாடுவது மாதிரி ரெகார்டிங். இந்தப் பாட்டை இப்படித்தான் கெடுக்கனும் முடிவு பண்ணி செஞ்சு இருக்காங்க. Sound Recordingல் பாடல் கேட்பதே இல்லை, வெறும் சத்தம் தான்..(1.5/5)

செய், ஏதாவது செய்: பாடியது நித்யா ஸ்ரீ மஹாதேவன்.
ஏதோ ஒரு ஐட்டம் பாட்டு போல் இருக்கு. கேட்க நல்லாவும் வார்த்தைகளில் கொஞ்சம் அளவும் மீறி இருக்காங்க. எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கும் இன்னொரு பாடல். Sounds like தீ தீப்பிடிக்க remix. Nothing Special(1.5/5)

Theme Music- Yuvan Sankar Raja.
கேட்க நல்லா இருக்கு, கிதார் உபயோகப்படுத்திய விதம் அருமை. பழைய கிதார் இசையை electronic கிதாரில் கொண்டு வந்த விதம் புதுசு.

நான் மீண்டும் நானாக வேண்டும்: பாடியது தீபிகா.
மேலும் ஒரு ஐட்டம் பாடல். விமர்சனம் செய்யும் அளவுக்கு ஒன்றும் விஷேசம் இல்லாத பாடல் (1/5). கிதார் விளையாட்டு இதிலும் உண்டு. அதனால தான் 1/5, இல்லைன்னா (0/5)

சேவல் கொடி: பாடியது விஜய் ஜேசுதாஸ்.
இந்தப் படத்தில் முதன்மையான பாடல் இதுதான். முருகனை போற்றிப் பாடுமாறு அமைந்திருக்கிறது இந்தப்பாடல். அநேகமான யுவனின் குத்து பாடல்களில் முதல் 5 க்குள் வரும்படியான பாட்டு. அதேபோல் முருகனைப் போற்றி பாடிய பாடல்களில், சூப்பர் குத்துப் பாட்டு இதுவாகத்தான் இருக்கும். குத்துன்னா குத்து... செம குத்து. தல ரசிகர்களுக்கு கொண்டாட்டமான பாட்டு இது. அதுவும் அஜித்க்கு intro பாட்டா இதுவே இருந்தா பிரமாண்டமான ஓப்பனிங்கா இருக்கும். (4/5)

வெத்தலைய போட்டேண்டி: பாடியது ஷங்கர் மஹாதேவன்
இன்னும் ஒரு ரீமிக்ஸ் பாடல் மாதிரி ஆனா ரீ மிக்ஸ் இல்லை. கொஞ்சம் குத்து கொஞ்சம் மேற்கத்திய இசைன்னு கலக்கிய விதம் சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கு. (2.5/5)

ஆக மொத்தம் பில்லா பாடல்களுக்கு கீத்துக்கொட்டாய் குடுக்கும் மதிப்பெண் * * (2/5)

Friday, November 23, 2007

அழகிய ''காப்பி" மகன்

படத்தை எல்லாம் பாருங்க.. என்னக் கமெண்ட் அடிக்கணுமோ அடிங்கய்யா..




முடியல்ல.....ம்ம்ம்ம்...முடியல்ல.. ஸ்ப்பா இப்பவேக் கண்ணைக் கட்டுதே



அய்யா ஆல் ரவுண்ட் கில்லி மா



என்னக் கொடுமை இது (டாக்டர்) சரவணன்??



TRuE BluFF MAstER



எவ்வளவோ பாத்துட்டோம் இதையும் பாக்க மாட்டோமோ...



முடிவெடுத்துட்டா முடிவை மாத்துறதே இல்ல... நல்லாயிருங்கப்பா...

அதுமட்டும் இல்லீங்கண்ணா, காப்பி இன்னும் தொடரும்.
கதை: 1990ல் வெளி வந்து, மம்முட்டி நடித்த "ஐயர் தி கிரேட்"
விஜய் சொல்லும் கவிதை(?!): எஸ்.வி. சேகர்.
எல்லா காமெடியும்(?!): பழைய படங்களும், புத்தகங்களும். அசத்தப்போவது யாரு, இல்லேன்ன கலக்கப் போவது யாரு டீமுக்கு அவுட் சோர்ஸ் பண்ணி இருக்கலாம். எல்லாம் பழசு.
விஜயின் நடனம்: புது மூவ்மெண்ட்ஸா இல்லியா விஜய் சார்? சத்தமே இல்லைன்னா கூட செம குத்தாட்டம் போடுவாரு போல. (வெளங்கிரும்). எதுக்குய்யா இப்படி ஜிங்கு ஜிங்குன்னு குதிக்கனும். "அ ஆ" படத்துல சூர்யா பாட்டே சூப்பரு.

Wednesday, November 21, 2007

Anukokunda Oka Roju

ஒரு நாள் முழுக்க என்ன நடந்ததென்றே தெரியாமல் அனைத்தும் மறந்துபோனால் எப்படியிருக்கும்? அன்று நமக்கு என்ன நேர்ந்தது, என்ன செய்துகொண்டிருந்தோம் என்பதெல்லாம் பெரும் புதிராக இருக்குமல்லவா? அன்று நடந்த நிகழ்வுகளை எப்பாடுபட்டாவது கண்டுபிடித்துவிட துடிப்போம் அல்லவா?

வழக்கமான மசாலா கதைகளைத் தவிர்த்து வித்தியாசமான கதையுடன் சுவாரசியமான நெருடலில்லாத திரைக்கதையுடன் எடுக்கப்பட்ட திரைப்படம் Anukokunda Oka Roju.

சஹஸ்ரா பின்னணி பாடகி. கல்லூரி மாணவி. ஒரு நாள் தன் தோழியுடன் ஒரு பார்ட்டிக்கு செல்கிறார். அங்கு அவருக்குத் தெரியாமல் நண்பர்கள் அவருக்கு போதை மருந்து தந்துவிடுகிறார்கள். சஹஸ்ரா அங்கிருந்து தானாகக் கிளம்பிவிடுகிறார். வீட்டிற்கு வந்து தூங்கி விழிக்கும் சஹஸ்ரா இரண்டு நாட்கள் கடந்துவிட்டதை உணர்கிறார். தான் தொடர்ந்து இரண்டு நாட்கள் தூங்கிவிட்டதாக நினைக்கிறார். ஆனால் சில நாட்கள் கழித்து அவரை ஒருவன் கொலை செய்ய முயற்சிக்கிறான். தான் சுயநினைவு இழந்த அன்று ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்கிறார் சஹஸ்ரா. அன்று தன்னை வீட்டில் விட்ட டாக்ஸி டிரைவர் உதவியுடனும், போலீஸ் அதிகாரி ஜெகபதி பாபு உதவியுடனும் பல்வேறு துப்புகளைப் பின் தொடர்ந்து அன்று என்ன நடந்ததெனக் கண்டுபிடிக்கிறார்கள்.

படத்தின் முற்பாதியில் காமெடியாகவும் பின்னர் சஹஸ்ராவிற்கு அன்று என்ன நடந்ததென சஸ்பென்ஸை எழுப்பிவிட்டு பிற்பாதியில் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து சுவாரசியமாக படமாக்கியிருக்கிறார்கள்.



சஹஸ்ராவாக 'காதல் அழிவதில்லை' புகழ்(?!)சார்மி. படத்தின் ஆரம்பத்தில் ஜாலியான கல்லூரி மாணவியாகவும் பின்னர் ஒரு நாள் என்ன நடந்ததெனத் தெரியாமல் தவிப்பதிலும் அம்மணி வெளுத்துக் கட்டியிருக்கிறார். அவர் நடித்து நான் பார்த்த இரண்டு மூன்று படங்களில் இந்த படத்தில் ரொம்பவே அழகாகயிருக்கிறார். சிறப்பாக நடித்திருக்கிறார்.

சஸ்பென்ஷனில் இருக்கும் போலீஸ் அதிகாரியாக ஜெகபதி பாபு. தெனாவெட்டான கதாபாத்திரத்திற்கு மனிதர் கச்சிதமாகப் பொருந்துகிறார். நக்கலான டைமிங் டயலாக்குகளும் பின்னர் சார்மியை ஈர்ப்பதற்காக அவர் செய்யும் சில்மிஷங்களும் கலக்கல்ஸ் ஆப் ஹைதராபாத். டாக்ஸி டிரைவராக நான் இதற்கு முன்னர் பார்த்தேயிராத ஹீரோ. பெயர் சஷாங்க்-காம். நன்றாகவே நடித்திருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்தில் சஹஸ்ரா தங்கியிருக்கும் அபார்ட்மெண்டில் நடக்கும் காமெடி காட்சிகள் படு ஜாலி. அதிலும் தம்முடு வாத்தியார் ஒருவர் கலக்கியிருக்கிறார். அரைகுறை ஆங்கிலத்தில் அனைவரிடமும் ஆப்பு வாங்குவதில் ஸ்பெஷலிஸ்ட். ஆங்கிலத்தை பிச்சி உதறுவார். ஒரு உதாரணம் - 'You dance. I glance'. ஒரு ஹிந்தி ஆண்ட்டியுடன் இவர் சண்டை கட்டும் காட்சிகள் செம காமெடி.

நாயகி பின்னணி பாடகி. ஆனாலும் பாடல்கள் ஓகே ரகம் தான். த்ரில்லர் படமென்று காட்சிகளைத் த்ரில் ஆக்குவதாக நினைத்து பின்னணி இசையை ஓவர் இரைச்சல் ஆக்காமல் சிறப்பாகவே அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர். ஜாலியான வசனங்கள் படத்தின் பெரும்பலம். மிகவும் சீரியசான காட்சியில் கூட யாராவது டைமிங் ஜோக் அடிக்கிறார்கள். படத்தின் ஆரம்ப காட்சிகளிலேயே எதிர்பார்ப்பை உண்டாக்கி அதற்கேற்றவாறு சற்றும் தொய்வில்லாமல் படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில் அனுகொகுண்ட ஒக்க ரோஜு - மன்ச்சு ஃபிலுமு.

Sunday, November 18, 2007

One Flew Over the Cuckoo's Nest

ஒரு திரைப்படத்தின் கதையும் கதாபாத்திரங்களும் பார்ப்பவரிடத்தில் ஏற்படுத்திச் செல்லும் தாக்கம் நீண்ட நாட்களுக்கு நிலைக்குமேயானால் அது மிகச் சிறந்த திரைப்படமாகப் போற்றப்படும். நம்மை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் அத்தகைய திரைப்படங்களின் பட்டியல் மிகப் பெரியது. அவ்வாறான ஒரு திரைப்படம் தான் One Flew Over the Cuckoo's Nest.

ராண்டல் மெக்மர்ஃபி என்னும் குற்றவாளி சிறைச்சாலை வேலைகளிலிருந்து தப்பிப்பதற்காக பொய்யாக மனநோய் இருப்பதாகச் சொல்லி மனநல காப்பகத்திற்குக் கொண்டுவரப்படுகிறான். அந்த மனநலக் காப்பகத்தில் மனநோயின் பல்வேறு கட்டத்தில் இருப்பவர்கள் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். சிலர் தாமாகவே அங்கு வந்து தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். ரேட்சட் என்னும் நர்ஸ் அந்த காப்பகத்தின் நிர்வாகியாக இருக்கிறார். நோயாளிகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிருக்கும் கண்டிப்பான நர்ஸாக இருக்கிறார். ஒவ்வொரு நோயாளியையும் அவர்கள் மனநோய்க்கான காரணத்தை நினைவூட்டியே அவர்களின் பயத்தை அதிகரித்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.

வாழ்க்கையின் ஓவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டும் என்று சித்தாந்தம் பேசும் மெக்மர்ஃபி ரேட்சட்டின் கண்டிப்புக்கு அடங்க மறுக்கிறான். ரேட்சட் அவர்களை யோசிக்கவே விடாமல் மனநோயாளிகளாகவே வைத்திருப்பதாகச் சொல்கிறான் மெக்மர்ஃபி. ரேட்சட்டுடன் சண்டை போடுவதும், சந்தோஷமாகப் பொழுதைக் கழிப்பதும் மற்ற நோயாளிகளை அவன்பால் ஈர்க்கின்றன. அவனிடம் நட்பு கொள்கின்றனர். வாழ்க்கை மேல் உள்ள பயம் காரணமாக ஊமைசெவிடனாக நடிக்கும் சீஃப் என்ற நோயாளி மெக்மர்ஃபியுடன் நெருங்கிப் பழகுகிறான்.



அத்தனை நாட்களாக ரேட்சட்டின் கட்டுப்பாட்டில் நோயாளிகள் போல் வாழ்ந்த அவர்கள் பயத்தைக் குறைக்கின்றான். இதனால் ரேட்சட்டுக்கும் மெக்மர்ஃபிக்கும் சண்டை வலுக்கிறது. ரேட்சட் இருக்கும்வரை தன்னால் காப்பகத்தில் இருந்து வெளியேற முடியாது என்று உணரும் மெக்மர்ஃபி தப்பி ஓட முடிவெடுக்கிறான். தப்புவதற்கு முந்தைய இரவு நோயாளிகளுடன் குடித்து உல்லாசமாகக் கழிக்கிறான். அடுத்த நாள் அத்தனை பேரும் ரேட்சட்டிடம் சிக்கிவிடுகின்றனர். அப்போது ரேட்சட்டிற்கும் மெக்மர்ஃபிக்கும் இடையில் தக்ராறு ஏற்பட்டு மெக்மர்ஃபி ரேட்சட்டைத் தாக்க முற்படுகிறான். அதற்குள் காவலாளிகளால் பிடிக்கப்பட்டு தனியாக அழைத்துச் செல்லப்படுகிறான். அவனுக்கு Lobotomy செய்யப்படுகிறது. மூளையின் ஒரு பகுதியை அறுவை சிகிச்சை மூலம் துண்டித்துவிடுகிறார்கள். கிட்டத்தட்ட நடைபிணமான நிலையில் அவனை மீண்டும் கொண்டு வருகிறார்கள். அவனை அந்த நிலையில் காணத் தாங்காமல் சீஃப் ஒரு விடியலில் மெக்மர்ஃபியைக் கொன்றுவிட்டு தப்பிக்கிறான். வலிமையான பின்னணி இசையுடன் படம் முடிகிறது.

திரைப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமையாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நொடியும் சுதந்திரமாக சந்தோஷமாகக் கழிக்கும் மெக்மர்ஃபி, காப்ப்கத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கண்டிப்பான நர்ஸ் ரேட்சட், மனநோயின் பல்வேறு கட்டங்களில் இருக்கும் நோயாளிகள் என இப்படத்தின் கதாபாத்திரங்கள் என்றும் நினைவில் தங்குபவை.



மெக்மர்ஃபியாக ஜாக் நிக்கல்சன்(Jack Nicholson). தலைவரின் நடிப்பைப் பற்றி ஒன்றுமே சொல்ல வேண்டாம். ஆஸ்கர் விருது வாங்கித் தந்த கதாபாத்திரம். அத்தனை நடிகர்களுமே தங்கள் தேர்ந்த நடிப்பால் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு வலுவூட்டியிருக்கிறார்கள்.

நேர்க்கோட்டில் செல்லும் திரைக்கதையில் பல காட்சிகள் நம்மை கவரும். மெக்மர்ஃபி மனநல காப்பகத்திற்கு வரும் ஆரம்பகட்ட காட்சிகள், நோயாளிகள் தங்கள் தயக்கம் நீங்கி அவனுடன் பழகும் காட்சிகள், அவன் தப்பிப்போகும் முன்னிரவு நோயாளிகள் உல்லாசமாக இருக்கும் காட்சி, இறுதியில் சீஃப் அவனைக் கொன்றுவிட்டு தப்பிக்கும் காட்சி என படம் நெடுக நம்மை ஒன்றச் செய்யும்.

மெக்மர்ஃபி காப்பகத்திலுள்ள மனநோயாளிகளிடமும் படம் பார்க்கும் நம்மிலும் ஏற்படுத்திச் செல்லும் தாக்கம் பெரிது. One Flew Over the Cuckoo's Nest கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.

Tuesday, November 6, 2007

பாசத்தமிழனாக சூர்யாவின் வேல்



ஹலோ சூர்யா தள்ளி நில்லுங்க இது உங்க படம் இல்ல புரியுதா?

சரி இனிமே விமர்சனத்துக்குப் போலாம் ரைட்டா

தீவாளிக்கு என்னப் படம் போலாம்ன்னு யோசிச்சு கொஞ்சம் முன் ஜாக்கிரதையா முடிவெடுத்துப் போனப் படம் நம்ம சூர்யா & சூர்யா நடிச்ச வேல் படம் ... ரெண்டு சூர்யாங்க.. ரெண்டும் நம்ம ஜோவின் சூர்யா தான்.. எஸ்.ஜே.சூர்யாவோடு போட்டு குழப்பிக்காதீங்க...

படத்தோட இயக்குனர் ஹரின்னு தெரிஞ்சதும் கதையும் தெரிஞ்சுப் போச்சு... போஸ்ட்டர் மற்றும் ட்ரெயிலர்களில் படத்தை தீபாவளிக்கு முன்னாடியே பலத் தடவைப் பார்த்து பழகிய பின்னும் தியேட்டருக்கு வேற போயிட்டோம் இல்ல.







ஒரு காலத்துல்ல வில்லனா அசத்துன சரண்ராஜ் இந்தப் படத்துல்ல அடக்க ஒடுக்கமான அப்பா...என்னக் கொடுமை சார் இது.. அவருக்கு மனைவியாக சூர்யாஸ் அம்மாவாக தவமாய் தவமிருந்து புகழ் அம்மா சரண்யா

ட்ரெயின்ல்ல நகையைத் தொலைப்பாங்க... பணத்தைத் தொலைப்பாங்க.. நம்ம வேல் படத்துல்ல சரண்ராஜூம் அவர் மனைவியும் குழந்தையைத் தொலைக்கிறாங்க.. ஆதி காலத்து ஜெய்சங்கர் படங்கள் ஞாபகம் வரும் விதமாக..

ஒரு சூர்யா சிட்டி கையாவும்... இன்னொரு சூர்யா கிராமத்தில் பெரிய கை யாகவும் வளர்ந்து வாழுகிறார்கள்.

சிட்டி கை சூர்யா..ஒரு துப்பு துலுக்கும் அலுவலகத்தில் முக்கிய புள்ளியாக டூட்டி பார்க்கிறார்..அதே சமயத்தில் ஸ்கூட்டியில் வரும் பியூட்டி அசினோடு டுயட் பாடுகிறார்..

சொக்கம் பட்டி கை சூர்யா.. காக்க காக்க ஜீப் மாடலில் ஒரு ஜீப்பில் ஏறி ஐசக் நியூட்டன் அரும்பாடு பட்டு கண்டுபிடித்த அனைத்து இயற்பியல் விதிகளை அநியாயத்துக்கு நக்கல் அடிக்கிறார்.. நோ வாக்கிங்... கிராமத்து அறிமுகமே பிளையிங் தான்....ஹரி படங்களின் முக்கிய கதாபாத்திரமான அருவாள் இதில் கிராமத்து சூர்யா மற்றும் அவர் அடியாட்கள், சூர்யாவை எதிர்க்கும் வில்லன் கோஷ்ட்டியோட படம் முழுக்க மற்றும் ஒரு முக்கிய ரோலில் கிழி கிழி எனக் கிழிக்கிறது.

கிராமத்துச் சூர்யாவுக்கும் அவரைத் தத்து எடுத்த குடும்பத்துக்கும் நிரந்தர தலைவலி தரும் வில்லனாக கலாபவன் மணி.. அவருடைய் வழக்கமான சேட்டைகள் கொஞ்சம் கம்மி தான் இந்தப் படத்தில்.

இந்தப் பிரச்சனை ஒரு புறம் என்றால்.. குழந்தையைத் தொலைத்த அம்மாவின் பாசம் என இன்னொரு பக்கம் கதையை நகர்த்துகிறார் ஹரி... கதையின் இடைவேளையில்... சாரி படத்தின் இடைவேளையில் இரண்டு சூர்யாக்களும் நேருக்கு நேர் சந்திக்க பாசப் போராட்டமாய் படம் ட்ராக் மாறுகிறது..

இரட்டை வேடக் கதைகளுக்கே உரித்தான ஆள் மாறாட்டம்..அதன் மூலம் ஒருவர் பிரச்சனையை ஒருவர் தீர்ப்பது என அமைக்கப்பட்ட இலக்கணத்தை கடைப்பிடித்து படம் போகிறது. இறுதியில் நன்மை வெல்கிறது தீமை சாய்கிறது சுபம்.. இது தான் வேல்

சூர்யாவுக்கு இரட்டை வேடம்.. அதிகம் வித்தியாசம் எல்லாம் காட்ட வேண்டிய அவசியம் இல்லாத இரட்டை வேடம். காக்க காக்க ஜிப்பில் ஏறி போனத் தடவை துப்பாக்கி தூக்கிய சூர்யா இந்த முறை அதே ஜீப்பில் ஏறி அருவாள் தூக்குகிறார். மொறைப்பும் விறைப்புமாகத் திரிகிறார். அசினை அளவோடு காதலிக்கிறார்.பாசக்காரப் பயலாக பெத்த அம்மா அப்பா, வளர்ப்பு குடும்பம் என மொத்தப் பேரிடம் பொங்குகிறார். மத்தப் படி சொல்லிக்கிற மாதிரி பெரிய வேலை எல்லாம் அவருக்கு இல்லை.

அசினுக்கும் பெரிய வேலை. சூர்யாவைக் காதலிக்கணும். ஆடணும் பாடணும். போஸ்டருக்குப் போஸ் கொடுக்கணும். அதை செய்துவிட்டு போகிறார்.

பாசமழையைக் கண்டப் படி பொழியும் கதாபாத்திரங்களில் சரண்யா, சரண்ராஜ், லட்சுமி,ராஜ்கபூர் மற்றும் பலர். வில்லன் கலாபவன் மணிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா. சார்லி மற்றும் வையாபுரிக்கு சின்ன வேடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

படத்தில் முக்கியமான வேடத்தில் வடிவேலு...வழக்கமான பாணி காமெடி என்றாலும் சிரிக்க வைக்கிறார். அறிமுக காட்சியில் இருந்து அவர் அலம்பல் ஆரம்பம் ஆகிறது.

பாடல்கள் யுவன் ஷங்கராம்..நம்ப முடியவில்லை...பாடல்கள் ஹரியும் எழுதியிருக்கிறாராம்....கேட்டாலே சும்மா அருவாள் எடுத்து முதுகைத் தேய்க்கணும் போலிருக்கு..

படத்துக்கு நடன அமைப்பாளர் கிடைக்கல்லயா இல்ல ஷீட்டீங் அன்னிக்கு லீவ்ல்ல போயிட்டாரான்னு தெரியல்ல.. அதுவும் அந்த வெளிநாட்டு பாடல் காட்சியில் ஆட்டமே ஆடுகிறதுன்னாப் பாருங்க..

மொத்தத்தில் வேல் ஒரு கீத்துக்கொட்டா முன் வரிசை ரசிகன் என்ன எதிர்ப்பார்ப்பானோ அதை கொடுக்க முயற்சி பண்ணி இருக்கார் ஹரி.

பிகு: இந்த படத்தில் முதல் முறையாக சூர்யாவும் பஞ்ச் டயலாக் எல்லாம் பேசி பல்ஸ் எகிற வைத்திருக்கிறார்.