- Stanley Kubrick on "2001-A Space Odyssey"
பரிணாம வளர்ச்சிக்கான உந்துதல் என்ன? குரங்கை மனிதனாக மாற்றிய சக்தி எது? கருவிகளும் ஆயுதங்களும் உருவாக்க மனிதனுக்கு ஊக்கமாய் இருந்தது எது? இந்த ஏணியில் மனிதனுக்கு அடுத்த நிலை என்ன? மனிதனின் பரிணாம வளர்ச்சியில் அறிவியலின் பங்கு என்ன? தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த பால்வெளியில் மனிதனால் எவ்வளவு தூரம் கடக்க முடியும்? தொழில்நுட்பத்திற்கும் மனிதனுக்குமான நட்புறவு நீடிக்குமா? செயற்கை நுண்ணறிவு பெற்ற இயந்திரங்கள் அவை உருவாக்கப்பட்ட குறிக்கோள்களுக்கு இயைந்து செயல்படுமா? அந்த இயந்திரங்களின் இருப்புக்கு ஆபத்து நேரும்போது அதை அவ்வியந்திரங்கள் எவ்வாறு எதிர்கொள்ளும்? வேற்றுலக உயிரினங்கள் இருப்பது உண்மையா? அவர்கள் மனிதனை விட அறிவிலும் ஆற்றலிலும் மேம்பட்டவர்களா? உயிர் என்பது என்ன? உடலுடனான அதன் உறவென்ன? மனிதனால் உணரக்கூடிய பரிமாணங்களைத் தாண்டி வேறெதும் உள்ளனவா? அவற்றை மனிதனால் ஆட்கொள்ள இயலுமா? இது போன்ற பற்பல கேள்விகள் பல்வேறு கட்டங்களில் எழுப்பப்பட்டுள்ளன. இவற்றில் சில்வற்றிற்கு ஆதாரப்பூர்வ பதில்கள் கிடைத்துள்ளன். சில பதில் தெரியாத மர்மமாகவே நீடிக்கின்றன. இந்த கேள்விகளினூடாக நம்மை ஒரு கால இயந்திரத்தில் அழைத்துச் செல்கிறது 2001: A Space Odyssey.
மனித இனத்தின் விடியல் : The Dawn of Man
இத்திரைப்படம் நான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னான ஒரு காலைப் பொழுதில் ஆரம்பிக்கிறது. மனித இனத்தின் முந்தையர்களான குரங்குகள் குழுக்களாக ஆப்ரிக்க காட்டில் வாழ்கின்றன. தங்களைத் தாக்கவரும் சிறுத்தை முதலான விலங்குகளிலிடமிருந்தும் மற்ற குரங்கு குழுக்களிடமிருந்தும் காப்பாற்ற வழியில்லாமல் அச்சத்தில் வாழ்கின்றன. இரவு நேரத்தில் மிருகங்களுக்கு அஞ்சி குழிகளில் உறங்குகின்றன. அடுத்த நாள் விடியலில் அந்த குரங்குக் கூட்டங்கள் பதுங்கியிருக்கும் குழிக்கு அருகினில் ஒரு மோனோலித் கல் இரவோடிரவாக நிறுத்தப்பட்டிருக்கிறது. அந்த கல் அங்கு எப்படி வந்ததென்பதற்கான குறிப்புகள் இல்லை. முதலில் அதைக் கண்டு அச்சுறும் குரங்குகள் மெல்ல அக்கல்லை நெருங்குகின்றன. அக்கூட்டத்தின் தலைவன் போலிருக்கும் குரங்கு அக்கல்லை நெருங்கித் தொடுகிறது.

அந்த குரங்கு இறந்துகிடந்த ஒரு விலங்கின் எலும்பைக் கையிலெடுக்கிறது. அதை ஆயுதமாக உபயோகிக்கக் கூடிய சாத்தியம் அக்குரங்கின் மூளையை எட்டுகிறது. அதுவரையில் புல்பூண்டுகளைத் தின்று வாழ்ந்துகொண்டிருந்த குரங்குகள் அந்த எலும்பென்னும் ஆதி ஆயுதத்தைக் கொண்டு மற்ற விலங்குகளைக் கொன்று புசிக்கின்றன. மற்ற குழுக்களிடமிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்கின்றன. மனிதனுக்கும் கருவிகளுக்குமான உறவு அந்த விடியற்பொழுதில் ஆரம்பமாகின்றது.
The Lunar Journey in the Year 2000
ஆண்டு - கி.பி 2000. மனிதன் பூமியை மட்டுமல்லாது பால்வெளியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் துடித்துக்கொண்டிருக்கும் காலம். நான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் குரங்கினம் கண்டு அஞ்சிய கல்லைப் போன்றே நிலவில் ஒரு கல் கண்டுபிடிக்கப்படுகின்றது. ஆனால் அந்த செய்தி மற்றவர்களிடமிருந்து மறைக்கப்படுகின்றது. அக்கல்லை ஆராய்ச்சி செய்வதற்காக பூமியில் இருந்து ஹேவுட் ஃப்ளாயிட் செல்கிறார். அவரின் விண்வெளிப் பயணம் விரிவாகக் காட்டப்படுகிறது. ஈர்ப்புவிசையற்ற அந்த விண்கலத்தில் மனிதன் தன் வாழ்வுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் காட்சிகளாக விரிகின்றது.

நிலவுக்குச் செல்லும் ஃப்ளாயிட் அங்குள்ள குழுவினருடன் கலந்தாலோசித்த பின்னர் அக்கல்லை பார்க்கச் செல்கிறார். சிறிது தயக்கத்திற்குப் பிறகு அக்கல்லை நெருங்கித் தொடும்போது அக்கல் மின்காந்த அலைகளை வெளியிடுகிறது. அவ்வலைகள் வியாழன் கிரகத்தை நோக்கி செலுத்தப்படுவதாக ஆராய்ந்து கண்டுபிடிக்கிறார்கள்
வியாழனை நோக்கி: Jupiter Mission
ஒரு வருடம் கழித்து 2001-ல் டிஸ்கவரி விண்கலத்தில் விஞ்ஞானிகள் வியாழன் கிரகத்தை நோக்கி பயணிக்கிறார்கள். டிஸ்கவரி விண்கலம் மனித முளையையொத்து வடிவமைக்கப்பட்ட HAL-9000 என்னும் கணிணியினால் இயக்கப்படுகிறது. ஐந்து பேர் கொண்ட விஞ்ஞானிகள் குழுவில் மூவர் ஆழ்நித்திரைக்கு(hibernate) உட்படுத்தப்படுகின்றனர். மற்ற இரு விஞ்ஞானிகள், ப்ராங்க்கும் டேவ் போமேனும் கூட தொலைக்காட்சி பார்த்தும் உடற்பயிற்சி செய்தும் HALலுடன் சதுரங்கம் விளையாடியும் பொழுதைக் கழிக்கின்றனர். விண்கலத்தின் முழுக்கட்டுப்பாடும் HALலிடம் இருக்கின்றது. சந்திரனில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லின் மூலத்தைக் கண்டுபிடிக்கச் செல்கிறோம் என்பது அந்த விஞ்ஞானிகளிடமிருந்து மறைக்கப்படுகிறது. HAL மட்டுமே இந்த பயணத்திற்கான நோக்கத்தை அறிந்துள்ளது. தன்னைச் சுற்றி நடப்பவைகளைப் பார்த்து அறிந்து கொள்ளவும் மனிதர்களுடன் பேசவும் அவர்களின் எண்ணவோட்டங்களை படிக்கவும் HAL திறன்படைத்துள்ளது.

பயணத்தினூடே பூமியுடன் தொடர்பு கொள்ளும் ஆண்டெனா பழுதடைந்துள்ளதாக HAL தெரிவிக்கின்றது. அதை மாற்றுவதற்காக ஃப்ராங்க் ஒரு விண் ஓடத்தில் அந்த ஆண்டெனாவை நோக்கி பயணிக்கிறார். மிக மிக நுணுக்கமாக ஒவ்வொரு அசைவும் நிதானமாகக் காட்டப்படுகிறது. அந்த ஆண்டெனாவை மாற்றிவிட்டு வந்ததும் பூமியிலுள்ள கட்டுப்பாட்டு நிலையத்தைத் தொடர்புகொள்ளும் ஃப்ராங்க்கும் டேவ்வும் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். பூமியிலிருந்து அது உண்மையான பழுதாக இருக்காதென்று தெரிவிக்கிறார்கள். எவ்வித தவறும் செய்யாது என்று நம்பப்படும் HAL கணிணி முதன்முதலாக ஒரு தவறான தகவலைத் தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் தங்கள் பயணத்திற்கும் பயணத்தின் குறிக்கோளுக்கும் ஏதேனும் ஆபத்து நேருமென அஞ்சும் ஃப்ராங்க்கும் டேவ்வும் HAL கணிணியை செயலிழக்க முடிவெடுக்கின்றனர். இதை HAL அறிந்துகொள்கிறது.

செயற்கை நுண்ணறிவு கொண்ட HAL கணிணிக்கும் மனிதர்களுக்குமான(ப்ராங்க், டேவ்) போராட்டம் இப்பகுதியில் விரிவாகக் காட்டப்படுகிறது. பரிணாமத்தின் இந்த கட்டத்தில் மனிதன் தன் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளிடமிருந்தே தன்னை தற்காத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.
வியாழன் மற்றும் முடிவிலிக்கப்பால் - Jupiter and Beyond the Infinite:
HAL தன்னைக் காத்துக்கொள்ள விண்கலத்திலுள்ள மற்ற விஞ்ஞானிகளை அழிக்கிறது. ஆனால் டேவ் HAL-ஐ செயலிழக்க வைக்கிறார். இப்போது விண்கலம் முற்றிலும் டேவ்வின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. டேவ் தன் பயணத்தை தொடர நினைத்து ஒரு விண்வெளி ஓடம் மூலம் வியாழனை நோக்கிப் பயணிக்கிறார். அங்கு விண்வெளியின் விந்தைகள் அவர் கண்முன் விரிகின்றன. வியாழன் கிரகத்தின் நிலப்பரப்பைக் கண்டு அதிசயிக்கிறார். அங்கு ஏற்கனவே நிலவில் கண்டதைப் போன்ற கல்லைக் காண்கிறார்.
அடுத்த காட்சியில் டேவ் விண்வெளி ஓடத்திலிருந்து ஒரு வெளிச்சமான அறையில் இருப்பதாகக் காட்டப்படுகிறது. இது மனிதனின் அடுத்த பரிணாம வளர்ச்சியாகக் கொள்ளலாம். விண்வெளியில் பறந்த மனிதன் அடுத்தகட்டமாக நான்காவது பரிமானத்தில் பயணிக்கும் சக்தி பெருகிறான். டேவ் தான் வயது முதிர்ந்திருப்பதை தானே காண்கிறான். வயது முதிர்ந்த டேவ் தனியாக உணவருந்துகிறான். எவ்வித அசைவுமின்றி படுக்கையில் கிடக்கிறான்.
படுக்கையில் கிடக்கும் டேவ் முன் மீண்டும் அந்த கல் தோன்றுகிறது. மனிதன் அடுத்த பரிணாம வளர்ச்சிக்குத் தயாராகிறான். பரிணாமத்தின் அடுத்த கட்டத்தில் உயிருக்கு உடலோ நிலமோ தேவைப்படவில்லை. ஒரு நட்சத்திரக் குழந்தையாக விண்வெளியில் மிதந்துகொண்டிருக்கிறது.

ஸ்டான்லி குப்ரிக்கும் ஆர்தர் சி.கிளார்க்கும் இணைந்து குரங்கிலிருந்து ஆரம்பித்த பரிணாம வளர்ச்சி உடலை விடுத்த நட்சத்திரக் குழந்தையாக முன்னேறுவதை இரண்டரை மணி நேரத்தில் ஒரு காலப் பயணத்தை திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள் . ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றும் அந்த மோனோலித் கல் வேற்றுகிரக வாசிகளால் பரிணாம வளர்ச்சியின் அளவுகோலை அறிய ஒவ்வொரு நிலையிலும் வைக்கப்பட்டதா அல்லது பரிணாம வளர்ச்சியின் குறியீடா என்பனவற்றை படத்தில் விவரிக்காமல் படம் பார்ப்பவரின் கற்பனைக்கே விட்டுவிடுகிறார்.
நுண்ணிய விவரங்களுடன் ஒவ்வொரு அசைவாக மிக மெதுவாக காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நிலவுக்கு ஃப்ளாயிட்டின் பயணமும், ஆண்டெனா மாற்றும் காட்சியில் விண்கலத்திலிருந்து ஆண்டெனாவை நோக்கி ஓடத்தில் பயணப்படும் காட்சியும், ஓடத்திலிருந்து ஆண்டெனாவிற்கு ஆக்சிஜன் குழாய் உதவியுடன் சுவாசித்தபடி விண்வெளியில் மிதந்து செல்லும் காட்சியும் மிகமிக நேர்த்தியுடன் நுணுக்கமாக காட்டப்பட்டுள்ளன.
இரண்டரை மணி நேரப் படத்தில் வரும் வசனங்களை அரைப் பக்கத்தில் எழுதிவிடலாம். படத்தில் அதிகமாக பேசும் கதாபாத்திரம் HAL கணிணிதான். மற்றனைத்தும் சினிமா என்பது காட்சி ஊடகம் என்ற கூற்றினை மெய்யாக்குவது போல் காட்சிகளாக நம் முன் விரிகின்றன. சிம்பொனி/செவ்வியல் இசை பின்னணி இசையாக படம் நெடுகிலும் உபயோகிக்கப்பட்டுள்ளது சிறப்பு. செவ்வியல் இசை நம்மைக் காட்சியுடன் ஒன்றவைக்கின்றது. பல இடங்களில் எல்லையில்லா மெளனம். விண்வெளியில் காட்டப்படும் காட்சிகள் அங்கு உண்மையாக இருப்பதைப் போன்ற அடர்ந்த மெளனத்துடன் படமாக்கப்பட்டுள்ளன.
1968-ல் எடுக்கப்பட்ட இப்படம் அதன் காலத்தைக் கடந்து 2001ல் விண்வெளி ஓடங்களின் வடிவமைப்பு, தொலைத்தொடர்பு சாதனங்கள், விண்கலத்தில் 360 டிகிரியில் நடக்கும் மனிதர்கள், செயற்கை நுண்ணறிவு கொண்ட கணிணிகள், வியாழன் கிரகத்தின் நிலப்பரப்பு என அனைத்துமே மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. சிறந்த விஷுவல் எஃபெக்டுக்கான ஆஸ்கர் விருது ஸ்டான்லி குப்ரிக்குக்கு வழங்கப்பட்டது.
மிக மிகப் பொறுமையாக நகரும் இத்திரைப்படம் சமயத்தில் அயர்ச்சியை ஏற்படுத்தக்கூடும். ஆனால் ஒரு அரிய பயணத்திற்கான எல்லா ஆயத்தங்களையும் செய்துகொண்டு எவ்வித எதிர்பார்ப்பும் முன்முடிவுகளுமின்றி இத்திரைப்படத்தைப் பாருங்கள். காலங்களைக் கடந்து செல்லும் இப்பயணம் ஒரு சுகானுபவமாக அமையும்.