Thursday, August 30, 2007
தங்கர் பச்சானின் பள்ளிக்கூடம்
தங்கர்பச்சான் இயக்கி நடிகர்கள் நரேன், சினேகா, இயக்குனர் சீமான், எஸ்.எஸ்.மியூசிக் புகழ் ஸ்ரேயா மற்றும் தங்கர்பச்சானும் நடித்து வெளிவந்திருக்கும் படம் பள்ளிக்கூடம். படத்தின் இசை பரத்வாஜ்.
ஒரு கிராமத்தின் கல்வித் தாகத்தை தீர்த்து வைக்கும் கேணியாக பல ஆண்டுகளாய் எழுந்து நின்ற பள்ளிக்கூடமொன்று பல்வேறு சிக்கல்களால் மூச்சு திணறி மூடு விழா காண இருக்கிறது. அந்த மூடு விழாவை தடுத்து நிறுத்தி பள்ளிக்கூடத்தைக் காக்க பழைய மாணவர்கள் மேற்கொள்ளும் முயற்சியே பள்ளிக்கூடத்தின் ஒற்றை வரி கதை.
அழகியின் கதைக் களம் மீது தங்கர் கொண்ட காதல் இன்னும் குறையவில்லை போலிருக்கிறது.. அதே மண் சார்ந்தே பள்ளிக்கூடமும் படமாக்கப்பட்டுள்ளது.
பழைய மாணவர்களாய் சித்திரம் பேசுதடி நாயகன் நரேன், இயக்குனர் சீமான், தங்கர்பச்சான் மற்றும் சினேகா. கச்சிதமான தேர்வு. பொருந்துகிறார்கள்.
நரேன் காதலனாய் வரும் காட்சிகளை விட கலெக்டராய் நல்லாச் செய்து இருக்கிறார். பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய குடும்பத்தில் இருந்து வந்து வாழ்க்கையில் முந்தும் கேரக்டரில் நடிக்க நிறையவே வாய்ப்பு இருந்தும் அதை ஓரளவே நரேன் பயன்படுத்தியிருப்பதாகத் தோன்றுகிறது. சினேகாவுடனான ஆரம்ப காதல் காட்சிகளிலும் நரேனிடம் ஒரு வித இறுக்கம் அதே இறுக்கம் பிற்பாதி ஊடல் காட்சிகளிலும் நீடிக்கிறது.
சீமான் இயக்குனராகவே வந்துப் போகிறார். சீமானுக்கு இது முதல் நடிப்பு அனுபவம் என்பது தெரிகிறது...
சினேகா மேக்கப் இல்லாமல் கிராமத்துப் பெண்ணாக வருகிறார்.இயல்பான நடிப்பால் பாத்திரத்தை நிறுத்துகிறார். பள்ளிக்காகத் தன் சொந்தங்களிடமே போராடும் காட்சிகளில் யதார்த்தமாய் செய்து இருக்கிறார். கோகிலா டீச்சராய் ஒரு நல்ல நிறைவான பாத்திரமேற்று அதை நல்லப் படியாய் செய்திருக்கிறார்.
யதார்த்தமான நடிப்பினால் அனைவரையும் முந்துகிறார் தங்கர். கிராமத்து வெகுளி விவசாயியாகவே தங்கர் வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.. பள்ளிக்கூடத்தைப் பொறுத்த வரை நடிகராய் தங்கர் இயக்குனர் தங்கரை பல மைல்கள் தாண்டி நிற்கிறார்.
நரேனைப் பார்க்க கலெக்டர் ஆபிஸ்க்கு பலகாரங்களைப் பையில் கட்டி எடுத்துச் செல்லும் காட்சி, சீமான் வீட்டில் பழையச் சட்டைகளைப் போட்டு அழகு பார்க்கும் காட்சி, தன் வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கு தலையில் வைத்து பெஞ்ச் சுமந்து வரும் காட்சி, நண்பர்களுக்குப் போர்த்தப்படும் பொன்னாடைக்குள் தானும் நுழைந்துக் கொண்டு அவர்களோடு தலைமையாசிரியர் காலில் விழும் காட்சி என தங்கர் நடிப்பில் நெகிழ வைக்கும் காட்சிகள் ஏராளம்.
நடிப்பையே அதிகம் யோசித்ததாலோ என்னவோ தங்கர் திரைக்கதையில் கவனம் குறைத்துவிட்டாரோ என்னவோ... படத்தின் வேகம் மிகவும் குறைவு.. பல இடங்களில் நம் பள்ளி ஞாபகங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும் பள்ளிக்கூடம் திரையில் ஓடும் பள்ளிக்கூடம் கதையின் ஓட்டத்தில் இருந்து நம்மை விலகச் செய்கிறது.
சீமான் அறிமுக பாடல் காட்சி தவிர்க்கப்பட்டிருக்கலாம்.
யதார்த்தமானக் கதைக் களத்தில் ஓட்டாத கதாபாத்திரப் படைப்பு டியூசன் டீச்சராக, அரசாங்க சுகாதார அலுவராக வந்துப் போகும் ஸ்ரேயா. அதுவும் கதையின் பிற்பாதியில் ஸ்ரேயாவை சீமானின் தாயாக வயதானக் கெட்டப்பில் காட்டுவதெல்லாம் ஸ்ப்ப்பா முடியல்ல ரகம்.
சினேகா - நரேன் காதல் பிரிவுக்கானக் காரணத்தில் அழுத்தம் இன்னும் கூட்டியிருக்கலாம். பிரிந்தவர்கள் சேர்வதும் கதையின் முடிவுக்கான சம்பிராதயமாக மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது போல் உள்ளது..
பள்ளிக்கூட இன் ஸ்பெக்சன் காட்சிகளும், வீடு வீதி என வாத்தியார்கள் மாணவர்களைப் பிடிக்க அலையும் பாடல் காட்சிகளும் கலகல ரகம்.
உலக ஆசிரியர்கள் அனைவருக்கும் கீத்துக் கொட்டை சார்பில் ஆசிரிய தின வாழ்த்துக்கள்
Spider Man 3
ஸ்பைடர் மேன் - 3, ஸ்பைடர் மேன் 1,2 வெற்றிகளை தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையேயும் பெருமளவு விளம்பரங்களுடனும் வெளியாகியுள்ளது.
கதை என்னவாயிருக்கும்னு ட்ரெயிலர் பார்த்த அத்தனை பேருக்கும் புரிஞ்சிருக்கும். அதீத சக்தி படைத்த நாயகன் இருக்கும் போது அதற்கு சமமான அல்லது அதைவிட சக்தி படைத்த வில்லன்(கள்) இருப்பார்கள். அவர்களுடன் போரிட்டு தர்மத்தை(?) நிலைநாட்டுவார் நாயகன்.
இதுதான் ஸ்பைடர் மேன் - 3 கதையும் (1,2ம் பாகத்தின் கதையும் இதுதானேனு யாரும் கேக்காதீங்க). பொதுவாக தொடர்ச்சியாக வரும் படங்களில் பெரும்பாலுமானவற்றில் முதல் பகுதியே மக்களை கவரும் (டெர்மினேட்டர், லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் போன்றவை விதிவிலக்கு). அதை ஸ்பைடர் மேனும் உறுதி செய்யும் என்றே நம்புகிறேன்.
படம் ஸ்பைடர் மேன் ரசிகர்களை கவருமா என்பது சந்தேகமே ஆனா ஆக்ஷன் பிரியர்களை நிச்சயமாக கவரும். அதனால் நீங்கள் தாராளமாக செல்லலாம். ஆனா எந்தவித எதிர்பார்ப்பும் வேண்டாம்
படம் கொஞ்சம் பெருசா இருந்துச்சு, முடிஞ்சி வரும் போது கொஞ்சம் லேசா தலைவலி வந்துச்சு. அதுக்கு படம் தான் காரணமானு தெரியல
சரி இனிமே கதை சொல்ல போறேன். கதை தெரிஞ்சிக்கனும்னு நினைப்பவர்கள் மட்டும் படிக்கவும்…
ஸ்பைடர் மேனால் ஓரளவு குற்றங்கள் குறைக்கப்பட்டு நியு யார்க் நகரம் ஓரளவு அமைதியாக இருக்கிறது. பீட்டர் பார்க்கர் தன்னுடைய காதலியுடன் நேரம் செலவழித்து, அவருடைய இயல்பான வாழ்க்கையையும் நடத்தி கொண்டிருக்கிறார். சில நேரங்களில் ஸ்பைடர் மேனுக்கும் வேலை வருகிறது. ஆனால் அது சவாலனவைகளாக இருப்பதில்லை. மக்கள் அவரை பெரிதும் மதிக்கிறார்கள்.
அந்த நேரத்தில் அவருடைய நண்பன் ஹேரி (Harry Osben) அவர் தந்தையும் மரணத்திற்காக ஸ்பைடர் மேனை பழி தீர்க்க முயல்கிறார். அங்கே நடக்கும் சண்டையில் அவர் தன்னுடைய நினைவை இழக்கிறார்.
ஃப்ளிண்ட் மார்கோ என்னும் ஜோப்படி திருடன் தவறுதலாக ஒரு ஆராய்ச்சி நடக்கும் இடத்தில் மாட்டி மணல் மனிதனாக மாறுகிறார். இவர்தான் பீட்டரின் மாமாவை கொன்றவர் என்பது பீட்டருக்கு தெரிய வர இவரை பழி வாங்குகிறார் ஸ்பைடர் மேன். ஆனா மணல் மனிதன் திரும்பவும் தப்பித்து வருகிறார்.
இந்த நிலையில் விண்வெளியிலிருந்து வரும் ஒரு பொருள் (web மாதிரி இருந்துச்சி) ஸ்பைடர் மேன் மேல் ஏறிக்கொள்ள ஸ்பைடர் மேனுக்கு அதிக சக்திகள் கிடைக்கிறது. அவருடைய உடையும் கருப்பு நிறத்திற்கு மாறுகிறது. அவர் மனமும் பழி வாங்கும் குணமும், தானென்ற அகங்காரமும் வருகிறது.
இந்த நிலையில் தான் மணல் மனிதனை அழிக்கிறார். அவர் நண்பனுக்கு நினைவு வர அவர் பீட்டர் பார்க்கரை அவர் காதலியிடமிருந்து பிரிக்க முயல அதை அறிந்து அவரையும் அழிக்கிறார். அவருடைய போக்கில் பெரும் மாறுதல் தெரிகிறது. அவர் காதலியையும் கஷ்டப்படுத்துகிறார். பிறகு அவர் அத்தை அவருடைய போக்கில் தெரியும் வித்தியாசத்தில் அவரை எச்சரிக்க, அவர் அந்த கருப்பு நிறவாசியை அவரிடமிருந்து ஒரு வழியாக விளக்குகிறார். அந்த திமிர் பிடித்த ஸ்பைடர் மேன் சூப்பர்
அந்த நேரத்தில் பீட்டர் பார்க்கரால் அவமானப்பட்டு, வேலையிழந்த எட்டிக்கு அந்த சக்தி கிடைக்கிறது.
இறுதியாக மணல் மனிதன், கருப்பு ஸ்பைடர் மேன் சேர்ந்து பீட்டர் பார்க்கரை அழிக்க நினைக்கிறார்கள். வழக்கம் போல அவருடைய காதலியை கடத்தி கொண்டு போய் தொங்கவிடுகிறார்கள். ஸ்பைடர் மேன் அவர்களுடன் போராட அவர் நண்பர் ஹேரியை நாடுகிறார். (அவர் எப்படி சாகாமல் தப்பித்தார் என்றெல்லாம் யாரும் கேட்க கூடாது.) அவர் உதவ மறுக்கிறார். ஆனால் சரியான நேரத்தில் வந்து நண்பனுக்கு உதவி செய்து உயிரை இழக்கிறார்.
கருப்பு ஸ்பைடர் மேன் இறக்க, மணல் மனிதன் திருந்த, அவரை மன்னித்து அனுப்புகிறார் பீட்டர். ஒரு வழியா படம் முடிஞ்சிது…
அடுத்த பகுதி வந்தா, இன்னும் கொஞ்சம் லேட்டா வரட்டும்
bommerillu
அதில் குறிப்பிடத்தக்கவை "ஆ நலுகுறு" , "அனுகோக்குண்ட ஒக ரோஜு" மற்றும் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் "பொம்மரில்லு".

"பொம்மரில்லு" என்றால் "பொம்மை வீடு" என்று பொருள். அதாவது வீட்டில் உள்ள அனைவருக்கும் சாவி கொடுப்பது ஒருவர் மற்றவர்கள் எல்லோரும் இயங்கும் பொம்மைகளே என்பது தான் அதன் கதை.
முதல் காட்சியிலே படத்தின் கருவை சொல்லிவிடுகிறார் இயக்குனர். கடற்கரையில் குழந்தையின் கைப்பிடித்து அந்த குழந்தைக்கு நடை பழக சொல்லி கொடுக்கிறார் தந்தை. இதுவே அந்த தந்தை குழந்தை பெரியவனாகியும் அவன் கையை விடாமல் பிடித்து நடக்க சொல்லி கொடுத்து கொண்டிருந்தால் என்ன ஆகும்? இது தான் படத்தின் மையக்கரு.
கண்டிப்பான தந்தை என்று சொல்வதைவிட, எங்கே தனியாகவிட்டால் மகன் தடுக்கி விழுந்திடுவானோ என்று அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருக்கும் தந்தையாக பிரகாஷ்ராஜ். வழக்கம் போல் அருமையாக நடித்திருக்கிறார். சராசரி அம்மாவாக ஜெயசுதா.
அப்பாவிடமிருந்து விடுதலை பெற்று தன் சொந்த காலில் நிற்க துடிக்கும் துடிப்புள்ள இளைஞனாக நடித்திருக்கிறார் சித்தார்த். ஆனால் தந்தை முன் அதை வெளிப்படுத்த முடியாமல் திணறுகின்ற பாத்திரம். தன் பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார் சித்தார்த்.
இதற்கு நேரெதிராக பட்டாம்பூச்சி போல் சுதந்திரமாக சுற்றி திரியும் பாத்திரத்தில் ஜெனிலியா. படத்தில் அனைவரையும் கவரும் கதாப்பாத்திரம். காபி சப்ளை செய்யும் சிறுவன், பானி பூரி கடை வைத்திருப்பவர், ஐஸ் விற்பவர் என்று சகலமானவர்களும் இவருக்கு பேர் சொல்லி கூப்பிடுமளவுக்கு பழக்கம்.
இயற்கையின் நீதியான எதிர் துருவங்கள் ஈர்க்கப்படும் என்பது இங்கேயும் உண்மையாகிறது. முதலில் அவர்கள் இருவரும் நண்பர்களாகி வழக்கம் போல் காதலர்களாகிறார்கள். இறுதியில் காதலர்கள் எவ்வாறு இணைகிறார்கள். பிரகாஷ்ராஜ் எவ்வாறு தன் தவறை உணர்கிறார் என்பதே கதை.

யாராவது தலையில் ஒரு முறை முட்டினால் கொம்பு வரும் என்று நம்பும் அளவுக்கு குழந்தைத்தனம் மற்றும் ரசிக்கக்கூடிய பாத்திரம் ஜெனிக்கு. இறுதியில் பிரகாஷ்ராஜ் தலையில் ஒரு முறை தெரியாமல் முட்டிவிட, கொம்பு வருவதை தவிர்க்க இரண்டாவது முறை முட்ட ஜெனிலியா முயல்வதும் அதை தடுக்க சித்தார்த் தவிப்பதும் அருமையான காட்சி.
இது டைரக்டர் பாஸ்கருக்கு முதல் படம். முதல் படத்திலே அசத்தியிருக்கிறார் மனிதர். வழக்கமாக தெலுகு படத்தில் பாடல்களுக்கு குடுக்கப்படும் முக்கியத்துவம் இந்த படத்தில் இல்லை என்றே தோன்றுகிறது. பாட்டு சுமார் ரகம்தான்.
பார்க்க வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் பார்க்கவும். முடியாதவர்கள் காத்திருக்கவும். தமிழில் இந்த படத்தை எடுக்க கடும் போட்டி நிலவுகிறது. விஜய், ஜெயம் ரவி, பரத், ரவி கிருஷ்ணா முதலானோர் இந்த படத்தின் தமிழாக்கத்தில் நடிக்க முயற்சி செய்வதாக தெரிகிறது.
Wednesday, August 22, 2007
பராசக்தி
"பராசக்தி"தமிழ் திரையுலக வரலாற்றில் இன்றும் எட்ட முடியாத ஒரு மைல்கல். கலைஞர் கருணாநிதியின் திரைக்கதை, வசனசத்தில் ஒரு காவியமாக எழுந்து நிற்கிறாள் இந்த பராசக்தி. பல இடங்களில் நம்மை எழுந்து நிற்க வைக்கிறாள் இந்த பராசக்தி. இவள் இன்றும் நம்மை நோக்கி பல கேள்விக்கணைகளை தொடுத்து நிற்கிறாள்.
சமுதாயத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை. வெறும் ஒரு குடும்பத்தின் கதையாக இருந்திருந்தால் அது இந்த அளவிற்கு வெற்றி பெற வாய்ப்பில்லை. அது பல தமிழர்களின் வாழ்வையும் குறித்த கதையாக இருக்கிறது. "இட்லிக்கடையா?" என்று கேட்கும் கல்யாணியுடம் "தமிழ்நாட்டில் தாலி இழந்தவர்களுக்கு அது தானே தாசில் உத்யோகம்" என்று அவள் பக்கத்து வீட்டு பெண்மணி சொன்னது எவ்வளவு உண்மை. இவனுங்கள எல்லாம் இட்லி சுட்டு படிக்க வெச்சனே, இன்னைக்கு எனக்கு கஞ்சி ஊத்தக்கூட யோசிக்கறானுங்களேனு வயசான பாட்டிங்க அவுங்க பசங்களை திட்டி கேள்விப்பட்டுருக்கேன்.

போர் காரணமாக பல மாதங்கள் தாமதமாகி சென்னையை வந்தடைகிறது கப்பல். மதுரை ரயிலுக்கு டிக்கட் கிடைக்காததால் ஒரு நாள் தங்கிவிட்டு காலையில் புறப்படலாம் என்று ஹோட்டலில் தங்குகிறார் குணசேகரன். அங்கே ஒரு வஞ்சியால் வஞ்சிக்கப்பட்டு தன் கையிலிருந்த பணம் அனைத்தையும் இழக்கிறார்.

கல்யாணியின் வறுமையை பயன்படுத்தி அவளை நாசமாக்க துடிக்கிறான் அந்த ஊர் மைனர் ஒருவன். அவன் குணசேகரனிடம் நன்றாக உதைவாங்கி கொள்கிறான். பிறகு அவளை வேலைக்கமர்த்தி காம லீலைக்கு அழைக்கிறான் நல்லவன் வேடம் போடும் நாட்டாமை ஒருவன். அந்த கேடு கெட்டவனுக்கு பாரதிதாசனின் புத்தகங்கள் ஒரு முகத்திரை. அவனிடமிருந்து தப்பித்து தன் அண்ணன் சந்திர சேகரன் வீட்டில் வைக்கும் விருந்திற்கே சென்று, தன் பிள்ளை ஆறு நாள் பட்டினி கிடப்பதாக சொல்லி, உணவுக்காக அவன் காலை பிடித்து கெஞ்சுகிறாள் கல்யாணி. அவனும் தன் தங்கையென்று தெரியாமல் எட்டி உதைக்கிறான்.

பிறகு நீதிமன்றத்தில் அவள் இன்னாரென்று அவள் அண்ணன் சந்திர சேகரன் உணர்கிறான். தன் தங்கைக்காக கோவில் பூசாரியை தாக்கிவிட்டு நீதிமன்றத்தில் நிற்கிறான் குணசேகரன். அவன் காதலியால் கல்யாணியின் குழந்தை காப்பாற்றப்படுகிறது. ஒரு வழியாக கல்யாணியும், குணசேகரனும் சந்திரசேகரிடம் சேர்கிறார்கள். பிச்சைக்காரர்கள் மாநாட்டிற்கு பொருளுதவி கேட்டு வரும் ஞானசேகரனும் அவர்களுடன் சேர்கிறான். ஒரு வழியாக பிரிந்தவர்கள் சேர்கிறார்கள். சுபம்...
இனி படத்தில் மனதை தொட்ட காட்சிகள்...
- குணசேகரன் சென்னையை தொட்டதும் முதலில் கேட்கும் குரல் ஒரு பிச்சைக்காரனின் குரல். இந்த படம் வந்து ஐம்பத்தி ஐந்து வருடம் கழித்து வந்திருக்கும் சிவாஜி படத்திலும் நாயகன் சென்னையில் கேட்கும் முதல் குரல் ஒரு பிச்சைக்காரியின் குரல். ஐம்பத்தி ஐந்து வருடங்களாக பல ஆட்சி மாற்றமும் நம் சமூகத்தில் எந்த மாற்றமும் ஏற்படுத்தவில்லையா?
- பிச்சைக்காரர்களுக்கு ஓட்டுரிமை வேண்டுமென்று போராட்டம் நடுத்த போவதாக சொல்கிறார் ஞானசேகரன். அது இன்றும் நிறைவேறவில்லை என்றே நினைக்கிறேன்
- ஓ ரசிக்கும் சீமானே பாடலும், புது பெண்ணின் மனதை தொட்டு போனவரே பாடலும் படம் முடிந்து மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.
- காசை பற்றி வரும் பாடலில் இந்த வரிகள் அருமையிலும் அருமை... இதை எழுதியவருக்கு என் பாராட்டுக்கள்.
ஆரிய கூத்தாடினாலும் தாண்டவக்கோனே
காசு காரியத்தில் கண் வையட தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே
காசுக்கு உதட்டில் உறவாடுடா தாண்டவக்கோனே
முட்டாப்பயலையெல்லாம் தாண்டவக்கோனே
சில முட்டாப்பயலையெல்லாம் தாண்டவக்கோனே
காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே
பிணத்தை கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே
பணம் பெட்டி மேல கண் வையடா தாண்டவக்கோனே
ஆரிய கூத்தாடினாலும் தாண்டவக்கோனே
காசு காரியத்தில் கண் வையட தாண்டவக்கோனே
- போலிஸ் கான்ஸ்டபிலிடம் குணசேகரன் பேசும் வசனங்கள் அருமையிலும் அருமை
"மெட்ராஸ்ல மனுஷன் மிருகமாகத்தானிருக்கிறான்"
"ஏய்"
"உங்களை சொல்லலைங்க. முதுகெலும்பு உடைய மூட்டை வண்டியை இழுக்கிறானே, குதிரைக்கு பதிலாக நரம்பு தெறிக்க தெறிக்க ரிக்ஷா இழுத்து கூனிப்போயிருக்கிறானே, நாயை போல சுருண்டு நடைப்பாதையில் தூங்குகிறானே அந்த நல்லவனை, நாதியற்றவனை, நாலு கால் பிராணியாய் ஆக்கப்பட்ட மனிதனை சொன்னேன். சென்னை புனிதமான நகரம். இங்கே மனித மிருகம்"
"சரி தான் போடா. மெட்ராஸுக்கு நீ மேயராகற காலத்துல மிருகத்தை எல்லாம் மனுஷனாக்கலாம்"
இதே வசனத்தை இன்றும் படத்தில் வைக்கலாம். நல்ல கைத்தட்டல் கிடைக்கும். பல மேயர்கள் வந்தாலும் இங்கே எந்த மாற்றமும் இல்லை.
- படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பிற்கு பெரும்பாலும் நீதிமன்ற காட்சியையோ, அல்லது பராசக்தியின் பின்னாலிருந்து எழுந்து பூசாரியிடம் பேசும் வசனத்தையோ சொல்வார்கள். ஆனால் எனக்கு பிடித்தது, அவள் தங்கை முன்பு பைத்தியம் போல் முதன் முதலில் நடிக்கும் காட்சி. மன்னனை போல, கூத்தாடியை போல, மந்திரியை போல, ஏழை விவசாயி போல மோனோ ஆக்டிங் செய்திருப்பார். அந்த காட்சியை பார்த்ததும் அந்நியன் படத்தில் பிரகாஷ்ராஜ் பேசும் "எம்.ஜி.ஆரை பார்த்திருக்கேன், சிவாஜிய பார்த்திருக்கேன், ரஜினிய பார்த்திருக்கேன், கமலை பார்த்திருக்கேன். ஆனா இந்த மாதிரி ஒரு நடிகனை பார்த்ததில்லைனு" வசனத்தை எழுதியவருக்கு "பராசக்தி" DVD பார்சல் செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டேன். முதல் படத்திலே தான் ஒரு மகாநடிகன் என்று நிருபித்திருக்கிறார்.
- படத்திற்கு பராசக்தி என்று பெயர் வைத்தது எவ்வளவு உண்மை. முற்பிறவியில் செய்த கருமவிணைகளால் கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். பின் தேவியின் சந்திக்கு கல்யாணி சென்ற பிறகு நடக்கும் பல மாற்றங்களால் அவர்கள் ஒன்று சேர்கிறார்கள். கல்யாணியின் குழந்தை இறக்காததும் அவள் அருளே. இந்த கஷ்டங்களை அவர்கள் அனுபவிப்பதாலே ஏழைகளுக்கு உதவ வேண்டும், சமத்துவம் மலர வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக முயல்கிறார்கள். இதை பண்டரிபாய் நடிகர் திலகத்திற்கு சொல்லும் இடம் அருமை.
- இன்றும் தமிழர்கள் பலருக்கு பிறக்க ஒரு ஊர், பிழைக்க ஓரு ஊராகத்தான் இருக்கிறது. என்று ஏற்படுமோ நல்ல மாற்றம்?
- இன்று இதே படத்தை சூர்யாவையோ, விக்ரமையோ போட்டு எடுக்கலாம். இட்லிக்கடைக்கு பதில் கட்டட வேலைக்கு செல்வதாக காட்டலாம். வேறு எந்த மாற்றமும் தேவையில்லை.