Thursday, August 30, 2007

தங்கர் பச்சானின் பள்ளிக்கூடம்

எல்லாரும் ஒரு நிமிசம் கண்ணை மூடுங்க.. அப்படியே உங்க பள்ளிக் காலத்துக்கு போங்க.. அப்படிங்கற அறிமுகத்தோடு ஆரம்பிக்கும் படம் லேசான மன அதிர்வுகளை ஏற்படுத்துவது உண்மை..

தங்கர்பச்சான் இயக்கி நடிகர்கள் நரேன், சினேகா, இயக்குனர் சீமான், எஸ்.எஸ்.மியூசிக் புகழ் ஸ்ரேயா மற்றும் தங்கர்பச்சானும் நடித்து வெளிவந்திருக்கும் படம் பள்ளிக்கூடம். படத்தின் இசை பரத்வாஜ்.

ஒரு கிராமத்தின் கல்வித் தாகத்தை தீர்த்து வைக்கும் கேணியாக பல ஆண்டுகளாய் எழுந்து நின்ற பள்ளிக்கூடமொன்று பல்வேறு சிக்கல்களால் மூச்சு திணறி மூடு விழா காண இருக்கிறது. அந்த மூடு விழாவை தடுத்து நிறுத்தி பள்ளிக்கூடத்தைக் காக்க பழைய மாணவர்கள் மேற்கொள்ளும் முயற்சியே பள்ளிக்கூடத்தின் ஒற்றை வரி கதை.

அழகியின் கதைக் களம் மீது தங்கர் கொண்ட காதல் இன்னும் குறையவில்லை போலிருக்கிறது.. அதே மண் சார்ந்தே பள்ளிக்கூடமும் படமாக்கப்பட்டுள்ளது.

பழைய மாணவர்களாய் சித்திரம் பேசுதடி நாயகன் நரேன், இயக்குனர் சீமான், தங்கர்பச்சான் மற்றும் சினேகா. கச்சிதமான தேர்வு. பொருந்துகிறார்கள்.

நரேன் காதலனாய் வரும் காட்சிகளை விட கலெக்டராய் நல்லாச் செய்து இருக்கிறார். பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய குடும்பத்தில் இருந்து வந்து வாழ்க்கையில் முந்தும் கேரக்டரில் நடிக்க நிறையவே வாய்ப்பு இருந்தும் அதை ஓரளவே நரேன் பயன்படுத்தியிருப்பதாகத் தோன்றுகிறது. சினேகாவுடனான ஆரம்ப காதல் காட்சிகளிலும் நரேனிடம் ஒரு வித இறுக்கம் அதே இறுக்கம் பிற்பாதி ஊடல் காட்சிகளிலும் நீடிக்கிறது.

சீமான் இயக்குனராகவே வந்துப் போகிறார். சீமானுக்கு இது முதல் நடிப்பு அனுபவம் என்பது தெரிகிறது...

சினேகா மேக்கப் இல்லாமல் கிராமத்துப் பெண்ணாக வருகிறார்.இயல்பான நடிப்பால் பாத்திரத்தை நிறுத்துகிறார். பள்ளிக்காகத் தன் சொந்தங்களிடமே போராடும் காட்சிகளில் யதார்த்தமாய் செய்து இருக்கிறார். கோகிலா டீச்சராய் ஒரு நல்ல நிறைவான பாத்திரமேற்று அதை நல்லப் படியாய் செய்திருக்கிறார்.

யதார்த்தமான நடிப்பினால் அனைவரையும் முந்துகிறார் தங்கர். கிராமத்து வெகுளி விவசாயியாகவே தங்கர் வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.. பள்ளிக்கூடத்தைப் பொறுத்த வரை நடிகராய் தங்கர் இயக்குனர் தங்கரை பல மைல்கள் தாண்டி நிற்கிறார்.

நரேனைப் பார்க்க கலெக்டர் ஆபிஸ்க்கு பலகாரங்களைப் பையில் கட்டி எடுத்துச் செல்லும் காட்சி, சீமான் வீட்டில் பழையச் சட்டைகளைப் போட்டு அழகு பார்க்கும் காட்சி, தன் வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கு தலையில் வைத்து பெஞ்ச் சுமந்து வரும் காட்சி, நண்பர்களுக்குப் போர்த்தப்படும் பொன்னாடைக்குள் தானும் நுழைந்துக் கொண்டு அவர்களோடு தலைமையாசிரியர் காலில் விழும் காட்சி என தங்கர் நடிப்பில் நெகிழ வைக்கும் காட்சிகள் ஏராளம்.

நடிப்பையே அதிகம் யோசித்ததாலோ என்னவோ தங்கர் திரைக்கதையில் கவனம் குறைத்துவிட்டாரோ என்னவோ... படத்தின் வேகம் மிகவும் குறைவு.. பல இடங்களில் நம் பள்ளி ஞாபகங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும் பள்ளிக்கூடம் திரையில் ஓடும் பள்ளிக்கூடம் கதையின் ஓட்டத்தில் இருந்து நம்மை விலகச் செய்கிறது.

சீமான் அறிமுக பாடல் காட்சி தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

யதார்த்தமானக் கதைக் களத்தில் ஓட்டாத கதாபாத்திரப் படைப்பு டியூசன் டீச்சராக, அரசாங்க சுகாதார அலுவராக வந்துப் போகும் ஸ்ரேயா. அதுவும் கதையின் பிற்பாதியில் ஸ்ரேயாவை சீமானின் தாயாக வயதானக் கெட்டப்பில் காட்டுவதெல்லாம் ஸ்ப்ப்பா முடியல்ல ரகம்.

சினேகா - நரேன் காதல் பிரிவுக்கானக் காரணத்தில் அழுத்தம் இன்னும் கூட்டியிருக்கலாம். பிரிந்தவர்கள் சேர்வதும் கதையின் முடிவுக்கான சம்பிராதயமாக மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது போல் உள்ளது..

பள்ளிக்கூட இன் ஸ்பெக்சன் காட்சிகளும், வீடு வீதி என வாத்தியார்கள் மாணவர்களைப் பிடிக்க அலையும் பாடல் காட்சிகளும் கலகல ரகம்.

உலக ஆசிரியர்கள் அனைவருக்கும் கீத்துக் கொட்டை சார்பில் ஆசிரிய தின வாழ்த்துக்கள்

6 comments:

இலவசக்கொத்தனார் said...

ரொம்ப பொருத்தமான பதிவுதான். அனைவருக்கும், குறிப்பாக ஆசிரியப் பெருந்தகைகளுக்கு வாழ்த்துக்கள்.

SurveySan said...

நானும் பாத்தேன். ரொம்ப நல்ல படம்.

அந்த டீச்சரையும், ஒரு கேவலமான பாட்டையும் தூக்கியிருந்தா, படம் அழகிக்கு கிட்ட வந்திருக்கும்.

மசாலா அரைக்கும் மற்றவர் மத்தியில் தங்கர் பரவால்ல.

ஜே கே | J K said...

//அந்த டீச்சரையும், ஒரு கேவலமான பாட்டையும் தூக்கியிருந்தா, படம் அழகிக்கு கிட்ட வந்திருக்கும்.
//

அதே!....

G.Ragavan said...

படம் பாத்துட்டீங்களா? நான் இன்னும் பாக்கலை. ஆனா உங்க விமர்சனத்தப் பாத்தா முயற்சி செய்யலாம் போல இருக்கே.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நரேனைப் பார்க்க கலெக்டர் ஆபிஸ்க்கு பலகாரங்களைப் பையில் கட்டி எடுத்துச் செல்லும் காட்சி, சீமான் வீட்டில் பழையச் சட்டைகளைப் போட்டு அழகு பார்க்கும் காட்சி, தன் வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கு தலையில் வைத்து பெஞ்ச் சுமந்து வரும் காட்சி//

அச்ச்சோ....நான் எண்ணி எண்ணி ரசிப்பதை அப்படியே சொல்லி இருக்கீங்க! அதில் ஒரு படமாச்சும் போடக் கூடாதா?

நல்ல விமர்சனம், தேவ்!
அழகி போல வராததுக்கு திரைக்கதை வேகமும் ஒரு காரணம். இதில் கொஞ்சம் மசாலா சேர்க்கத் தோணி கொஞ்சம் சொதப்பினாலும், அருமையான கதைக்களம் உள்ள படம்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

எனக்கு மிகப் பிடித்தது. தங்கர் பச்சான் பாராட்டப் பட வேண்டியர்.வேறு பட்டுச் சிந்திக்கிறார்.