வழக்கமான மசாலா திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு சொல்லப்படாத கதைகளை படமாக்கும் போது அது இயல்பானதாக இருக்க வேண்டுமேயன்றி வித்தியாசமாக படம் எடுக்கிறோம் பேர்வழி என்று கதைக்களத்தில் இருந்து பிறழ்ந்தால் பார்வையாளனுக்கும் திரையில் ஓடும் காட்சிகளுக்குமான தொலைவு அதிகரித்துவிடுகிறது. பல நல்ல கதைகள் இது போன்ற 'வித்தியாசமாக எடுக்கிறேன்' ஆர்வக்கோளாறின் காரணமாகவே மோசமான திரைப்ப்டங்களாக உருவாகியுள்ளன. அந்த வகையில், படத்தில் பார்த்திபன் இருந்தாலும், 'அம்முவாகிய நான்' படத்தில் வித்தியாசங்களை வலியத் திணிக்காமல் இயல்பான ஒரு திரைப்ப்டத்தைத் தந்திருக்கும் இயக்குனர் பத்மாமகன் பாராடடப்பட வேண்டியவர்.
அம்மு குழந்தையாக இருக்கும்போதே பாலியல் தொழிலாளியான இராணியிடம் விற்கப்படுகிறாள். ராணி மடத்தில் பாலியல் தொழிலாளிகளிடையே வளரும் அம்மு தானும் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறாள். விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை தன் நாவல்களின் மூலம் பதிவு செய்யும் எழுத்தாளர் கெளரி சங்கர் பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை நாவலாக வடிக்கும் முயற்சியாக ராணி மடத்திற்கு வருகிறார். அங்கு அம்முவின்பால் ஈர்க்கப்படுகிறார். அம்முவை மணக்க விரும்புகிறார். முதலில் மறுக்கும் அம்மு பின்னர் தன் தோழிகளின் அறிவுரையின் பேரிலும் கெளரிசங்கரின் அன்பாலும் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். திருமணம் முடிந்ததுமான அவர்களது வாழ்க்கை அழகான கவிதை.

கெளரிசங்கரை வளர்த்த அக்காவாலும் அம்முவுக்கு ஏற்கனவே தெரிந்தவர்களாலும் சிறுசிறு பிரச்சனைகள் வருகின்றன.கெளரிசங்கர் தன் லட்சிய நாவலை முடித்து விருது தேர்வுக்கு அனுப்புகிறார். முன்பொரு முறை அம்முவினால் அவமானப்படுத்தப்பட்ட எழுத்தாளர் தேர்வுக்குழு தலைவராக இருக்கிறார். அதனால் கெளரிசங்கருக்கு விருது கிடைப்பதில் இடையூறு. இறுதியில் என்ன ஆயிற்று என்பதை வெள்ளித் திரையில் காண்க.
படத்தின் பெரும்பலம் கச்சிதமான காட்சியமைப்பு. வில்லன் வரும் காட்சிகளைத் தவிர மற்ற எதுவுமே சலிப்பூட்டவில்லை. நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கும் கூர்மையான வசனங்களும் பெரும்பலம். பல இடங்களில் புனசிரிப்பை ஏற்படுத்துகிறது. ரசிக்க வைக்கிறது. 'ராணி மடம்' என்ற பாலியல் தொழிலாளர்களின் வீட்டைக் காட்டும்போது வழக்கமான தமிழ் சினிமா போல் விரசக் காட்சிகளோடும் அவர்களை கழிவிரக்கம் மிக்கவர்களாகவும் காட்டாததற்கு பத்மாமகனிற்கு ஒரு பெரிய ஓ!!
ஆனாலும் கதாபாத்திரங்கள் உருவாக்கத்தில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். குறிப்பாக முக்கிய கதாபாத்திரமான அம்முவே ஒரு காட்சியில் குழந்தைத்தனமாகவும் அடுத்த காட்சியில் மன முதிர்ச்சியோடு பேசுவது சிறிது நெருடுகிறது. அம்மு-கெளரிசங்கர் மணவாழ்க்கைக்கு ஒரு மசாலா பட வில்லன் கதாபாத்திரத்தால்தான் பிரச்சனை வரவேண்டுமா என்ன? வேறெதாவது யோசித்திருக்கலாம்.

அம்முவாக நடித்திருக்கும் பாரதி அசத்தியிருக்கிறார். கதாபாத்திரத்தை முழுதாக உள்வாங்கி அருமையாக நடித்திருக்கிறார். கண்கள் அப்படியொரு அழகு. அவருக்காகவே இன்னொரு முறை கூட பார்க்கலாம். பார்த்திபனுக்கு அவருக்கேற்ற 'டெம்ப்ளேட்' கதாபாத்திரம். 'அண்டர்ப்ளே' செய்திருப்பது பாராட்டுக்குரியது.
இசை சபேஷ்-முரளி. 'உன்னைச் சரணடைந்தேன்' என்று ஆரம்பித்து எழுதிக்கொடுத்தால் நன்றாக இசையமைப்பார்கள் என்று நினைக்கிறேன் ['தவமாய் தவமிருந்து' படத்திலும் 'உன்னைச் சரணடைந்தேன்' பாடல் நன்றாக இருக்கும்]. பின்னணி இசை நிறைய ரீப்பீட்டு.
ஒரு திரைப்படத்தின் கதைக்களன் தான் பார்வையாளர்களை அந்த திரைப்படத்துடன் ஐக்கியப்படுத்துகிறது. கதைக்களனுக்கு ஏற்றவாறு வலுவான திரைக்கதையுடன் எடுக்கப்பட்ட படங்கள் பெரும் வெற்றியையும் பாராட்டையும் பெற்று மிகச் சிறந்த திரைப்படங்களாக போற்றப்படுகின்றன. அதே நேரம் அடித்து ஆடவேண்டிய அட்டகாசமான கதைக்களனில் சொதப்பலான திரைக்கதையால் மொக்கையாகிப்போன படங்களும் உண்டு. 'அம்முவாகிய நான்' இந்த இரண்டிற்கும் நடுவில் ஊசலாடுகிறது. பாலியல் தொழிலாளியான அம்முவின் வாழ்க்கையை கதைக்களனாக எடுத்த இயக்குனர் பத்மாமகன் அந்த வலுவான களனுக்கு ஏற்றவாறு திரைக்கதையை அமைக்கவில்லையோ என்ற எண்ணம் படம் பார்த்ததும் தோன்றுகிறது. ஆனாலும் 'அம்முவாகிய நான்' சராசரி மசாலா படங்களுக்கிடையே கண்டிப்பாக ஒரு படி மேலே தான்.
10 comments:
//அதே நேரம் அடித்து ஆடவேண்டிய அட்டகாசமான கதைக்களனில் சொதப்பலான திரைக்கதையால் மொக்கையாகிப்போன படங்களும் உண்டு. 'அம்முவாகிய நான்' இந்த இரண்டிற்கும் நடுவில் ஊசலாடுகிறது//
கப்பி
அது எப்படிங்க ஒரு தேர்ந்த விமர்சகர் போலக் கலக்குறீங்க?
விகடனில் வேலை பாத்தீங்களா என்ன? :-)
//கண்கள் அப்படியொரு அழகு. அவருக்காகவே இன்னொரு முறை கூட பார்க்கலாம் ;).//
அதானே பார்த்தேன்! மொத்தம் எத்தினி வாட்டி படத்தைப் பாத்தீங்க தல? :-)
அக்மார்க் கப்பி (read as அட்டகாசம் கலந்த அமர்க்களம்) விமர்சனம். நன்றி!
நடுநடுவே வரும் சிரிப்பான்களை தவிர்த்துடுங்க. இயல்பான வாசிப்பின் நடுவில் நெருடலா இருக்கு.
நல்ல விமர்சனம் கப்பி...... :)
இந்த வார கடைசியிலே படத்தை பார்க்கலாம்'ன்னு நினைக்கிறேன்... :)
சத்தியமாக படத்தை மட்டுமே பார்த்துவிட்டு நானும் ஒரு விமர்சனம் என் blog-ல போட்டிருக்கேன் அதையும் விமர்சனம் செய்யவும். நன்றி
நாயகி நிச்சயம் கவனத்துக்குரியவர்.
சில இடங்களில் மீனாவின் சாயல் அடிக்கிறது.
இந்த நேரத்தில் இப்படியொரு படத்தை எடுக்கும் தைரியம் வந்ததற்காக இயக்குநரையும், தயாரிப்பாளரையும் கண்டிப்பாகப் பாராட்ட வேண்டும். ஆனாலும் முதல் பாதியின் அநேக காட்சிகள் உண்மையைச் சொல்கிறோம் என்கிற போர்வையில் வக்கிரமாக இருக்கின்றன என்பதைச் சொல்லியே ஆக வேண்டும்.
நல்ல விமர்சனம். படம் இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு சொல்கிறேன்
நல்ல விமர்சனம்.
இந்த பாலியல் தொழிலாளி, எழுத்தாளர் ட்ராக் வேறு ஏதோ பார்த்திபன் கதையிலும் வந்ததென ஒரு நியாபகம்.
கப்பி
அது எப்படிங்க ஒரு தேர்ந்த விமர்சகர் போலக் கலக்குறீங்க?
விகடனில் வேலை பாத்தீங்களா என்ன? :-) //
இதுதான் என்னுடைய கேள்வியும் கூட :))
உங்க emoticon எல்லாம் நடுவில் வந்து தொந்தரவு பண்ணுது..
போன வாரம் இந்த படத்தின் திருட்டு விசிடி கிடைத்தது ஆனா பார்க்குறதுக்கு முன்னாடியே நான் இங்கே வந்துட்டேன் :P
அடுத்த வாரம் போய் பார்த்து வந்து படம் எப்படின்னு சொல்லுறேன்.
//ஆனாலும் 'அம்முவாகிய நான்' சராசரி மசாலா படங்களுக்கிடையே கண்டிப்பாக ஒரு படி மேலே தான்.//
சரியா சொன்ன கப்பி, அதிலும் இந்த நாறபயல்க எஸ்.ஜே.சூர்யா, துள்ளல் நாயகன் படங்களுக்கு இது எல்லாம் எம்புடோ மேல்.....
எல்லாரும் சிரிப்பான பத்தி சொல்லி இருக்காங்க.. ஆனா இப்ப காணாமே.. தூக்கிட்டியா...
மொத்தில் உன் விமர்சனம் அருமை...
Post a Comment