
தயாரிப்பு ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்,
இயக்கம் தலைநகரம் படப் புகழ் சுராஜ்,
இசை இமான்,
நடிப்பு அர்ஜூன், வடிவேலு, நாசர்,ரகுவரன், லால், நிலா, மற்றும் பலர்.
கமர்ஷியல் சினிமாவுக்கென்று ஷோலே வகுத்துக் கொடுத்த இலக்கணத்தின் படி எடுக்கப்பட்டிருக்கும் படம்.
நாச்சியார்புரம் என்றொரு கற்பனையூர், அங்கு 16 ஆண்டுகளாக தேர்தல் நடப்பதில்லை, காரணம் சாதிப் பிரச்சினை. பெரும்பான்மை உயர்சாதியைச் சேர்ந்த மாசி(மலையாள நடிகர் லால்) என்ற தனிமனிதன் சட்டத்தைத் தன் கட்டுக்குள் வைத்து அட்டுழியம் செய்கிறான். இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையராக ரகுவரன் எப்படியும் நாச்சியார்புரத்தில் தேர்தல் நடத்துவதாய் சவால் விட்டு களம் இறங்குகிறார். வெட்டு குத்து என ரத்தவெள்ளத்தில் படம் நகர்கிறது.
இதில் கதாநாயகனுக்கு என்ன வேலை எங்கே வருகிறான்னு கேக்குறீங்களா? சொல்லுறேன்..
நம்ம நாசருக்கு ஒரு பையன் அர்ஜூன், அப்பா ஆசைப் படி சட்டம் படித்து வக்கீல் ஆகாமல் கான்ஸ்டபிள் ஆகிறார். அவருக்கு போஸ்டீங் நாச்சியார்புரத்தில் தான் போடுறாங்க. அப்புறம் என்ன வழக்கம் போல் அமைதியாகப் போகும் நாயகன் வாழ்க்கையில் புயலாய் வில்லன் நுழைய போராட்டத்தில் அப்பாவி அப்பா பலியாக... டாமல் டூமில் ட்ஷ்யூம் என படம் பறக்கிறது.
இதுல்ல கதாநாயகி எங்கே இருந்து வர்றா அப்படின்னு யோசிக்கிறீங்களா?
அதெல்லாம் தப்பு..
படத்துக்கு மியூசிக்க்குன்னு ஒருத்தரை புக் பண்ணி பாட்டுக்குன்னு கவிஞர் எல்லாம் ரெடி பண்ணி பாட்டெல்லாம் போட்டப் பொறவு.. நம்ம அர்ஜூன் கூட ஆட யாராவது வேணாமா? அதுக்குத் தான் நிலா இருக்காங்க.. வர்றாங்க... ஒட்டுறாங்க.. ஆடுறாங்க.. பாடுறாங்க... போறாங்க.. இன்னொரு புதுமுகம் வேற ஒரு பாட்டுக்கு வந்து ஆடிட்டு போறாங்க..இது தவிர முகைமது கான் குத்தாட்டம் வேற இருக்குதுங்கோ
இப்படி எல்லாமே வழக்கமா இருக்கப் படத்துல்ல என்னத் தான் ஈர்ப்பு இருக்குன்னு கேக்குறீங்களா..
நம்ம வைகைப் புயல் காமெடிங்க...
அர்ஜூனுக்கு மேலதிகாரியா அதாவது இவர் ஏட்டு அவர் காவலர். வந்து வடிவேலு பண்ற அலம்பல் இருக்கே நல்லாச் சிரிக்கலாம்.. பிற்பாதியிலே அர்ஜூன் இன்ஸ்பெக்டராகி இவருக்கு மேலதிகாரியா வரும் போது அவர் பம்மல் இன்னும் காமெடி.. மருதமலையின் ஹய்லைட் காமெடி தான்.. நல்லாவே இருக்கு.
இசை ஒரே குத்து மயம்..கதை திரைக்கதை எல்லாம் அரைச்ச மாவு தான்...
அர்ஜூன் இன்னும் தன் தோற்றத்தை அப்படியே மெயின்டெயின் பண்ணுவது சபாஷ், சண்டைக் காட்சிகளில் தான் இன்னும் ஆக்ஷன் கிங் தான்னு நிருபீக்கிறார். காமெடியிலும் வடிவேலுவோடு கலந்து கட்டுகிறார்.
ரகுவரன், நாசர் , ராஜேஷ் சொல்ல ஒன்றும் புதிதாக இல்லை. அனுபவ நடிப்பால் பாத்திரங்களை நிறைக்கிறார்கள்.
மலையாள நடிகர் லால் வில்லத்தனத்தில் கம்பீரம் காட்டுகிறார். சண்முகராஜன், மெட்டி ஒலி போஸ் வழக்கமான் வில்லன் மேளாவில் பங்குபெறுகிறார்கள்.
கீத்துக்கொட்டாய் தீர்ப்பு ...மருதமலை.. டைம் பாஸ்.. பொழுது போகும்... நல்லா சிரிச்சுட்டு வரலாம்...