Tuesday, October 2, 2007

12 Angry Men

ஒரு கொலை வழக்கு. குற்றம் சாட்டப்பட்டுள்ள 20 வயது இளைஞன். 12 ஜூரிகள். பத்துக்கு பத்து அளவில் ஒரு அறை. இதை வைத்து மிகச் சிறப்பாக சுவாரசியமாக எடுக்கப்பட்ட படம் 12 Angry Men.

ஒரு ஸ்பானிய இளைஞன் தன் தந்தையைக் கொன்றதாக கைது செய்யப்படுகிறான். சாட்சிகளும் ஆதாரங்களும் அவனுக்கெதிராக இருக்கின்றன. அவன் தொலைத்ததாக சொல்லும் கத்தி கொலை நடந்த இடத்தில் கிடைக்கிறது. ஆனால் அவனோ குற்றத்தை மறுக்கிறான். வழக்கு முடிந்ததும் நீதிபதி 12 நடுவர்களை வழக்கு குறித்து முடிவெடுக்கச் சொல்கிறார். குற்றவாளியென நடுவர்கள் முடிவு செய்தால் அந்த இளைஞனுக்கு மரண தண்டனை உறுதி. நடுவர்கள் அனைவரும் கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்காக தனிமைப்படுத்தப்பட்ட ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

சாட்சிகள் அந்த இளைஞனுக்கு எதிராக இருப்பதால் பதினோரு நடுவர்களுமே அவன் குற்றவாளி என ஏகமனதாக முடிவெடுக்கின்றனர். ஆனால் ஒருவர் மட்டும் சந்தேகத்திற்கு இடமிருப்பதாகவும் அவன் நிரபராதியாகக் கூட இருக்கலாம் என்றும் கூறுகிறார். வழக்கு விசாரனையில் தனக்கு திருப்தியில்லை எனவும் அந்த இளைஞன் தவறுதலாக தண்டிக்கப்படக் கூடாதென்றும் கூறுகிறார். எந்த முன்முடிவும் இல்லாமல் நடுவர்கள் வழக்கு குறித்து் தீர ஆராய வேண்டுமென்கிறார்.



மற்ற நடுவர்கள் விவாதிப்பது நேர விரயம் எனக் கூறி மறுக்கின்றனர். அந்த இளைஞன் கொலை செய்தது குறித்து தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்கின்றனர். அவரோ அந்த இளைஞன் சார்பான வாதங்களையும் கருத்தில் கொள்ள வேண்டுமெனக் கூறி அவற்றை முன் வைக்கிறார். விவாதத்தினிடையே நடுவர்களிடையே வாக்குவாதங்களும் சிறு மோதல்களும் நிகழ்கின்றன. வழக்கு குறித்து பேசப் பேச ஒவ்வொரு நடுவர்களாக மனதை மாற்றிக் கொள்கின்றனர். இறுதியில் அவன் குற்றவாளியென நிருபிக்க போதிய ஆதாரங்கள் இல்லையென அந்த இளைஞனை விடுதலை செய்ய முடிவெடுக்கின்றனர்.

இந்த எளிமையான கதையின் பலமே நடுவர்களாக வரும் 12 கதாபாத்திரங்கள்தான். சமூகத்தின் வெவ்வேறு நிலைகளிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த 12 கதாபாத்திரங்களும் வெகு சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. நடுவர்களின் தனிப்பட்ட குணாதிசயங்களும் அவர்களின் பின்புலமும் இந்த வழக்கு குறித்த அவர்களது பார்வையை எப்படி மாற்றுகிறது என்பதை மிகச் சிறப்பாக படம்பிடித்திருப்பார்கள். வெற்றிகரமான தொழிலதிபர் முதல் வாழ்வில் விரக்தியின் உச்சத்திலிருக்கும் ஏழை வரை, இனவெறியாளன் முதல் மிகவும் கனிவான கதாபாத்திரம் வரை என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு தனி அடையாளம் கொடுக்கப்பட்டிருக்கும். வழக்கு குறித்த விவாதத்தினிடையே நடுவர்களுக்குள் தனிப்பட்ட மோதல்களும் அவர்களின் குணாதிசயங்களுக்கு ஏற்ப நடுவர்கள் குழுக்களாக சார்புநிலை எடுப்பதும் மிக இயல்பாக படம் பிடிக்கப்பட்டிருக்கும்.

அதே போல் கூர்மையான வசனங்கள் படத்தின் பெரும்பலம். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்ப அவர்களுடைய பேச்சு வழக்கிலேயே வசனங்கள் அமைந்திருக்கும். அந்த இளைஞனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் நடக்கும் விவாதங்களில் நம்மையே ஒரு சார்பை எடுக்க வைக்கும் அளவுக்கு வசனங்களும் காட்சியமைப்புகளும் கூர்மையாக இருக்கும். நடுவர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் மிகச் சிறப்பாக தங்கள் கதாபாத்திரங்களை உள்வாங்கி நடித்திருப்பார்கள்.

1957-இல் வந்த இந்த திரைப்படம் பல மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் திரையிடப்படுகின்றது. இரண்டு மணி நேரம் ஒரே அறையில் 12 பேர் பேசிக்கொண்டிருப்பதை உங்களால் பார்க்க முடியுமென்றால் இந்த படம் கண்டிப்பாக தவற விடக்கூடாத ஒன்று.

14 comments:

நாகை சிவா said...

ராசா உன்கிட்ட டிவிடி இருக்கா?

கோபிநாத் said...

கப்பி....நன்றாக விமர்சனம் செய்திருக்கிங்க...

இந்த கதை பார்க்கும் போது எனக்கு இந்த படம் ஞாபகத்துக்கு வருது Runaway Jury முடிந்தால் பாருங்கள்.

Boston Bala said...

---இந்த திரைப்படம் பல மேலாண்மை பயிற்சி வகுப்புகளில் ---

ஆமாங்க...

உடல்மொழி, எண்ணங்களைப் பகிர்தல், கூட்டங்களை வழிநடத்துதல், மாற்றுக்கருத்துகளை முன்வைத்தல் என்று பல்வகையில் ஆராய்ந்து பார்க்க வைப்பார்கள்.

சில ஆண்டுகள் முன்பு மறுபதிப்பு கண்டது. என்றாலும் அசலே அமர்க்களம்.

இலவசக்கொத்தனார் said...

பார்க்கவேண்டும் என தூண்ட வைத்த விமர்சனம். நல்லா எழுதி இருக்கீங்க கப்பி.

Unknown said...

கப்பி கோபி சொன்னது போல் இந்தக் கதை எனக்கும் ரன் அவே ஜூரி புத்தகத்தை நினைவுப் படுத்துகிறது... பார்க்கலாம் போலத் தான் உள்ளது...

ச.மனோகர் said...

நான் ரசித்து பார்த்த படங்களுள் இதுவும் ஒன்று.தங்கள் விமர்சனம் படித்த போது படத்தை மீண்டும் பார்த்த உணர்வு.

நன்றி.

ஸ்ருசல் said...

நீங்கள் எழுதிய அதே தேதியில் தான் நானும் படம் பார்த்துள்ளேன். அல்லது மறுநாள்.

லீ காப் (எதிர்க்கும் நபர்)-ன் பாத்திரம், அவரது நடிப்பு மிகவும் பிடித்து போனது. என்னவொரு ஒற்றுமை!

கடைசி காட்சி நான்கைந்து முறை பார்த்தும் என் மண்டைக்கு ஏறவில்லை (புகைப்படம் விழுமே!). கடைசியில் தான் விளங்கிற்று.

Ayyanar Viswanath said...

பகிர்விற்கு நன்றி கப்பி

btw கீத்து கொட்டாய் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

கப்பி | Kappi said...

புலி

டிவிடி இருந்தது..எவனோ ஆட்டைய போட்டுட்டான் :))

கோபிண்ணே

நன்றி :). Runaway Jury பார்த்திருக்கேன்..அதுவும் கலக்கலான படமாச்சே!

boston bala

இந்த படத்தை ஏற்கனவே பலமுறை பார்த்திருந்தும் மீண்டும் இதை பார்ப்பதற்காகவே அப்படியொரு பட்டறைக்குச் சென்றிருக்கிறேன் :)))

கப்பி | Kappi said...

கொத்ஸ்

டாங்கிஸ் :)

தேவ்

தைரியமா பார்க்கலாம்ண்ணே :))

பாபு மனோகர்

வாழ்த்துக்களுக்கு நன்றி!

கப்பி | Kappi said...

ஸ்ருசல்

நீங்க சொன்ன மாதிரி இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நடிகர்களின் தேர்வே அட்டகாசமாக இருக்கும்..அதே போல் ஒவ்வொரு முகபாவங்களும் உடல்மொழியும் பிரமாதமாக இருக்கும்!

நன்றி :)

அய்யனார்

வாழ்த்துக்களுக்கு நன்றி அய்ஸ் :)

Sud Gopal said...

நல்லதொரு தெரிவு...

எங்கள் சிங்கம் "ஜேக் நிக்கல்சன்" நடிச்ச படங்களில் இருந்து ஏதாவது ஒரு படத்திற்கு விமர்சனம் போட்டீங்கன்னா புண்ணியமாப் போகும்...

கப்பி | Kappi said...

நன்றி சுதர்சன்!

One Flew Over the Cuckoo's Nest-ல் ஆரம்பிப்போமா? :)

Sud Gopal said...

//கப்பி பய said...
நன்றி சுதர்சன்!

One Flew Over the Cuckoo's Nest-ல் ஆரம்பிப்போமா? :)//

ஒன்றா..ரெண்டா...??

One Flew Over the Cuckoo's Nest
Chinatown
The shining
A few good men
As Good as it gets
Anger management
Departed....

என்று சங்கிலித் தொடர் போலே பட்டியல் நீளாதா??