ராண்டல் மெக்மர்ஃபி என்னும் குற்றவாளி சிறைச்சாலை வேலைகளிலிருந்து தப்பிப்பதற்காக பொய்யாக மனநோய் இருப்பதாகச் சொல்லி மனநல காப்பகத்திற்குக் கொண்டுவரப்படுகிறான். அந்த மனநலக் காப்பகத்தில் மனநோயின் பல்வேறு கட்டத்தில் இருப்பவர்கள் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். சிலர் தாமாகவே அங்கு வந்து தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். ரேட்சட் என்னும் நர்ஸ் அந்த காப்பகத்தின் நிர்வாகியாக இருக்கிறார். நோயாளிகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிருக்கும் கண்டிப்பான நர்ஸாக இருக்கிறார். ஒவ்வொரு நோயாளியையும் அவர்கள் மனநோய்க்கான காரணத்தை நினைவூட்டியே அவர்களின் பயத்தை அதிகரித்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்.
வாழ்க்கையின் ஓவ்வொரு நொடியையும் மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டும் என்று சித்தாந்தம் பேசும் மெக்மர்ஃபி ரேட்சட்டின் கண்டிப்புக்கு அடங்க மறுக்கிறான். ரேட்சட் அவர்களை யோசிக்கவே விடாமல் மனநோயாளிகளாகவே வைத்திருப்பதாகச் சொல்கிறான் மெக்மர்ஃபி. ரேட்சட்டுடன் சண்டை போடுவதும், சந்தோஷமாகப் பொழுதைக் கழிப்பதும் மற்ற நோயாளிகளை அவன்பால் ஈர்க்கின்றன. அவனிடம் நட்பு கொள்கின்றனர். வாழ்க்கை மேல் உள்ள பயம் காரணமாக ஊமைசெவிடனாக நடிக்கும் சீஃப் என்ற நோயாளி மெக்மர்ஃபியுடன் நெருங்கிப் பழகுகிறான்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhc35cNlPKnXcsONfSk9CYci_vXAMPJLdHsO-hsO23Pl4oQTuDzxH6hsGn9BdygboCCsi0zRW4MtMPEDXjOO1xCYiM5I7rH3OIfFKHKQ_dMNi_KqwcWcUksY01yChT9JFLsilc-0sWn9QSA/s320/cuckoo1.jpg)
அத்தனை நாட்களாக ரேட்சட்டின் கட்டுப்பாட்டில் நோயாளிகள் போல் வாழ்ந்த அவர்கள் பயத்தைக் குறைக்கின்றான். இதனால் ரேட்சட்டுக்கும் மெக்மர்ஃபிக்கும் சண்டை வலுக்கிறது. ரேட்சட் இருக்கும்வரை தன்னால் காப்பகத்தில் இருந்து வெளியேற முடியாது என்று உணரும் மெக்மர்ஃபி தப்பி ஓட முடிவெடுக்கிறான். தப்புவதற்கு முந்தைய இரவு நோயாளிகளுடன் குடித்து உல்லாசமாகக் கழிக்கிறான். அடுத்த நாள் அத்தனை பேரும் ரேட்சட்டிடம் சிக்கிவிடுகின்றனர். அப்போது ரேட்சட்டிற்கும் மெக்மர்ஃபிக்கும் இடையில் தக்ராறு ஏற்பட்டு மெக்மர்ஃபி ரேட்சட்டைத் தாக்க முற்படுகிறான். அதற்குள் காவலாளிகளால் பிடிக்கப்பட்டு தனியாக அழைத்துச் செல்லப்படுகிறான். அவனுக்கு Lobotomy செய்யப்படுகிறது. மூளையின் ஒரு பகுதியை அறுவை சிகிச்சை மூலம் துண்டித்துவிடுகிறார்கள். கிட்டத்தட்ட நடைபிணமான நிலையில் அவனை மீண்டும் கொண்டு வருகிறார்கள். அவனை அந்த நிலையில் காணத் தாங்காமல் சீஃப் ஒரு விடியலில் மெக்மர்ஃபியைக் கொன்றுவிட்டு தப்பிக்கிறான். வலிமையான பின்னணி இசையுடன் படம் முடிகிறது.
திரைப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமையாக அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நொடியும் சுதந்திரமாக சந்தோஷமாகக் கழிக்கும் மெக்மர்ஃபி, காப்ப்கத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கண்டிப்பான நர்ஸ் ரேட்சட், மனநோயின் பல்வேறு கட்டங்களில் இருக்கும் நோயாளிகள் என இப்படத்தின் கதாபாத்திரங்கள் என்றும் நினைவில் தங்குபவை.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjVNPHSHMlZnRfhOYkG9z0Lmr6mMHPVP_JrrgJW0xBIijDHn22ZZdhrHD6frepMXI75b3gm0GPlXjToqM2lQXanzRTp2Zg2HrNW-k-_4_uMFf5bS9fjYNVBlAb1v2E-WPNq5gKTohT-9y3a/s320/59_cuckoos_nest.jpg)
மெக்மர்ஃபியாக ஜாக் நிக்கல்சன்(Jack Nicholson). தலைவரின் நடிப்பைப் பற்றி ஒன்றுமே சொல்ல வேண்டாம். ஆஸ்கர் விருது வாங்கித் தந்த கதாபாத்திரம். அத்தனை நடிகர்களுமே தங்கள் தேர்ந்த நடிப்பால் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு வலுவூட்டியிருக்கிறார்கள்.
நேர்க்கோட்டில் செல்லும் திரைக்கதையில் பல காட்சிகள் நம்மை கவரும். மெக்மர்ஃபி மனநல காப்பகத்திற்கு வரும் ஆரம்பகட்ட காட்சிகள், நோயாளிகள் தங்கள் தயக்கம் நீங்கி அவனுடன் பழகும் காட்சிகள், அவன் தப்பிப்போகும் முன்னிரவு நோயாளிகள் உல்லாசமாக இருக்கும் காட்சி, இறுதியில் சீஃப் அவனைக் கொன்றுவிட்டு தப்பிக்கும் காட்சி என படம் நெடுக நம்மை ஒன்றச் செய்யும்.
மெக்மர்ஃபி காப்பகத்திலுள்ள மனநோயாளிகளிடமும் படம் பார்க்கும் நம்மிலும் ஏற்படுத்திச் செல்லும் தாக்கம் பெரிது. One Flew Over the Cuckoo's Nest கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.
9 comments:
என்னப்பா tragedy போல இருக்கே!
எனக்கும் tragedy-கும் ஒத்துக்கவே ஒத்துக்காதே!!
நீ சொல்ற பல விஷயங்கள் பிரபு நடிச்ச மனசுக்குள் மத்தாப்பு படத்துல வரும் (மனநல காப்பகம்,ஜாலியா இருக்கற மனநோயாளி,lobotomy etc etc).
இதையே ஒரு இந்தி படமாகவும் எடுத்திருந்தாங்க (சல்மான் கான்,கரீனா கபூர்,ஓம் பூரி).நான் அமெரிக்கா மொதல்ல வந்த போது இந்த படத்தை விமானத்துல பாத்தேன்.இது பத்தியும் என் பயண குறிப்புல போட்டிருந்தேன்.
ஆங்!!
சொல்ல மறந்துட்டேனே!!
நல்ல பதிவு!!
வாழ்த்துக்கள்!! :-D
சிவிஆர்
இது கண்டிப்பா ஒத்துக்கும் பார்த்து சொல்லுங்க தல ;))
நீங்க சொல்றது சரிதான்..மனசுக்குள் மத்தாப்பு பத்தி நானே சொல்லனும்னு நினைச்சேன்..மறந்துட்டேன் :)
நன்றி!
பாக்கனும்... :))) நல்ல ரிவிவ்...
படம் ரொம்ப நல்லா இருக்கும்! கண்டிப்பா பாருங்க!! படத்துல ஹிரோவா நடிச்சவருக்கு அகடெமி விருது கிடைத்தது வேற!!
ஏண்டா நம்ம தமிழ் சினிமாவில் வந்த காட்சி எல்லாம் வருதே னு பார்த்தேன்.
ரைட் கிடைச்சா பாத்து விடலாம்.
கப்பி மிலோஸ் ஃபோர்மனோட "தி மேன் இன் தி மூன்" பாத்துட்டு எழுதச் சொன்னா அவ்ரோட குக்கூஸ் நெஸ்ட்ட எழுதியிருக்கியேப்பா ...
அடுத்தது அதானோ?
ஜி
_/\_ :))
குட்டிபிசாசு
ஆமாங்க..Jack Nicholson ஆஸ்கர் வாங்கின படம்..மொத்தம் ஐந்து ஆஸ்கர் விருதுகள் வாங்கின படம் இது!
புலி
பார்த்து சொல்லுங்க ;))
மகேந்திரன்
அந்த படம் இன்னும் பாக்கலையே மகி...தேடிப் புடிச்சு பார்த்ததும் எழுதிடுவோம் :))
பதிவை படித்தவுடன் சிவிஆர் சொன்ன படம் தான் நினைவுக்கு வருது....நோட் பண்ணிக்கிட்டேன் :)
விமர்சனத்துல கலக்குற செல்லம் :)
நல்லதொரு படத்திற்கு நல்லதொரு அறிமுகம் கப்பி கண்டிப்பாப் பார்க்கணும்ன்னு சொல்லுற பாத்துருவோம்.
Post a Comment