Wednesday, August 22, 2007

பராசக்தி

"சக்சஸ், இன்று முதல் நானும் ஒரு ஏமாற்றுக்காரன்" இந்த இடத்தில் ஆரம்பிக்கிறது நடிப்பு சக்ரவர்த்தியின் ஆட்சி. அதிலிருந்து படம் முழுதும் அவர் ஆளுமைதான்.இது இவருக்கு முதல் படம் என்று சொன்னால் அதை யாரும் நம்ப மாட்டார்கள். அவ்வளவு கச்சிதமாக நடித்திருந்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

"பராசக்தி"தமிழ் திரையுலக வரலாற்றில் இன்றும் எட்ட முடியாத ஒரு மைல்கல். கலைஞர் கருணாநிதியின் திரைக்கதை, வசனசத்தில் ஒரு காவியமாக எழுந்து நிற்கிறாள் இந்த பராசக்தி. பல இடங்களில் நம்மை எழுந்து நிற்க வைக்கிறாள் இந்த பராசக்தி. இவள் இன்றும் நம்மை நோக்கி பல கேள்விக்கணைகளை தொடுத்து நிற்கிறாள்.

சமுதாயத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை. வெறும் ஒரு குடும்பத்தின் கதையாக இருந்திருந்தால் அது இந்த அளவிற்கு வெற்றி பெற வாய்ப்பில்லை. அது பல தமிழர்களின் வாழ்வையும் குறித்த கதையாக இருக்கிறது. "இட்லிக்கடையா?" என்று கேட்கும் கல்யாணியுடம் "தமிழ்நாட்டில் தாலி இழந்தவர்களுக்கு அது தானே தாசில் உத்யோகம்" என்று அவள் பக்கத்து வீட்டு பெண்மணி சொன்னது எவ்வளவு உண்மை. இவனுங்கள எல்லாம் இட்லி சுட்டு படிக்க வெச்சனே, இன்னைக்கு எனக்கு கஞ்சி ஊத்தக்கூட யோசிக்கறானுங்களேனு வயசான பாட்டிங்க அவுங்க பசங்களை திட்டி கேள்விப்பட்டுருக்கேன்.

படம் நடந்ததாக சொல்லப்படும் கால கட்டம் 1942. இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயமது. படத்தின் கதை இது தான், ஞான சேகரன், சந்திர சேகரன், குண சேகரன் மூவரும் சகோதர்கள். பிழைப்புக்காக ரங்கூன் (பர்மா) சென்றிருக்கிறார்கள். அவர்களின் ஒரே தங்கை கல்யாணியின் திருமணத்தைக்காண மூவரும் மதுரை வர முற்படுகிறார்கள். போர் நடக்கும் காரணத்தால் கப்பலில் பயணம் செய்ய ஒருவருக்கு மட்டும் இடம் என்றவுடன் குண சேகரனை அனுப்பி வைக்கிறார் அவர் அண்ணன்.

போர் காரணமாக பல மாதங்கள் தாமதமாகி சென்னையை வந்தடைகிறது கப்பல். மதுரை ரயிலுக்கு டிக்கட் கிடைக்காததால் ஒரு நாள் தங்கிவிட்டு காலையில் புறப்படலாம் என்று ஹோட்டலில் தங்குகிறார் குணசேகரன். அங்கே ஒரு வஞ்சியால் வஞ்சிக்கப்பட்டு தன் கையிலிருந்த பணம் அனைத்தையும் இழக்கிறார்.

அவருக்கு அங்க யாரும் உதவ மறுப்பதால் பட்டினியில் வாடுகிறார். பிச்சையெடுக்கிறார், பின் அதுவும் உதவாததால் பைத்தியமாக நடித்து உண்கிறார். ஒரு வழியாக தன் சொந்த ஊருக்கு செல்கிறார். அங்கே விதியின் வசத்தால், கணவனை இழந்து, தந்தையையும் இழந்து கைக்குழந்தையுடன் குடிசை வீட்டில் தங்கி இட்லி வித்து வாழ்கிறாள் அவன் தங்கை கல்யாணி. மாமன் வருவான் நம் நிலைமை மாறும் என்று அவள் கைக்குழந்தைக்கு ஆறுதல் சொல்வதை போல் தனக்கே சொல்லி கொள்கிறாள். அவ்வாறு வாழும் கல்யாணியின் நம்பிக்கையில் மண் அள்ளி போட விருப்பமில்லாமல் அவள் முன்னும் பைத்தியமாக நடித்து அவளுக்கு காவலாளியாக இருக்கிறான் குணசேகரன்.

கல்யாணியின் வறுமையை பயன்படுத்தி அவளை நாசமாக்க துடிக்கிறான் அந்த ஊர் மைனர் ஒருவன். அவன் குணசேகரனிடம் நன்றாக உதைவாங்கி கொள்கிறான். பிறகு அவளை வேலைக்கமர்த்தி காம லீலைக்கு அழைக்கிறான் நல்லவன் வேடம் போடும் நாட்டாமை ஒருவன். அந்த கேடு கெட்டவனுக்கு பாரதிதாசனின் புத்தகங்கள் ஒரு முகத்திரை. அவனிடமிருந்து தப்பித்து தன் அண்ணன் சந்திர சேகரன் வீட்டில் வைக்கும் விருந்திற்கே சென்று, தன் பிள்ளை ஆறு நாள் பட்டினி கிடப்பதாக சொல்லி, உணவுக்காக அவன் காலை பிடித்து கெஞ்சுகிறாள் கல்யாணி. அவனும் தன் தங்கையென்று தெரியாமல் எட்டி உதைக்கிறான்.

பிறகு அருகே இருக்கும் பராசக்தியின் கோவிலுக்கு செல்கிறாள் கல்யாணி. அவளை மானபங்க படுத்த முயல்கிறான் அந்த கோவில் பூசாரி. அவனிடமிருந்து தப்பித்து செல்கிறாள் கல்யாணி. இந்த சுயநலமிக்க வஞ்சக உலகில் வாழ விருப்பமில்லாமல் தன் குழந்தையை ஆற்றில் வீசிவிட்டு, தற்கொலை செய்ய முயல்கிறாள் கல்யாணி. அங்கே இருக்கும் காவலரால் காப்பாற்றப்படுகிறாள்.

பிறகு நீதிமன்றத்தில் அவள் இன்னாரென்று அவள் அண்ணன் சந்திர சேகரன் உணர்கிறான். தன் தங்கைக்காக கோவில் பூசாரியை தாக்கிவிட்டு நீதிமன்றத்தில் நிற்கிறான் குணசேகரன். அவன் காதலியால் கல்யாணியின் குழந்தை காப்பாற்றப்படுகிறது. ஒரு வழியாக கல்யாணியும், குணசேகரனும் சந்திரசேகரிடம் சேர்கிறார்கள். பிச்சைக்காரர்கள் மாநாட்டிற்கு பொருளுதவி கேட்டு வரும் ஞானசேகரனும் அவர்களுடன் சேர்கிறான். ஒரு வழியாக பிரிந்தவர்கள் சேர்கிறார்கள். சுபம்...

இனி படத்தில் மனதை தொட்ட காட்சிகள்...

- குணசேகரன் சென்னையை தொட்டதும் முதலில் கேட்கும் குரல் ஒரு பிச்சைக்காரனின் குரல். இந்த படம் வந்து ஐம்பத்தி ஐந்து வருடம் கழித்து வந்திருக்கும் சிவாஜி படத்திலும் நாயகன் சென்னையில் கேட்கும் முதல் குரல் ஒரு பிச்சைக்காரியின் குரல். ஐம்பத்தி ஐந்து வருடங்களாக பல ஆட்சி மாற்றமும் நம் சமூகத்தில் எந்த மாற்றமும் ஏற்படுத்தவில்லையா?

- பிச்சைக்காரர்களுக்கு ஓட்டுரிமை வேண்டுமென்று போராட்டம் நடுத்த போவதாக சொல்கிறார் ஞானசேகரன். அது இன்றும் நிறைவேறவில்லை என்றே நினைக்கிறேன்

- ஓ ரசிக்கும் சீமானே பாடலும், புது பெண்ணின் மனதை தொட்டு போனவரே பாடலும் படம் முடிந்து மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.

- காசை பற்றி வரும் பாடலில் இந்த வரிகள் அருமையிலும் அருமை... இதை எழுதியவருக்கு என் பாராட்டுக்கள்.
ஆரிய கூத்தாடினாலும் தாண்டவக்கோனே
காசு காரியத்தில் கண் வையட தாண்டவக்கோனே
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே
காசுக்கு உதட்டில் உறவாடுடா தாண்டவக்கோனே

முட்டாப்பயலையெல்லாம் தாண்டவக்கோனே
சில முட்டாப்பயலையெல்லாம் தாண்டவக்கோனே
காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே

கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே
பிணத்தை கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே
பணம் பெட்டி மேல கண் வையடா தாண்டவக்கோனே

ஆரிய கூத்தாடினாலும் தாண்டவக்கோனே
காசு காரியத்தில் கண் வையட தாண்டவக்கோனே

- போலிஸ் கான்ஸ்டபிலிடம் குணசேகரன் பேசும் வசனங்கள் அருமையிலும் அருமை

"மெட்ராஸ்ல மனுஷன் மிருகமாகத்தானிருக்கிறான்"

"ஏய்"

"உங்களை சொல்லலைங்க. முதுகெலும்பு உடைய மூட்டை வண்டியை இழுக்கிறானே, குதிரைக்கு பதிலாக நரம்பு தெறிக்க தெறிக்க ரிக்ஷா இழுத்து கூனிப்போயிருக்கிறானே, நாயை போல சுருண்டு நடைப்பாதையில் தூங்குகிறானே அந்த நல்லவனை, நாதியற்றவனை, நாலு கால் பிராணியாய் ஆக்கப்பட்ட மனிதனை சொன்னேன். சென்னை புனிதமான நகரம். இங்கே மனித மிருகம்"

"சரி தான் போடா. மெட்ராஸுக்கு நீ மேயராகற காலத்துல மிருகத்தை எல்லாம் மனுஷனாக்கலாம்"

இதே வசனத்தை இன்றும் படத்தில் வைக்கலாம். நல்ல கைத்தட்டல் கிடைக்கும். பல மேயர்கள் வந்தாலும் இங்கே எந்த மாற்றமும் இல்லை.

- படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பிற்கு பெரும்பாலும் நீதிமன்ற காட்சியையோ, அல்லது பராசக்தியின் பின்னாலிருந்து எழுந்து பூசாரியிடம் பேசும் வசனத்தையோ சொல்வார்கள். ஆனால் எனக்கு பிடித்தது, அவள் தங்கை முன்பு பைத்தியம் போல் முதன் முதலில் நடிக்கும் காட்சி. மன்னனை போல, கூத்தாடியை போல, மந்திரியை போல, ஏழை விவசாயி போல மோனோ ஆக்டிங் செய்திருப்பார். அந்த காட்சியை பார்த்ததும் அந்நியன் படத்தில் பிரகாஷ்ராஜ் பேசும் "எம்.ஜி.ஆரை பார்த்திருக்கேன், சிவாஜிய பார்த்திருக்கேன், ரஜினிய பார்த்திருக்கேன், கமலை பார்த்திருக்கேன். ஆனா இந்த மாதிரி ஒரு நடிகனை பார்த்ததில்லைனு" வசனத்தை எழுதியவருக்கு "பராசக்தி" DVD பார்சல் செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டேன். முதல் படத்திலே தான் ஒரு மகாநடிகன் என்று நிருபித்திருக்கிறார்.

- படத்திற்கு பராசக்தி என்று பெயர் வைத்தது எவ்வளவு உண்மை. முற்பிறவியில் செய்த கருமவிணைகளால் கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். பின் தேவியின் சந்திக்கு கல்யாணி சென்ற பிறகு நடக்கும் பல மாற்றங்களால் அவர்கள் ஒன்று சேர்கிறார்கள். கல்யாணியின் குழந்தை இறக்காததும் அவள் அருளே. இந்த கஷ்டங்களை அவர்கள் அனுபவிப்பதாலே ஏழைகளுக்கு உதவ வேண்டும், சமத்துவம் மலர வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக முயல்கிறார்கள். இதை பண்டரிபாய் நடிகர் திலகத்திற்கு சொல்லும் இடம் அருமை.

- இன்றும் தமிழர்கள் பலருக்கு பிறக்க ஒரு ஊர், பிழைக்க ஓரு ஊராகத்தான் இருக்கிறது. என்று ஏற்படுமோ நல்ல மாற்றம்?

- இன்று இதே படத்தை சூர்யாவையோ, விக்ரமையோ போட்டு எடுக்கலாம். இட்லிக்கடைக்கு பதில் கட்டட வேலைக்கு செல்வதாக காட்டலாம். வேறு எந்த மாற்றமும் தேவையில்லை.

13 comments:

கதிர் said...

நச்!
வெள்ளைப்படம்னா கொஞ்சம் சுணக்கமா இருக்கு பார்க்க. அதனால இன்னை வரைக்கும் பாக்கல.
கிடைச்சா பாக்கணும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கீத்துக் கொட்டாய் "சக்ஸஸ்" என்ற முதல் வார்த்தையுடன் தொடங்குதா? சூப்பர்! வாழ்த்துக்கள் கப்பி, தேவ், பாலாஜி!

என்ன தான் ஏசி தியேட்டரில் படம் பார்த்தாலும்...கீத்துக் கொட்டாயில் கால் பரப்பிக் கொண்டு, கையில் அவிச்ச வேர்கடலையோடு, ஒரு பீச்சில் உட்கார்ந்து படம் பாக்கறா மாதிரி வருமா?

தமிழ்நாட்டில் இன்னும் இது மாதிரி கீத்துக் கொட்டாய் எல்லாம் இருக்கா? இல்லை பதிவுலகத்துக்கு வந்தாத் தான் பாக்க முடியுமா?

எங்க ஊரு வாழைப்பந்தல் தெய்வா தியேட்டர் இப்ப வரைக்கும் கிட்துக் கொட்டாயாத் தான் இருக்கு! :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆனா இந்த மாதிரி ஒரு நடிகனை பார்த்ததில்லைனு" வசனத்தை எழுதியவருக்கு "பராசக்தி" DVD பார்சல் செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டேன்//

சிவாஜின்னாலே ஓவர் ஆக்டிங்-னு இப்ப கொஞ்ச நாளாத் தான் யாரோ கிளப்பி வுட்டுட்டாங்க! நீள வசனம் பேசறதும் ஒரு காரணமா இருக்கலாம்!
ஒரு பொய்யைப் பல முறை சொன்னா உண்மைங்கிறது மாதிரி, அது நல்லாப் பத்திக்கிச்சு! :-(

இந்தப் படத்துல கவிஞர் கண்ணதாசன் நீதிபதியா வருவாரு பாலாஜி!
கலைஞர் - நடிகர் - கவிஞர் ன்னு இப்படி எல்லாருக்குமே இப்படம் ஒரு டர்னிங்க் பாயிண்ட்!

Anonymous said...

படத்தில் அந்த கடைசி காட்சி மட்டும் மனதில் அப்படியே இருக்கின்றது.கலைஞரின் வசனமும்,அதற்கு ஏற்ற நடிப்பும் அருமைதான்...It is a golden movie.

CVR said...

இப்பொழுது கூட வசனம் என்றால் 'பராசக்தி' படம்தான்!!
அந்த நீதிமன்ற காட்சியை எத்தனை முறை பார்த்தாலும் மெய் சிலிர்க்கும்.
தமிழை ரசிக்கும் அனைவரும் மெய் மறக்ககூடிய காட்சி!!
அருமையான விமர்சனம்!
இது போல மேலும் பல விமர்சனங்களோடு இந்த வலைப்பூ சிறக்க வாழ்த்துக்கள்!! :-)

G.Ragavan said...

கீத்துக்கொட்டகைக்கு என்னுடைய வாழ்த்துகள். இப்பிடிப் பல படங்கள எங்க்களுக்கு அறிமுகப் படுத்தனும்னு கேட்டுக்கிறேன்.

பராசக்தி எப்படிப் படம்யா. இன்னைக்கும் நாட்டுக்கு அப்பிடியே பொருந்தும். எல்லாக் காலத்துக்கும் பொருந்துற மாதிரி கதை வசனம்.

நடிகர் திலகத்தைச் சொல்லனுமா என்ன? விக்ரமப் போடலாம்...ஆனா சூரியாதான் ரொம்பப் பொருத்தம்.

ஒரு விஷயம் உண்மைதான். அன்னைக்குப் படத்துல நடந்ததெல்ல்லாம் இன்னைக்கும் அப்படியே மாறாம இருக்கு. நாடும் அப்படியே மாறாம இருக்கு. என்ன கொடுமை சரவணன் இது!

நடிகர் திலகத்தில் புகழ் ஓங்குக.

VSK said...

தமிழில் மிகச் சிறந்த 10 படங்களுள் ஒன்றாக பராசக்தி என்றும் நிலைத்து நிற்கும்.

ஒரு சீனில் வரும் அந்த 'அப்பா' துரைசாமி முதல், படம் முழுதும் வியாபித்து, முதல் படத்திலேயே விஸ்வரூபம் காட்டிய விஸி.கணேசன் வரை எல்லாருடைய நடிப்புமே கச்சிதமாக இருக்கும்.
பூசாரி, கிழட்டு பணக்காரன், எஸ் எஸ் ஆர், சஹஸ்ரநாமம், ரஞ்சனி, என எண்ணற்ற பாத்திரங்கள் இருந்தாலும் ஒவ்வொருவரும் தத்தம் முத்திரையைப் பதித்திருப்பர்.

பாடல்கள் அத்தனையும் அருமை!
புதுப்பெண்ணின் மனதைத் தொட்டு
கா கா கா கா
ஓ ரசிக்கும் சீமானே
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

இன்னமும் அநேகமாக முழுப்பாடலும் தெரியும்!

மிகச் சிறந்த படத்திற்கு, ஒரு மிகச் சிறந்த பதிவிட்டு, பெருமைப் படுத்திவிட்டீர்கள்!

நண்பர் ஜோ இன்னமும் பார்க்கவில்லையா இந்தப்பதிவை!

Thamizhan said...

அதுவரை நாடகங்களிலே பெரும்பாலும் பெண் வேடங்களில் நடித்த கணேசனை இதில் போடுவதற்குத் தயங்கிய போது அறிஞர் அண்ணா அவர்கள்தான் நன்றாக நடிப்பார் போடுங்கள் என்று வற்புறுத்தினாராம்.
பின்னர் அறிஞர் அண்ணாவின் சத்ரபதி சிவாஜி நாடகத்திலே நடித்த கணேசனைப்
பெரியார் அவர்கள்தான் சிவாஜி கணேசன் என்றழைத்தார்.

சிவாஜி கணேசன் என்றுமே நடிப்பின் சிகரமாகவே கருதப் படுவார்.

MeenaArun said...

இதில்நடிகர் திலத்த்ற்க்கு பதிலாக நடிப்பிசை புலவி கே.ஆர்.ராம்சாமியை தன் போடவெண்டும் என்ற் ஏ.வி.ம் ஆசை பட்டாராம்.ஆனால்,நேஷ்ன்ல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் தான் பிடிவாதமாக சிவாஜி தான் குணசேகரன் என்று இருந்து வெற்றிய்ம் பெற்றார்.அவருக்கு தாய் போல் இருந்து உதவி செய்தவர்,பெருமால் முதலியார் மணைவி சாந்தாம்மாள்.அதனால் தனது மூத்த பெண்னிற்க்கு சாந்தி என்று பெயர் வைத்தாராம் இந்த் நன்றி மறக்காத நடிப்பு கடல்

Jayaprakash Sampath said...

//நடிப்பிசை புலவி கே.ஆர்.ராம்சாமியை தன் போடவெண்டும் என்ற் ஏ.வி.ம் ஆசை பட்டாராம்.//

மீனா அருண், அப்படி இல்லீங்க. முதலிலே தேர்ந்தெடுக்கப்பட்டவர் சிவாஜி கணேசன் தான். படம் பாதி முடிந்த பிறகு, ஏவி.எம் பார்த்த போது, பல காட்சிகளில் அவருக்கு சிவாஜி நடிப்பு பிடிக்கவில்லையாம். கே.ஆர்.ராமசாமியைக் கொண்டு புதுசாக மறுபடியும் எடுக்கலாம் என்ற போது, நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் பிடிவாதமாக மறுத்து, ஏவி.எம். சரியாக வரவில்லை என்று சொன்ன காட்சிகளை மட்டும் ரீஷூட் செய்து படத்தை முடித்தார் என்று சொல்வார்கள்.

//இன்று இதே படத்தை சூர்யாவையோ, விக்ரமையோ போட்டு எடுக்கலாம்//

அது சரி... ஸ்ரீரஞ்சனி வேஷத்திலே யார்? ட்ரிசா வா இல்லே அச்சினா? :-)

*****

சிவாஜி கூடவே இந்தப் படத்தில் மேலும் இருவர் அறிமுகமாகி, பின்னர் பாப்புலர் ஆனார்கள். அவர்கள், பண்டரிபாய் மற்றும் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.

MeenaArun said...

இல்லங்க பிரகாஷ்,அந்த் ப்டத்துக்கு,ஏவி.எம்.பைனான்சியர்(தமிழ்ல் என்ன?),பெருமாள் முதலியார் தயாரிப்பாளர்.ஏவி.எம்,வியாபரத்துக்கு,சிவாஜிய நம்பாம,இராமசாமியை போடலம்னு சொன்னார்,ஆனா பெருமாள் முதலியோ தீவிர அண்ணா பக்தர்,(சிவாஜி,அண்ணாவோட சிபாரிசு)சிவாஜி நடிச்சாதான் படம் எடுப்பேன்,இல்லாடி,வேண்டாம்னு சொல்லிட்டார்.
அண்ணாவை பகைச்சுக்க விரும்பாம ஏவி.எம்,வேற வழியில்லாம ,பைன்னான்ஸ் செய்தார்

சிவாஜி அடிக்கடி சொல்வார்,ஏவி,எம் கார்டனில் உள்ள் மரங்கள் எல்லம் தண்ணிர்ல வளரல,என் கண்ணிரில வளர்ந்ததுன்னு

இன்னோன்னு,சிவாஜி பிரபலம் ஆனப்பிறகு,ஏவி.எம் அவரை வச்சு படம் எடுக்க வந்தாங்க,அப்போஎல்லாம்,ஒரு படதுக்கு இவ்வலஒ தன்னு தன் சம்பள்ம்னு பேசுவங்க்(அது எத்தன்னை வருடம் ஆனாலும்)ஆனால்,சிவாஜி,ஒரு மணி நேரத்ற்க்கு என்று சம்பளம் பேசி நடித்தார்(அந்த ஒரு படத்திற்க்கு மட்டும்)

Thamizhan said...

கணேசன் வேண்டாம் என்று தயங்கிய திரு.பெருமாள் அவர்களிடம் அறிஞர் அண்ணா,இந்தப் படம் வெற்றியடைய வில்லை என்றால் உங்களுக்கு நானே பணமில்லாமல் ஒரு கதை எழுதித் தருகிறேன் என்றாராம்.

பின்னால் சிவாஜி திருப்பதி சென்று வந்ததால் தி.மு.க விலிருந்து விலக நேரிட்டது.அப்போது அண்ணா அவர்களிடம் பாருங்கள் நீங்கள் நடிகராக்கினீர்கள் என்று குறை சொன்னவர்களிடம்,இல்லை.அவர் திறமையை யாராவது கண்டு பிடித்திருப்பார்கள் என்றுதான் சொன்னாராம்.

நடிகர் திலகம் மிக்க நன்றியுடையவர்.ஒவ்வொரு பொங்கலுக்கும் புத்தாடைகளுடன் பெருமாள் அவரைப் பார்த்து வருவாராம்.

ஜோ/Joe said...

வெட்டிபயல்,
அருமை .அருமை.பராசக்தி படத்தின் முதல் காட்சியில் நடிகர் திலகம் தூக்கத்திலிருந்து விழிப்பார் .தான் மட்டும் எழவில்லை ,தூங்கிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவை தட்டி எழுப்பியது அந்த சிங்கம் .

"பராசக்தியின் பெயரால் ,உலக மாதாவின் பெயரால்" என்று அவர் முழங்கும் போது ,அது தான் அவர் முதல் படம் என்று யாரால் நம்ப முடியும் .பிறவி நடிகர் நம் நடிகர் திலகம்.

இந்நேரத்தில் லண்டன் மியூசியத்தில் நம் நடிகர் திலகத்தின் மெழுகு சிலை நிறுவப்பட உள்ளதாக செய்தி வந்துள்ளது .வாழ்க நடிகர் திலகம் புகழ்!