நடிகர் மாதவன் நடித்து தயாரித்திருக்கும் படம். படத்திற்கு வசனமும் அவரே எழுதியிருக்கிறார்.மராத்தியில் வெளிவந்து விருதுகள் வாங்கிக் குவித்த டோம்பிவில் பாஸ்ட் என்ற படத்தின் தமிழாக்கம் தான் எவனோ ஒருவன்.
அந்நியன் பார்த்தீருக்கீங்களா...? அதில் வரும் அம்பி கதாபாத்திரம் தான் இந்தப் படத்தில் நம்ம மாதவன் ஏற்று இருக்கும் ஸ்ரீதர் வாசுதேவன் பாத்திரம். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நடுத்தர வயது குடும்பத் தலைவனாய் மாதவன். இரண்டு குழந்தைகளுக்கு அப்பா. அவர் மனைவியாக இரு குழந்தைகளுக்குத் தாயாக சங்கீதா.
வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் கடைபிடிக்க வேண்டும் என பள்ளிபாடங்களும், அரசாங்கமு சுட்டிக் காட்டும் விதிகளைப் பின்பற்றி வாழும் கொள்கையாளன் நம் நாயகன். அதன் மூலம் அவனுக்கு கிடைப்பது சமூகத்தின் கேலிப்பேச்சுக்களும், ஏளன பார்வைகளும் ,பைத்தியக்காரன் என்ற பட்டமுமே.. இருப்பினும் தன் கொள்கையில் நிலையாய் நிற்கிறான் நாயகன். தன் கொள்கையால் தன் குடும்பம், அலுவலகம் என எல்லா இடங்களிலும் பாதிப்பிற்கு உள்ளாகிறான்.
இயலாமை ஆற்றாமை என அனைத்தும் ஒரு கட்டத்தில் பொறுமையின் எல்லை தொடும் போது நாயகனின் கோபம் வன்முறையாய் வெடிக்கிறது.. அதன் பின் தொடரும் நாயகனின் நடவடிக்கைகள், நிகழ்வுகள் என முடிந்த அளவில் யதார்த்தம் கலையாமல் சொல்ல முயன்று இருக்கிறார்கள்..
நாயகனின் இயந்திரத்தனமான வாழ்க்கையை படத்தின் துவக்கத்தில் ஒரு சில வினாடிகளில்லே பார்வையாளர்களின் மனத்தில் பதியுமாறு செய்து இருக்கும் அந்தப் படத்தொகுப்பு கச்சேரி அருமையிலும் அருமை.. நகர வாழ்க்கையில் நடுத்தர வர்க்கம் பற்றி ஒரு காட்சி கவிதையே வடித்திருக்கிறார் இயக்குனர். அடுக்குமாடி குடியிருப்பு, தண்ணீர் லாரி, தண்ணீர் பிடிக்க நிற்கும் வரிசை, அவசரக் கதி சமையல், காலை நேர நாளிதழ், பழவந்தாங்கல் ரயில் நிலையம், மின்சார ரயில் நெரிசல்,சென்னை வங்கி, டிபன் பாக்ஸ் உணவு, மாலை நேர டீக்கடை...என குறைந்த அவகாசத்தில் சொல்லிவிடுகிறார்.
ஆங்காங்கு நடக்கும் சின்ன சின்ன சட்ட மீறல்கள் பொருட்டு நாயகன் குமைந்தாலும் அதை எதிர்க்க அவன் களம் இறங்குவதில்லை.. ஆனால் தான் அது போன்ற நிகழ்வுகளுக்குக் காரணமாகக் கட்டாயப்படுத்தும் போது அவன் அதற்கு இணங்காமல் ஒரு போராளியாக பொங்கியெழுகிறான்.
நம்மில் பலருக்கும் இருக்கும் கேள்விகள் தான்.... எதுக்கு லஞ்சம் கொடுக்கணும்...எதுக்கு அதிக காசு கொடுத்து சில சலுகைகளைப் பெறணும்... இந்தக் கேள்விகள் நமக்குள்ளே புதைத்துக்கொண்டு வாழ பழகிவிட்டோம்.. ஆனால் நம் கதை நாயகனால் அப்படி இருக்க முடியவில்லை...
தலை குனிந்தே பழக்கப்பட்ட மக்களில் எவனோ ஒருத்தன் தலை நிமிர்ந்தால் அவன் தன்னைச் சார்ந்த சமுதாயத்தாலும் குடும்பத்தாலும் எப்படி எல்லாம் பார்க்கப்படுகிறான், நடத்தப்படுகிறான் என்பதே படத்தின் பின்பாதி..
இப்படி ஒரு யதார்த்தமானக் கதையைத் தேர்ந்தெடுத்து திரைப்படமாக்கியதற்கு தயாரிப்பாளர் மாதவனுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். வசனகர்த்தா மாதவனும் படத்தின் பல இடங்களில் ஜெயித்திருக்கிறார்.
நடிகர் மாதவனுக்கு வருவோம்....அற்புதமான வாய்ப்பு... தன்னால் இயன்ற வரை அதில் தன்னை வெளிபடுத்தியிருக்கிறார்...குறிப்பாக பிற்பாதியில் வானம் பார்த்து தன் நிலையை கடவுளிடம் அவர் பேசுவதாய் அமைக்கப்பட்டிருக்கும் காட்சியில் நடிகர் மாதவனும் வசனகர்த்தா மாதவனுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
சங்கீதா... இல்லத்தரசியாக இயல்பான நடிப்பில் வெற்றி கொடி கட்டியிருக்கிறார்.தன்னுடைய சின்ன சின்னக் கனவுகளுக்கு குறுக்கே கணவனின் கொள்கை குறுக்கே வரும் போது மறுகுவதும்... மன்றாடுவதும்... சண்டைப் போடுவதும் என முற்பாதியில் கலக்கும் அவர்... பிற்பாதியில் காணாமல் போன கணவனின் பாதுகாப்பிற்காக உருகுவது என நடிப்பில் நெகிழ செய்கிறார்.
சீமான்... அவருக்கு மிகவும் கனமான வேடம்.. நாயகனைத் தேடி அலையும் காவலதிகாரி வேடம்.. இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாமே சீமான் என சொல்ல வைக்கிறது. வேட பொருத்தம் கச்சிதம் ஆனால் வாய்ஸ் மாடுலேஷனில் கவனம் செலுத்தியிருக்கணும்... நடிப்பில் சீமான் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம்.
காவலர்களின் மனரீதியான பிரச்சனைகள் சீமான் கதாபாத்திரம் மூலம் அலசப்படுகிறது... சீமான் தன் மனைவியிடம் " நான் வாங்குற சம்பளத்துல்ல நீ குடும்பம் நடத்த முடியுமா ?" எனக் கேட்க அதற்கு அவர் மனைவி "முடியும்ன்னு தோணல்ல" என பதில் சொல்வது லஞ்சம் என்பது எத்தனை தூரம் அன்றாட வாழ்கையின் ஒரு அங்கமாகிவிட்டது என சுருக்கென தைக்கிறது..
ஓவியம் வரையும் ஒரு சிறுவனின் கதாபாத்திரம் படம் நெடுக வரும் இன்னொறு குறிப்பிடத்தகுந்த வேடம்... அந்தச் சிறுவனின் அமைதியான நடிப்பு நெஞ்சைத் தொடுகிறது..
சீமானின் மனைவியாக தேவதர்ஷினி, மாதவனின் நண்பனாக ரேடியோ மிர்ச்சி செந்தில் என ஆங்காங்கு தெரிந்த முகங்கள் சின்னஞ்சிறு வேடங்களில் வருகிறார்கள்.
பாடல்கள் இல்லை... படம் முடியும் போது ஒலிக்கும் ஒரு பாடலைத் தவிர..இசை ஜி.வி.பிரகாஷாம்.. பெரிய வேலை இல்லை அவருக்கு. பின்னணி இசை இன்னும் சிறப்பாக அமைத்திருக்கலாமே சார்.
அன்றாட வாழ்க்கை துவங்கி காவல் துறையின் அலட்சியம்,கல்விக் கொள்ளை, மருத்துவத் துறை சீர்கேடு, அரசியல் அராஜகம் என எல்லாவற்றையும் கூடுமானவரை யதார்த்தம் கெடாமல் சாட முயற்சித்திருக்கிறார் இயக்குனர். மராத்திய இயக்குனர் நிஷிகாந்த்கு இது தமிழில் முதல் படம். பாராட்டும் படியான முயற்சி. வாழ்த்துக்கள்
காலம் காலமாக தலை குனிந்த பழக்கப்பட்ட சமுதாயத்தில் எவனோ ஒருவன் தலை நிமிர்த்தினாலும் அவன் தலை அழுத்தப்படுகிறது... மீறி அவன் தலை நிமிர்ந்தால் அவன் தலை எடுக்கப்படுகிறது.. அப்படி இருந்தும் காலம் காலமாக எங்கோ எவனோ ஒருவன் தலை நிமிர்த்திக் கொண்டுதானிருக்கிறான்..அவனாலே தான் நம் சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறது என்ற ரீதியில் படம் முடியும் தருவாயில் ஒலிக்கும் வசனம் நம்மை சிந்திக்க வைக்கிறது..
கமர்ஷியல் சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தாலும் யதார்த்த சினிமா ரசிகர்களுக்கு நல்லதொரு அனுபவமாய் எவனோ ஒருவன் அமைவான் என்பதில் எந்த ஐயமும் இல்லை...
நிச்சயம் பாருங்கள்... எவனோ ஒருவன் நம்மில் ஒருவன்...
5 comments:
ஏற்கனவே படத்தை பற்றி கேள்விப்பட்டிருந்தேன். நல்லதொரு விமர்சனம் அளித்து பார்க்க தூண்டிவிட்டீர்கள். விரைவில் பார்க்கிறேன். நன்றி.
தலைப்பை பாத்துட்டு இப்படி ஒரு படமா என்று யோசிக்கிட்டே படிச்சேன். கண்டிப்பா பாக்கனும் என்று முடிவு எடுத்து விட்டேன்.
நல்ல அலசல்
அந்த ஒரு பாடல் மட்டும் தான் ஜீ.வி.பிரகாஷ்,பின்னனி இசை சமீர் என்பவர்.
மற்றப்படி படத்தின் கதையில் புதுமை இல்லாததால் , எதிர்ப்பார்ப்பை தூண்ட மறுக்கிறது. ஆனால் வணிகத்தனமாக சமரசம் செய்துக்கொள்ளாமல் எடுக்கப்பட்டது சிறப்பு.
மாதவனுக்காகவே பார்க்கனும்னு காத்துட்டிருக்க படம்.கொஞ்சம் எதிர்பார்ப்பு நிறைய இருக்கு..ஏமாத்தாதுன்னு சொல்றீங்க..பார்ப்போம் ;)
நல்லா விமர்சனம் எழுதியிருகீங்க.
படத்தை பாக்க தூண்டும்படி உள்ளது. பாத்துட்டு சொல்றேன் :)
Post a Comment