Wednesday, December 12, 2007

Little Miss Sunshine

தோல்வியடைந்தவர்கள் பற்றிய கதைகள் எப்போதுமே நம்மை பாதிக்கின்றன. கதாபாத்திரம் தோற்றுப்போவதாகக் காட்டும் திரைப்படங்கள் பார்வையாளர்களைக் கலங்கச் செய்கின்றன. அந்த தோல்வியிலிருந்து மீண்டு போராடி வெல்லும் கதாபாத்திரங்கள் மனநிறைவைத் தருகின்றன. அத்தகைய கதாபாத்திரங்கள் தோல்விகளையும் தடைகளையும் தாண்டி வெல்லும் தருணங்களை நாம் நம் அன்றாட வாழ்க்கையோடு ஒட்டிப் பார்க்கிறோம். சில சமயங்களில் அந்த தருணங்கள் நம் அனுபவங்களையும் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் வாழ்க்கையையும் பிரதிபலிக்கின்றன. இங்கு தோல்வி என்பது அவரவர்க்கான அளவீட்டைக் குறித்தே அமைகிறது.

தொடர்ந்து தோல்விகளை சந்திக்கும் கதாபாத்திரங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் பெரும்பாலும் உணர்ச்சிப்பூர்வமாகவும் நம் மனதைக் கனமாக்கும் விதமாகவுமே இருக்கின்றன. திரைக்கதையும் காட்சியமைப்புகளும் திரைப்படத்தின் முடிவும் நம் மனதை பாரமாக்கிவிடுமாறே அமைக்கப்பட்டிருக்கும். அத்தகைய திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு தோல்வியடைந்தவர்கள் குறித்தும் அவர்கள் தோல்விகளைத் தாண்டி வாழ்வை எதிர்கொள்வது குறித்தும் படம் நெடுக மெல்லிய நகைச்சுவையுடன் சொல்லும் திரைப்படம் Little Miss Sunshine(2006).




"There's two kinds of people in this world, there's winners and there's losers. Okay, you know what the difference is? Winners don't give up."


ரிச்சர்ட் ஹூவர் மேலாண்மை பேச்சாளராக முயன்று கொண்டிருப்பவர். எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையாளர். ஆனால் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்படுபவர். அவரது மனைவி ஷெரில். வயதான தந்தை எட்வின். போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர். முதுமையில் வாழ்வின் மீதே விரக்தியில் இருப்பவர். மூத்த மகன் ட்வெயின். குடும்பத்தின் மீது வெறுப்பும் கோபமும் கொண்ட இளைஞன். விமானப் படையில் சேரும்வரை யாரிடமும் பேசுவதில்லையென முடிவெடுத்து ஊமையாயிருப்பவன். ஃப்ராங்க் ஷெரிலின் அண்ணன். ஓரினச் சேர்க்கையாளன். பேராசிரியராக இருந்து காதல்(?) தோல்வியால் தற்கொலைக்கு முயன்று இப்போது தங்கையின் பாதுகாப்பில் இருப்பவன். இவர்கள் அனைவரையும் இணைத்திருக்கும் பாலமாக சுட்டிப் பெண் ஆலிவ், ரிச்சர்ட்-ஷெரிலின் மகள்.

ஆலிவிற்கு Little Miss Sunshine என்ற சிறுமியருக்கான அழகிப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. தொடர்ந்து தோல்விகளையே எதிர்கொள்ளும் ஹூவர் குடும்பத்தினர் ஒரே நம்பிக்கையாய் இருப்பது அழகிப்போட்டி. ஆலிவ்வின் ஆசையை நிறைவேற்றுவதற்காக இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்ற மனநிலையுடனே போட்டியில் கலந்துகொள்ளக் கிளம்புகிறார்கள்.அந்த பயணத்தினூடே நடைபெறும் உரையாடல்கள், அவர்களின் வாழ்க்கையையேப் புரட்டிப் போடும் சம்பவங்கள், எதிர்பாராத ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள், ஏமாற்றங்கள், இழப்புகள், மனக்கசப்புகள், பிணைப்புகள் இவைதான் Little Miss Sunshine திரைப்படம்.

சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படம். எதிர்பாராத திருப்பங்களோ ஆச்சரியங்களோ வலிந்து திணிக்கப்படாமல் வெகு இயல்பாய் அமைக்கப்பட்ட திரைக்கதை. படத்தின் முதல் சில காட்சிகளிலேயே குடும்பத்தினர் ஒவ்வொருவரின் குணாதிசியங்களையும் உணர்த்திவிடுகிறார்கள். இதனால் அவர்களின் பயணத்தினூடே அவர்களுடன் சேர்ந்து நாமும் சகபயணியாய் பயணிக்க முடிகிறது. அவர்கள் வாழ்வை அருகிலிருந்து பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.




எந்தவிதமான நாடகத் தன்மையுமில்லாமல் இயல்பான காட்சியமைப்புகளும் நகைச்சுவை மிளிரும் வசனங்களும் படத்தின் பெரும்பலம். ஒவ்வொரு காட்சியிலும் யாராவது ஒருவர் மற்றவர்களை கிண்டலடிக்கிறார். அது கதாபாத்திரங்களின் விரக்தி நிலையை எடுத்துச் சொல்கிறது. குறிப்பாக எட்வின், ஃப்ராங்க் பேசும் வசனங்கள் அட்டகாசம். அவர்களுக்குள் நடக்கும் சின்னச் சின்ன சண்டைகள் புன்னகையை வரவைக்கின்றன.

படத்தில் ஸ்டார்கள் யாருமில்லை. நடிகர்கள் கதாபாத்திரங்களில் கச்சிதமாய்ப் பொருந்துகிறார்கள். தங்கள் பங்கைச் செம்மையாகச் செய்திருக்கிறார்கள். தாத்தா எட்வினாக நடித்த Alan Arkin இந்த கதாபாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறார். ஆலிவாக நடித்திருக்கும் Abigail Breslin ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். குடும்பத்தினரின் சோகம், கோபம், ஏமாற்றம் எல்லாவற்றுக்கும் வடிகாலாக இருக்கும் ஆலிவாக நம் மனதைக் கொள்ளை கொள்கிறார். ரிச்சர்டாக Steve Carell அசத்தியிருக்கிறார். விரக்தியின் விளிம்பிலிருக்கும் கதாபாத்திரத்தை முழுதாக உள்வாங்கி நடித்திருக்கிறார்.

பிடித்த காட்சிகளைப் (நிறையவே இருக்கின்றது) பகிர வேண்டுமென்ற எண்ணமிருந்தாலும் படத்தைப் பார்க்கும்போது சுவாரசியம் குறைந்துவிடக்கூடாதென்று தவிர்க்கிறேன். ஹூவர் குடும்பத்தினர் பயணிக்கும் வேனைப் போலவே சில காட்சிகள் மிக மெதுவாக நகர்ந்தாலும் மொத்தத்தில் சுவாரசியமானத் திரைப்படம்.

"Losers are people who are so afraid of not winning, they don't even try."

'Little Miss Sunshine' போட்டியில் ஜெயிக்க முடியுமா என்று பயப்படும் ஆலிவிடம் தாத்தா எட்வின் சொல்லும் இந்த வசனமே படத்தின் அடிநாதம். தோல்விகளைக் கடந்து வாழ்வை எதிர்கொள்ளும் விதத்திலேயே வெற்றிகள் நிச்சயிக்கப்படுகின்றன. தோல்விகளைக் கடந்து ஹூவர் குடும்பத்தினரின் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

5 comments:

யாத்திரீகன் said...

சத்யம்ல பார்க்க விட்டுப்போன படம்.. இப்போ தான் வாங்கிப்பார்த்தேன்... ரொம்ப எளிமையான நகைச்சுவை.. அதுவும் அந்த முடிவு.. கொஞ்சம் கூட எதிர்பார்க்கல .. அட்டகாசம்.. அந்த ஆஸ்பத்திரி காட்சியும் கஷ்டத்தோட இரசிக்க வச்சது ...

கப்பி பய said...

யாத்திரீகன்

//அதுவும் அந்த முடிவு.. கொஞ்சம் கூட எதிர்பார்க்கல .. அட்டகாசம்.. //

அதே அதே :)


//அந்த ஆஸ்பத்திரி காட்சியும் கஷ்டத்தோட இரசிக்க வச்சது ...//

கரெக்ட் யாத்திரீகன்...படத்துல அது மாதிரி ஹெவியான காட்சிகளையும் எளிமையா ரசிக்கக்கூடிய வகையில எடுத்திருப்பாங்க...

நன்றி

தாரா said...

நகைசுவையும் சோகமும் ஒன்றை ஒன்று மிஞ்சிவிடாமல் நேர்த்தியாகக் கலக்கப்பட்டிருக்கிறது இந்தப் படத்தில். நன் மிகவும் ரசித்தப் படங்களில் இதுவும் ஒன்று.

நன்றி,
தாரா.

கோபிநாத் said...

நன்றாக இருக்கு உங்களோட விமர்சனம் :)

நோட் பண்ணிக்கிட்டேன் ;)

கப்பி பய said...

தாரா, கோபிநாத்

நன்றி :)