Thursday, January 24, 2008

பிரிவோம் சந்திப்போம்

பெரிய குடும்பத்தில் பிறந்து வளரும் சேரன், பார்ப்பவர்களையும் ஏங்க வைக்கும் விதமான கூட்டுக்குடும்பம். ஒரு டஜனுக்கு மேலுள்ள குடும்பத்தின் அறிமுகத்தை எளிதாக சொல்லும் முதல் காட்சியிலேயே பளிச்சிடுகிறார் இயக்குனர்.

சிறிய குடும்பத்தில் பிறந்து வளரும் சினேகா, கூட்டுக் குடித்தனத்தில் அதாவது நிறைய மக்களுடன் வாழ நினைக்கும் சினேகாவும், கூட்டுக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து திருமணத்திற்குப் பின் தனிக்குடித்தனம் போக நினைக்கும் சேரனுக்கும் இடையில் நடக்கிற மனப் போராட்டமே பிரிவோம் சந்திப்போம். தலைப்புக்கேத்தவாறு கடைசிவரை சினேகாவும், சேரனும் பிரியாமல் இருக்கிறார்கள்.


பாசத்திற்கு ஏங்கும் சினேகா, பெரிய குடும்பத்தில் இருக்கும் சேரனை கைப்பிடித்து அவரது வீட்டு மருமகளாகுகிறார். எதிர்பார்த்த ஜனம் கிடைத்துவிட்டதே என்ற மகிழ்ச்சியிலும், சேரனைக் கைப்பிடித்த பூரிப்பிலும் கூட்டுக் குடும்ப அன்பின் அரவணைப்பில், அந்த வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் அனுபவிக்கிறார். ஆனால் அந்த சந்தோஷம் நீண்ட நாள் நீடிக்காமல், சேரனுக்கு கிடைக்கும் பதவி உயர்வும், அட்டகட்டிக்கு இடம் மாற்றமும் கிடைக்கிறது. தனிக்குடித்தனம் போகும் மருமகளுக்கு சேரனின் குடும்பம் சொல்லும் காரணம் அருமை. இந்த மாதிரிஒரு குடும்பம் கிடைக்காதா என ஏங்க வைக்கிறது. விக்ரமன் சாயல் லேசாக தென்படும் காட்சிகள் இது(லாலாலா இதில் இல்லை).

கூட்டுக் குடும்பத்தை விட்டு, மனைவியுடன் எந்த வித தொந்தரவும் இல்லாமல் தேனிலவு கொண்டாடலாம் என்று நினைக்கும் சேரனுக்கு அதிர்ச்சி. கூட்டுக் குடும்ப மகிழ்ச்சியை இழந்த அதிர்ச்சியில் மன நோய்க்கு கிட்டதட்ட ஆளாகிறார் சினேகா. இத்தனை வருஷம் தனிமையாத்தானே இருந்தாங்க இப்போ மட்டும் என்ன புதுசான்னு கேள்வி கேட்டா இயக்குனர் பதில் சொல்லமாட்டர். தனிமையை கழிக்க தன்னைச்சுற்றி வரும் சத்தங்களை ஒலிநாடாவில் பதித்து வைப்பதிலே ஆரம்பிக்கிறது தனிமையின் கொடுமை. வீட்டில் ஒவ்வொன்றாக பழுதாக்கி அதனை சரி செய்ய வருபவர்களிடம் பேசுவது அதீதம்.

அத்தையாக ஒரு முறை மட்டுமே வரும் அந்த அம்மணியின் நக்கல், திருமண ஏற்பாடுகள் எல்லாம் அருமை. சேரன், வருகிறார், பாடுகிறார் போகிறார். பெரிதாக சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லாதவாறு நடிப்புத்திறமை. கொஞ்சம் மாற்றிப்பாருங்களேன் சேரன்.

சினேகா இந்த படத்தின் முதுகெலும்பு. கூட்டுக் குடும்ப பந்தியில், உதடு கடித்து அவர் சாப்பாடு பரிமாறுகிற அழகு அருமை. அதே யாருமில்லாமல் இருக்கும் போது காபி பரிமாறுவது திகீர். இளவரசு, கஞ்சா கருப்பு கூட்டணிக் காட்சிகள் யதார்த்தமான கலகலப்பு. கருப்புக்கு பெண் பார்க்கும் சிறிது நேரம் சிரிப்பு மழை. டாக்டராக வரும் ஜெயராம் தெனாலி மாதிரியே ஒரு பாத்திரப்படைப்பு, சினேகாவுக்கு பிரச்சினை என்னவென்று சொல்கிறார். கூட்டுக் குடித்தின் வலிமையும், பெருமையும் சொல்லும் போது நமக்கு ஏதோ செய்கிறது.

எம்.எஸ். பிரபுவின் கேமரா அட்டகட்டியை அழகாக காட்டியுள்ளார், அதுவும் அந்த அருவி.. அப்பப்பா.. பாலச்சந்தர்'ன் ரயில் சிநேகத்திற்கு பிறகு அட்டகட்டியை சினிமாவில் பார்ப்பது மகிழ்ச்சி. மெதுவாக, எந்த வித திருப்பமும் இல்லாத திரைக்கதை படத்திற்கு பலவீனம்.

கரு பழனியப்பன் என்றாலே மாங்கு மாங்கென்று பாடல் தரும் வித்யாசாகர், இந்தப்படத்திலும் அதையே செய்துள்ளார். ஏமாற்றாத பாடல்களும், பாடல் வரிகளும். மெதுவா மெதுவா,நெஞ்சத்திலே பாடல்கள் இவ்வருடத்தின் நல்ல மெல்லிசைப் பாடலகள் வரிசையில் சேரும்.

கேனத்தனமான் வில்லன், அருவா வெட்டு, சண்டை, தொப்புள் கலாச்சாரம், பஞ்ச் டயலாக் என எந்தவிதமான மசாலத்தனமும் இல்லாத அழகான படம். இரண்டாவது பாதியில் சில இடங்களில் கொட்டாவி வருகிறது.

குடும்பத்தோட சென்று ஒரு முறை பார்க்கலாம்.

கீத்துக்கொட்டாயின் மதிப்பீடு. (42/100)

10 comments:

கப்பி | Kappi said...

பார்க்கலாம்ங்கறீங்க..பார்ப்போம்...

டி.வி. சீரியல் மாதிரி இருக்குனு என் நண்பன் சொன்னான்...ஆன்லைன்ல 'கோலங்கள்', 'காவ்யாஞ்சலி' லின்க் ஏதோ தப்பா க்ளிக் பண்ணிட்டதா நினைச்சுருக்கான் :)))

முத்துகுமரன் said...

நல்ல விமர்சனம். மனம் லேசாக பார்த்துவிட்டு வர ஏற்ற படம் போலிருக்கிறது. யாஹு தமிழில் இதே விமர்சனம் வந்திருக்கிறது. நீங்கள்தான் எழுதி இருக்கிறீர்களா அங்கே.

இலவசக்கொத்தனார் said...

ம். என்னைக்காவது வீட்டில் கேசட் எடுத்து வந்து பார்த்தாங்கன்னா கூட கொஞ்ச நேரம் உட்கார்ந்துக்கறேன். ஆனா சேரனை ஒரு நடிகனா ஏத்துக்க கொஞ்சம் சிரமமாத்தான் இருக்கு.

ILA (a) இளா said...

//யாஹு தமிழில் இதே விமர்சனம் வந்திருக்கிறது.//
இல்லீங்க. இது வெப்துனியாவுக்காக எழுதப்பட்டது. ஆனாலும் அதிலிருந்து பல மாற்றங்கள் இதிலிருக்கும்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நீங்க webduniaவுக்கு எழுதினீங்களா இல்லை அங்கு வந்ததை எடுத்து இங்கு இட்டிருக்கிறீர்களா? சும்மா, தெரிந்து கொள்ளும் ஆர்வம் தான். webdunia வலைப்பதிவர்களிடம் இருந்து திரை விமர்சனங்களைப் பெற்றுக் கொள்கிறதா என்று அறிய..

ILA (a) இளா said...

நாங்க எழுதி குடுத்து வாங்குற மாதிரியாங்க இருக்கு வெப் துனியா. அங்கே இருந்து கொஞ்சம் , இங்கே இருந்து கொஞ்சம்னு எடுத்து நம்ம லெவலுக்கு எழுதினதுதாங்க. இதுதாங்க முத்துக்குமரன் சொன்ன இடுகை http://in.tamil.yahoo.com/Entertainment/FilmReview/0801/19/1080119031_1.htm

கோவி.கண்ணன் said...

//
குடும்பத்தோட சென்று ஒரு முறை பார்க்கலாம்.//

குடும்பத்தோடு சென்றால் எந்த படமும் ஒருமுறைதான் பார்க்கலாம்.
:)

//கீத்துக்கொட்டாயின் மதிப்பீடு. (42/100)//


இளா,
கரு.பழனியப்பனிடம் எவ்வளவு கமிஷன் வாங்கினீர்கள் ?
:)))))))

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இது ஏன் அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம்னு எடுத்து எழுதுறீங்கன்னு புரியலை? படம் பார்த்தா நம்மளா நமக்கு வர்றதை விமர்சனமா எழுதலாம் தானே?? தவறா நினைக்க வேண்டாம். தோணியது சொன்னேன். அப்படி பிற விமர்சனங்கள் நல்லா இருந்தா அவற்றுக்கு தொடுப்புகளைத் தரலாம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\இத்தனை வருஷம் தனிமையாத்தானே இருந்தாங்க இப்போ மட்டும் என்ன புதுசான்னு கேள்வி கேட்டா இயக்குனர் பதில் சொல்லமாட்டர்//

நல்லா கவனிச்சிருந்தீங்கன்னா டைரக்டரை கேக்கவே வேண்டாம்.. நீங்க..முதல் காட்சியே அதுக்கு சாட்சி ..பத்து பெண்கள் அவர்கள் வீடே கதி என்றுகிடப்பதையும்.. எங்க போனாலும் தனியா போமாட்டியா என்று சினிமாக்குஅழைக்கும் சினேகாவிடம் ஒரு பெண் கேட்பதும்..
சேரன் தனியாக கூப்ப்பிட்டு பேசனும் என்றதும் கூட தோழிகளோட போய் இறங்குவதும் என்று எப்போதும் நாலு பேரோடு கலகலப்பாக இருக்கும் சினேகாவை தனிமையாக இருந்தார் என்றா சொல்கிறீர்கள்.

M.Rishan Shareef said...

படம் பார்த்தேன்.நல்ல படம்.
தமிழ் சினிமாவுக்கே உரித்தான எந்தவொரு மசாலாக்கலப்பும் இல்லை.
அட ...வில்லன்,குத்துப் பாட்டு எதுவுமில்லை.
படத்தில் வரும் எல்லோரும் நல்லெண்ணங்களோடு..

படம் முழுவதும் எனது குடும்பத்தை அப்படியே நினைவுருத்தியது.
இப்பொழுது நானனுபவிக்கும் இத்தனிமையை ஒப்பிட்டுப் பார்த்து வாடச் சொல்லியது படம்.

கூட்டுக்குடும்பமாய்க் காட்டியது சிறப்பு.
ஆனால் சில நடிகர்களை வீணடித்திருக்கிறாரோ இயக்குனர் என எண்ணத் தோன்றுகிறது.

T.K.கலா('வெயில்'' பசுபதி அம்மா), சுஜாதா('பருத்தி வீரன்' ப்ரியா மணி அம்மா),'மிருகம்' பாட்டி எனத் திறமையானவர்களை ஒரொரு சீனில் மட்டுமே காட்டியிருக்கிறார்.

ஒப்பனைகளெதுவுமற்ற ஸ்னேகா வித்தியாசமாகத்தான் இருக்கிறார்.
சேரனைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை.
வழக்கமான டீவி சீரியல் நாயகிகளின் பொறுமைக் கணவராய்,கொஞ்சம் ஒல்லியாக இருக்கிறார்.