Thursday, January 17, 2008

பீமா - பொங்கல் பார்வை

இந்தப் பொங்கலுக்குப் பார்த்த படம் பீமா.


நடிகர்கள்: சீயான் விக்ரம், த்ரிஷா,பிரகாஷ் ராஜ்,ரகுவரன்,தலை வாசல் விஜய், ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் பலர்

இயக்கம்: லிங்குசாமி இசை: ஹாரீஸ் ஜெயராஜ். வசனம்: எஸ்.ராமகிருஷ்ணன். கேமரா: ராஜசேகர். சண்டை: கனல் கண்ணன்

கதை தமிழ் சினிமாவுக்கு பழக்கமான தாதாக்கள் சம்பந்தப் பட்ட விஷய்ம் தான். தளபதி,உல்லாசம் எனப் பழைய படங்களில் பார்த்த கதையின் தாக்கம் இருந்தாலும் அதைப் படமாக்கியிருக்கும் விதம் பீமாவை வேறுபடுத்தி காட்டுகிறது. சென்னை நகரத்து தாதா வாழ்க்கையை சினிமாவாக சொல்ல முயன்று இருக்கும் இன்னொரு படம் பீமா என்பதாகவே படம் நகர்கிறது. பீமா முழுக்க முழுக்க யதார்த்தமான சினிமா எனவும் சொல்ல முடியாது..முழுக்க முழுக்க மசாலா படம் எனவும் சொல்ல முடியாது. இரண்டும் சேர்ந்த ஒரு கோர்வை எனச் சொல்லலாம்.

கதையின் முக்கிய பாத்திரம் சின்னாவாக பிரகாஷ் ராஜ்... சின்னாவைச் சுற்றிய கதைப் பின்னப்பட்டுள்ளது. சின்னாவின் தொழில் எதிரி பெரியவராக ரகுவரன் ( கிட்டத்தட்ட தளபதியில் ஓம் பூரி ஏற்ற கலிவரதன் வேடத்தை நினைவுப் படுத்தும் வேடம்) சின்னாவின் நம்பிக்கைக்குரிய கையாளாக தலைவாசல் விஜய் ( தளபதியில் நாகேஷ் வருவாரே)..

இதில் விக்ரமுக்கு என்ன வேடம் என்ற கேள்வி கேட்பது புரிகிறது..சிறுவயதில் இருந்து சின்னாவின் ரசிகனாக வளர்ந்து பின்னாளில் சின்னாவீன் தளபதியாக உயரும் சேகர் என்னும் இளைஞனின் வேடத்தில் வருகிறார்.(தளபதியில் ரஜினி ஏற்ற சூர்யா வேடம் மாதிரி)

சேகரின் வரவுக்குப் பின் சின்னாவின் கை தொழில் ஓங்குகிறது..பெரியவரோடானப் பகை முற்றுகிறது. சின்னாக் கூட்டத்தில் சேகருக்கு கிடைக்கும் முக்கியத்துவம் சின்னாக் கூட்டத்தில் வெகுகாலமாக இருக்கும் இன்னொருத்தனை மனக்கலக்கத்தில் ஆழ்த்துகிறது.. அந்த குரோதம் தனிக்கிளையாக வளர்கிறது.

வெட்டுக் குத்து,அருவா, துப்பாக்கி என நகரும் கதையில் கொஞ்சம் சில்லென ஒரு காதலுக்கு த்ரிஷா. கோடம்பாக்கம் வகையானக் கண்டதும் காதல். விக்ரமைத் துரத்தி துரத்திக் காதலிக்கிறார் த்ரிஷா. எதற்கும் மயங்காத விக்ரம் ஒரு கட்டத்தில் திரையரங்கின் அரை வெளிச்சத்தில் த்ரிஷா மீது காதலாகி கசிந்துருகுகிறார்.

காதல் போதையில் தொழிலில் கவனம் சிதறி நிற்கும் விக்ரம்... இனி தன்னால் இப்படி இருக்க முடியாது என்றும் தான் தொழிலில் இருந்து விலகிக் கொள்வதாகவும் பிரகாஷ் ராஜிடம் சொல்லிவிட்டு த்ரிஷாவைக் கைப்பிடிக்க கிளம்புகிறார்.

விக்ரம் விலகலை நல்ல தருணம் எனக் கருதி பெரியவர் சின்னாவை வட்டம் போடவும்.. காவல் துறை கமிஷனர் ஆஷிஷ் வித்யார்த்தி சமயம் சரி என இரு கூட்டத்தையும் களை எடுக்க களத்தில் என்கவுண்டர் படையை இறக்கி விடுகிறார்.. அதைத் தொடரும் ரத்தக் களறியான க்ளைமேக்ஸ் கொஞ்சம் எதிர்பாராதது... இயக்குனருக்கு அட போட வைக்கிறது. பொதுவான ரசனை உள்ள மக்கள் ஏற்பார்களா என்பது கேள்விக்குரியது.

நடிப்பில் விகரமும் பிரகாஷ்ராஜ்க்கு பலத்தப் போட்டி... செல்லம் சின்னா வேடத்தை அதிக மெனக்கெடல் இன்றி பக்காவாகச் செய்திருக்கிறார்... வழக்கம் போல் பிரகாஷ்ராஜ் அசத்தியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்...

விக்ரம் நாயகனாக கட்டுமஸ்தாக வருகிறார், வித்தியாசம் காட்ட வேண்டும் என ஓட்ட வெட்டிய முடியும், தாடியும் என சத்யா கமலை நினைவுபடுத்தும் தோற்றத்தில் வருகிறார். ஆடுகிறார், பாடுகிறார், ஓடுகிறார், குதிக்கிறார், தாவுகிறார், நல்லா சண்டை போடுகிறார்.... சினிமாத்தனமும் யதார்த்தமும் கலந்த ஒரு ஹிரோ வேடத்தில் பொருந்தி போகிறார். ஆக்ஷன் ஹிரோவாக அதிக ஆர்பாட்டமின்றி ஜெயித்திருக்கிறார்.

த்ரிஷாவுக்கு அக்மார்க் கமர்ஷியல் நாயகி வேடம். கண்டதும் காதல்... பின் காதலைத் துரத்தல்... கனவு காணுதல்... ஆடல்..பாடல்... காதலில் தவித்தல்... என பார்மூலா ரோல்...க்ளைமேக்ஸில் அச்சோ சொல்லும் படியாக அவரது வேடம் சிறப்பு பெறுகிறது.மொத்தத்தில் த்ரிஷா அழகாய் வந்து போகிறார்.

ரகுவரனுக்குப் பல படங்களில் பார்த்த அதே வில்லன் வேடம். வழக்கம் போல் நன்றாகவே செய்து இருக்கிறார்.

ஆஷிஷ் வித்யார்த்திக்கும் வழக்கமான போலீஸ் அதிகாரி வேடம். சட்டத்து நல்லவரான ஒரு போலீஸ். கொஞ்சமே வருகிறார் கடமையாற்றுகிறார்.

தலைவாசல் விஜய்க்கு நாயகனில் டெல்லி கணேஷும், தளபதியில் நாகேஷும், நம்ம லிங்குசாமியின் முந்தைய ரன் படத்தில் விஜயனும் ஏற்றது போல ஒரு வேடம்.. நன்றாகச் செய்துள்ளார்.

ஹாரிஸின் இசையில் பாடல்கள் பிரபலமாகி வெகு நாட்கள் ஆகிவிட்டன.. பாடல்களை படமாக்கிய விதத்தில் பெரிதாய் புதுமைகள் எதுவும் இல்லை...

படம் நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்தது படத்தில் ஆங்காங்குத் தெரிகிறது. ரங்கு ரங்கம்மா பாடலில் விக்ரமின் ஹேர் ஸடைல் மாற்றத்தையும், கடைசி பாடலில் விக்ரமின் மெலிந்த தேகமும் படத்து கன்டினியூட்டி சொதப்பலுக்கு சாட்சிகள்.

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரீன் ஒரு பாடலுக்கு வந்து ஆட்டம் போடுகிறார். பிரகாஷ் ராஜ் ஜோடியாக வரும் மலையாள நாயகி அமைதியான தோற்றத்தில் வசிகரீக்கிறார்.

ராஜசேகரின் கேமராவும் கனல் கண்ணனின் சண்டைக் காட்சிகளும் பீமாவுக்கு பெரும் பலம்.

லிங்குசாமி பார்த்து பழக்கப்பட்ட காட்சிகளை மீண்டும் ஒரு முறை கோர்த்திருக்கிறார்..அதையே ஒரு எதிரபாராத முடிவோடு சொல்லியிருக்கிறார்.


பீமா - பழைய மொந்தையில் புதிய கள்.... ஆக்ஷன் படப் பிரியர்கள் ரசிக்க விஷ்யமுள்ள படம்.

7 comments:

கோவி.கண்ணன் said...

பதிவில் வழக்கமானது வழக்கமான பழக்கப்பட்ட என்று நிறைய இடத்தில் எழுதி இருப்பதால், நான் வழக்கமான பின்னூட்டத்தை இட்டுச் செல்கிறேன்.

"விமர்சனம் அசத்தல்"

:)

ILA (a) இளா said...

விமர்சனம் நல்லா இருக்குங்க.படம் பார்க்க ரொம்ப நாளு ஆவும்

cdk said...

க்ளைமேக்ஸ் கொஞ்சம் எதிர்பாராதது... இயக்குனருக்கு அட போட வைக்கிறது.


பிரதர் கொஞ்சம் ஓவரா இல்லை உங்களுக்கு? தமிழ் சினிமாவுல இது வரை இப்படி ஒரு கிளைமாக்ஸ் இல்லைன்னு வேணா சொல்லுங்க! கடைசில ஒரு கேரக்டர் விடாம எல்லாத்தையும் போட்டு தள்ளிட்டாங்களேப்பு!!!

Unknown said...

வாங்க கோவியாரே.. வழக்கமானப் பின்னூட்டம் போட்டு வழக்கம் போல அசத்திட்டீங்க :)

இளா - எதுக்கு லேட் ஆவுது

Unknown said...

//cdk said...

க்ளைமேக்ஸ் கொஞ்சம் எதிர்பாராதது... இயக்குனருக்கு அட போட வைக்கிறது.


பிரதர் கொஞ்சம் ஓவரா இல்லை உங்களுக்கு? தமிழ் சினிமாவுல இது வரை இப்படி ஒரு கிளைமாக்ஸ் இல்லைன்னு வேணா சொல்லுங்க! கடைசில ஒரு கேரக்டர் விடாம எல்லாத்தையும் போட்டு தள்ளிட்டாங்களேப்பு!!!//

இல்லங்க பிரதர்..அட க்ளைமேக்ஸாவது வித்தியாசமா முடிச்சாரேன்னு தான் அட போட்டேன்னு சொல்ல வந்தேன்.

பொதுவுல்ல நம்ம தமிழ் மக்களுக்கு எல்லாரையும் சாகடிச்சாப் பிடிக்காதுன்னு நானும் ஒத்துக்குறேன்

கோபிநாத் said...

அண்ணே விமர்சனம் நல்லாயிருக்கு..பார்க்கிறதுக்கு கொஞ்ச நாள் ஆகும்

Bharath said...

//ஹாரிஸின் இசையில் பாடல்கள் பிரபலமாகி வெகு நாட்கள் ஆகிவிட்டன.. //

இதை வன்மையாக கண்டிக்கிறேன்.. சமீபத்தில் வந்த “உன்னாலே உன்னாலே“ மறந்துவிட்டதா?
பீமாவிலும் பாட்டுக்கள் நன்றாகவே உள்ளன..