Tuesday, January 8, 2008

The Bucket List

மரணம் குறித்தான பயம் எப்போதும் அடிமனதில் குடிகொண்டிருக்கிறது. அதிலும் மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நாட்களில் இதுநாள் வரை கடந்து வந்த பாதைகளும் மரணத்திற்கு பிறகான புதிரும் மனதை அலைக்கழித்தபடியே இருக்கின்றன. பழைய நினைவுகளும் தவறவிட்ட வாய்ப்புகளும் நிராசைகளும் செய்ய நினைத்திருக்கும் காரியங்களும் வயோதிகத்தை கொடிய நோயாக்கிவிடுகின்றன. இறப்பதற்கு முன் அடைந்துவிடக்கூடியவற்றை மனம் பட்டியலிட்டபடி இருக்கிறது. மனித வாழ்க்கை குறித்த தத்துவார்த்தமான சிந்தனைகளும் அதே நேரத்தில் எஞ்சியிருக்கும் நாட்களில் மனநிறைவோடு வாழ்ந்து மரணத்தை திருப்தியுடன் எதிர்கொள்வது குறித்தான எண்ணங்களும் முட்டி மோதுகின்றன. மரணம் நெருங்கியதை உணர்ந்ததும் தன் சுற்றத்தாருக்கும் உறவினருக்காகவுமே காலமெல்லாம் உழைத்தவர்கள் தங்களுக்காகவும், சுயநலமாக தனக்காக மட்டுமே வாழ்ந்தவர்கள் அடுத்தவர்க்காகவும் வாழ ஆரம்பிக்கிறார்கள். மரணம் இது குறித்தான பிரக்ஞை எதுவுமின்றி அவர்களை அரவணைத்து சென்றுவிடுகிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரண தேதி குறிக்கப்பட்ட எட்வர்ட் கோல்(Edward Cole), கார்ட்டர் சேம்பர்ஸ்(Carter Chambers) என்ற இரண்டு முதியவர்களின் வாழ்வில் கடைசி சில மாதங்களை பதிவாக்கியிருக்கும் திரைப்படம் The Bucket List.



கார்ட்டர் சேம்பர்ஸ் கார் மெக்கானிக். அன்பான மனைவி. மூன்று பிள்ளைகள். புகை பிடிக்கும் பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். எட்வர்ட் கோல் மருத்துவமனைகள் நடத்திவரும் கோடீஸ்வரர். நான்கு முறை மணமுறிந்து தன்னந்தனியாக வாழ்பவர். தன்னுடைய மருத்துவமனைகளில் ஒவ்வொரு அறையிலும் இரண்டு படுக்கைகள் அமைத்து பணம் பார்ப்பவர். இவரையும் புற்றுநோய் தாக்க கார்ட்டரும் எட்வர்ட்டும் மருத்துவமனையில் ஒரே அறையில் தங்க வைக்கப்படுகிறார்கள். உயிர்கொல்லி புற்றுநோயால் இருவருக்குமே சில மாதங்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறது.

கார்ட்டர் தன் மரணத்திற்கு முன் நிறைவேற்ற வேண்டிய ஆசைகளை பட்டியலிடுகிறார்.(Bucket List;'Kick the bucket'). நிறைவேற்ற இயலாதவற்றையும் தன் மன திருப்திக்காகப் பட்டியலிடுகிறார். அதைப் பார்த்துவிடும் எட்வர்ட் இருவருமாக சேர்ந்து அந்த பட்டியலில் உள்ளவற்றை செய்துவிட வேண்டுமென்கிறார். தன் பங்கிற்கு தன்னுடைய ஆசைகளையும் பட்டியலிடுகிறார். முதலில் மறுக்கும் கார்ட்டர் எட்வர்ட்டின் வற்புறுத்தலால் ஒத்துக்கொள்ள, கார்ட்டர் மனைவியின் எதிர்ப்பையும் மீறி இருவரும் மருத்துவமனையில் இருந்து கிளம்புகிறார்கள். விமானத்திலிருந்து குதிப்பது, அதிவேகமாக கார் ஓட்டுவது, பல்வேறு நாடுகளைச் சுற்றித் திரிவது, இமாலயத்தைப் பார்ப்பது, முன்பின் தெரியாத அந்நியருக்கு உதவுவது, கண்ணில் நீர் வரும்வரை சிரிப்பதென விருப்ப பட்டியலை தயாரித்து ஒவ்வொன்றாக நிறைவேற்றுகிறார்கள். விருப்பப் பட்டியல் முடியும் நிலையில் குறுகிய நாட்களில் தங்களிடையே உருவாகியிருக்கும் நட்பை உணர்கிறார்கள். இறக்கும் முன் மனதுக்கு நிறைவாக வாழ்ந்த நாட்களை எண்ணி மகிழ்கிறார்கள். மரணிக்கிறார்கள்.



எண்ணங்களிலும் வாழ்க்கை முறையிலும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு மனிதர்கள் மரணத்தால் ஒன்றுபடுகிறார்கள். 'வண்டிச் சக்கரம் போல் காலம் சுழன்றுகொண்டேயிருக்கிறது அவரவர் வாழ்ந்து இறந்துகொண்டிருக்கிறோம்' என்ற எண்ணமுடைய எட்வர்ட்டும் 'நம் வாழ்வின் அளவீடு அடுத்தவர் வாழ்வில் நாம் ஏற்படுத்தும் பங்களிப்பை வைத்தே' எனும் கார்ட்டரும் பயணத்தினூடே தங்களது கடந்த கால வாழ்க்கை குறித்த உரையாடல்களும் வாழ்க்கையைக் குறித்தும் மரணம் குறிததுமான எண்ணப் பகிர்வுகளாகவும் திரைப்படம் நகர்கிறது.

மரணத்திற்காகக் காத்திருக்கும் இரண்டு வயோதிகர்களின் கதை என்றாலும் மரணத்தின் வாசனையில்லாமல் திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு. தத்துவார்த்தமான உரையாடல்களிலும் மெல்லிய நகைச்சுவை நிறைந்திருக்கிறது. குறிப்பாக எட்வர்ட்டுக்கும் அவரது உதவியாளர் தாமஸுக்குமான நக்கல் நையாண்டி உரையாடல்கள் அட்டகாசம்.

எட்வர்ட் கோல்'லாக ஜாக் நிக்கல்சன்(Jack Nicholson). கார்ட்டர் சேம்பர்ஸாக மார்கன் ஃப்ரீமேன்(Morgan Freeman). இரண்டு மிகச் சிறந்த நடிகர்கள் திரைப்படத்தை தாங்கிப் பிடிக்கிறார்கள். சொல்லப்போனால் படத்தைப் பார்க்க ஆரம்பித்ததே இவ்விருவருக்காகத்தான். இரண்டாம் பாதியில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் இவ்விருவரின் முக பாவங்களும் வசன உச்சரிப்பும் அதை மறக்கச் செய்கின்றன.


The Bucket List - வாழ்க்கை குறித்தும் வயோதிகம் குறித்தும் மரணம் குறித்துமான எண்ணங்களுக்காகவும் சில புரிதல்களுக்காகவும்.

6 comments:

கோபிநாத் said...

விமர்சனம் சூப்பர் கப்பி ;))

நோட் பண்ணிக்கிட்டேன் ;)

யாத்ரீகன் said...

அறிமுகத்துக்கு நன்றி கப்பி .. கோபி சொன்ன மாதிரி.. நோட் பண்ணிக்கிட்டேன் .. :-) .. விமர்சனத்தின் ஆரம்ப வரிகள் மிகவும் அருமை ..

கப்பி | Kappi said...

கோபிநாத், யாத்திரீகன்

நன்றிகள் _/\_ :)

Baby Pavan said...

நல்லா இருக்கு

நாம் கூட பக்கெட் லிஸ்ட் போடனும் மாமா, அப்ப தான் நாம செய்ய நினைச்ச , நினைவில் மட்டும் இருக்க நல்ல செயல்கள் சிலவற்றையாவது செய்து முடிப்போம்

இம்சை said...

விருப்ப பட்டியலை தயாரித்து ஒவ்வொன்றாக நிறைவேற்றுகிறார்கள். விருப்பப் பட்டியல் முடியும் நிலையில் குறுகிய நாட்களில் தங்களிடையே உருவாகியிருக்கும் நட்பை உணர்கிறார்கள். இறக்கும் முன் மனதுக்கு நிறைவாக வாழ்ந்த நாட்களை எண்ணி மகிழ்கிறார்கள். மரணிக்கிறார்கள்.

நாம் அனைவரும் இதே நிலையில் தான் இருக்கோம்....நாமும் நாட்களோ, வருடங்களோ அதை கவுண்ட் செய்யரோம்...நன்றி நன்றி

கப்பி | Kappi said...

பவன்

சரியா சொன்ன கண்ணா :)

இம்சை

நன்றி! :)